கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரையில் திருவள்ளூரில் ஜெயக்குமார், ஆரணியில் விஷ்ணு பிரசாத், திருச்சியில் திருநாவுக்கரசர், கரூரில் ஜோதிமணி, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், கிருஷ்ணகிரியில் செல்ல குமார், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த் ஆகியோர் வெற்றி பெற்று எம்.பி-க்களாக இருக்கிறார்கள். தேனியில் களம் கண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் தோல்வியடைந்தார். பின்னர் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அழகிரி நீட்டிய பட்டியலும், பேசிய வார்த்தைகளும்தான் தற்போதைய ஹாட் டாபிக்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பதற்காக ஒவ்வொரு மாநிலங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் கடந்த 29, 30-ம் தேதிகளில் தமிழக தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதற்கு தேர்தல் தொகுதி பங்கீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முகுல்வாஸ்னிக் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், செல்லகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அழகிரி, “கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில், ‘திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. எனவே வரும் தேர்தலில் கூடுதலாக ஈரோடு, திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல் என மொத்தமாக 18 தொகுதிகளை நாம் கேட்டு பெற வேண்டும். இங்கு நாம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது”என தெரிவித்து இருக்கிறார்.
அதற்கு பதிலளித்த முகுல்வாஸ்னிக், “இதுகுறித்து காங்கிரஸ் தலைமை விரைவில் திமுக தலைமையிடம் பேசும். புதிதாக கூட்டணிக்கு கட்சிகள் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இருப்பினும் நாம் 15 தொகுதிகளுக்கு கீழ் குறையாமல் பெற வேண்டும்’ என கூறியிருக்கிறார்” என்றனர் விரிவாக.
கடந்த முறை காங்கிரஸுக்கு வழங்கிய தொகுதிகளில் சிலவற்றை திமுக இந்தமுறை எடுத்துக்கொள்ள கூடும் என ஒருபக்கம் பேச்சு அடிபடும்,இந்த சூழலில் கூடுதலாக 8 தொகுதிகளை கேட்க திட்டமிட்டு இருக்கிறார்கள். காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகளை தி.மு.க ஒதுக்குகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com