கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சென்னையில் ஆங்கிலேயர் ஒருவர் கொல்லப்பட, இரண்டு ஜமீன் இளவரசர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்படுகிறது. முடிவில் இருவருமே விடுவிக்கப்படுகிறார்கள். அப்படியானால், அந்த ஆங்கிலேயரைக் கொன்றது யார்?
நூறு ஆண்டுகளைக் கடந்த பிறகும் தீராத ஒரு கொலை மர்மத்தின் கதை இது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி அது. 1919ஆம் ஆண்டு. சென்னையில் அந்தக் காலகட்டத்தில் நியூயிங்டன் ஹவுஸ் காலேஜ் என்ற பெயரில் கல்விக்கூடம் ஒன்று இயங்கி வந்தது. இதை Court of Wards என்று அழைப்பார்கள்.
அதாவது, ஜமீன்தார்கள், பாளையக்காரர்கள் ஆகியோரின் குழந்தைகளைத் தங்க வைத்து கல்வி அளிக்கும் இடம் அது. பாளையங்களையும் ஜமீன்களையும் எதிர்காலத்தில் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ஆங்கில முறைப்படி கல்வி அளிக்கப்பட்டு வந்தது.
இந்தியா முழுவதுமே பல இடங்களில் இதுபோன்ற கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. வட இந்தியாவில் ‘ராஜ்குமார் கல்லூரி’ என்று இந்தக் கல்லூரிகள் அழைக்கப்பட்டன. தென்னிந்தியாவுக்கான கல்லூரி, சென்னையில் நியூயிங்டன் ஹவுஸ் காலேஜ் என்ற பெயரில் இயங்கி வந்தது. தற்போது தேனாம்பேட்டையில் பரபரப்பாக இயங்கிவரும் டிஎம்எஸ் வளாகம்தான் அந்தக் கல்லூரி இயங்கிய இடம்.
இந்தக் கல்லூரியில், ஜமீன் இளவரசர்களுக்கு பல ஐரோப்பிய ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் கிளமென்ட் டி லா ஹே. 1902 வாக்கில் அவர் இந்தக் கல்விக்கூடத்தில் ஆசிரியராக வந்து சேர்ந்தார்.
கிரிக்கெட், வேட்டை எனப் பல விஷயங்களில் இவருக்கு ஆர்வம் உண்டு. கிட்டத்தட்ட 40 வயதான நிலையில், பிரிட்டனுக்கு போன அவர், திரும்பி வரும்போது 26 வயது பெண்ணான டோரதி மேரி ஃபிலிப்ஸை திருமணம் செய்துகொண்டு வந்தார். விரைவிலேயே அவர்களுக்கு ஆண்டனி என்ற மகனும் பிறந்தான்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த க்ளமென்ட் டி லா ஹே
நியூயிங்டன் ஹவுஸ் கல்லூரி ஒன்று உண்டு. அது உறைவிடக் கல்லூரியைப் போல செயல்பட்டு வந்தது. அங்கேயே மாணவர்கள் தங்கிப் படித்து வந்தனர். டி லா ஹேவின் வீடும் வளாகத்திற்கு உள்ளேயே இருந்தது. கல்லூரிக்கான பணியாளர்களும் வளாகத்திற்குள்ளேயே வசித்து வந்தனர்.
சிங்கம்பட்டி, கடம்பூர், ஊர்காடு, தலைவன் கோட்டை ஜமீன்களின் இளவரசர்கள், ஆந்திராவின் பேரிக்கை, சுண்டி, பெடமரங்கி, சாப்டூர் ஆகிய ஜமீன்களின் இளவரசர்கள் அங்கே தங்கியிருந்தனர். இவர்களுக்கு மொழி, அறிவியல், விளையாட்டு ஆகியவை கற்பிக்கப்பட்டன. வேட்டையாடவும் அவ்வப்போது சென்று வந்தனர்.
இதில் சிங்கம்பட்டி, கடம்பூர், ஊர்காடு ஜமீன்களின் இளவரசர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டனர். பேரிக்கை, சுண்டி ஜமீன்களைச் சேர்ந்தவர்கள் இன்னொரு குழுவாகச் செயல்பட்டனர்.
