
பட மூலாதாரம், Getty Images
உலகெங்கிலும் உள்ள பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இந்த நோயால், ஒவ்வொரு ஆண்டும் 3,00,000 க்கும் அதிகமானோர் இறக்கிறார்கள்.
ஹெச்பிவி தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பை கிட்டத்தட்ட 90% குறைக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது.
ஹெச்பிவி என்றால் என்ன?
ஹெச்பிவி(human papillomavirus(HPV)) என்பது மிகவும் பொதுவான வைரஸ்களின் குழுப் பெயர்.
இங்கு 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஹெச்பிவி வைரஸ்கள் உள்ளன. இவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. சில வைரஸ்கள் நம் உடலில் மருக்களை ஏற்படுத்தும். அவை நம் கை, கால், பிறப்புறுப்பு அல்லது வாயில் தோன்றலாம்.
இருப்பினும், பெரும்பாலான மக்கள், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர மாட்டார்கள். அவர்களின் உடல்கள் சிகிச்சையின்றியே வைரஸை அகற்றும்.
மறுபுறம், அதிக ஆபத்து உள்ள ஹெச்பிவி வைரஸ் வகைகள், அசாதாரண திசு வளர்ச்சியை ஏற்படுத்தும். இவை புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.
புற்றுநோயிலிருந்து ஹெச்பிவி தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கிறது?
ஹெச்பிவி தடுப்பூசி ஒன்பது வகையான ஹெச்பிவி வைரஸ்களின் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது.
குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு ஹெச்பிவி தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பாதுகாக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், அதற்கும் மேல் நீண்ட காலம் பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின்பாதிப்பை கிட்டத்தட்ட 90% குறைப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.
ஹெச்பிவி தடுப்பூசி யாருக்கு?
ஹெச்பிவி தடுப்பூசியை பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஹெச்பிவி பாதிப்பிற்கு முன் எடுத்துக்கொண்டால் அது சிறப்பாகச் செயல்படும்.
ஏனெனில், தடுப்பூசிகளால் தற்காக்க மட்டுமே முடியும், அவை உடலில் பாதிப்பை ஏற்படுத்திய பின்னர், அவற்றை வெளியேற்ற முடியாது.
தடுப்பூசி ஒன்று அல்லது இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவுறுத்தியுள்ளது. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று டோஸ்களைப் பெற வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
யாருக்கு ஹெச்பிவி ஏற்படுகிறது ?
இவை எளிதில் பரவக் கூடியது. இது தாெல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
பெரும்பாலான மக்கள் தங்களின் 25 வயதிற்குள்ளாகவே ஹெச்பிவி பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில் மக்கள் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பாதிக்கப்படுகின்றனர்.
இது பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல. இது பாலியல் திரவங்களாலும் பரவுவதில்லை.
ஆனால், இது தொடுதல் உள்ளிட்ட பாலியல் தொடர்புகளின் போது இது அடிக்கடி பரவுகிறது.
உலகம் முழுவதும் ஹெச்பிவி தடுப்பூசி எவ்வளவு பரவலாக உள்ளது?

பட மூலாதாரம், Getty Images
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில், 90% குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளன.
இந்த நாடுகளில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது தீவிரமான அறிகுறிகள் தென்படும் வரை பெரும்பாலும் கண்டறியப்படுவதில்லை.
2030 ஆம் ஆண்டளவில் ஹெச்பிவி தடுப்பூசி 90% மக்களை சென்றடைவதன் மூலம் அடுத்த நூற்றாண்டுக்குள் இந்த நோயை மக்களிடமிருந்து அகற்றுவதை இலக்காகக் கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது, சுமார் 140 நாடுகள் ஹெச்பிவி தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளன.

சப்-சஹாரா ஆப்பிரிக்கா (24%), லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (16%), கிழக்கு ஐரோப்பா (14%), மற்றும் தென்கிழக்கு ஆசியா (14%) ஆகிய நாடுகளில் பெண்களிடையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரவலாக காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
ஆப்பிரிக்காவில் தடுப்பூசி தாெடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய நாடுகளில் முதல் நாடு ருவாண்டா ஆகும். இது 2011 இல் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் பரிசோதனையை அறிமுகப்படுத்துவதற்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
முதல் ஆண்டில் இது தடுப்பூசிக்கு செலுத்துவதற்கு தகுதியான 10 பெண்களில் ஒன்பது பேரை சென்றடைந்தது. இதன் காரணமாக, மற்ற நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரி என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
தடுப்பூசி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை குறைப்பதாகத் தோன்றினாலும், இது அனைத்து வகையான ஹெச்பிவி வைரஸ்களுக்கும் எதிராக பாதுகாப்பைத் தராது.
நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டதாக நேற்று செய்தி பரவியது. இந்த நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்