“நமக்கு நிறைய பெரிய வேலைகள் இருக்கு, தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார் நடிகர் விஜய்.
“இளைய தளபதி விஜய் எப்போது தலைவர் விஜயாக மாறுவார்” என்ற ரசிகர்களின் கேள்விக்கான பதிலைத்தான் அவர் மறைமுகமாகச் சொல்கிறார் என அப்போது பல விமர்சகர்கள் கூறினார்கள்.
அந்தக் கேள்விக்கான நேரடி பதிலைத் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிக்கையின் மூலமாக இன்று கூறியுள்ளார். “தமிழக வெற்றிக் கழகத்தின்” தலைவர் விஜய். 2026ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘நாளைய தீர்ப்பு’ படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்த பயணம் லவ்வர் பாய், ஆக்ஷன் ஹீரோ, வசூல் நாயகன் என அடுத்தடுத்து மேலே வளர்ந்து, இப்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற நிலையை எட்டியுள்ளது.
விஜயின் திரைப் பயணமும் சர்ச்சைகளும்
அம்மா ஷோபா திரைக்கதை எழுத, அப்பா சந்திரசேகரனின் இயக்கத்தில் “நாளைய தீர்ப்பு” என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய். அவர் இப்போதைய உயரத்தை விஜய் எட்டுவார் என அன்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். நாளைய தீர்ப்பு உட்பட விஜயின் ஆரம்ப காலத் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்தக் காலகட்டத்தில் “இவர் ஹீரோ மெட்டீரியலே இல்லை, வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கேட்டகிரி”, “பார்க்க அழகாக இல்லை” போன்ற பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தார் விஜய். முக்கியமாக உருவ கேலிகள் மனதளவில் தன்னை மிகவும் துன்புறுத்தியதாக அவர் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியிருந்தார்.
குடும்ப செண்டிமென்டை மையமாக வைத்து திரைப்படங்கள் எடுக்கும் விக்ரமன் 1996ஆம் ஆண்டு விஜய்யை வைத்து “பூவே உனக்காக” திரைப்படத்தை இயக்கினார். நடிகர் விஜய்யின் முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் இதுதான்.
அதன் பிறகு காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம், தமிழ்நாட்டில் அனைவரும் கொண்டாடும் ஜனரஞ்சக நாயகனாகவே மாறிப் போனார் விஜய். மேலும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் “மினிமம் கேரண்டி ஹீரோ” என்ற பட்டத்தையும் தட்டிச் சென்றார்.
இதுதவிர எஸ். ஜே. சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த “குஷி” திரைப்படத்தின் மூலம் இளைஞர்களைக் கவர்ந்து, கல்லூரி மாணவர்களை திரையரங்கு நோக்கிப் படையெடுக்க வைத்தார்.
“குஷி” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிற மொழித் திரைப்படங்களான “ஃப்ரெண்ட்ஸ்”, “பத்ரி”, “யூத்” உள்ளிட்ட படங்களை அடுத்தடுத்து ரீமேக் செய்து, வெற்றியைத் தன் வசம் இறுகப் பற்றிக்கொண்ட விஜய், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும் மாறிப் போனார்.
மென்மையான காதல் கதைகளில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர முடியாது என எண்ணி மெல்ல ஆக்ஷன் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட மசாலா படங்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இதில், கில்லி திரைப்படத்தின் வசூல் படையப்பா திரைப்படத்தின் வசூலை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2010க்கு பிறகு நடந்த மாற்றம்
விஜயின் அரசியல் பயணத்திற்கு அடித்தளம் 2010ஆம் ஆண்டு தொடக்கத்தில் போடப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் 2010க்கு பிறகு வெளியான விஜயின் பல திரைப்படங்கள் சர்ச்சையில் சிக்கின.
தனது படங்களுக்கு ஏற்படும் பிரச்னையின் காரணமாக அவர் அரசியல் பேசுகிறாரா அல்லது அரசியல் பேசுவதால் அவரது திரைப்படங்களுக்கு சிக்கல் ஏற்படுகிறதா என்று சமூக ஊடகங்களில் அடிக்கடி விவாதிக்கப்படும் அளவுக்குப் பல சர்ச்சைகள்.
