ஹைதி நாட்டில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் நாட்டையே கலங்க வைக்கும் தாதாவாக மாறி அச்சுறுத்தி வருகிறார். அவரது பெயர் ஜிம்மி செரிசியர்.
ஹைதியில் தொடரும் வன்முறையின் காரணமாக அந்நாட்டு அரசாங்கம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. நாட்டின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்தும் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள், ஹைதி பிரதம மந்திரி ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அந்தத் தலைவர்களில் ஒருவர்தான் ஜிம்மி செரிசியர். இவர் ‘பார்பெக்யூ’ என்றும் அழைக்கப்படுகிறார். ஹைதியின் வன்முறை நிகழ்வுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜி-9 அண்ட் ஃபேமிலி (G-9 and Family) என்ற மிகவும் சக்திவாய்ந்த ஆயுதக் குழுவின் தலைவர் இவர்.
சனிக்கிழமையன்று நாட்டின் பிரதான சிறைக்குள் நுழைந்த ஆயுதக் குழுக்கள், 3,700க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்த பின்னர் இந்த வன்முறை புதிய நிலைகளை எட்டியது. அந்தத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
பிரதான சிறைச்சாலை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஹைதி நாட்டில் 2020ஆம் ஆண்டு முதல் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலைக்கு மற்றொரு சாட்சியாகும்.
நாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஆயுதக் குழுக்கள் முன்னெடுத்த போர், நாட்டில் வன்முறை பரவ அடிப்படையாக செயல்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஹைதியில் இப்போது பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
தலைநகரை ஆளும் ஆயுதக்குழுக்கள்
ஜூலை 7, 2021 அன்று அதிபர் ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டது மிகவும் தீவிரமான தருணங்களில் ஒன்றாகும். இது அரசு நிர்வாகத்தில் ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது, அது இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளது.
தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸின் 80% நிலப்பரப்பை இந்த ஆயுதக் குழுக்கள் கட்டுப்படுத்துகின்றன. வெவ்வேறு செய்தி அறிக்கைகளின்படி, சிறைச்சாலை மீதான இவர்களின் சமீபத்திய தாக்குதலின் நோக்கம், அதிபர் மொய்ஸின் மரணத்திற்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்த பிரதமர் ஹென்றி பதவி விலக வேண்டும் என்பதாகும்.
தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஹென்றி வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இன்றுவரை நடத்தப்படாததால் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.
“ஹைதி தேசிய காவல்துறை மற்றும் ராணுவம் தங்கள் பொறுப்பை ஏற்று பிரதமர் ஏரியல் ஹென்றியை கைது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மீண்டும் சொல்கிறோம், மக்கள் எங்கள் எதிரி அல்ல. ஆயுதக் குழுக்களின் நோக்கம் மக்களுக்கு எதிராக செயல்படுவது அல்ல” என்று சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு செய்தியில் செரிசியர் கூறினார்.
ஆயுதக் குழு தலைவரான செரிசியர் கடந்த காலத்தில் ஹென்றியின் அரசாங்கத்திடம் பொது மன்னிப்பு கோரியிருந்தார். தனது குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
முன்னாள் போலீஸ் அதிகாரியான செரிசியர், சமீபத்திய ஆண்டுகளில் ஹைதியை உலுக்கி வரும் ஒரு முன்னணி ஆயுதக் குழுவின் தலைவராக மாறியுள்ளார். நாட்டின் வன்முறை அலைக்கு பின்னால் ஒரு முக்கிய புள்ளியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் கூற்றுப்படி, ஹைதியில் நடக்கும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு இவரே பொறுப்பு. இந்த காரணத்திற்காக, அமெரிக்காவும் ஐ.நாவும் இவர் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளன.
