விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று (புதன்கிழமை, அக்டோபர் 18) நடந்த இருவேறு பட்டாசு விபத்துகளில் மொத்தம் 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் செயல்பட்டு வந்த கனிஷ்கர் பட்டாசு ஆலையில் நேற்று (அக்டோபர் 18) நடந்த பட்டாசு விபத்தில் 13 தொழிலாளிகள் பலியாகினர்.
அதேபோல், மற்றொரு சம்பவத்தில், சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் செயல்பட்டு வந்த மற்றொரு பட்டாசு ஆலையில் வெடி மருந்து கலக்கும் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் ஒரு தொழிலாளி பலியானார்.
தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசை கடையின் அருகே வைத்து வெடித்து சோதனை செய்தபோது, தீப்பொறி பட்டாசு அறையில் விழுந்ததால் இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி எப்படி சிவகாசி பட்டாசு ஆலையில் தயாரிக்கப்பட்டது? அரசு உருவாக்கிய பட்டாசு விபத்துத் தடுப்பு குழுக்கள் முறையாக பட்டாசு ஆலையில் கண்காணிப்பு செய்யாததே இந்த பட்டாசு ஆலை விபத்து நிகழக் காரணமா? போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
அளவுக்கு அதிகமான பட்டாசுகள் சேமிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி எம்.புதுப்பட்டி அருகே உள்ள ரெங்கபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வந்த கனிஷ்கர் பயர் வோர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் நேற்று (அக்டோபர் 18) பிற்பகல் 1:30 மணியளவில் பட்டாசு விபத்து ஏற்பட்டதாக சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர் பட்டாசு ஆலையின் அருகே செயல்பட்டு வந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீயிணைக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்கினார்.
ஆனால், அதிகளவிலான பட்டாசுகள் ஒரே அறையில் சேமித்து வைக்கப்பட்டதால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் எற்பட்டது. 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 12 பெண் தொழிலாளர்கள், ஒரு ஆண் தொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டு அவரது உடல்கள் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை மையத்தில் வைக்கப்பட்டன.
நேற்று விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை அறையின் முன்பாக பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குவிந்திருந்தனர். உடற்கூறு ஆய்வு முடித்து ஒவ்வொரு தொழிலாளரின் உடலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சில உறவினர்கள் ஆலை உரிமையாளர் பலியான குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வோம் என்றும் கூறினர்.
சிவகாசியில் நிகழ்ந்த இரு வேறு பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். அதனுடன் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
பட்டாசு ஆலைக்கு அருகிலேயே வெடித்துச் சோதிக்கப்பட்ட பட்டாசு
இந்த விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பட்டாசுக் கடையின் அருகே வெடியை கொளுத்திப் பார்த்து சோதனை செய்த போது அதில் ஏற்பட்ட தீப்பொறி கடைக்குள் விழுந்தது என்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது என்று போலீசார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக எம். புதுப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த கனிஷ்கா பட்டாசு ஆலையின் உரிமையாளர் சுந்தர மூர்த்தி உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘என் சேலை முழுதும் தீப்பற்றி எரிந்தது’
இந்த விபத்தில் சிக்கி கை, கால், முதுகுப் பகுதிகளில் பலத்த காயம் அடைந்த பொன்னுத்தாயி என்ற பெண் தொழிலாளி, நேற்று தான் பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த போது பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது என்றார். “உடனடியாக நான் உட்பட அருகில் இருந்த 3 பெண்கள் தப்பி ஓடத் துவங்கினோம்,” என்றார்.
மேலும் பேசிய அவர், “பட்டாசு அறையின் வெளியே இருந்த நாங்கள் ஓடித் தப்பித்து விட்டோம். பட்டாசு வைக்கப்பட்டு இருந்த கடையில் உள்ளே வேலை பார்த்த அனைவரும் மாட்டிக் கொண்டனர். அங்கு மொத்தம் 12 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் நேற்று வேலை பார்த்து வந்தனர். அதில் ஒருவர் விபத்து நேரத்தில் வெளியே சென்றதால் விபத்தில் சிக்கவில்லை,” என்றார்.
இந்த விபத்தில் தனது சேலை முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் உடலின் பின் பகுதி முழுவதும் வெந்து பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
“பட்டாசு ஆலையில் இருந்து வெளியே வந்த என்னை ஒரு பெண் கட்டி அணைத்து அவரது சேலையை போர்த்தி அழைத்துச் சென்றார். அதன் பின் என்ன நடந்தது என்றே தெரியவில்லை,” என்றார் பொன்னுத்தாயி.
