டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், அதானி குறித்து ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின் நகலுடன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “லண்டனிலுள்ள ஃபைனான்சியல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம், அதானி குழுமம் ரூ.12,000 கோடி மோசடி செய்திருப்பது நமக்கு தெரியவந்திருக்கிறது. அதானி குழுமத்தின் மொத்த ஊழல் தற்போது ரூ.32,000 கோடியாக இருக்கிறது. அதானி இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்குகிறார். அந்த நிலக்கரி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும்போது, அதன் விலை இரட்டிப்பாகிறது. இதனால், மின்சாரக் கட்டணம் இங்கு உயர்கிறது. இதன் மூலம், ஏழை மக்களின் பாக்கெட்டுகளிலிருந்து ரூ.12,000 கோடியை அதானி எடுத்திருக்கிறார்.
இதுவொரு நேரடி திருட்டு. ஒரு அரசாங்கத்தையே வீழ்த்தக்கூடிய விவகாரம் இது. அதானி ஏமாற்றியதால்தான், மின்சார கட்டணம் உயர்கிறது என்பதை நுகர்வோர் புரிந்துகொள்ள வேண்டும். பிரதமரின் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடக்காது. இந்த விவகாரத்தில் அதானி குழுமத்திடம் கேள்வி கேட்க யாரும் முன்வரவுமில்லை. பல்வேறு நாடுகளில் இது நடக்கிறது, மக்களும் கேள்விகள் கேட்கிறார்கள். ஆனால், இந்தியாவில்தான் எதுவும் நடக்கவில்லை. மோடியால் அதானி மீண்டும் மீண்டும் காப்பாற்றப்பட்டிருக்கிறார். இதில் மோடி ஏன் கருத்து தெரிவிக்க மறுக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானி விவகாரத்தில் விசாரணை முன்னெடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, “நிச்சயம் எடுக்கப்படும்” என்றார் ராகுல் காந்தி.
முன்னதாக, `இந்தியாவின் நியூஸ் கிளிக் இணையதள ஊடகம் சீனாவிடமிருந்து சட்டவிரோதமாகப் பணம் பெற்று செய்தி வெளியிட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் `நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது. அதனடிப்படையில், நியூஸ் கிளிக் ஊடகம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் உபா (UAPA) சட்டத்தின் கீழ் நியூஸ் கிளிக் நிறுவனர் கைதுசெய்யப்பட்டார். ஆனால், அதானி குறித்து எந்த அறிக்கை வந்தாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை’ எனச் சாடுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com