தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் பிடிவாதமாக இருக்க, அவைக்கு வெளியில் கோஷமெழுப்பி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் அ.தி.மு.கவினர். நீண்ட காலமாகத் தொடரும் இந்தப் பிரச்னையின் பின்னணி என்ன? விரிவான தகவல்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி. உதயகுமாருக்கு அளிக்க வேண்டும் என்ற பிரச்னையை எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கே. அப்பாவு, உறுப்பினர்களுக்கு இருக்கையை ஒதுக்கீடு செய்வது தனது உரிமை என்றும் அதில் யாரும் தலையிட முடியாது என்றும் பதிலளித்தார்.
இதற்கிடையில் இது தொடர்பாக பேசுவதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்குப் பிறகு எடப்பாடி கே. பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அ.தி.மு.கவினர் இது தொடர்பாக கருத்துகளைத் தெரிவித்தனர். அவையில் வாக்குவாதம் முற்றியதையடுத்து அ.தி.மு.கவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அவையிலிருந்து வெளியில்வந்த அ.தி.மு.கவினர் நான்காம் எண் வாயிலில் இருந்தபடி கோஷங்களை எழுப்பினர்.
’10 முறை கடிதம் கொடுத்தும் இடம் வழங்கவில்லை’
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, சபாநாயகர் நடுநிலையோடு நடந்துகொள்ளவில்லை என்று கூறினார்.
“அ.தி.மு.கவிலிருந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை (ஓ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம்) நீக்கியது குறித்து சபாநாயகரிடம் பல முறை கடிதம் கொடுத்தும் அவர் அதற்கான தீர்வைக் காணவில்லை. அதனால், இன்று சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை அவரது கவனத்திற்கு கொண்டுவந்தோம்.
இந்த விவகாரம் தொடர்பாக 19.07.2022, 11.10.22 தேதிகளில் சபாநாயகருக்குக் கடிதம் கொடுத்தோம். 14.10.22, 18.10.22, 10.01.23 ஆகிய தேதிகளில் நினைவூட்டல் கடிதங்களைக் கொடுத்தோம். உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகலை 23.02.2023 அன்று சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பித்தோம். 28.03.2023ஆம் தேதியின் உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகலை அவரிடம் வழங்கியிருக்கிறோம். 21.09.23 அன்று மீண்டும் நினைவூட்டல் கடிதம் கொடுத்தோம். 09.10.23ஆம் தேதியும் நினைவூட்டல் கடிதம் கொடுத்தும். இப்படி பத்து கடிதம் கொடுத்தபோதும் கோரிக்கை ஏற்கப்படாதது குறித்து தெளிவுபடுத்தும்படி, எங்களுடைய சட்டப்பேரவைக் கொறடா கேட்ட போது அதற்கு தகுந்த பதில் அளிக்கப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியில் 18 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலைவர் பதவியும் துணைத் தலைவர் பதவியும் அளித்து அருகில் அமர வைக்கிறார்கள். ஆனால், நாங்கள் வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரிக்கிறார்.
யாரை எந்த இடத்தில் அமர வைப்பது என்பது அவருடைய உரிமை என்பதில் நாங்கள் தலையிடவில்லை. காலம்காலமாக எதிர்க்கட்சித் தலைவர் அருகில்தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவரை அமரவைப்பார்கள். மற்ற உறுப்பினர்களை எல்லாம் சபாநாயகர் அவர் விருப்பப்படி அமர வைப்பார். இந்த மரபை சபாநாயகர் பின்பற்றவில்லை. சபாநாயகர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும்.
அதேபோல, நாங்கள் கேள்வியெழுப்பும்போது அமைச்சரோ, முதலமைச்சரோ பதில் சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறோம். ஆனால், பல கேள்விகளுக்கு அவரே பதில் சொல்லிவிடுகிறார். இதனால், அமைச்சர்களுக்கு பதில் சொல்லும் வேலையில்லாமல் போய்விடுகிறது.
இது குறித்து பல முறை அவரிடம் சொல்லிவிட்டோம். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நியமனம் குறித்தும் அவருக்கான இடம் குறித்தும் இன்றும் வலியுறுத்தினோம். மூன்று உறுப்பினர்களை எந்தக் கட்சியையும் சேராதவர்கள் என அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவையும் அவர் ஏற்கவில்லை.” என்று குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் என்ன?
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தபோது 66 உறுப்பினர்களுடன் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமியும் துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வமும் தேர்வுசெய்யப்பட்டனர்.
ஆனால், விரைவிலேயே எடப்பாடி கே. பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே மோதல் வெடித்தது. 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பினர் பொதுக் குழுவைக் கூட்டி ஓ. பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் நீக்கினர்.
இதற்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் வகித்துவந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டது. அதேபோல, ஓ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டதால் அவர்களை அ.தி.மு.க. உறுப்பினர்களாகக் கருதக்கூடாது என்றும் கட்சி சாராத உறுப்பினர்களாக கருத வேண்டும் என்றும் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு கோரி வருகிறது.
இது தொடர்பாக பதிலளித்துவரும் சபாநாயகர் அப்பாவு, இருக்கை ஒதுக்கீடு செய்வது சபாநாயகரின் முற்றுரிமை என்கிறார்.
தி.மு.கவினரைப் பொறுத்தவரை, 2016-21 காலகட்டத்தில் தி.மு.க. தலைவராக இருந்த மு. கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கீடு செய்வதில் அப்போதைய சபாநாயகர் தனபால் தெரிவித்த கருத்துகளை மேற்கோள்காட்டி வருகின்றனர்.
