
பட மூலாதாரம், Getty Images
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் ஷம்ஸி சேர்க்கப்பட்டிருந்தார்.
சேவாக்கை நினைவூட்டிய ரோஹித்
ரோஹித் சர்மா, கில் ஆட்டத்தைத் தொடங்கினர். இங்கிடியின் முதல் ஓவரில் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. அதன்பின் ரோஹித் சர்மா வெளுத்து வாங்கினார். ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தைப் பார்த்தபோது, 15 ஆண்டுகளுக்கு முன் வீரேந்திர சேவாக்கின் ஆட்டத்தைப் பார்ப்பதைப் போல் இருந்தது.
விக்கெட்டை இழப்பை பற்றிக் கவலைப்படாமல், எதிரணி பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை உடைக்கும் விதத்தில் சேவாக்கின் விளாசல் இருக்கும். சேவாக் களத்தில் இருந்தாலே பந்துவீச்சாளர்கள் எவ்வாறு பந்துவீசுவது எனத் திணறுவார்கள் அந்த உத்தியை இன்று ரோஹித் சர்மா கையாண்டார்.
யான்சென் வீசிய 2வது ஓவரில் சுப்மான் கில் 2 பவுண்டரி உள்ளிட்ட 17 ரன்கள் சேர்க்கப்பட்டது. இங்கிடி வீசிய 3வது ஓவரில் ரோஹித் சர்மா 2 பவுண்டரியும், கில் ஒரு பவுண்டரி என அதிரடியாக ஆடினர். யான்சென் வீசிய 4வது ஓவரிலும் ரோஹித் 2 பவுண்டரிகள் உள்பட 10 ரன்கள் சேர்த்தார்.
இங்கிடி வீசிய 5-வது ஓவரில் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 5 ஓவர்களில் 61 ரன்கள் குவித்தது. 6-வது ஓவரை வீச ரபாடா அழைக்கப்பட்டார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து பவுமாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா ரன்னில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
விக்கெட் இல்லாத யான்சென்
அடுத்துவந்த கோலி, கில்லுடன் இணைந்தார். யான்சென் வீசிய 7-வது ஓவரில் கில் ஒரு சிக்ஸர் விளாசினார். அதன்பின் கோலி, கில் இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி விளாசி ரன்ரேட்டை ஏறுமுகத்திலேயே வைத்திருந்தனர். ரபாடா வீசிய 10-வது ஓவரில் கோலி தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
இந்திய அணி பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் மார்கோ யான்சென் பவர்ப்ளேயில் விக்கெட் இன்றி இருந்ததில்லை. முதல்முறையாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில்தான் யான்சென் பவர் ப்ளேயில் விக்கெட் இன்றி இருந்தார்.
கில்லுக்கு படம் காட்டிய மகராஜ்
11-வது ஓவரை கேசவ் மகராஜ் வீச வந்தார், அவரை அழைத்தமைக்கு நல்ல பலன் கிடைத்து. மகராஜ் வீசிய 3வது பந்தை பிரன்ட்புட் செய்து கில் அடிக்க முயன்றார். மகராஜ் பந்தை நன்றாக டாஸ் செய்து தூக்கி வீசினார், அந்த பந்தை ஸ்ட்ரைக் செய்தபோது பந்து பீட்டன்ஆகி போல்டாகியது.
கில் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் 52 ஆயிரம் ரசிகர்கள் இன்று வந்திருந்தனர். கில் ஆட்டமிழந்து சென்றபோது, மைதானமே மவுனமாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
நிதான ஆட்டம்
11-வது ஓவர்கள் முதல் 20வது ஓவர்கள் வரை இந்திய அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தும் வகையில் மகராஜ், ரபாடா, இங்கிடி பந்துவீசினர். இதனால் இந்த 10 ஓவர்களில் இந்திய அணி 33 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. குறிப்பாக ஸ்ரேயாஸ் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யாமல் மந்தமாக பேட் செய்தார். இதனால் 11வது ஓவருக்குப்பின் எந்த பவுண்டரியும் இந்திய அணிக்குக் கிடைக்கவில்லை. முதல் 10 ஓவர்களில் ரோஹித் சர்மா அமைத்துக்கொடுத்த ரன்ரேட்டை, கோலி, ஸ்ரேயாஸ் நழுவவிட்டனர். ரோஹித், கில் களத்தில் இருந்தபோது 14 பவுண்டரி, 3 சிக்ஸர் அடிக்கப்பட்டநிலையில் 10 முதல் 20 ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது.