இதில் சிங்கம்பட்டி ஜமீனான சிவசுப்பிரமணிய சங்கர தீர்த்தபதி சற்று வசதியான ஜமீனை சேர்ந்தவர். ஒட்டுமொத்த இளவரசர்களிலும் சற்றேனும் படிப்பில் ஆர்வம் காட்டியவர் கடம்பூர் இளவரசர் சீனி வெள்ளாள சிவசுப்பிரமணிய பாண்டிய தலைவர் மட்டும்தான். ஆனால், க்ளெமென்ட் டி லா ஹேவிற்கு ஏனோ அவர் மீது பெரிய அபிப்பிராயம் உருவாகவில்லை.
நியூயிங்டன் ஹவுஸ் கல்லூரியை பொறுத்தவரை, சிறப்பான கல்விக்கூடம் என்று சொல்ல முடியாது. அங்கிருந்த மாணவர்களிடம் எல்லா ஒழுங்கீனங்களும் இருந்தன. படிப்பில் யாரும் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.
இதனால், வட இந்தியாவில் இருப்பதைப் போல புதிய பள்ளியைத் தொடங்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டனர். க்ளமென்ட் டி லா ஹேவை பணியிலிருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அன்று 1919ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி. அன்றிரவு ஒரு விருந்திலிருந்து வீடு திரும்பிய டி லா ஹேவும் அவரது மனைவி டோரதியும் தூங்கச் சென்றனர். சுமார் 12:30 மணியளவில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. டோரதி அலறியடித்து எழுந்து பார்த்தால், டி லா ஹே ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அப்ரூவர் ஆன சிங்கம்பட்டி இளவரசர்
இந்த விவகாரம் சென்னை மாகாணம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தித்தாள்கள் தினமும் இந்தக் கொலை விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த செய்திகளை வெளியிட்டன. இந்தக் கொலையில் கடம்பூர் இளவரசர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அரசுத் தரப்பின் வாதம் இதுதான்: அக்டோபர் 15ஆம் தேதி மாலையில், பள்ளிக் கட்டடத்தில் தரைத்தளத்தில் மாணவர்கள் கூடியிருக்கும்போது, “இன்னைக்கு ராத்திரியே துரையைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டும்” என்று கடம்பூர் இளவரசர் சொன்னார்.
அன்று இரவு எட்டரை – ஒன்பது மணிவாக்கில் டி லா ஹேவும் அவரது மனைவியும் விருந்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினர். மாணவர்களிடம் பேசிவிட்டு, மேலே உள்ள தங்கள் வீட்டிற்குச் சென்றனர். பிறகு தனித் தனிப் படுக்கைகளில் படுத்து உறங்க ஆரம்பித்தனர். பன்னிரெண்டரை மணியளவில் யாரோ டி லா ஹேவை நெருங்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கி குண்டு தலையின் வலது பக்கத்திலிருந்து இடப்பக்கமாக வெளியேறியிருந்தது.
டி லா ஹே அலறியடித்து எழுந்தார். பிறகு ஒரு மாணவர் போலீசுக்கும் மருத்துவர் மேஜர் ஹிங்ஸ்டனுக்கும் தொலைபேசியில் தகவல் அளித்தார். மருத்துவர் மரணத்தை உறுதிப்படுத்த, காவல்துறை விசாரணையைத் துவங்கியது.
இன்னொரு துப்பாக்கியும் கீழே கிடந்து எடுக்கப்பட்டது. முடிவில் சிங்கம்பட்டி இளவரசரும் கடம்பூர் இளவரசரும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
சிங்கம்பட்டி ஜமீன்தார் தன் மகனை மீட்க டி ரிச்மண்ட் என்ற புகழ்பெற்ற வழக்கறிஞரை அமர்த்தினார். இதையடுத்து அக்டோபர் 24ஆம் தேதி சிங்கம்பட்டி இளவரசர் அப்ரூவரானார். அதாவது கடம்பூர் இளவரசர்தான் இந்தக் கொலையைத் திட்டமிட்டு செய்ததாகவும் தான் விருப்பமின்றி உடனிருந்ததாகவும் அவர் காவல்துறையில் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கொலைப் பழி முழுமையாக கடம்பூர் இளவரசர் மீது விழுந்தது.
