தீபாவளி அன்று காலையில் கறிக்குழம்பு சாப்பிடும் பழக்கம் தமிழ்நாட்டின் பல ஊர்களில் பின்பற்றப்படுகிறது. தீபாவளி வடஇந்திய திருவிழாவாக இருந்தாலும், மெல்ல மெல்ல தென்னிந்தியாவில் பரவி, இங்கும் அது முக்கியமான திருவிழாவாக மாறிவிட்டது. இதில் கறிக்குழம்பு சாப்பிடும் பழக்கம் தமிழ்நாட்டில் எப்படி வந்தது என்பது விந்தையாகவே இருக்கிறது.
இட்லி-ஆட்டுக்கறி குழம்பு, அல்லது கோழிக் கறிக்குழம்பு போன்றவற்றை தீபாவளி அன்று காலையில் சமைத்து உண்பதும், ஒரு சில வீடுகளில் மதிய உணவாக கறிச்சோறு விருந்து உண்பதும் பின்பற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் பல ஊர்களிலும் இந்த வழக்கம் இருப்பதால், தீபாவளி நாளன்று ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறியின் விலை மிகவும் அதிகமாக இருக்கும். ஒரு சில ஊர்களில், குழுவாக சேர்ந்து உறவினர்கள் ஆடு வாங்கி, தங்களுக்குள் பங்கு பிரித்து பங்குகறி வாங்கிக்கொள்ளும் நடைமுறையும் இருக்கிறது.
தீபாவளி திருவிழா கொண்டாடுவதற்கு பலவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் மூன்று கதைகள் மிகவும் பிரபலம். முதலில், ராமாயண கதைப்படி, ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பும் நாளை மக்கள், விளக்குகளை வரிசையாக ஏற்றி கொண்டாடிய நாள்தான் தீபாவளி என்று சொல்லப்படுகிறது.
மற்றொரு கதை, கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த நாள் என்றும் அதனை கொண்டாடும் விதத்தில் பட்டாசு வெடித்து, விளக்கு ஏற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடும் நாள் என்றும் சொல்லப்படுகிறது. மூன்றாவதாக, சமண மதத்தின் இறுதி தீர்த்தங்கரர் என்று சொல்லப்படும் மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளை சமண மதத்தவர், அவரது சிறப்பைப் போற்ற, தீபங்கள் ஏற்றி வழிபடுகின்ற நாள் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தீபாவளி திருவிழாவுக்கு இந்த கதைகளில் சொல்லும் விளக்கம் எதுவும் பொருந்தாது என்பது பண்பாட்டு ஆய்வாளர்களின் கருத்து.
கபிலருக்கு கறிச்சோறு விருந்து கொடுத்த மன்னன்
முனைவர் தொ.பரமசிவன் எழுதியுள்ள ‘அறியப்படாத தமிழகம்’ நூலில், தீபாவளி தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும் என்கிறார்.
”தீபாவளியைக் குறிக்கும் வெடி அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்கு 15ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை தமிழர் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக இன்று பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். விசய நகரப் பேரரசான இந்து சாம்ராஜ்யம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. 15ஆம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது,” என நிறுவியுள்ளார்.
தமிழ்நாட்டுடன் தொடர்பில்லாத விழாவில் கறிச்சோறு என்பது எப்படி புகுத்தப்பட்டது என்ற கேள்வியுடன் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியனை தொடர்பு கொண்டோம். அவர் சங்க இலக்கிய காலம் தொட்டு ஊன் உணவு என்பது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, விருந்து உணவின் ஒரு பகுதியாக இருந்துவந்துள்ளது என்ற குறிப்பை தந்தார்.
”புலால் உணவு அல்லது அசைவ சாப்பாடு என்பது தற்காலத்தில், சைவ உணவுக்கு எதிரானது மற்றும் கீழான உணவாக பார்க்கப்படும் பழக்கம் ஒரு சில சமூகங்களில் உள்ளது. ஆனால், சங்க இலக்கிய காலம் தொட்டு கொண்டாட்டம், விருந்து உணவு என்றாலே ஊன் உணவு வழங்கப்படுவது என்ற வழக்கம் இருந்ததை பார்க்கமுடிகிறது. புறநானூற்றுப் பாடலில், ஊன்உணவு விருந்தின் சிறப்பு பற்றி சொல்லப்படுகிறது.
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் என்று புகழப்படும் கபிலரின் கை மிருதுவாக இருப்பதற்கு என்ன காரணம் என மன்னன் சேரமான் செல்வக் கண்டுகோ வாழியாதன் கேட்கிறான். அதற்கு கபிலர், மன்னன் கொடுக்கும் ஊன்கலந்த கறிச்சோறு விருந்து உண்பது தவிர தனது கைகள் பிற செய்லகளை செய்யாமல் இருப்பதுதான் காரணம் என்று சொல்வதாக ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது,” என்கிறார்.
”புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்…” என்ற பாடல்தான் அது.