விஜயின் புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியானால், ரசிகர்கள் அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடத்தப்படும் என ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். காரணம், விஜயின் குட்டிக் கதைகளும், அவரது அரசியல் பேச்சுகளும்.
கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான காவலன் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் பெறுவதில் ஏற்பட்ட பிரச்னை பட வெளியீட்டில் பூதாகரமானது. அரசியல் தலையீடுகளும் அதிகரிக்க படம் திரைக்கே வர முடியாது என்னும் நிலை ஏற்பட்டது. முதல்முறையாக பெரும் சிக்கலை சந்தித்த விஜய், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் காவலன் பிரச்னையை சுமூகமாக்கி திரைக்குக் கொண்டு வந்தார். படம் வெளியாகிவிட்டாலும், காவலன் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் அவரை வெகுவாக யோசிக்க வைத்தாகச் சொல்லப்படுகிறது.
ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டில் விஜய், சத்யராஜ் நடித்து உருவான படம் ‘தலைவா’. இந்தப் படத்தின் டைட்டிலுக்கு கீழே, “வழிநடத்திச் செல்வதற்கான நேரம்” என்பதைக் குறிக்கும் வகையில், Time to Lead என்ற வரிகள் எழுதப்பட்டிருந்தன. அப்போதைய ஆளும் கட்சி, ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில் விரும்பவில்லை எனக் கூறப்பட்டது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறி தமிழ்நாட்டில் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க படக் குழுவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. பிறகு ஒரு வழியாக, ஆகஸ்ட் 20ஆம் தேதியே படம் வெளியானது. விஜய்க்கு அரசியலுக்கு வரும் ஆசை இருப்பதாலேயே இத்தனை தடைகள் உருவானதாகவும், அவர் இத்தனை பிரச்னைகளைத் தாண்டி அரசியலுக்கு வருவாரா என்ற விவாதமும் ஏற்பட்டது.
கத்தி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்ததை முன்னிறுத்தி பிரச்னைகள் கிளம்பின. இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று சில அமைப்புகள் போர்க்கொடி எழுப்பின. இதையெல்லாம் தாண்டி கத்தி படம் வெளியானபோது, படத்தில் இடம்பெற்ற `காற்றை வைத்து ஊழல் செய்கின்ற நாடு இது ` என்ற வசனம் அரசியல் ரீதியான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
புலி படம் வெளியிடுவதற்கு முந்தைய நாள் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதனால், பட வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. புலி படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பகல் காட்சி திரையிடப்பட்டது. ஆனாலும், புலி திரைப்படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் தோல்வியடைந்தது.
இதற்குப் பிறகு, 2017இல் வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றன. அதற்கு பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்புத் தெரிவித்தார். எச். ராஜாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். படம் வெளியிடுவதற்கு குறிக்கப்பட்ட தினத்திற்கு முதல் நாள் வரை சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருந்து, பிறகு ஒரு வழியாகப் படம் வெளியானது.
பாஜகவினர் தொடர்ந்து மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் ஆதரவுக் குரல் எழுப்பினர். சில தினங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் பிரச்னை ஒருவழியாய் ஓய, எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார் விஜய்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி 2018இல் வெளியான சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “இந்தப் படத்தில் நான் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவில்லை. நிஜத்தில் நான் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். தலைவன் நல்லவனாக இருந்தால் எல்லாமே நல்லதாக மாறும். நெருக்கடியான நேரத்தில் ஒரு நல்ல தலைவன் வருவார். அவர் நல்ல சர்கார் அமைப்பார்,” என்று குறிப்பிட்டார்.
அவரது இந்தப் பேச்சுதான் விஜய் அரசியல் குறித்து நேரடியாகப் பேசிய முதல் பேச்சாக அமைந்தது. சர்கார் படத்தில் அரசு தரும் இலவசங்கள் குறித்து அவர் விமர்சித்திருந்ததும் பேசுபொருள் ஆனது.