கடம்பூர் இளவரசருக்கு எதிரான பொய் சாட்சியங்கள்
கடம்பூர் இளவரசருக்கு ஆதரவாக சென்னையின் புகழ்பெற்ற வழக்கறிஞரான எஸ். சுவாமிநாதன் ஆஜரானார். அவருக்கு உதவியாக பின்னாளில் புகழ்பெற்ற வழக்கறிஞரான எத்திராஜ் இருந்தார். சென்னை நாளிதழ்களில் தொடர்ந்து இது தொடர்பான செய்திகள் வெளியாகி வந்தன.
அவை கடம்பூர் இளவரசருக்கு எதிரானவையாக இருந்ததால், அந்தச் செய்திகள் ஜூரிகளின் மனநிலையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று வாதிட்ட சுவாமிநாதன், வழக்கை பம்பாய்க்கு மாற்ற வேண்டுமெனக் கோரினார்.
வழக்கு பம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை தலைமை நீதிபதி நார்மன் மெக்லீட் விசாரித்தார். பம்பாயில் மிகப் பெரிய வழக்கறிஞரான ஆர்டிஎன் வாடியாவும் சுவாமிநாதனோடு இணைந்துகொண்டார்.
விசாரணை துவங்கியபோது அரசுத் தரப்பில் சென்னை மாகாண அரசு வழக்கறிஞர் சிட்னி ஸ்மித்தும் பம்பாயைச் சேர்ந்த டபிள்யு.எல். வெல்டனும் நியமிக்கப்பட்டனர். அவரோடு இளவரசர்கள், பணியாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என பெரிய குழுவே பம்பாய்க்குச் சென்றது. அரசுத் தரப்பு சாட்சியங்கள், அப்ரூவர் ஆகியோருக்காக பம்பாயின் பிரபல வழக்கறிஞரான ஜே.டி தவார் நியமிக்கப்பட்டிருந்தார்.
எல்லா இளவரசர்களும் சாட்சியமளித்தாலும், அதில் ஓட்டை இருந்தது. பலர் பொய் சொன்னார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிய வந்தது. சாப்டூர் இளவரசர் சொன்னது மட்டும் ஏற்கும்படி இருந்தது. அவர் கடம்பூர் இளவரசருக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றார்.
இதற்கிடையில், டி லா ஹேவின் மனைவி டோரதி, தன் உயிருக்கே ஆபத்து இருப்பதாகக் கூறி பிரிட்டனுக்கே திரும்பிவிட்டார்.
கடம்பூர் இளவரசருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சிங்கம்பட்டி இளவரசர்
ஆனால், இந்த வழக்கில் காவல்துறையின் புலனாய்வு, துப்பு துலக்குதல் ஆகியவை மிக மோசமாக இருந்ததால், அதைப் பயன்படுத்திக்கொள்ள சுவாமிநாதன் முடிவு செய்தார். காவல்துறையைப் பொறுத்தவரை அப்ரூவரின் வாதத்தையைும் அதை ஒட்டி சேகரித்த சாட்சியங்களையுமே நம்பியிருந்தது.
சுவாமிநாதன் எதிர்பார்த்தபடியே, வாடியா, அரசுத் தரப்பின் வாதங்களைத் தவிடுபொடியாக்கினார். அப்ரூவரான சிங்கம்பட்டி இளவரசரின் சாட்சியத்தையும் பிற இளவரசர்களின் சாட்சியங்களையும் பொய் என நிரூபித்தார்.
தலைவன்கோட்டை ஜமீன் இளவரசரில் துவங்கி, ஒவ்வொரு இளவரசரும் ஒவ்வொரு விதமாக சாட்சியம் அளித்தார்கள். அதில் பல விஷயங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்று இருந்தன.