அதிபர் மொய்ஸின் மரணத்திற்குப் பிறகு, நாட்டின் ‘ஊழல்’ அரசியல்வாதிகளுக்கு எதிரான புரட்சியை ஊக்குவிப்பதில் செரிசியர் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளார். அவரது விருப்பமான வழிகளில் ஒன்று சமூக வலைதளங்கள். தனது குழுவின் செய்தியை உலகுக்கு அறிவிக்க மட்டுமல்லாமல், அவரது ஆயுத குழுவுக்கு புதிய உறுப்பினர்களை ஈர்க்கவும் அது உதவுகின்றது.
காவல்துறை அதிகாரி முதல் கேங்ஸ்டர் வரை
‘பார்பெக்யூ’ என்ற அவரது புனைப்பெயருக்கான காரணம் என்ன என்பதே முதல் கேள்வியாக இருக்கும். அவரது அம்மா தெருவில் கோழி விற்றதே இதற்கு காரணம் என்று அவர் பேட்டிகளில் கூறியுள்ளார்.
ஆனால் ஹைதி வன்முறைகளை நேரில் கண்ட சில சாட்சிகளின் கூற்றுப்படி, அவர் பொதுவாக பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் உடல்களை எரிப்பதால் தான் இந்த புனைப்பெயர் வந்துள்ளது.
ஒரு போலீஸ் அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய செரிசியர் இன்று ஜி-9 அண்ட் ஃபேமிலி என்ற குழுவின் தலைவராக உள்ளார். உலகின் அதிக வன்முறைகள் நிகழும் நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஹைதியின் மிகவும் ஆபத்தான ஆயுதக் குழுக்களின் கூட்டணி தான் இந்த ஜி-9 அண்ட் ஃபேமிலி.
2021ஆம் ஆண்டில் 17 அமெரிக்க மற்றும் கனேடிய மிஷனரிகளைக் கொண்ட குழுவைக் கடத்தியது உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் இந்த குழு ஈடுபட்டுள்ளது. 400 மாவோஸோ போன்ற சக்திவாய்ந்த குற்றவியல் அமைப்புகளுடன் இணைந்து செரிசியர் இதைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
ஏறக்குறைய 47 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதியின் தலைநகரில் பிறந்தார் செரிசியர். அவருக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடைகளோ அல்லது அவரது நாட்டில் உள்ள எந்த அதிகார அமைப்போ அவரது நடவடிக்கைகளை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை.
செரிசியரின் குற்றவியல் வாழ்க்கை, அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தபோது தொடங்கியது. நவம்பர் 2017இல், போர்ட்-ஓ-பிரின்ஸ் நகருக்கு அருகில் இருந்த கிராண்ட் ரவைன் பகுதியில் மாஃபியாக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நடவடிக்கையில் பொதுமக்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இதில் செரிசியரின் பங்கு இருந்ததாக கூறப்பட்டது.
அந்த தருணத்திலிருந்து, நாட்டில் செயல்படும் ஆயுதக் குழுக்களுடனான அவரது உறவும் தொடங்கியது. தொடக்கத்தில் டெல்மாஸ் 6 என்ற குழுவின் முக்கிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரானார்.
உள்ளூர் மற்றும் சர்வதேச அறிக்கைகளின்படி, செரிசியர் அந்த கும்பலிடமிருந்து அதிகாரத்தைப் பெற முடிந்தது. காவல்துறை செல்வாக்கு மற்றும் மொய்ஸின் அரசாங்கத்தின் உதவிகளும் அதற்கு காரணம்.
ஒரு போலீஸ் அதிகாரியாக அவர் சில அட்டூழியங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது, அதற்காக அவர் மீது சர்வதேச அமைப்புகள் சில தடைகளை விதித்தன.
போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே நடந்த லா சலின் படுகொலையில் ஈடுபட்ட அதிகாரிகளில் இவரும் ஒருவர் என்று ஐ.நாவும் அமெரிக்காவும் சுட்டிக்காட்டியுள்ளன. அரசுக்கு எதிராக லா சலின் மக்கள் நடத்திய போராட்டத்தில், போலீஸ் மற்றும் குற்றவியல் குழுக்களின் ஒருங்கிணைந்த தாக்குதலால் பலர் கொல்லப்பட்டனர். உள்ளூர் மக்களின் போராட்டத்தை அடக்கவே இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டது என அமெரிக்கா கூறியது.
