சட்டீஸ்கரில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறது பாரதீய ஜனதா கட்சி.
சட்டீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் 7ஆம் தேதியும் 17ஆம் தேதியும் நடக்கவிருக்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தல் குறித்தும் அந்த மாநில அரசியல் நிலவரம் குறித்தும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்னென்ன?
சட்டீஸ்கர் மாநிலத்தின் பின்னணி
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மத்திய மாகாணத்தின் ஒரு பகுதியாக சட்டீஸ்கர இருந்தது். 1845இல் இருந்து 1947வரை சட்டீஸ்கர் டிவிஷன் என்ற பெயரில் இந்தப் பகுதிகள் குறிப்பிடப்பட்டன. 1956இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது இந்தப் பகுதிகள் அனைத்தும் மத்தியப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டன.
சட்டீஸ்கரை ஒரு தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை 1920களில் இருந்தே இருந்து வந்தாலும், பெரிய இயக்கங்கள் ஏதும் உருவாகவில்லை. 1954இல் மொழிவாரி மாநில கமிஷன் முன்பாகவும் தனி மாநிலக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தனி மாநிலக் கோரிக்கை 1990களில் வலுவடைந்தது. இதற்காக சட்டீஸ்கர் ராஜ்ய நிர்மான் மன்ச் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை பிரதான கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.கவும் ஆதரித்தன.
தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி 1990களின் பிற்பகுதியில் ஏற்பட்டபோது, இதற்கான நடவடிக்கைகள் துவங்கின. 2000வது ஆண்டில் மத்திய பிரதேச மாநில மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டீஸ்கர் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது.
சட்டீஸ்கரின் அரசியல் சூழல் என்ன?
இந்த மாநிலத்தின் முதல் மற்றும் இடைக்கால முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் அஜீத் ஜோகி பதவியேற்றார். 2003இல் நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையடுத்து ரமண் சிங் முதலமைச்சரானார். அதற்கு அடுத்து நடந்த 2008, 2013ஆம் ஆண்டு தேர்தல்களிலும் ரமண் சிங்கே வெற்றி பெற்று முதலமைச்சரானார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனைத் தேர்தலாக அமைந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுக்கும் இடையில்தான் கடுமையான போட்டி நிலவியது என்றாலும் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த அஜீத் ஜோகி தலைமையிலான ஜன்டா காங்கிரஸ் சட்டீஸ்கர் கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் கட்ட கருத்துக் கணிப்புகள் பா.ஜ.கவே நான்காவது முறையாகவும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே தெரிவித்தன. இரண்டாம் கட்டக் கருத்துக் கணிப்புகள் சில பா.ஜ.கவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சில கருத்துக் கணிப்புகள் காங்கிரசிற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தன.
ஆனால், தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை அளித்தன. மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களைக் கைப்பற்றியது. அதற்கு முந்தைய தேர்தலில் 49 இடங்களைப் பிடித்திருந்த பா.ஜ.க. வெறும் 15 இடங்களையே பிடித்தது. அஜீத் ஜோகியின் கட்சி 5 இடங்களையும் பிஎஸ்பி இரண்டு இடங்களையும் பிடித்தன.
தற்போது, 2023ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 7ஆம் தேதியும் நவம்பர் 17ஆம் தேதியும் இரு கட்டங்களாக நடக்கும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் 4 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை நடக்கும் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஜன்டா காங்கிரஸ் சட்டீஸ்கர், பி.எஸ்.பி., ஆம் ஆத்மி, கோண்ட்வானா கணதந்திர கட்சி, இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை களத்தில் இருக்கின்றன. இதில் பி.எஸ்.பியும் கோண்ட்வான கணதந்திரக் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
2023 தேர்தலில் முக்கியப் பிரச்னைகள்
சட்டீஸ்கர் மாநிலம் விவசாயத்தை முழுமையாகச் சார்ந்திருக்கும் ஒரு மாநிலம். மாநிலத்தின் 70 சதவீதம் பேர் விவசாயத்தையோ, அதைச் சார்ந்த மற்ற வேலைகளையோ சார்ந்திருக்கின்றனர். இந்த மாநிலத்தில் மொத்தமாக 37.5 லட்சம் விவசாயிகள் இருக்கின்றனர். இதில் பெரும்பலானவர்கள் சிறு, குறு விவசாயிகள்.
கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலின்போது, விவசாயிகள் சார்ந்து இரண்டு முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் முன்வைத்தது. அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 2,100 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தது.
இவற்றை நிறைவேற்றிய காங்கிரஸ் அரசு, 2022ஆம் ஆண்டில் நெல்லுக்கான விலையை 2,640 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தது.