விராட் கோலி மட்டுமே ஓரளவுக்கு ரன்களை சேர்த்துவந்தார், ஆனால், ஸ்ரேயாஸ் மந்தமாக ஆடியதால், தேநீர் இடைவேளையின்போது, கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் திராவிட் ஆகியோர் இஷான் கிஷனிடம் ஏதோ அறிவுரை கூறிஅனுப்பினர். இதன்பின்பு ஸ்ரேயாஸ் அணுகுமுறையில் மாற்றம் தெரிந்தது.

பட மூலாதாரம், Getty Images
பிறந்தநாளில் கோலி அரைசதம்
மகராஜ் வீசிய 28-வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஒரு சிக்ஸர் விளாசி, 10 ரன்கள் சேர்த்தார். பொறுமையாக பேட் செய்த கோலி, தனது 35-வது பிறந்தநாளில் 55பந்துகளில் அரைசதத்தைநிறைவு செய்தார்.
30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 20 முதல் 30 ஓவர்கள் இடைவெளியில் இந்திய அணி பேட்டர்கள் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் பேட் செய்ததால், ஸ்கோர் வேகமெடுத்தது.
கியரை மாற்றிய ஸ்ரேயாஸ்
யான்சென் வீசிய 31-வது ஓவரில் ஸ்ரேயாஸ் 3 பவுண்டரிகள் உள்ளிட்ட14 ரன்கள் சேர்த்து ரன் சேர்க்கும் கியரை மாற்றினார். 64 பந்துகளில் ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் ஸ்ரேயாஸ் 34 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார், அதன்பின் அடுத்த 34 பந்துகளில்48 ரன்களை விளாசியுள்ளார்.
மார்க்ரம் வீசிய 34-வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஒரு சிக்ஸரும், கோலி பவுண்டரியும் அடித்து 14 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி 34 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது.
இங்கிடி வீசிய 37-வது ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் கடைசிப் பந்து ஸ்லோவர் பாலாக வந்ததை கவனிக்காமல் மார்க்ரத்திடம் கேட்ச் கொடுத்து ஸ்ரேயாஸ் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ்-கோலி கூட்டணி 134 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
மீண்டும் படுத்துக்கொண்ட ரன்ரேட்
அடுத்துவந்த கேஎல்.ராகுல், கோலியுடன் இணைந்தார். ராகுல் வந்தபின் இந்திய அணியின் ரன்சேர்க்கும் வேகம் படுத்துவிட்டது. ரபாடா, இங்கிடியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்த்து ஷாட்களை அடிக்க ராகுல் திணறினார், கோலியும் ஒரு பவுண்டரிக்கு மேல் அடிக்க முடியாமல் ஒரு ரன், 2 ரன்களாகவே அடித்தார். இதனால் 40 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images
40 ஓவர்களுக்குப் பின்பும் கோலியும், ராகுலும் ரன்சேர்க்க சிரமப்பட்டனர்.அதிலும் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மந்தமாக இருந்தது. பிறந்தநாளில் சதம் அடிக்க வேண்டும், சச்சினின் 49-வது சதத்தை சமன் செய்ய வேண்டும் என்றநோக்கோடு கோலி பந்துகளை வீணடித்தார்.
