விராட் கோலி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடுவதில் என்ன சிக்கல்?

விராட் கோலி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடுவதில் என்ன சிக்கல்?

விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம், Getty Images

விராட் கோலி தான் ஆடும் ஆட்டங்களின் சூழலை உன்னிப்பாக ஆய்வு செய்து அதற்கேற்றாற்போல் ஆடுவது அவரது பலம் என்று பலராலும் பாராட்டப்படுகிறார். ஆனால் இப்போது அவர் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா என்பது ஒரு பெரும் கேள்வியாகியிருக்கிறது. விராட் கோலிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்ன?

“விராட் கோலியின் பலமே சூழலுக்கு ஏற்றபடி தன்னை தகவமைத்துக் கொள்வதுதான். போட்டி குறித்த அவரது விழிப்புணர்வு அற்புதமானது. 4 ஓவர்களுக்குப்பின், 6 ஓவர்களுக்குப்பின் ஆட்டத்தை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் அவரது பார்வை மகத்தானது. சேஸிங்கின்போது, தேவைப்படும் ரன்ரேட்டை கணக்கிட்டு பேட்டிங் செய்வதில் வல்லவர்”

இந்த வார்த்தைகள் விராட் கோலி குறித்து இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முக்கிய வீரர்களுள் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் கூறியது. ஆனால், கோலி வரும் ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற கேள்விகள் வலம் வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்கில நாளேடுகள், இணையதளங்கள் வெளியிட்ட செய்தியில் “2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை,” என்று தெரிவித்திருந்தன. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, விராட் கோலியின் பெயர் ட்ரெண்டாகியது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 போட்டியில் 14 மாதங்களாக விளையாடவில்லை. அதன்பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், விராட் கோலி சொந்தப் பணி காரணமாக அந்தத் தொடரிலிருந்து விலகினார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் கோலி விலகிக் கொண்டார்.

விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

விராட் கோலி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்திய அணியில் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கோலி ஆடுவாரா?

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா சமீபத்தில் கூறுகையில் “வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, கரீபியன் தீவுகளில் நடக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு ரோகித் சர்மாதான் இந்திய அணியை வழி நடத்துவார்,” என்று உறுதி செய்தார். ஆனால் விராட் கோலி குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை, அவர் உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதும் தெரியாது.

இந்நிலையில், ஆங்கில இணையதளங்கள், நாளேடுகள் ஆகியவை ‘பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாக’ வெளியிட்ட செய்தியில் “மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் ‘ஸ்லோ விக்கெட்டைக்’ கொண்டவை. இங்கு பந்து மெதுவாக, தாழ்வாக பேட்ஸ்மேனை நோக்கி வரும், அதனால் பொறுமையாக பேட் செய்ய வேண்டும். பவர் ஹிட்டராக இருக்க வேண்டும். இதுபோன்ற ஆடுகளங்கள் விராட் கோலி பேட்டிங் ஸ்டைலுக்கு உகந்ததாக இருக்காது. பவர் ஹிட்டர் வீரர்களுக்குத்தான் இந்த ஆடுகளம் பொருந்தும். ஆதலால், இந்திய அணியிலிருந்து கோலி நீக்கப்பட வாய்ப்புள்ளது,” என்று தெரிவித்திருந்தன.

மேலும், “விராட் கோலியை உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்காமல் அவரை நீக்குவது தேர்வாளர்களுக்கு கடினமான முடிவாகத்தான் இருக்கும். ஆனால், வேறு வழியில்லை. எதிர்காலத்தில் அணியை வழிநடத்திச் செல்லவும், இளம் வீரர்களை உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும், அவர்களுக்கு அதிக வாய்ப்புகளைத் தர வேண்டும். சர்வதேச அரங்கில் இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினால்தான் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். ஆதலால் விராட் கோலி அணியிலிருந்து நீக்கப்படலாம்,” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கடினமான செய்தியை தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்தான், விராட் கோலிக்கு தெரிவித்து அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டி20 உலகக் கோப்பை போட்டிகள் எப்போது நடக்கின்றன?

மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஜூன் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதிவரை நடக்கவுள்ளது. 2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 20 அணிகள் போட்டியிடுகின்றன.

மொத்தம் 55 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை மேற்கிந்தியத் தீவுகளும், அமெரிக்காவும் சேர்ந்து நடத்துகின்றன. மேற்கிந்தியத் தீவுகள் தவிர, நியூயார்க், டெக்ஸாஸ், புளோரிடா ஆகிய அமெரிக்க மாநிலங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி உள்ளிட்ட தரவரிசையில் உள்ள 8 அணிகள் தானாகவே தகுதி பெற்றுவிட்டன. முதல் முறையாக கனடா, உகாண்டா, போட்டியை நடத்தும் அமெரிக்கா ஆகிய அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன.

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், TWITTER/ SURYA KUMAR YADAV

படக்குறிப்பு,

விராட் கோலி இல்லாவிட்டால் அவரின் இடத்துக்கு சூர்யகுமார் யாதவ், போன்ற இளம் வீரர்கள் பட்டியல் நீள்கிறது.

விராட் கோலிக்கு பதிலாக யார்?

விராட் கோலி இல்லாவிட்டால் அவரின் இடத்துக்கு யாரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது?

சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ரவீந்திர ஜடேஜா,திலக் வர்மா, இஷான் கிஷன், சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயாஸ் அய்யர், போன்ற இளம் வீரர்கள் பட்டியல் நீள்கிறது.

கடந்த 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒட்டுமொத்த இந்திய அணியும் சரிந்து வீழ்ந்தபோது, விராட் கோலி என்ற ஒற்றை பேட்டர்தான் இந்திய அணியைத் தூக்கி நிறுத்தினார். அவரை நீக்குவது எந்த விதத்தில் நியாயம், கோலி போன்ற அனுபவமான பேட்டர் அணிக்கு அவசியம் என்று சமூக வலைத்தளத்தில் கோலியின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், டி20 போட்டியில் விராட் கோலியின் புள்ளிவிவரங்கள், அவரது பேட்டிங் ஸ்டைல் போன்றவை அவருக்கே தெரியாமல் அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டன என்றும் விமர்சனங்கள் இருக்கின்றன.

விராட் கோலியின் பேட்டிங் சராசரி, ஸ்ட்ரைக் ரேட் போன்றவை இன்றுள்ள அதிவேக டி20 போட்டிக்கு எதிர்பார்ப்பைவிட குறைவாக இருக்கிறது என்று கிரிக்கெட் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

விராட் கோலி பவுண்டரிகள், சிக்ஸர் அடிப்பதற்கு பவர் ஹிட்டராக மாறத் தயங்குகிறார்

கோலியின் பலவீனங்கள் என்ன?

விராட் கோலி 117 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4,037 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம், 37 அரைச் சதங்கள் ஆகியவையும் அடங்கும். சராசரி 51.75, ஸ்ட்ரைக் ரேட் 138 என்று வைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் விராட் கோலி 361 பவுண்டரிகள், 117 சிக்ஸர்கள் அடித்துள்ளார். பவுண்டரி எடுத்துக் கொண்டால் விராட் கோலி இன்னிங்ஸ் ஒன்றுக்கு 3.30 பவுண்டரியும், சிக்ஸராக 1.07 மட்டுமே அடிக்கிறார். ரன்கள் வீதம் கணக்கிட்டால், பவுண்டரிகள் வாயிலாக 19 முதல் 20 ரன்கள் வரை சராசரியாக கோலி சேர்க்கிறார்.

விராட் கோலி டி20 போட்டியில்கூட விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன்கள் எடுப்பதற்குதான் முன்னுரிமை அளிக்கிறாரே தவிர, பவுண்டரிகள், சிக்ஸர் அடிப்பதற்கு பவர் ஹிட்டராக மாறத் தயங்குகிறார் என்கிறார்கள் விமர்சகர்கள்.

விராட் கோலியின் டி20 போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றுக்கு பேட்டிங் சராசரி 27.1 பந்துகளில் அவர் 37.5 ரன்களை அணிக்காக எடுக்கிறார்.

விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

விராட் கோலி 117 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4,037 ரன்கள் குவித்துள்ளார்

டி20 ஆட்டத்துக்கு தேவை என்ன?

கசப்பான உண்மை என்னவென்றால், ‘டி20 கிரிக்கெட் போட்டி என்பது நிதானமான ஸ்ட்ரைக்ரேட்டுடன், சூழலுக்கு ஏற்ப பேட்டிங் செய்யும் போட்டி அல்ல, அதிரடியாக, பேய்த்தனமாக பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் ஆட்டம் என்பதை உணர வேண்டும்,’ என கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

டி20 போட்டியில் மொத்தம் 10 பேட்டர்களும் சந்திக்கப் போவது 120 பந்துகளைத்தான். சராசரியாக ஒரு விக்கெட் 12 பந்துகளை மட்டுமே சந்திக்க முடியும். இது ஒரு நாள் போட்டியில் 30 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்றால், டெஸ்ட் போட்டியில் 62 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என எடுக்கலாம்.

ஆதலால், டி20 போட்டிகளில் ஒரு விக்கெட் அல்லது பேட்டர் களத்தில் இருக்கும் நேரம், சந்திக்கும் பந்துகள் குறைவு. இந்த முதல் 12 பந்துகளுக்குள் ஒரு விக்கெட் அல்லது பேட்டர் தனது விக்கெட்டை இழந்துவிடக்கூடாது. அதற்காக களத்தில் நிற்க வேண்டுமே என்பதற்காக பந்துகளை வீணடித்து ஸ்ட்ரைக் ரேட்டையும், ரன்ரேட்டையும் குறைத்துவிடக்கூடாது.

அதனால்தான் டி20 போட்டியில் ஒரு பேட்டர் களமிறங்கும்போது சந்திக்கும் ஒவ்வொரு பந்துக்கும் எதிர்பார்க்கும் ரன் என்ற கணக்கீடு வைக்கப்பட்டுள்ளது. இதை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். தோல்வி(ஃபெய்லியர்), கேமியோஸ், சக்சஸ்(வெற்றி), அன்டர் பார்(சராசரிக்கும் கீழ்)

தோல்வி: டி20 இன்னிங்ஸில் ஒரு பேட்டர் 12 பந்துகளுக்குள் ஆட்டமிழந்து, சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாக எடுத்தால் அது தோல்வியாகும்.

கேமியோஸ்: ஒரு பேட்டர் 12 பந்துகளுக்குள் ஆட்டமிழந்தாலும், சந்தித்த பந்துகளில் இருந்த எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்த்தால்அது கேமியோஸ்.

வெற்றி: ஒரு பேட்டர் 12 பந்துகளைச் சந்தித்து, சந்தித்த பந்துகளில் எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்ப்பது.

சரிசரிக்கும் குறைவு: ஒரு பேட்டர் குறைந்தபட்சம் 12 பந்துகளைச் சந்தித்து, சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்ப்பதாகும்.

விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம், TREVOR COLLENS

படக்குறிப்பு,

கோலி சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்த்துள்ளார்

கோலி ‘அன்டர் பார்’ பேட்டரா?

இந்த வகையில் பார்த்தால், டி20 போட்டிகளில் இந்திய அணியில் இப்போதுள்ள இளம் வீரர்களுடன் ஒப்பிடும்போது, விராட் கோலி சராசரிக்கும் குறைவான ‘அன்டர் பார்’ ஆட்டங்களைத்தான் அதிகமாக விளையாடியுள்ளார்.

அதாவது கோலி சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்த்துள்ளார். அதேபோல கேமியோஸ் எனப்படும் அதிரடியான ஆட்டங்கள் வரிசையில் கோலி தனது 107இன்னிங்ஸ்களில் வெறும் 8.7% மட்டுமே ஆடியுள்ளார்.

ஆனால், சந்தித்த பந்துகளில் எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்க்கும் வெற்றியாளர் பேட்டர்கள் சராசரியில் 30.8% வைத்துள்ளார். இது சிறப்பானது என்றாலும் டி20 போன்ற வேகமான ஆட்டத்துக்கு இது பொருந்தாது.