இறைச்சி உணவு என்பது விருந்தாக கொடுக்கும் உணவு, மற்றவர்களுக்கு விருந்து கொடுக்கும்போது அதனை சிறப்பாக கொடுப்பதற்கு ஊன் கலந்த உணவு தருவதை பெருமையாக கருதும் வழக்கம் நெடுங்காலமாக தமிழ்நாட்டில் நிலவுகிறது என்ற விளக்கத்தையும் தருகிறார் அவர்.
”ஒரு காலத்தில், நெல்சோறு சாப்பிடுவது மிகவும் அரிதாக இருந்தது. குழந்தைகளின் விளையாட்டில்கூட நெல்லுச்சோறு சமைக்கும் விளையாட்டு இருந்தது. அதனால், தீபாவளி திருவிழா நம்முடைய நிலப்பரப்பில் தொடர்பு இல்லாத விழாவாக இருந்தாலும், கொண்டாடும் நேரத்திற்கான உணவாக புலால் உணவு அமைந்துவிட்டது. மேலும், சிறப்பான உணவு என்ற அந்தஸ்தை பலகாலமாக புலால் உணவு பெற்றதால், திருவிழா நாளன்று, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அனைவரும் சாப்பிடும் உணவு கறிச்சோறாக செய்யப்படும் வழக்கம் பின்பற்றப்படுகிறது,” என்கிறார் சிவசுப்பிரமணியன்.
இன்றளவில் இளைஞர்கள் மத்தியில்கூட, ஒரு கொண்டாட்ட மனநிலை அல்லது உற்சாகமாக கொண்டாடும் ஒரு நிகழ்வில், கறிச்சோறோடு விருந்து கொடுப்பது பெருமையாக பார்க்கப்படும் பழக்கம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஆய்வாளர் சிவசுப்ரமணியன். இதுதவிர சிறப்பான காரணங்கள் ஏதுமில்லை என்றும் புலால் உணவு உயர்ந்தது, சிறந்தது என்ற மனப்பான்மையில் இருந்துதான் கறிவிருந்து, கறிச்சோறு சிறப்பு பெறுகிறது என்கிறார்.
மேலும் தீபாவளி என்ற சொல் சங்க இலக்கியகங்களில் குறிப்பிடப்படவில்லை என்றும் 15ம் நூற்றாண்டுக்கு பின்னர்தான் இந்த திருவிழா கொண்டாடுவது தமிழ்நாட்டில் பரவியது என்கிறார். அதனால், சிறப்பு காரணம் இல்லை என்றபோதும், திருவிழா கொண்டாட்டத்தில் முக்கியத்துவம் பெறும் உணவு, புலால் உணவாக இருக்கிறது என்று நிறுவுகிறார்.
நாட்டுப்புற பாடலில் கறிச்சோறு
அடுத்ததாக, சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் உள்ள தமிழ் துறையின் உதவி பேராசிரியர் சத்தியப்பிரியாவை சந்தித்துப் பேசினோம். அவர் நாட்டுப்புறப்பாடல் குறித்த ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தீபாவளி குறித்த நாட்டுப்புறப் பாடல்களில், கறிச்சோறு கொடுப்பது பற்றி குறிப்புக்கள் உள்ளன என்கிறார்.
”தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டியில் நாட்டுப்புறப் பாடல்களை பதிவு செய்த நேரத்தில் தீபாவளி பற்றிய ஒரு பாடலை கிராமத்துப் பெண்கள் தற்போதும் நினைவில் வைத்துள்ளதை பற்றி தெரிந்துகொண்டேன். அந்த பாட்டில் தாய் ஒருத்தி, தனது மகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு புது துணி கொடுத்து, கறிச்சோறு போடுவதற்கு தன்னிடம் காசு இல்லை என பாடுகிறாள். பதில் பாட்டு பாடும் மகள், கடன் வாங்கியாவது, தீபாவளிக்கு அழைத்து சீர் கொடுத்து, கறிச்சோறு போட்டுவிடு அம்மா என்று பாடுவதாக அந்த பாடல் நிறைவு பெறுகிறது. இதுபோலவே, நாட்டுப்புறப் பாடல்களில் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, கறிச்சோறு சாப்பிடும் வழக்கத்தை சொல்லும் பாடல்களும் இருக்கின்றன,” என விளக்கினார் சத்தியப்பிரியா.
மேலும், நரகாசுரன் இறந்த நாளாக பார்க்கும் வழக்கத்தின் அடிப்படையில், இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில், எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, கறிச்சோறு சாப்பிடுவது என்பது பின்பற்றப்படுகிறது என்ற கருத்தை வைக்கிறார் இவர்.
