இதன் காரணமாக, 04-11-2023 அன்று மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகியான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் உட்பட 19 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதில், ஏற்கெனவே அதிக வழக்குகளில் தொடர்புடைய அருள் உள்ளிட்ட 7 நபர்களை, திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரைபேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறார், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்.


இந்த நிலையில், குண்டர் சட்டத்தின்கீழ் கைதான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகியோரின் குடும்பத்தினர் செய்யாறு சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்து, அவர்களை விடுவிக்க கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை அமைச்சரையும் சந்தித்து, இது தொடர்பாக மனு அளித்தனர். இவர்கள் அளித்த மனுக்களில், ‘வருங்காலங்களில், இது போன்று அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம். இத்தகைய தவறுகளை வெளியாட்களின் தூண்டுதலின்பேரில், செய்துவிட்டோம். இனி, இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டோம். குடும்பச் சூழ்நிலைக் காரணமாக, அவர்களை விடுவிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகியோரைக் குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையிலிருந்து விடுவிக்க ஆணைப் பிறக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், அந்த 6 பேர்மீதான சட்ட ஆணை விலக்கிக் கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
6 பேர்மீதான குண்டர் தடுப்புக்காவல் ரத்துசெய்யப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் அருள் என்ற ஒருவர்மீதான நடவடிக்கை மட்டும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. `கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திலுள்ள அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் 45 வயது மகனான அருளுக்கும், திருவண்ணாமலைக்கும் என்னத் தொடர்பிருக்கிறது, போராட்டம் தூண்டப்படுவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்’ என்று குற்றம்சாட்டி, அரசுத் தரப்பில் இவர்மீதான நடவடிக்கையை ரத்துசெய்ய மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், குண்டர் சட்டம் பாய்ந்த ஒரே நாளில், அரசுக்கெதிராக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், முதல்வரே அதை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com