தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நவம்பர் 30-ம் தேதியோடு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, டிசம்பர் 3-ம் தேதியான இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், மிசோரம் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை மட்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், மற்ற நான்கு மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தெலங்கானா தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுக்கு ஏற்றவாறு, ஆட்சிக்கு மாற்றத்துக்கு வழிவகுக்கும் வகையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. தெலங்கானாவில் தற்போதைய நிலவரப்படி (11 மணிவரை) காங்கிரஸ் 71 இடங்களிலும், பி.ஆர்.எஸ் 37 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இந்த நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டி.கே.சிவக்குமாரை, தெலங்கானா காங்கிரஸ் வேட்பாளர்களைப் பாதுகாக்கும் பணியில் கட்சி மேலிடம் ஈடுபடுத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
மேலும், இதற்காக டி.கே.சிவக்குமாருடன் 10 கர்நாடக அமைச்சர்கள் ஹைதராபாத்தில் முகாமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் உறுதிசெய்யும் விதமாக, ஹைதராபாத்திலுள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலுக்கு வெளியே பல பேருந்துகள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், அவை காங்கிரஸ் ஏற்பாடு செய்த பேருந்துகள் எனவும் சொல்லப்படுகிறது.
கடந்த காலங்களில் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க எவ்வாறு மற்ற கட்சி எம்.எல்.ஏ-க்களை வளைத்து ஆட்சியமைத்தது என்பதை உணர்ந்து கர்நாடக தேர்தலில் தங்கள் எம்.எல்.ஏ-க்களை பாதுகாத்த காங்கிரஸ், தற்போது தெலங்கானாவிலும் அதே முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகப் பலர் கூறுகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜ.க-வும், தெலங்கானா, சத்தீஸ்கரில் காங்கிரஸும் என 2 – 2 என்று இரு கட்சிகளும் முன்னிலையில் முன்னிருக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com