கல்லூரியில் அதிக அளவில் அரியர் வைத்திருந்ததால், மன உளைச்சலில் இருந்த பொறியியல் மாணவர் கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற கும்முடிபூண்டியை அடுத்துள்ள கவரை பேட்டையில், ஒரு தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்த சிவா என்பவரின் மகன் கடிகாரம் மணிகண்ட சந்திரசேகர் என்பவர் பொறியியல் மூன்றாமாண்டு படித்திருந்தார். கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவர், கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான், நேற்று அதிகாலை அந்த மாணவன் தங்கி இருந்த அறையில் யாரும் இல்லாத சமயமாக பார்த்து, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் விடுதியில் தங்கி படித்து வந்த சக மாணவர்கள், சந்திரசேகர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவர் தரப்பில், தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே கல்லூரி தரப்பில் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக, கும்மிடிப்பூண்டி காவல்துறை ஆய்வாளர் வடிவேல் முருகன் தலைமையில், கவரைப்பேட்டை காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில், விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட அந்த மாணவன் சில பாடங்களில் அரியர் வைத்திருந்ததாகவும், இதன் காரணமாக, மன உளைச்சலில் இருந்த அந்த மாணவன், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நன்றி
Publisher: 1newsnation.com