மாநிலத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும் நிலையில், அவர்களுக்கான மாத உதவித் தொகையாக 2,500 ரூபாயை அறிவித்த அரசு, தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாகவே 2 தவணைகளை அவர்களுக்குச் செலுத்தியிருக்கிறது.
அதேபோல விவசாயிகளுக்கு நேரடியாக பண உதவிகளைச் செய்யும் ராஜீவ்காந்தி கிசான் நியாய் யோஜனா விவசாயிகளின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 24 விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது.
அதேபோல, கோதான் நியாய் யோஜனா என்ற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் மாடு வளர்ப்பவர்களிடம் இருந்து மாட்டுச் சாணம் கிலோ இரண்டு ரூபாய்க்கு அரசால் வாங்கிக் கொள்ளப்படும். அந்தச் சாணத்தை வைத்து இயற்கை உரம் உருவாக்கப்பட்டு, அவை விவசாயிகளுக்கு நியாய விலையில் விற்கப்படும். அதேபோல, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கால்நடைகளைப் பாதுகாக்க மையங்கள் அமைக்கப்படும். இந்தத் திட்டமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டங்கள் எல்லாம் தங்களுக்கு உதவும் என காங்கிரஸ் கட்சி கருதுகிறது.
பா.ஜ.கவை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வையும் காங்கிரசின் எம்.எல்.ஏக்களில் சிலர் சரியாகச் செயல்படாதது, காங்கிரஸ் அளித்த சில வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஆகியவற்றை நம்பியிருக்கிறது.
மேலும் காங்கிரஸ் அரசு மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளையும் பா.ஜ.க. சுமத்தி வருகிறது. குறிப்பாக, முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் நெருங்கிய சகாக்கள், சில அதிகாரிகள், காங்கிரஸ் கட்சியில் தொடர்புடைய சிலரைச் சிக்க வைக்கும் பல விசாரணைகளை அமலாக்க இயக்குநரகம் நடத்தி வருகிறது.
சட்டீஸ்கரில் ஆதிவாசிகளுக்காகச் செயல்பட்டு வந்த சட்டீஸ்கர் சர்வ ஆதிவாசி சமாஜ் என்ற அமைப்பு, ஹமர் ராஜ் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த ஆட்சி மீது பழங்குடி மக்களுக்கு இருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்தக் கட்சி கருதுகிறது.
அஜீத் ஜோகியால் நிறுவப்பட்ட ஜன்டா காங்கிரஸ் சட்டீஸ்கர் கட்சியைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் ஒரு செல்வாக்கு இருந்தாலும் அது இப்போது மங்கி வருகிறது. இந்த இரு கட்சிகள் தவிர, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் களத்தில் இருக்கின்றன. ஆனால், உண்மையான போட்டி என்பது காங்கிரஸ், பா.ஜ.க. இடையேதான் இருக்கும்.
பா.ஜ.கவின் வாக்குறுதிகள் என்ன?
வெள்ளிக்கிழமையன்று சட்டீஸ்கர் மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்,
- பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 3,100 ரூபாய் வழங்கப்படும். க்ருஷி உன்னதி என்ற திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல், இந்த விலையில் கொள்முதல் செய்யப்படும்.
- ஏழைக் குடும்பங்களுக்கு 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும்.
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
- கர் கர் நிர்மல் ஜல் அபியான் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளில் எல்லா வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
- மஹ்தாரி வந்தன் திட்டத்தின் கீழ் திருமணமான பெண்களுக்கு வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
- நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்களுக்கு தீனதயாள் உபாத்யாயா க்ருஷி மஜ்தூர் திட்டத்தின் கீழ் வருடம் பத்தாயிரம் ரூபாய் தரப்படும்.
காங்கிரஸ் வாக்குறுதிகள் என்ன?
- கிண்டர் கார்டன் வகுப்புகள் முதல் பட்ட மேற்படிப்பு வரை அரசின் கல்வி நிலையங்களில் இலவச கல்வி வழங்கப்படும் என காங்கிரஸ் கூறியிருக்கிறது.
- மஹ்தாரி நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு சிலிண்டருக்கு 600 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
- சக்ஷான் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களின் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
- புதிதாக 700 கிராமப்புற தொழில்பூங்காக்கள் அமைக்கப்படும்.
- முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
- ராஜீவ் காந்தி நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் நிதித் திட்டத்தின் கீழ் வருடம் பத்தாயிரம் ரூபாய், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தரப்படும்.
- வீட்டு நிதித் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள 17.5 லட்சம் குடும்பங்களுக்கு அரசின் உதவியுடன் வீடு கட்டித் தரப்படும்.
