5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. 5 மாநிலங்களில் 3 மாநிலங்களில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஆனால், பா.ஜ.க வெற்றிபெற்ற மாநிலங்களுக்கான முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீண்ட நாள்களாக நீடித்தது. நேற்றைய தினம் ம.பி, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான முதல்வர்களை பா.ஜ.க மேலிடம் அறிவித்தது. அதில் மத்தியப் பிரதேசத்துக்கு ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த மோகன் யாதவ் முதல்வராகப் பதவியேற்பார் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு, மோகன் யாதவ் மட்டுமல்லாது பிற பா.ஜ.க முக்கியஸ்தர்கள் உட்பட அனைவரையும் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் தெற்கு பகுதி எம்.எல்.ஏ-வான மோகன் யாதவ், பா.ஜ.க-வில் 30 வருடங்களாகத் தொடர்ந்து வருகிறார். உஜ்ஜைன் தெற்கு தொகுதியில் மூன்று முறை பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர் மோகன் யாதவ். மத்தியப் பிரதேசத்தின் உயர்கல்வி அமைச்சராகவும் பணியாற்றியவர். இந்துத்துவா கொள்கையில் தீவிர பிடிப்புடையவரான மோகன் யாதவுக்கு, இந்த முறை முதல்வர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் முடிவுகள் வெளியாகி 8 தினங்களுக்குப் பிறகு கடுமையான குற்றச்சாட்டுகளுக்குரிய ஒருவரை, முதல்வராக பா.ஜ.க அறிவித்திருக்கிறது. அவரது பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் இன்றும் இருக்கின்றன. அந்த வீடியோக்களில், ஆபாசமான, மிரட்டும் வகையில், பதவியைத் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் பேசி பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் மோகன் யாதவ்.
அதுமட்டுமல்லாது, உஜ்ஜைனியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் சிம்மஸ்தா விழாவுக்காகக் கொடுக்கப்பட்ட 872 ஏக்கர் நிலத்தைப் புறம்போக்கு நிலமாக மாற்றி, அபகரித்ததோடு, அதைக் குடியிருப்பாகவும் உருவாக்கியிருக்கிறார். அதை, அவரின் மனைவி மற்றும் சகோதரிகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டிலும் சிக்கியிருக்கிறார். அவரையா முதல்வராகத் தேர்வு செய்வது… இதுதான் மத்தியப் பிரதேசத்துக்கு பா.ஜ.க-வும், பிரதமர் மோடியும் கொடுக்கும் உத்தரவாதமா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com