`நானும் இந்துதான். ஆனால், இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு’ என கர்நாடகா முதல்வர் சித்தராமையா, பா.ஜ.க-வை குறிவைத்துப் பேசிவரும் சூழலில், கோயிலுக்குள் நுழையாமல் வெளியேவே நின்று அவர் சாமி கும்பிடும் வீடியோவால், சித்தராமையா ஒரு இந்து விரோதி என பா.ஜ.க சாடி வருகிறது. முன்னதாக, 1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் வன்முறை வெடித்தது. அதில், கர்நாடக மாநிலமும் ஒன்று.
இந்த நிலையில், கர்நாடகாவில் அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஈடுபட்ட ஸ்ரீகாந்த் பூஜாரி என்பவரை, 31 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் ஹுப்ளியில் கர்நாடக போலீஸார் கைதுசெய்தனர். இதன்காரணமாக கர்நாடக பா.ஜ.க தலைவர்கள், பா.ஜ.க-வைச் சேர்ந்த நபரைக் காங்கிரஸ் வேண்டுமென்றே கைதுசெய்திருக்கிறது என குற்றச்சாட்டை முன்வைத்துவருகிறது. அதோடு, ஸ்ரீகாந்த் கைதுக்கு எதிராக ஹுப்ளியில் நடைபெற்ற பா.ஜ.க போராட்டத்தில், “கர்நாடகாவில் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டால் சிறைக்கு அனுப்பப்படுவீர்கள். ஆனாலும், மத்தியில் பிரதமர் மோடியின் அரசு இருப்பதால், இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்” என்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா கூறியிருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றிய சித்தராமையா, “சட்டவிரோத மது விற்பனை, சூதாட்டம் உள்ளிட்ட 16 சமூக விரோத செயல்களில் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீகாந்த் போன்ற நபர்களைக் கைதுசெய்யாமல் சுதந்திரமாக நடமாட அனுமதித்தால், ராமர் கூட மன்னிக்க மாட்டார்” எனக் கூறினார். இந்த நிலையில், கோயில் ஒன்றில் சித்தராமையா உள்ளே நுழையாமல் வெளியே நின்று சாமி கும்பிடும் வீடியோவை வெளியிட்டு, “இதுதான் சித்தராமையாவின் உண்மையான முகம், அவர் இந்து விரோதி” என கர்நாடக பா.ஜ.க சாடியிருக்கிறது.
இதுகுறித்து, கர்நாடக பா.ஜ.க தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அந்த வீடியோவைப் பதிவிட்டு, “சிறுபான்மையினருக்கு 10,000 கோடி, ராமர் கோயிலுக்கு ஒரு ரூபாய். இதுதான் சித்தராமையாவின் உண்மையான முகம். சித்தராமையா ஒரு இந்து விரோதி. மசூதிகளுக்கும், தர்காக்களுக்கும் சென்று பணம் கொடுக்கும் முதல்வரே, நாட்டின் நலனுக்காக அம்மனுக்கு அர்ப்பணிக்க உங்களுக்கு நேரமில்லை. இந்து மதத்தையும், இந்துக் கடவுளையும், இந்துக்களையும் கண்டால் ஏன் உங்களுக்கு இவ்வளவு அலட்சியம்” என விமர்சித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com