இதற்கு அடுத்து வந்த பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ”எவனை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவனை அங்கே கரெக்டா உட்கார வைத்தீர்கள் எனில், இந்த கோல்டு மெடல் தானாக வந்து சேரும்,” என்றார். அவருடைய இந்தப் பேச்சுக்கு அ.தி.மு.கவினரும் பா.ஜ.கவினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசியல் தொடர்பான விஜயின் ஒவ்வொரு கருத்தும் அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரத் தொடங்கின. தமிழ்நாட்டை தலைமை தாங்க விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சார்பில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பலரும் அவர் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் எனக் காத்திருந்தனர். இன்று தமிழ்நாடு முழுவதும் விஜயின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
விஜயின் மக்கள் இயக்கம்
தனது ரசிகர் மன்ற இயக்கத்தை 2009ஆம் ஆண்டு மக்கள் இயக்கமாக மாற்றினார் விஜய். காவலன் திரைப்பட பிரச்னைக்குப் பிறகான காலகட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கினார். அந்த வகையில், அடிக்கடி இயக்க நிர்வாகிகளைச் சந்தித்தார். அவர்தம் குடும்பத்தினரையும் வரவழைத்து அன்பைப் பகிர்ந்தார். இது அவர்களின் உற்சாகத்தை இன்னும் கூட்ட மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.
அதனால்தான், 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு விஜய் ஆதரவு கொடுத்ததும், வெற்றிக்குப் பிறகு ‘இந்த வெற்றியில் ஒரு அணிலைப் போல் உதவினோம்’ என்று சொன்ன சம்பவங்களும் நடந்தேறின.
மெர்சல் பிரச்னைக்குப் பின்னர் மீண்டும் தீவிரமாகத் தனது மக்கள் இயக்கப் பணிகளை முன்னெடுத்த விஜய், அதன் உட்கட்டமைப்பையும் கிட்டத்தட்ட ஓர் அரசியல் கட்சிக்கு நிகராய் மகளிரணி, மாணவரணி தொடங்கி கிளைக் கழகங்கள் வரை திட்டமிட்டு வடிவமைத்தார் என தகவல்கள் கூறுகின்றன.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அவரது அரசியல் பிரவேசம் குறித்த யூகங்களுக்கு அந்நிகழ்வு மேலும் வலுசேர்த்தது.
அப்போது மாணவர்களிடையே பேசிய விஜய், “நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள். பணம் வாங்கிவிட்டு வாக்களிப்பது என்பது, நமது கண்களை நாமே குத்திக் கொள்வது போன்றுதான். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தங்களது பெற்றோரிடத்தில், இனி பணம் வாங்கிக்கொண்டு வாக்கு அளிக்காதீர்கள் எனக் கூறிப் பாருங்கள். நீங்கள் சொன்னால் அது நிச்சயமாக நடைபெறும்,” என்று பேசியிருந்தார்.
இது அரசியல்ரீதியிலான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்பட்டாலும், மாணவர்களுக்காக அவர் நடத்திய இந்த நிகழ்வைப் பலரும் பாராட்டினர்.
அதற்கு முன்பாக, அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விஜய் மக்கள் இயக்கத்தினர் பிற கட்சிகளில் பொறுப்புகளில் இருந்தால் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பேச்சாளர் ரமேஷ், “விஜய் பெயரை பயன்படுத்தித்தான் பல்வேறு நலத்திட்டங்களை நாங்கள் செய்து வருகிறோம். அப்படியிருக்கும்போது, இயக்கத்தில் இருப்பவர்கள் வேறு கட்சியில் இருக்கும்போது, அது ஒரு சார்பைக் கொடுக்கும். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தாலும் இவர் இந்த கட்சியைத் தான் ஆதரிப்பார் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அப்படி அறிவுறுத்தப்பட்டது,” என்று அப்போது கூறியிருந்தார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், இன்று அது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் இயக்கமாக மாறியுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் விஜய் அறிவித்து விட்டார். 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் அதிக அவகாசம் இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்