2016: மு. கருணாநிதி இருக்கை விவகாரம் என்ன?
2016ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. தி.மு.க. 89 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அப்போது தி.மு.கவின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதி சக்கர நாற்காலியில் வரவேண்டியிருப்பதால், அவர் வந்துசெல்ல ஏதுவாக முன்வரிசையில் இருக்கையை ஒதுக்கித்தர வேண்டுமென தி.மு.க. கோரியது.
ஆனால், அவருக்கு 207வது எண் இருக்கை ஒதுக்கப்பட்டது. இதனைத் தி.மு.க. ஏற்கவில்லை. அந்த இருக்கை சக்கர நாற்காலியுடன் வந்துசெல்ல வசதியாக இல்லை என குறிப்பிட்டார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின்.
இதற்குப் பதிலளித்த அப்போதைய அவை முன்னவர் ஓ. பன்னீர்செல்வம், “இந்தப் பிரச்னை மு. கருணாநிதி சட்டப்பேரவை விவாதங்களில் பங்கேற்பது பற்றியல்ல. இது உண்மையிலேயே தந்தைக்கும், தனயனுக்கும் உள்ள பிரச்சனைதான். திமுக என்றாலே கருணாநிதிதான்… கருணாநிதிதானே கட்சியின் தலைவர்… அப்படியிருக்கும்போது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி கருணாநிதிக்குத் தானே கிடைத்திருக்க வேண்டும். ஆனால், உட்கட்சிப் பிரச்சனையில் மு.க. ஸ்டாலின் தன்னை எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கச் செய்துவிட்டார். அப்படியென்றால் கருணாநிதியின் நிலை என்ன?
வெறும் சட்டமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்துதான் கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான நிலையில் கருணாநிதி சட்டமன்றத்திற்கு வந்து விவாதங்களில் பங்கேற்க மாட்டார் என்பதால் அந்தப் பழி தன் மீது வந்துவிடக் கூடாது என்பதற்காக, பிரச்னையை திசை திருப்பும் விதமாக கருணாநிதிக்கு சரியான இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்” என்று அறிக்கை வெளியிட்டார்.
2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த விவகாரம் பெரிதாக உருவெடுத்தது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அப்போதைய சபாநாயகர் தனபால், “மரபுப்படிதான் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருக்கைகளை ஒதுக்குவது பேரவைத் தலைவரின் உரிமை. எனவே அதை விவாதிக்க முடியாது” என்று கூறினார்.
சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றபோது ஜூன் 17ஆம் தேதியன்று இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் தனபால் அறையை தி.மு.க. எம்.எல்.ஏக்கள் முற்றுகையிட்டனர். தி.மு.க. தலைவர் மு. கருணாநிதிக்கு முதல் வரிசையில் இருக்கை வசதி செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இதற்குப் பிறகு மு. கருணாநிதியின் உடல்நலம் குன்றியதால், இது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து எழவில்லை.
இன்றைய செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக எடப்பாடி கே. பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அப்போது கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவரோ, துணைத் தலைவரோ அல்ல. இருந்தபோதும் அவர் வந்து செல்ல ஏதுவாக பாதை ஓரமாக அவருக்கு இருக்கை அளிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தை அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றிச் சொல்கிறார்கள்” என்று கூறினார்.
இருக்கை விவகாரத்தைப் பொருத்தவரை, அ.தி.மு.கவினரின் கோரிக்கையை ஏற்பதே சரியானது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
“ஓ. பன்னீர்செல்வத்திற்கு முன்வரிசையைக் கொடுக்க வேண்டுமென நினைத்தால் மற்றொரு இடத்தில் கொடுக்கலாம். இப்போது எடப்பாடி கே. பழனிச்சாமி கேட்கும் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க வேண்டும். அதேபோல, மூன்று எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க. கட்சியை விட்டு நீக்கிய நிலையில், அவர்களை கட்சி சாராத எம்.எல்.ஏக்களாக அறிவிப்பதே சரியானதாக இருக்கும்.
துவக்கத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி இந்தக் கோரிக்கையை எழுப்பியபோது, கட்சித் தலைமை யாருக்கு என்ற நிலை இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஆதரவாக பல தீர்ப்புகள் வந்துவிட்டன. இந்த நிலையில், எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு கோரிக்கைகளை நிறைவேற்றுவதே ஏற்கத்தக்கதாக இருக்கும்” என்கிறார் ஷ்யாம்.
1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராகவும் சேடப்பட்டி முத்தையா சபாநாயகராகவும் இருந்தபோது நடந்த ஒரு நிகழ்வை நினைவுகூர்கிறார் ஷ்யாம்.
“அப்போது அழகு திருநாவுக்கரசையும் ஜி. விஸ்வநாதனையும் கட்சியைவிட்டு ஜெயலலிதா நீக்கினார். அவர்களை அப்போதைய சபாநாயகரான சேடப்பட்டி முத்தையா உடனடியாக எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என அறிவித்தார். காரணம், அதுதான் மரபு. மு. கருணாநிதிக்கு முன்னாள் முதலமைச்சர் என்ற வகையில் முதல் வரிசையில் இடம் கொடுத்திருக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அதனை அவர்கள் செய்யவில்லை. அதே தவறை தி.மு.கவும் செய்யக்கூடாது” என்கிறார் ஷ்யாம்.
மேலும், இந்த விவகாரத்தை தொடர்ந்து எழுப்ப எடப்பாடி கே. பழனிசாமிக்கு வாய்ப்பளிப்பதும் அரசியல் ரீதியாக தி.மு.கவுக்கு சரியானதாக இருக்காது என்கிறார் ஷ்யாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்