அப்போது குறைந்தது 71 பேர் இறந்தனர். ஆனால் செரிசியர் எப்போதும் போல அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
‘ஜி-9 அண்ட் ஃபேமிலி’ உருவானது எப்படி?
“நான் ஒரு கேங்க்ஸ்டர் அல்ல, நான் ஒருபோதும் அப்படி நடந்து கொள்ள மாட்டேன்,” என்று அவர் செய்தி நிறுவனமான அல்-ஜசீராவிடம் 2021இல் ஒரு நேர்காணலில் கூறினார்.
“இது நான் எதிர்த்துப் போராடும் அரசு அமைப்பு செய்யும் வேலை. அந்த அமைப்பு பணத்தின் மூலம் ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறது. நான் ஒரு கேங்க்ஸ்டர் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்” என்று அவர் கூறியிருந்தார்.
2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில், போர்ட்-ஓ-பிரின்ஸின் சில இடங்களில் நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களில் செரிசியருக்கு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
“காவல்துறையை விட குற்றக் கும்பல்களிடம் சிறப்பான ஆயுதங்கள் உள்ளன. அதிகாரிகளின் ஆதரவும் அவர்களுக்கு உள்ளது” என்று ஹைதியின் ‘மனித உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய கூட்டமைப்பின்’ இயக்குநர் பிபிசியிடம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
ஆயுத பலம் மற்றும் அதிகார பலத்துடன், போர்ட்-ஓ-பிரின்ஸின் பிராந்தியக் கட்டுப்பாட்டிற்கான போரைத் தொடங்கினார் செரிசியர். அங்கு தொடர்ச்சியான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. அது தலைநகரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பயங்கரவாதத்தை பரப்பியது.
ஹைதியில் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பின் தகவல்படி, செரிசியர் மற்றும் அவரது ஆயுதக் குழுக்கள் மக்களைக் கொல்வதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, அவர்களின் குடியிருப்புகளை தீயிட்டு எரிப்பதிலும் கவனம் செலுத்தியது.
ஜூன் 2020 வரை நிலவிய அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, ஒன்பது ஆயுதக் குழுக்களை ஒன்றிணைத்தார் செரிசியர். அதற்கு ஜி-9 அண்ட் ஃபேமிலி என்று பெயரிட்டார். இந்த அறிவிப்பை தனது யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டார்.
ஆனால் 2021இல் அதிபரின் படுகொலை அவரது அமைப்புக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. சர்வதேச ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அதுவரை அவருக்கு கிடைத்த அரசாங்க பாதுகாப்பை இழக்க வழிவகுத்தது.
இன்சைட் கிரைம் போர்ட்டல் தளத்தின் தகவலின் படி, மொய்ஸின் கொலைக்கு முன், ஜி-9 இன் நிதியில் 50% அரசாங்கப் பணத்திலிருந்து வந்தது, 30% கடத்தல்களிலிருந்து வந்தது, மீதமுள்ள 20% மிரட்டி பணம் பறித்தல் மூலம் திரட்டப்பட்டது.
அதிபர் படுகொலைக்குப் பிறகு, அரசாங்க நிதியுதவி 30% குறைந்தது. இந்த வீழ்ச்சி தான் நாட்டின் அரசியல் கட்டுப்பாட்டை மரபுரிமையாகக் கொண்ட மக்களுக்கு எதிரான தனது போரைத் துவங்க செரிசியரைத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
ஹைதி பிரதமர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
மொய்ஸின் படுகொலைக்குப் பிறகு பிரதமராகப் பதவி ஏற்றார் ஹென்றி. 2021 அக்டோபரில், அவர் ஒரு நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த சென்ற போது பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டார். ஏனெனில் செரிசியரின் ஆயுதக்குழு உறுப்பினர்கள் அப்போது திடீரென்று தோன்றி பிரதமரை நோக்கி சுட்டனர்.