கடம்பூர் இளவரசர் சிறையில் இருக்கும்போது, சிங்கம்பட்டி இளவரசர் அவருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில் அப்ரூவராக மாறி தான் கூறியிருந்த விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்டிருந்தார். இந்தக் கடிதம் வழக்கறிஞர் சுவாமிநாதனுக்குக் கிடைத்தது. இதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அரசுத் தரப்பால் கொலைக்கான காரணத்தைத் தெளிவாக நிரூபிக்க முடியவில்லை. டி லா ஹே இளவரசர்களை இனரீதியாக திட்டியது இந்தக் கொலைக்குக் காரணமா அல்லது கடம்பூர் இளவரசர் குறித்து அவரது தாய்க்கு கடிதம் எழுதியது காரணமா அல்லது டி லா ஹேவின் மனைவிக்கும் இளவரசர்களுக்கும் இடையில் ஏதாவது உறவிருந்ததா எனப் பல கோணங்கள் இதில் இருந்தன.
அதேபோல, டி லா ஹேவின் மனைவி டோரதி, உடனே பிரிட்டனுக்கு திரும்பிவிட்டதும் வழக்கு விசாரணையில் பங்கேற்கக்கூட வராததும் அவரது பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது.
வாடியாவின் வாதத்தைப் பொறுத்தவரை, “ஊர்காடு இளவரசர்களும் சிங்கம்பட்டி இளவரசரும்தான் இந்தக் கொலையைத் திட்டமிட்டனர்; சிங்கம்பட்டி இளவரசர்தான் துப்பாக்கியால் சுட்டது. வேண்டுமென்றே கடம்பூர் இளவரசர் இதில் சிக்க வைக்கப்பட்டார்,” என்பதைக் கோடிகாட்டுவதாக இருந்தது.
விடுவிக்கப்பட்ட இளவரசர் – விடை தெரியாத கேள்விகள்
முடிவில் ஜூரிகளும் நீதிபதியும் கடம்பூர் இளவரசரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தனர். காவல்துறை இந்த வழக்கை சரியாக புலனாய்வு செய்யவில்லை என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே, டி லா ஹேவை யார் கொன்றது என்ற மர்மம் மட்டும் விடுபடவேயில்லை. இந்த வழக்கு யார் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ, கடம்பூர் இளவரசருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் சுவாமிநாதனின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த வழக்குக்குப் பிறகு, சுவாமிநாதனுடன் பழகி வந்த உயர்மட்ட பிரிட்டிஷார் அந்தத் தொடர்புகளை விலக்கிக்கொள்ள ஆரம்பித்தனர். அவருடைய மகள்களான லக்ஷ்மி (சகல்) மிருணாளினி (சாராபாய்) ஆகியோர் இதுகுறித்து தங்கள் சுயசரிதையில் விரிவாகக் குறிப்பிடும் அளவுக்கு இந்த வழக்கு அவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கடம்பூர் இளவரசர் விடுவிக்கப்பட்டதும், டி லா ஹேவின் மனைவி, கடம்பூர் இளவரசர் மீதும் சிங்கம்பட்டி இளவரசர் மீதும் 10 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.
இதில் சிங்கம்பட்டி இளவரசர் 60,000 ரூபாய் அளித்ததை வைத்துப் பார்க்கும்போது இந்தக் கொலையை யார் செய்திருக்கக்கூடும் என்ற யூகங்கள் ஏற்படலாம். ஆனால், எதுவும் நிரூபிக்கப்படவில்லை. யாரும் மேல் முறையீட்டிற்கும் செல்லவில்லை.
கடைசிவரை, டி லா ஹேவை யார் கொலை செய்தது என்பது நிரூபிக்கப்படாமலேயே போய்விட்டது.
நியூயிங்டன் கல்விக்கூடத்தைப் பொறுத்தவரை, அது ஒரு நல்ல பள்ளிக்கூடமாக இருக்கவில்லை. அதைத் தொடர்ந்து நடத்துவதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. டி லா ஹேவின் மரணத்திற்குப் பிறகு அது மூடப்பட்டுவிட்டது. அந்தக் கட்டடம் மட்டும் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 2000களின் துவக்கம் வரை இருந்தது. பிறகு இடிக்கப்பட்டுவிட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்