‘பாலு சத்தம் கேட்கவில்லை, ஏன் சும்மா நிற்கிறீர்கள்’ என சாத்தான்குளம் காவல் நிலையத்தின் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் சொல்ல, ‘நீ செத்தாலும் பரவாயில்லை. என் சொத்தை வித்தாவது வெளியில் வந்துவிடுவேன்’ எனக் கூறிக்கொண்டே அந்தக் காவல்நிலையத்தின் முன்னாள் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அடித்தார்” என்பது நீதிமன்றத்தில் சாட்சி ஒருவர் அளித்த வாக்குமூலம்.
இந்தக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உட்பட ஒன்பது காவலர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் விசாரணைக் காவலில் மரணமடைந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகின்றது.
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
வழக்கை முதலில் விசாரித்த அப்போதைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், கடந்த 25 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார்.
அவர் முதல் நாள் சாட்சியம் அளித்தபோது, சம்பவம் நடந்த ஜூன் 19 மற்றும் 20 ஆம் தேதி, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் என்ன நடந்தது என்று தன் விசாரணையின் மூலம் அறிந்துகொண்டதை சாட்சியமாக அளித்தார்.
“ரத்தம் வடியவடிய அடித்த காவல்துறை”
தந்தை மகன் மரணத்திற்கு பிறகு சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டபோது காவல்நிலையத்தில் இருந்த இரண்டு பெண் காவலர்கள், நீதித்துறை நடுவர் பாரதிதசானிடம் ஜூன் 19 தேதி இரவு முழுவதும் என்ன நடந்தது என்பதை கூறியுள்ளனர்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் பாரதிதாசன் அளித்த சாட்சியில்,“அவர்(பெண் காவலர்) தனது வாக்குமூலத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இருவரையும் போலீசார் காவல்நிலைய மேஜையின் மீது படுக்க வைத்து ஒரு இரவு முழுவதும் லத்தியால் அடித்து இருவருக்கும் ரத்தக்காயம் ஏற்படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட ரத்தக்கறைகளில் பெரும்பாலாவனை ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டதாகவும், லத்தி மற்றும் அந்த மேஜையினை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.” என்றார்.
அப்போது, ஏற்கனவே ரத்தக்கறைகள் மற்றும் முக்கிய சாட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்ட பாரதிதாசன், காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரது லத்திகளையும் கைப்பற்றியுள்ளார்.
“விசாரணையின் போது, காவலர் சாமதுரையிடம் அவரது லத்தியை கேட்டபோது, அவர் ஓடிச் சென்று காவல்நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்த காரின் மீது ஏறி குதித்து இருட்டில் மறைந்துவிட்டார்,” என நீதிமன்றத்தில் வாக்குமூலமாக கொடுத்துள்ளார் பாரதிதாசன்.
காவல் நிலையத்தில் இருந்த பெரும்பாலான ரத்தக்கறைகள், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது ரத்தக்கறைதான் என்றும் பாரதிதாசன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“காவல் நிலையத்தில் காணப்பட்ட இரத்தக்கறைகளில் பெரும்பாலானவை சுவற்றின் கீழ்பகுதியில் காணப்பட்டது. அது காயமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் பிட்டத்தில் இருந்த காயத்தின் உயரத்திற்கு ஒத்திசைவதாக அமைந்திருந்தது, என்றார் பாரதிதாசன்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சிறையில் எப்படி இருந்தார்கள்?
ஜூன் 19 ஆம் தேதி இரவு முழுவதும் காவல்நிலையத்தில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், ஜூன் 20 ஆம் தேதி கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் ஜெயராஜூம், பென்னிக்சும் நடக்கக்கூட முடியாமல் சிரமப்பட்டதாகவும், அவர்களின் பிட்டத்தில் இருந்து தண்ணீர் போல வடிந்துகொண்டே இருந்ததாக, அவருடன் இருந்த சிறைவாசிகள் நீதிமன்ற நடுவர் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
“சிறையில் இருந்தபோது, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சுக்கும், பின்பக்கம் நிற்காமல் நீர் வடிந்து கொண்டிருந்தது. முதல் நாள் லேசான ஈரம் இருந்தது, மூன்றாம் நாள் தான் அதிகமாக நீர் வடிந்தது.
சிறையில் அடைத்த முதல் இரண்டு நாட்கள் அவர்கள் கொஞ்சம் அருகில் இருந்த சுவரை பிடித்தும், கழிவறை சுவற்றை பிடித்தும் தான் நடக்க முடிந்தது.
அனைத்து கைதிகளையும் மூன்று வேளை சாப்பிடும்போது வரிசையாக அமரச் சொல்லி எண்ணும்போது கூட பென்னிக்சாலும், அவரது அப்பாவாலும் தரையில் அமர முடியாமல் அருகில் உள்ள சுவற்றை பிடித்தபடியே நிற்பார்கள்.
மூன்றாவது நாள் பென்னிக்சால் கொஞ்சம் கூட நடக்க முடியாமலும், நிற்க முடியாமலும், படுக்க முடியாமலும், சாப்பிடும்போது கூட, இரண்டு கைகளையும் தரையில் ஊற்றி, இரண்டு கால் முட்டிகளையும் தரையில் முட்டி போட்டக் கொண்டும், மிகவும் சிரமப்பட்டு கொஞ்சமாக சாப்பிட்டு, மிச்சம் வைத்துவிடுவார்,”
இவ்வாறு ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுடன் இருந்த சிறைவாசி ஒருவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
‘அவன் அப்படி என்ன தப்பு செஞ்சான்?’
ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இறந்து மூன்றாண்டுகளானாலும், தங்களால் இன்றளவும் அந்த சம்பவத்தில் இருந்து மீள முடியவில்லை என்கிறார்கள் பென்னிக்சின் நண்பர்கள்.
“நாங்கள் இரண்டாம் வகுப்பிலிருந்து நண்பர்கள். எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். வெவ்வேறு வேலைக்கு சென்றாலும், நாங்கள் தினமும் சந்தித்துக்கொள்வோம். இன்று அவன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இதே ஊரு தான், இதே தெரு தான். நாங்க சேர்ந்து சுத்துன இடத்திற்கு இப்போது சென்றாலும், எங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு அழுகை வரும். அந்த கடைத்தெருவை கடக்கும்போதெல்லாம் விவரிக்க முடியாத பதற்றமும், அழுத்தமும் ஏற்படுகிறது,”என்றார் சங்கரலிங்கம்.
கடைசியாக ஜெயராஜ் தனது குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும்படி சொன்னதாகப் பகிர்ந்தார் சங்கரலிங்கம்.
“அம்மாவை பத்திரமாக பார்த்துக்கோடா, இதுதான் பென்னிக்ஸ் ஜெயிலுக்கு செல்லும் முன் கடைசியாக என்னிடம் சொன்னது. அவனுக்கு அம்மா என்றால் உயிர்,” என்றார் சங்கரலிங்கம்.
பென்னிக்சின் மற்றொரு நண்பரான ராஜ்குமார் கூறுகையில், பென்னிக்ஸ் தான் செய்த குற்றம் என்ன எனத் தெரியாமல் மிகவும் வேதனையடைந்ததாகக் கூறினார்.
“அவன் அப்படி என்ன தப்பு செஞ்சான் என்று தான் அவனுக்கு உறுத்திக்கிட்டே இருந்தது. எங்களுக்கும் அந்த ஒரு கேள்விதான் இப்போதும் இருக்கிறது. அவன் இரவு காவல்நிலையம் சென்றதில் இருந்து விடியும்வரை நாங்கள் வெளியே தான் இருந்தோம்.
அவனுக்கு பதிலாக நாங்கள் நண்பர்கள் ஆளுக்கு இரண்டு அடி வாங்கியிருந்தால் கூட, இந்நேரம் அவன் உயிருடன் இருந்திருப்பான்,” என்றார் ராஜ்குமார்.
‘ஊருக்கு போகவே முடியலை; பயமாக இருக்கிறது’
அந்த சம்பவத்திற்கு பிறகு தங்களுடைய சொந்த ஊருக்கே செல்ல பிடிக்கவில்லை என்கிறார் பென்னிக்சின் மைத்துனரான வினோத்.
“நான் பென்னிக்சின் தங்கையை திருமணம் செய்துள்ளேன். எனக்கும் சொந்த ஊர் தூத்துக்குடிதான். முன்பெல்லாம் எப்போது ஊருக்கு சென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கும், நல்ல நினைவுகள் இருக்கும். ஆனால், இப்போது ஊருக்கு செல்லும்போதெல்லாம், அந்த இருவரை இழந்தது மட்டும்தான் நினைவுக்கு வருகிறது,” என்றார்.
மேலும், பேசிய வினோத், “இப்போது வரை எந்த தரப்பில் இருந்தும் எந்த அழுத்தமும் வரவில்லை. ஆனால், இருந்தபோதும், அந்த சம்பவத்திற்கு பிறகு, எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியே தனியாக செல்வதற்கே பயப்படுகிறோம்.
மனைவியோ மற்ற உறவினர்களோ வெளியே சென்றால், அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.
இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் அவர்கள் இத்தனை காலம் பட்ட கஷ்டங்களுக்கு நீதி கிடைக்கிறதா இல்லையா எனத் தெரியும் என்றார் வினோத்.
ஆனால், இந்த சம்பவம் வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்திருந்தால், இன்னும் பலர் இதுபோல பாதிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருப்பார்கள் என்கிறார் மற்றொரு மைதுனரான பொன்சேகர்.
“இப்போதும் ஊருக்கு சென்றால், இதே நினைவுகள் தான் உள்ளது. ஆனால், இந்த வழக்கை மட்டும் எப்படியாவது நடத்திவிடுங்கள் என்று தான் ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். நாங்களும் நீதி கேட்காமல், சென்றிருந்தால், பல பேர் இன்னும் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என ஊர் மக்கள் எங்களிடத்தில் கூறுகிறார்கள்,” என்றார் பொன்சேகர்.
வழக்கின் நிலை என்ன?
முதலில் தமிழ் நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து, பின் சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட காவலர்களை கைது செய்தது. பின், இவ்வழக்கு மத்திய புலனாய்வு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது.
“அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, தற்போது நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சாட்சியம் அளித்து வருகிறார். அவருக்குப் பிறகு, சிபிசிஐடி போலீசாரும், தமிழ்நாடு போலீசாரும் சாட்சியம் அளிப்பார்கள். பின், வழக்கின் வாதம், பிரதிவாதங்கள் நடைபெறும்,” என்றார் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸ்.
இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது, வழக்கு நடந்துகொண்டிருப்பதால் கருத்துக் கூற விரும்பவில்லை என்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்