- தெண்டு இலை சேகரிப்பாளர்களுக்கு வருடாந்திர போனஸாக 4,000 ரூபாய் வழங்கப்படும்.
இதற்கிடையே, தாங்கள் அளித்த வாக்குறுதிகளையே பா.ஜ.க. காப்பி அடித்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருப்பதாகக் கூறி வருகிறது காங்கிரஸ் கட்சி.
முதல்வர் வேட்பாளர்கள் யார்?
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அக்கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் தற்போதைய முதல்வர் பூபேஷ் சிங் பாகலே முதல்வராகத் தொடர்வார்.
ஆனால், பா.ஜ.கவில் முதல்வர் வேட்பாளராக யாரும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், மூன்று முறை முதலமைச்சராக இருந்த ரமண் சிங்கே முதல்வர் பதவிக்கான போட்டியில் முதலிடத்தில் இருக்கிறார்.
பிலாஸ்பூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான அருண் சவ்வும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார். லோர்மி தொகுதியில் காங்கிரஸின் தனேஸ்வர் சாஹுவை எதிர்த்து இவர் போட்டியிடுகிறார்.
நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கேதார் காஷ்யப்பும் இந்தப் போட்டியில் இருக்கிறார். இவர் மூத்த பா.ஜ.க. தலைவரான பலிராம் காஷ்யப்பின் மகன்.
முதலமைச்சர் பூபேஷ் சிங் பாகலுக்கு எதிராக அவர் போட்டியிடும் படன் தொகுதியில், அவரது உறவினரான விஜய் பாகலை நிறுத்தியுள்ளது பா.ஜ.க. 2008ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இவர் பூபேஷ் பாகலை தோற்கடித்தவர் என்றாலும் 2003, 2013ஆம் ஆண்டுகளில் தோற்றுப்போனவர்.
இந்தத் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பிற விஷயங்கள்
முன்னெப்போதும் இல்லாத வகையில் பிராந்திய பெருமையை ஒரு முக்கிய விஷயமாக இந்தத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிறுத்துகிறது.
ரமண் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி இருந்தபோது மாநிலம் முழுவதும் சாலைகள் மேம்படுத்தப்பட்டன. சூரிய சக்தி மின்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஆனால், 2018இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு சட்டீஸ்கருக்கு என ஒரு தனி அடையாளத்தையும் அம்மக்களுக்கு பெருமித உணர்வையும் ஏற்படுத்துவதில் மிகக் கவனமாகச் செயல்பட்டார் பூபேஷ் பாகல்.
மறந்துபோன விழாக்கள் முதலமைச்சரின் இல்லத்திலும் மாவட்டத் தலைநகரிலும் கொண்டாடப்பட்டன. இந்த விழாக்களில் முதல்வரும் பங்கேற்றார். இது அம்மாநில மக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தனித்துவ பிராந்திய அடையாளத்தை உருவாக்கியது.
உள்ளூர் விழாக்களைக் கொண்டாட பஞ்சாயத்து மட்டத்தில் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை பத்தாயிரம் ரூபாய் தரப்படும் என அறிவித்தார். உள்ளூர் திருநாட்களுக்கு மாநில விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிக்கூடங்களில் அழிந்து வரும் மொழிகளான சட்டீஸ்கரி, ஹல்பி, கோண்டி போன்ற மொழிகள் கற்பிக்கப்பட்டன.
காங்கிரசின் இந்தத் துணை தேசியவாதத்திற்கு மாற்றாக பா.ஜ.க. நாடு தழுவிய தேசியவாதத்தை முன்வைக்கிறது. நகர்ப்புறங்களில் இதற்கு ஒரு ஆதரவும் இருக்கிறது. ஆனால், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
அதேபோல மதத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது பா.ஜ.க. மதக் கலவரங்களில் இறந்த புவனேஸ்வர் சாஹு என்ற இளைஞரின் தந்தையான ஈஸ்வர் சாஹுவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
காவர்தா தொகுதியில் 2021 அக்டோபரில் நடந்த கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட விஜய் ஷர்மா என்பவரை பாகெல் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒரே இஸ்லாமிய அமைச்சரான முகமது அக்பருக்கு எதிராகக் களமிறக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்த முகமது அக்பருக்கு எதிராக மதத்தை முன்வைத்து அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மா பேசிய பேச்சுகள் சர்ச்சைக்கு உள்ளாகின.
சட்டீஸ்கரில் நவம்பர் 7ஆம் தேதி முதற்கட்டமாக 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 17ஆம் தேதி மீதமுள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்