வெள்ளை நிற உடையை அணிந்துகொண்டு, சுற்றி ஆயுதமேந்திய நபர்கள் நிற்க, தலைவர் செரிசியர் அதே நினைவுச்சின்னத்தில் மலர் மாலையை வைத்து அஞ்சலி செலுத்தினார். இது நாட்டில் அவருக்கு இருந்த அசாதாரணமான சக்தியை வெளிப்படுத்தியது.
நாட்டின் எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக நாசவேலை நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக செரிசியர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஹென்றியின் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக செரிசியரின் ஆட்கள் பெட்ரோல் ஏற்றிச் செல்லும் பல வாகனங்களை தடுத்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு ஹைதியில் நிலைமையை மேலும் மோசமாக்கியது.
அவரது ஜி-9 குழு, எதிரி குழுவான ஜி-பெப் உடன் தொடர்ந்து போரிட்டு வருகிறது. படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அதிபர் மொய்ஸை சில கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வந்தன. அந்த கட்சிகளுடன் ஜி-பெப் குழுவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இரு குழுக்களிடையே நடக்கும் துப்பாக்கிச் சூடு மற்றும் போர்கள் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டன. தொலைதூர கிராமங்களில் இருந்து தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் வரை இந்த சண்டைகள் பரவியுள்ளன.
இத்தகைய சண்டைகள் அவர்களின் வட்டத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாது, புதிய உறுப்பினர்களை ஈர்க்கவும் உதவுகிறது.
யூடியூப் மூலம் உத்தரவுகள்
போர்ட்-ஓ-பிரின்ஸின் தெருக்களில் இருப்பது போலவே சமூக வலைத்தளங்களிலும் மிகுந்த செல்வாக்கை பெற்றுள்ளார் செரிசியர்.
“ஹைதியில் சமூக வலைத்தளங்களின் உதவி இல்லாமல் கொள்ளைக்காரர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்க முடியாது. இந்த நாட்டில் எப்போதும் குற்றவாளிகள் இருந்திருக்கிறார்கள், ஆனால் இந்த தளங்கள் இல்லாமல் அவர்கள் பிரபலமாக மாறியிருக்க முடியாது” என்று அயிதி டேமேன் என்ஜிஓ அமைப்பின் இயக்குனர் யுவன்ஸ் ரம்போல்ட் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் கூறினார்.
செரிசியர் தனது திட்டத்தை செயல்படுத்த சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினார். அவர் தனது யூடியூப் வீடியோக்களை ஜி-9 குழுவின் உருவாக்கத்தை பற்றித் தெரிவிக்க மட்டும் பயன்படுத்தவில்லை, ஹைதியின் தற்போதைய பிரதம மந்திரியை கைது செய்யும்படி காவல்துறைக்கு வீடியோ மூலம் கோரிக்கை வைத்தார்.
யூடியூப் மட்டுமல்லாது எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) நாட்டைக் கைப்பற்றவும் தற்போதைய ஆளும் வர்க்கத்தை அகற்றவும் வலுவான அழைப்புகளை விடுத்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் ஒரு நேர்காணலில் சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார் செரிசியர்.
“இந்த தொழில்நுட்பங்களை உருவாக்கியவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். நேரடியாக பொதுமக்களை அணுகி நாம் யார் என்பதை கூற தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கிறது. நான் பொய்களை கூறவில்லை,” என்று அந்த நேர்காணலில் பேசியிருந்தார்.
மேலும், “நான் யார் என்று நான் தான் சொல்ல வேண்டும். அவர்கள் என்னைப் பற்றி சொன்னதில் 99 சதவிகிதம் பொய்கள் தான். என்னை தற்காத்துக் கொள்ள தொழில்நுட்பங்கள் எனக்கு நல்ல வாய்ப்பை அளித்துள்ளன” என்று கூறியிருந்தார் செரிசியர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்