“வடநாட்டில் சனாதனம் என்பது இந்து மதம்தான். தமிழகத்தில் சனாதனம் என்பது சாதிய வாதம், பெண் இழிவு என்று புரிந்து கொள்ளப்படுகிறது” என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “ஜி-20 மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறோம். ஆனால், குடியரசுத் தலைவரின் விருந்து நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பில்லாதது ஜனநாயக விரோதம்.
இந்தியா ஜனநாயகமும், எதிர்க்கட்சியும் இல்லாத நாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் நிலவுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை செயல்படுத்த அரசியல் சாசனத்தில் குறைந்தபட்சம் 5 திருத்தங்களைச் செய்ய வேண்டும். மாநில அரசுகளை பலவீனப்படுத்தவே ஒரே நாடு, ஒரு தேர்தல்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா அல்லது பாரதம் என்பது, மாநிலங்கள் அடங்கிய ஒன்றியம் என்றுதான் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவை பாரத் என்று மாற்றுவதில் பா.ஜ.க-வுக்கு என்ன நோக்கமென்று புரியவில்லை. நல்ல நோக்கமாக இருந்தால் இரண்டு பெயர்களையும் எழுதலாம்.
ஜி-20 மாநாடு அழைப்பிதழில் ஆங்கிலத்தில் இந்தியா என்றும், ஹிந்தியில் பாரத் என்றும் எழுதலாம். நாங்கள் பாரதத்திற்கு விரோதிகள் அல்ல, ஆனால், பா.ஜ.க இந்தியாவை விரோதியாகப் பார்க்கிறது. `இந்தியா’ கூட்டணி வந்த பிறகு பெயர் மாற்றம் கண்டுள்ளது
`இந்தியா’ கூட்டணிக்கு அகில இந்திய அளவில் தொகுதி பங்கீடு கிடையாது. மாநில அளவில்தான். அமைச்சர்களுக்கு வாய்பூட்டு போட்டது பா.ஜ.க அரசு மட்டும்தான்.
`இந்தியா’ கூட்டணியில் 14 உறுப்பினர்கள்கொண்ட செயற்குழு கூடி தேர்தல் வியூகங்களை வகுப்பார்கள். மாநில அளவில்தான் தொகுதிப் பங்கீடு நடைபெறும். அது சுமுகமாக முடியும்.
வடநாட்டில் சனாதனம் என்பது இந்து மதம்தான். தமிழகத்தில் சனாதனம் என்பது சாதிய வாதம், பெண் இழிவு என்று புரிந்து கொள்ளப்படுகிறது. எம்மதமும் சம்மதம் என்பதுதான் காங்கிரஸின் கொள்கை. நாங்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com