ஓட முடியாமல் சிக்கி இறந்த வயதான பெண்
விபத்தில் இருந்து தப்பிய மற்றொரு தொழிலாளரான லெட்சுமி, சரவெடியைக் கடையின் அருகே கொளுத்திச் சோதித்துப் பார்த்த போது ஏற்பட்ட தீ பொறி கடையின் மீது தெறித்ததில் பட்டாசு விபத்து நிகழ்ந்தது என கூறுகிறார்.
“பட்டாசு ஆலையின் செட் பகுதிக்குள் அமர்ந்து 10 பேர் பணி செய்து கொண்டிருந்தோம். திடீரென பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது. வெளியில் வந்து பார்த்தபோது காய வைக்கப்பட்டிருந்த பட்டாசு மீது வெடித்த பட்டாசின் தீ பொறிகள் விழத் துவங்கியன. அதே நேரம் இங்கு காய வைக்கப்பட்ட பட்டாசுகளும் வெடிக்கத் துவங்கின,” என்றார்.
மேலும் பேசிய அவர், “உடனடியாகப் பட்டாசு ஆலையின் கிழக்குப் பகுதி விபத்தில் சிக்கிக் கொள்ளாமல் தப்பி ஓடினோம். என்னுடன் அமர்ந்து வேலை பார்த்த அனைவரும் என் பின்னாலேயே ஓடி வந்து தப்பினர். வயதான பெண் தொழிலாளி மாட்டிக் கொண்டு இறந்து போனார்,” என்றார்.
மெலும் பேசிய அவர், பட்டாசு ஆலையின் அருகே இருந்த கடைக்கு அருகிலேயே சரவெடி கொளுத்திச் சோதித்துப் பார்த்த போது, அதன் தீப்பொறிகள் பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடையின் மீது தெரித்ததில் பட்டாசுகள் வெடிக்கத் துவங்கின. இதனால், அந்த அறைக்குள் இருந்த அனைவரும் வெளியில் வர முடியாமல் மாட்டிக் கொண்டனர், என்றார்.
சட்டவிரோதமாக சரவெடி தயாரிப்பு
விபத்து நடந்த இந்தப் பட்டாசு ஆலையில் சரவெடி பின்னுவது, சரவெடிகளை மிஷினில் ஓட்டுவது போன்ற பணிகளை செய்வார்கள் என லெட்சுமி கூறுகிறார்.
பட்டாசு ஆலையில் சரவெடி தயாரிக்கலாமா? என கேள்வி எழுப்பிய பொழுது அது குறித்து அந்த பெண் தொழிலாளி பதில் அளிக்கவில்லை.
‘வேலைவாய்ப்பு இருந்திருந்தால் என் மனைவி உயிருடன் இருந்திருப்பார்’
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பட்டாசு ஆலையில் டிரைவராக பணிபுரிந்து வந்த காளிராஜனின் மனைவி லெட்சுமியும் (24) இவ்விபத்தில் உயிரிழந்திருக்கிறார். அவர் கடந்த ஓராண்டு காலம் இந்த ஆலையின் சரவெடிப் பகுதியில் பணியாற்றி வந்ததாகக் காளிரஜன் கூறினார்.
பிபிசியிடம் பேசிய அவர், விபத்து நடந்தபோது தான் வெளியே சென்றிருந்தால் பட்டாசு ஆலையில் என்ன நடந்தது எனத் தனக்குத் தெரியாது என்றார். “இந்த விபத்தில் எனது மனைவியைப் பறிகொடுத்த பிறகு அரசாங்கம் உதவித்தொகையை வைத்து என்ன செய்யப் போகிறேன்,” என்றார்.
தனக்கு 10 வயது, 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர் என்றும் இனி அவர்களை தனியாளாக எப்படி வளர்ப்பது என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர், சிவகாசியில் வேறு வேலை வாய்ப்பு இருந்திருந்தால் தன் மனைவி உயிருடன் இருந்திருப்பார் என்றார்.
“சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலையைத் தவிர வேறு வேலை வாய்ப்புகள் ஏதும் இல்லை. இதனால், குடும்ப வறுமையைச் சமாளிக்கப் பட்டாசு ஆலைகளில் உயிரை பணையம் வைத்து வேலை செய்யவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறோம்,” என்றார்.
ஆய்வுக் குழு அமைப்பு
இந்த பட்டாசு ஆலை விபத்துகளை குறித்து விசாரணை செய்ய மாவட்ட ஆட்சியர் வீ. ப. ஜெயசீலன் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து இருக்கிறார். அந்த குழு பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக விசாரணையை செய்து அதன் அறிக்கையை ஆட்சியரிடம் தாக்கல் செய்யும்.
மேலும், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த கூடுதலாக 4 குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்ட முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தமிழிடம் கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்