யான்சென் வீசிய 43-வது ஓவரில் டூசெனிடம் கேட்ச் கொடுத்து, ராகுல் 8 ரன்னில் வெளியேறினார். 17 பந்துகளில் ராகுல் 8 ரன்கள் சேர்த்த ராகுல் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார், ஓவருக்கு ஓரு பவுண்டரி என படபடவென ரன்களைச் சேர்த்தார். ஆனால், விராட் கோலி 102 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து ஆமை வேகத்தில் பேட் செய்தார். டெத் ஓவர்களில்தான் ரன் சேர்க்க முடியும், ஆனால், அந்த ஓவர்களை விராட் கோலி தேவையற்ற முறையில் வீணடித்து ரன்ரேட்டை உயரவிடாமல் இழுத்துப் பிடித்தார். டெத் ஓவரில் விராட் கோலி 150 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தும், 1486 ரன்களை சேர்த்திருந்தும் இன்று ரசிகர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் பேட்டிங் அமைந்திருந்தது.
ஒருநாள் போட்டியைப் பார்க்கிறோமா அல்லது டெஸ்ட் போட்டியை பார்க்கிறோமோ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோலியின் பேட்டிங் குறித்து மீம்ஸ்களையும், கிண்டல்களையும் உலவவிட்டனர்.
ஜான்சன் வீசிய 45-வது ஓவரில் சூர்யகுமார் 2 பவுண்டரிகள் உள்பட 16 ரன்கள் சேர்த்ததால் ஸ்கோர் வேகமெடுத்தது. ஷம்சி வீசிய 46வது ஓவரை வீணடிக்கும் வகையில் கோலி பேட்செய்து ஒரு ரன் சேர்த்தார், அதே ஓவரில் ஸ்ட்ரைக் சூர்யகுமாருக்கு கிடைத்தவுடன் பவுண்டரி அடித்த நிலையில் 22 ரன்களில் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். சூர்யகுமார் களத்தில் இருந்தவரை இந்திய அணி 340 ரன்கள்வரை எடுக்கும் வாய்ப்பு இருந்தது. அவர் ஆட்டமிழந்தபின், அந்த நம்பிக்கையும், கணிப்பும் குறைந்தது.
அடுத்துவந்த ஜடேஜா, கோலியுடன் இணைந்தார். ரபாடா வீசிய 47-வது ஓவரில் ஒரு பவுண்டரி உள்ளிட்ட 8 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்தது. 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 300 ரன்கள் சேர்த்தது.
சுயநலத்துடன் ஆடினாரா கோலி?
தனிப்பட்ட சாதனைக்காக பந்துகளை வீணடித்து பேட் செய்த விராட் கோலி, அதை நிறைவேற்றினார். ரபாடா வீசிய 49-வது ஓவரில் ஒரு ரன் சேர்த்து 119 பந்துகளில் தனது 35-வது பிறந்தநாளில், 39-வது சதத்தை நிறைவு செய்து சச்சினின் சாதனையை சமன் செய்தார். 49-வது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 309 ரன்கள் சேர்த்தது.
இங்கிடி வீசிய கடைசி ஓவரில் ஜடேஜா அதிரடியாக ஆடி 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 16 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 326 ரன்கள் குவித்தது.
விராட் கோலி 101 ரன்களிலும், ஜடேஜா 29 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
‘வைடு’களில் சாதனை
தென் ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தில் மட்டும் 21 வைடு பந்துகளை வீசியது. யான்சென் தொடங்கிவைத்த வைடு பந்துகள், அடுத்தடுத்து பல பந்துவீச்சாளர்கள் என சுழற்பந்துவீச்சாளர்களும் வீசினர். ஏற்கெனவே வைடு பந்துகள் வீசியதில் பெரிய சாதனையை தென் ஆப்ரிக்கா செய்துள்ளது. 2000ம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 25 வைடுகளை தென் ஆப்ரிக்கா வீசியது. அதன்பின் 2008ம் ஆண்டில் கென்ய அணிக்கு எதிராக 21 வைடுகளை தென் ஆப்பிக்கா வீசியது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்