பழமொழிகளில், ‘விடிய விடிய தீபாவளி, விடிந்த பிறகு அமாவாசை’ என்ற வரி தற்போதும் புழக்கத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார். ”அதாவது தீபாவளி நாளன்று கறிச்சோறு உண்டு, இரவு முழுவதும் தீபாவளி கொண்டாடுவதால், அடுத்த நாள் விரதம் இருந்து அமாவாசை மாலை இனிப்புகள் உண்ணும் ஒரு வழக்கம் இருந்தது. அதனால் அந்த பழமொழி பேசப்படுகிறது. பல கிராமங்களில் தீபாவளி விருந்து, பட்டாசு வெடிப்பது மட்டுமே கொண்டாட்டம் அல்ல. அன்று இரவு நரகாசுரன் வதம் என்ற தெருக்கூத்தும் நடத்துகிறார்கள்,” என கிராமங்களில் நடைபெறும் தீபாவளி குறித்து நம்மிடம் சத்தியப்பிரியா பகிர்ந்துகொண்டார்.
பொதுவாக, போரில் வெற்றி பெற்ற பின்னர், படைவீரர்களை கவுரவிக்க புலால் உணவும், மதுவும் விருந்து உணவாக வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் புறப்பொருள் வெண்பாமலையில் உள்ளது. அதில் ‘உண்டாட்டு’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என்ற குறிப்பை தருகிறார் அவர்.
போரில் கிடைத்த வெற்றியை கொண்டாட, ஊன் உணவும், கள்ளும் கொடுத்து கொண்டாடுவதை ‘உண்டாட்டு’ என்ற சொல் குறிக்கிறது என்கிறார் சத்தியப்பிரியா. வீரர்கள் மட்டுமின்றி, புலவர்கள் மற்றும் நாடிவரும் இரவலர்களுக்கும் அந்த உணவு வழங்கப்பட்டது. அதனால், புலால் உணவு கொடண்டத்திற்கான உணவு என்ற முறையில்தான் தீபாவளி அன்றும் உண்ணப்படுகிறது என்று சொல்கிறார் அவர்.
தீபாவளி கறிக்குழம்பில் என்ன சிறப்பு?
கறிச்சோறு என்பது தொடக்கத்தில், ஆட்டுக்கால் பாயா செய்யும் நடைமுறையாகத்தான் இருந்தது, பின்னர் கறிக்குழம்பு என்ற நடைமுறை வந்தது என்பது பிரபல சமையல் கலைஞர் தாமுவின் கருத்து.
”தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே சமையல் தொடங்கிவிடும். ஆட்டுக்கால் பாயா செய்வதற்காக, விறகு அடுப்பில் நெருப்பு மூட்டி, சட்டியில் ஆட்டுக்கால் துண்டுகளை வேகவைத்துவிடுவார்கள். அடுத்தநாள் அதிகாலையில் சமையல் செய்து முடிப்பதற்கு ஏதுவாக துண்டுகள் வெந்திருக்கும். தேங்காய்ப்பால் மற்றும் மிளகு சேர்த்து பாயா செய்துவிடுவார்கள். இதற்கு இட்லி, இடியாப்பம்தான் பெரும்பாலும் சமைப்பார்கள். காலை வேலை மட்டும் சமைத்தால் போதும், அந்த குழம்பில்தான் மதிய உணவையும் எடுத்துக்கொள்வார்கள். சமீப ஆண்டுகளில், பாயாவுக்கு பதிலாக, கறிக்குழம்பு செய்கிறார்கள்,” என குழம்பு வைக்கும் முறை பற்றிய தனது புரிதலை சொல்கிறார் தாமு.
ஒரு சில வீடுகளில் கோழிக்கறி சமைக்கப்பட்டாலும், ஆட்டு இறைச்சிதான் பிரதானமாக சமைக்கப்படுகிறது என்றும் சொல்கிறார் அவர். சைவம் சமைக்கப்படும் வீடுகளில் கூட, காலை நேரத்தில், வடகறி, காய்கறி குருமா, மதியம் பக்கோடா குழம்பு போன்ற குழம்பு வகைகளை சமைக்கும் வழக்கம் இருக்கிறது என்கிறார்.
தீபாவளி அன்று வைக்கப்படும் குழம்பில், எப்போதும் வைக்கப்படும் குழம்பை போல அல்லாமல், சில பொருட்களை சேர்ப்பதால் சுவை மிகவும் அதிகமாக இருக்கும் என்ற தகவலை சொல்கிறார் தாமு.
”ஒரு சில வீடுகளில் கடல்பாசி சேர்ப்பது, கிராம்பு சேர்ப்பது போன்றவை பின்பற்றப்படும். ஒரு சில வீடுகளில் தீபாவளி நாளில் அதிக பலகாரங்கள் எடுத்துக்கொள்வதால், காரத்திற்கு மிளாகாய் தூள் குறைவாக சேர்த்துக்கொண்டு, மிளகுத்தூளை பயன்படுத்துவார்கள். ஒரு சிலர் தீபாவளி அன்று மட்டும், குழம்பில் சேர்ப்பதற்கான தேங்காயோடு , முந்திரி பருப்பும் சேர்த்து அரைப்பார்கள்,” என விளக்குகிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்