உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மாதம், 22-ம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளை, ஸ்ரீ ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டுவருகிறது. இதற்கான பூஜைகள் 16-ம் தேதி தொடங்குகின்றன.
1990-களில் அயோத்தி ராமர் கோயிலை முன்வைத்தே பா.ஜ.க தேர்தல் பிரசாரங்களை நடத்தியது. பா.ஜ.க-வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான அயோத்தி ராமர் கோயில் விவகாரம் பா.ஜ.க-வின் அரசியல் வளர்ச்சிக்கு முக்கியத் தூணாகவே இருந்தது.
ராம் மந்திர் அறக்கட்டளை செயலர் சம்பத் ராய் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “ராமர் கோயிலின் கருவறை தயாராக இருக்கிறது. குழந்தை ராமர் சிலையும் தயாராக இருக்கிறது. ஆனால் கோயில் முழுவதும் இன்னும் முழுமையாக கட்டுமானப் பணிகள் முடியவில்லை. இந்த முழுப்பணியும் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம். இன்னும் கோயிலில் நிறைய வேலைகள் உள்ளன. எனவே, ஏராளமான மக்கள் இன்னும் கட்டுமானப் பணி முழுமைப்பெறாத கோயிலுக்கு வந்தால் நகரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படும்” எனத் தெரிவித்திருந்ததும், அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
நன்றி
Publisher: www.vikatan.com