ஐந்து மாநிலத் தேர்தலில் பா.ஜ.க மூன்று மாநிலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் குறித்து இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியா கூட்டணியிலுள்ள காங்கிரஸ், சி.பி.எம் கட்சிகள் கேரளாவில் எதிர் எதிர் அணியில் இருக்கின்றன. கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி-யாக இருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட்டதால்தான், கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. அங்கு காங்கிரஸ் போட்டியிடாமல் இருந்திருந்தால், சி.பி.எம் வெற்றிபெற்றிருக்கும். இந்த முறையும் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட்டால், அது சி.பி.எம் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கருத்து எழுந்திருக்கிறது. இது குறித்து சி.பி.எம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் நேற்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியா கூட்டணி எதிர்ப்பது பா.ஜ.க-வை என்றால், வயநாட்டில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளரை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிடுவது ஏற்புடையதல்ல.


வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டுமா, போட்டியிட வேண்டாமா என்பதை காங்கிரஸ் கட்சிதான் முடிவுசெய்ய வேண்டும். இதில் சி.பி.எம் எந்த வேண்டுகோளையும் வைக்க முடியாது. ராகுல் காந்தி பா.ஜ.க-வுக்கு எதிராகத்தான் போட்டியிட வேண்டும். பா.ஜ.க வலுவாகவுள்ள இடங்களில்தான் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும். பா.ஜ.க ஃபாசிஸ்ட் நிலைபாடு உடைய கட்சி. இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுடன் அல்ல ராகுல் காந்தி போட்டியிட வேண்டியது. ராகுல் காந்தி போட்டியிட வேண்டிய இடம் இதுவல்ல என பொதுவான சிந்தனை உள்ள அனைவருக்கும் தெரியும். இந்த தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், பா.ஜ.க எதிர்ப்பில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது என்பது தெரியும். கேரளாவில் முஸ்லிம் லீக் இல்லை என்றால், காங்கிரஸ் (யு.டி.எஃப்) கூட்டணி இல்லை.
நன்றி
Publisher: www.vikatan.com