ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) மாலை 7 மணியளவில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகாபள்ளி-அலமாண்டா கிராமங்களுக்கு இடையே பலாசா பயணிகள் ரயிலின் மீது ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற பிபிசி தெலுங்கு சேவையில் செய்தியாளர் ஸ்ரீனிவாஸ் லக்கோஜு தாம் களத்தில் நேரில் கண்டதைத் தொகுத்தளிக்கிறார்:
இந்த விபத்தில் 8 பேர் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் நானே அங்கு 11 சடலங்களை பார்த்தேன். நசுங்கிய பெட்டிகளில் ஒருவர் காணப்படுவதாகவும், அந்த நபரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் நிவாரணப் பணியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
13 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
மீட்புப் பணியாளர்கள் ரயிலின் பெட்டிகளைத் துண்டித்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து நடந்ததையறிந்த கண்டகாபள்ளி மற்றும் அலமாண்டா கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அங்கு வருவதற்கு முன், அந்தப் பகுதி பொதுமக்கள் அங்கு நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்.
பாலசோர் ரயில் விபத்தை நினைவூட்டும் சம்பவம்
விபத்து நடந்த இடத்தை அடைய, கண்டகாபள்ளியிலிருந்து வயல்வெளிகள், தோட்டங்கள் வழியாகச் செல்லும் சிறிய மண் சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.
ஒரு கிலோமீட்டர் தொலைவில், சிவப்பு மற்றும் நீல விளக்குகளுடன் பத்து ஆம்புலன்ஸ்கள் காணப்பட்டன. அவர்களுக்கு இடையே தரையில் கிடந்த இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. சிறிது தூரம் சென்றதும் மேலும் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஐந்து பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதில், விபத்தின் அளவு புரிந்தது.
அங்கிருந்து இன்னும் கால் கிலோமீட்டர் தூரம் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி நடந்தபோது விபத்து நடந்த இடம் தெரிந்தது. சிறிது தூரத்தில் இருந்து காட்சியைப் பார்த்தபோது, இந்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி இந்தியாவின் மிகப்பெரிய ரயில் விபத்துகளில் ஒன்றான ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்து நினைவுக்கு வந்தது.
பாலசோரைப் போலவே, இங்கும் ரயில் பெட்டி தண்டவாளத்தில் இருந்து கீழே சறுக்கியிருந்தது. இது ஒரு மினி பாலசோர் ரயில் விபத்து என்று உணர்ந்தேன்.
சம்பவ இடத்தை அடைந்து, அங்குள்ள உள்ளூர்வாசிகள் மற்றும் அதிகாரிகளிடம் பேசியபோது, அவர்களும் இந்த விபத்தை பாலசோர் ரயில் விபத்துடன் ஒப்பிட்டுப் பேசினர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஐந்து நிமிடம் சென்றிருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார்
தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பலாசா பயணிகள் ரயில் மீது, அதே தண்டவாளத்தில் வந்த ராயகடா எக்ஸ்பிரஸ் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் உயிரிழந்த ரவி என்பவரின் சகோதரர் மற்றும் நண்பர்கள் கண்டகாபள்ளி அருகே இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் இறந்தவர்களில் முதலில் அடையாளம் கண்டந்து தங்களது சகோதரரும் நண்பருமான ரவியை.
“ரவியும் நாங்களும் தினமும் பலாசா பாசஞ்சரில் ஏறி விசாகப்பட்டினத்துக்கு வேலைக்குச் செல்வோம். வேலை முடிந்ததும், மாலையில் மீண்டும் பலாசா பாசஞ்சரில் ஏறி எங்கள் ஊரான கந்தகப்பள்ளியை அடைவோம். விபத்து நடந்த இடத்தில் இருந்து எங்கள் ஊர் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. இன்னும் ஐந்து நிமிடம் சென்றிருந்தால் எங்கள் ஊரில் ரயில் நின்றிருக்கும். ரவி பத்திரமாகக் கீழே இறங்கியிருப்பான்,” என அவரது தோழி கவுரி நாயுடு பிபிசியிடம் கண்ணீருடன் கூறினார்.
பிபிசி களத்தை அடைந்த போது கௌரி நாயுடுவும் வேறு சில நண்பர்களும் ரவியின் உடல் அருகே காத்திருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை வந்த அலுவலக அழைப்பு
கண்டகாபள்ளியில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒப்பந்ததாரர்களிடம் பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.
அவர்களில் ரவியும் ஒருவர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை வேலை. ஞாயிறு விடுமுறை.
ஆனால் ஞாயிற்றுக்கிழமையன்றும் வேலைக்குச் சென்றதனால் இந்த விபத்தில் அவர் உயிர் இழந்ததாகக் கூறி அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் கண்ணீர் விட்டனர்.
“ரவி விசாகப்பட்டினத்தில் எலக்ட்ரிக்கல் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை அந்த நிறுவனத்தில் இருந்து ரவிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவசர வேலை இருப்பதால், இந்த லீவை இன்னொரு நாள் எடுத்துக்கொள்ளச் சொல்லி அந்த அமைப்பின் பிரதிநிதிகள் கூறினர்,” என்கின்றனர் அவரது நண்பர்கள்.
“பத்து வருடங்களாக அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால் ரவி உடனே வேலைக்குச் சென்றான். ரவியைப் போல வேறு சிலரும் கம்பெனி அழைத்தால் உடனே செல்கின்றனர். காலையில் சென்ற ரவி மாலையில் உயிர் இழந்தார். இது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம்,” என்று கிராம மக்கள் வேதனையில் கூறுகின்றனர்.
‘என்னுடன் வந்தவர்களைக் காணவில்லை’
ரவியைப் போலவே சிப்புருபள்ளியைச் சேர்ந்த நாகேஸ்வரராவும் அவரது மைத்துனரும் வேலைக்காக தினமும் விசாகப்பட்டினம் செல்கின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக பலாசா பயணிகள் ரயிலில் விசாகப்பட்டினம் சென்று வருகின்றனர். நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்றாலும் வேலைக்கு வாருங்கள் என்று கண்டகாபள்ளியைச் சேர்ந்த ரவிக்கு வந்தது போலவே நாகேஸ்வராவுக்கும் அவரது மைத்துனருக்கும் அழைப்பு வந்தது. இருவரும் விபத்தில் சிக்கியதில் நாகேஸ்வர ராவின் மைத்துனர் உயிரிழந்தார். நாகேஸ்வரராவ் உயிர் தப்பினார்.
பிபிசியிடம் பேசிய நாகேஸ்வரராவ், “நாங்கள் அனைவரும் கொத்தனார்கள். ரயிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென பலத்த சத்தம் கேட்டது. எல்லாம் கீழே சரிந்து விழுந்தது. அப்போது உற்றுவான அதிர்வில் என் மைத்துனர் கீழே விழுந்தார். இறந்துவிட்டார். மற்றவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து பிழைத்தோம். எங்கள் பெட்டியில் இருந்த மற்ற மூவரையும் காணவில்லை. மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் உள்ளனர்,” என்றார்.
நாகேஸ்வர ராவ் காணாமல் போன தன் சகாக்களைத் தேடி வருகிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்