விராட் கோலியின் ரன்சேர்க்கும் வேகம், ரோகித் சர்மாவுடன் ஒப்பிடும்போது 5.7% மெதுவாகவும், கே.எல்.ராகுலுடன் ஒப்பிடும்போது 5.2% மெதுவாகவும், சூர்யகுமாருடன் ஒப்பிடும்போது 27% சதவீதம் மெதுவாகவும் இருக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோலி தான்சந்திக்கும் முதல் 100 பந்துகளில் 128 ரன்களைச் சேர்க்கிறார். ரோகித் சர்மா 139 ரன்களாகவும், கே.எல்.ராகுல் 134 ரன்களாக சேர்க்கிறார்கள். ஆனால், முதல் 20 பந்துகளைச் சந்திக்கும் வகையில் ரோகித் சர்மா 127 ரன்கள் என கோலியைவிடப் பின்தங்கினாலும், போட்டியில் ரன்ரேட்டை வேகப்படுத்துவதில் கோலியைவிட சிறந்தவராக திகழ்கிறார் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டி20 போட்டியில் விராட் கோலி மெதுவாக ரன்சேர்க்கும் வீரர்

கோலியைப் போன்ற பிற வீரர்கள் யார்?

இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டி20 போட்டியில் விராட் கோலி மெதுவாக ரன்சேர்க்கும் வீரர். இதனால் 120 பந்துகளைக் கொண்ட போட்டியில் கோலியின் ஆங்கர் ஆட்டத்தால் அடுத்தார்போல் காத்திருக்கும் பேட்டர்கள் பல போட்டிகளில் பேட் செய்யாமல்கூட போகலாம்.

பாகிஸ்தானின் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் போன்றோரில் ஆட்டம் கூட கூட கோலி போன்றதுதான். இதே சிக்கல்தான் நியூசிலாந்தில் கேன் வில்லியம்ஸனிடமும் இருக்கிறது. இதனால்தான் அதிவேகமான ஆட்டத்தைக் கொண்ட டி20 போட்டிகளில் வில்லியம்ஸனால் ஈடுகொடுக்க முடியவில்லை.

கரீபியனில் கோலியின் பேட்டிங் எப்படி?

கரீபியன் ஆடுகளங்களில் கோலி 7 இன்னிங்ஸ்களில் 229 ரன்களும், அமெரிக்காவில் 3 போட்டிகளில் 63 ரன்களும் சேர்த்துள்ளார்.

கோலியின் சராசரி இந்த மைதானங்களில் 29 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 120.66 என இருக்கிறது. இங்கு கோலி 30 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவரின் ஒட்டுமொத்த ரன்களில் 49% பவுண்டரி அடங்கும். 100 டி20 போட்டிகளுக்கு மேல் அனுபவம் கொண்டவராக இருந்தாலும் கரீபியன், அமெரிக்க ஆடுகளங்களில் அவருக்கு பெரிதாக அனுபவம் இல்லை, அங்கு அவர் பவர்ஹிட்டராக இல்லை, அன்டர்பார் பேட்டராகவே இருக்கிறார் என்பது தெரிகிறது.

விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு,

கோலி டி20 ஏற்றார்போல் பேட்டிங் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது

ஐபிஎல் தொடரில் கோலிக்கு என்ன வாய்ப்பு?

விராட் கோலி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்திய அணியில் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கோலி விளையாடவில்லை.

வரும் 22-ஆம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் டி20 தொடரில் 3 மாதங்களுக்குப்பின் கோலி கிரிக்கெட் விளையாட உள்ளார். முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து விராட் கோலி இருக்கும் ஆர்சிபி அணி மோதுகிறது. இந்தத் தொடரின் முதல் பாதியில் விராட் கோலியின் பேட்டிங் திறமை சிறப்பாக இருந்தால், கடைசி நேரத்தில்கூட தேர்வாளர்கள் இந்திய அணிக்குள் கோலியைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது பாராமுகமாகவும் இருக்கலாம்.

