தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கான இடங்களின் எண்ணிக்கை இறுதிசெய்யப்பட்டாலும், தொகுதிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
கூட்டணியில் என்ன நடக்கிறது?
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணிகளை இறுதிசெய்வதில் தி.மு.க. தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. அ.தி.மு.க. தரப்பிலும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் நடந்துவந்தாலும், வெளிப்படையாக அது குறித்து ஏதும் சொல்லப்படவில்லை.
தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டு இரு கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் என அறிவிக்கப்பட்டுவிட்டது.
இதற்குப் பிறகு எல்லா கட்சிகளுடனும் முதற்கட்டமாக பேச்சு வார்த்தை நடந்த பிறகும், பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை தேங்கி நிற்கிறது. கடந்த ஜனவரி 28-ஆம் தேதி சல்மான் குர்ஷித் தலைமையில் அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முகுல் வாஸ்னிக், அஜய் குமார் ஆகியோர் அறிவாலயத்திற்கு வந்து தி.மு.கவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அந்தப் பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் ஏற்கனவே வெற்றிபெற்ற 8 என்ற எண்ணிக்கையில் மட்டுமே தொகுதிகளை தருவதாகவும் ஒன்றிரண்டு தொகுதிகள் மாறலாம் என்றும் தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், காங்கிரசைப் பொறுத்தவரை தமிழகத்தில் 9, புதுச்சேரியில் 1 என்ற எண்ணிக்கையில் உறுதியாக நிற்பதால், மேற்கொண்டு எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில்தான் மீதமிருக்கும் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்தி முடிக்க முடிவுசெய்தது தி.மு.க. திங்கட்கிழமையன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஊடகத்தினருடன் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், பேச்சு வார்த்தை சுமுகமாக இருந்ததாகவும் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை மார்ச் 3-ஆம் தேதி நடக்கும் என்றும் கூறியிருந்தனர்.
தொகுதிப் பெயர்கள் ஏன் வெளியிடப் படவில்லை?
ஆனால், அதற்கு முன்பாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் வியாழக்கிழமையன்று பேச்சு வார்த்தைக்கு அழைத்த தி.மு.க. இடங்களை இறுதிசெய்திருக்கிறது. அதன்படி, இந்த இரு கட்சிகளுக்கும் கடந்த தேர்தலைப் போலவே தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால், எந்தெந்த தொகுதிகளில் இந்தக் கட்சிகள் போட்டியிடும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. 2019-ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டனம், திருப்பூர் தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால், இந்த முறை கோயம்புத்தூர், திருப்பூர் தொகுதிகளை பல்வேறு காரணங்களுக்காக மாற்றிக்கொள்ள விரும்புகிறது தி.மு.க.
“எங்களைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே போட்டியிட்ட இரண்டு இடங்களையும் கேட்டிருக்கிறோம். அதேபோலத்தான் அவர்களும் கேட்டிருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ், ம.தி.மு.கவுடனான தொகுதிகளை இறுதிசெய்வதில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக ம.தி.மு.கவுக்கு திருச்சி அல்லது விருதுநகரை ஒதுக்க நினைக்கிறார்கள். ஆனால், அவை காங்கிரசின் தொகுதிகள். இதில் ஒரு தீர்வைக் காண்பதற்கான பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும்போது இடதுசாரிக் கட்சிகளுக்கு மட்டுமான தொகுதிகளை அறிவித்தால் நன்றாக இருக்காது என்பதால் அவற்றை அறிவிக்கவில்லை. காங்கிரசுடனான இடங்கள் இறுதிசெய்யப்படும்போது தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும்” என்கிறார் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர்.
திமுக-மதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை
இதற்கிடையில் ம.தி.மு.கவும் தி.மு.கவும் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தின. இந்தப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. தி.மு.கவைப் பொறுத்தவரை ஒரு இடத்தை அளிப்பதோடு, கடந்த முறையைப் போலவே தி.மு.கவின் சின்னத்தில் போட்டியிடும்படி கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ம.தி.மு.கவைப் பொறுத்தவரை கடந்த தேர்தலைப் போல ஒரு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாநிலங்களவை தொகுதியையும் எதிர்பார்க்கிறது. மேலும், பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட விரும்புகிறது.
இதன் காரணமாகவே, மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார். தன்னுடைய மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வில் வைகோ சார்பில் முறையிடப்பட்டிருக்கிறது. அதன்படி இந்த வழக்கு நாளை (மார்ச் 1) விசாரணைக்கு வருகிறது.
“தி.மு.க. கூட்டணியில் பேச்சு வார்த்தைகள் இழுத்துக்கொண்டே போவதற்கு முக்கியக் காரணம், காங்கிரசுடனான இடங்கள் இறுதிசெய்யப்படாததுதான். ம.தி.மு.கவுக்கு திருச்சியைக் கொடுத்துவிட நினைக்கிறது தி.மு.க. ஆனால், திருச்சியில் அமைச்சர் நேருவின் மகன் போட்டியிட விரும்புகிறார். காங்கிரசிற்கு திருச்சிக்குப் பதிலாக கடலூரைத் தர தி.மு.க. முன்வந்திருக்கிறது. ஆனால், தங்களிடமிருந்து திருப்பூரை எடுத்தால், கடலூரைத் தர வேண்டும் என்கிறது சி.பி.ஐ. அதேபோல, கமலுக்கு கோவையைத் தரலாம் என கருதியது தி.மு.க. ஆனால், அவர் தென் சென்னைத் தொகுதியை விரும்புகிறார். இதனால்தான் பேச்சு வார்த்தைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
காங்கிரசுடனான இடங்கள் இறுதிசெய்யப்பட்டால், மற்ற கட்சிகளுடனான இடங்களையும் தொகுதிகளையும் இறுதிசெய்துவிடலாம் என்பதால் காங்கிரசுடனான பேச்சு வார்த்தைகளை ஒன்றிரண்டு நாட்களில் மீண்டும் துவங்கவிருக்கிறது தி.மு.க.
இதற்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்தி முடிக்க விரும்புகிறது தி.மு.க. ஆகவே அடுத்த சில நாட்களில் தி.மு.க. கூட்டணியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என நம்பலாம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்