கோலியின் மனநிலை என்ன?

விராட் கோலி உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படாமல் இருக்க 3 காரணங்கள் இருக்கலாம் என்று மூத்த விளையாட்டுத்துறை பத்திரிகையாளர் முத்துகுமார் பிபிசி செய்திகளிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில் “ஐபிஎல் மூலம் புதிய இளம் வீரர்கள் அறிமுகமாகிறார்கள் இந்திய அணிக்குள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக கோலி நீக்கப்படலாம். அடுத்ததாக கோலியின் மனநிலை. எந்தெந்த போட்டியில் தான் விளையாட வேண்டும் என்பதை கோலிதான் முடிவு செய்கிறாரே தவிர, தேர்வுக்குழுவினர் அல்ல. தான் விரும்பினால், டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார், பிடிக்கவில்லையென்றால், டி20 தொடரில்கூட விளையாடுவதில்லை. இதுபோன்ற கோலியின் மனநிலை, இப்போதுள்ள தேர்வாளர்கள் சகிக்கமாட்டார்கள்,” என்றார்.

அவர் மேலும் பேசுகையில், “14 மாதங்களாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத கோலியை, திடீரென டி20 உலகக் கோப்பைக்கு மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது மற்ற வீரர்களின் திறமையை, மனநிலையை பாதிக்கும். அணியின் ஓய்வு அறையில் ஒற்றுமையைப் பாதிக்கும். அது மட்டுமல்லாமல் இளம் வீரர்கள் பலர் புதிதாக அணிக்குள் வரும்போது, கோலியால் அவர்களுடன் உடனடியாக ஒத்துப்போவது கடினம். அணிக்குள் தொடர்ந்து இருக்கும்போதுதான் சகவீரர்களுடன் புரிதல், ஒற்றுமை, உத்வேகம், ஸ்பிரிட் போன்றவை உருவாகும்,” என்றார்.

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

‘மாற்றுவீரர் இல்லாமல் கோலியை நீக்குவது தவறு’

முத்துக்குமார் மேலும் பேசுகையில், “கோலிக்குப் பதிலாக வலிமையான பேட்டரை உருவாக்கிவிட்டுத்தான் அவரை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் கோலி இல்லாதது எதிரணிக்கு மனரீதியாக வலிமையைக் கொடுத்துவிடும். ஆதலால், கோலியும் அணியில் இருக்க வேண்டும், அவரை முக்கியமான ஆட்டங்களுக்குப் பயன்படுத்திவிட்டு, முக்கியமற்ற ஆட்டங்களில் அவருக்குப்பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்,” எனத் தெரிவித்தார்.

கோலி டி20 போட்டிகளுக்கு ஏற்றாற்போல் பேட்டிங் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து முத்துக்குமார் பதில் அளிக்கையில் “ஒரு நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் புஜாரா மெதுவாக விளையாடுகிறார் என்று குற்றம்சாட்டிய விராட் கோலி மீது, இப்போது டி20 போட்டியில் மெதுவாக ஆடுகிறார் என்று குற்றச்சாட்டு வந்துள்ளது. இது ஏறக்குறைய உண்மைதான் என்றாலும், ஆங்கர் ரோல் எடுத்து கோலி விளையாடும்போது இதுபோன்றுதான் விளையாட முடியும்,” என்றார்.

மேலும், “மற்றவகையில், 190 ரன்கள் அடிக்க வேண்டிய ஆட்டத்தில் கோலி கடைசிவரை நிலைத்து நின்றால் 170 ரன்கள்தான் வந்தது என்ற குற்றச்சாட்டு ஏற்கக்கூடியதுதான். தொடக்கத்தில் நிதானமாக, மெதுவாக பேட் செய்தாலும், ஸ்ட்ரைக் ரேட்டை பராமரித்து கோலி கொண்டு செல்கிறார், கடைசி நேரத்தில் கேமியோ ஆடுகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் கோலியின் பேட்டிங்கில் பெரிய மாற்றம் இருந்தது. வரும் ஐபிஎல் தொடரில் கோலியின் பேட்டிங் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,” எனத் தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *