அன்று நவம்பர் 29-ஆம் தேதி, புதன்கிழமை.
42 வயதான சர்வபி எனும் பெண், தெலங்கானாவில் தந்தூர் எனும் ஊரில், தொழிலாளர்கள் கூடும் ‘சாந்தி மால்’ எனும் இடத்தில் நின்றுகொண்டிருந்தார்.
சர்வபி ஒரு கூலித்தொழிலாளி. தனது அன்றாட வேலைக்காக மற்ற தொழிலாளிகளுடன் அங்கு நிற்கிறார். யாராவது வேலைக்காக அழைத்தால் அவர்களுக்காக வேலை செய்து பணம் பெற்று பின்பு வீடு திரும்புவார். கர்நாடக மாநிலம் குல்பர்கா அருகே தண்டூரை ஒட்டிய மட்கல் கிராமம் இவரது சொந்த ஊர். வேலை தேடுவதற்காக அவரது குடும்பம் தந்தூரில் தங்கியுள்ளது.
புதன்கிழமை காலை அன்றாட வேலைக்காக சாந்தி மால் அருகே நின்று கொண்டிருந்த 55 வயதான கிஷ்டப்பா அங்கு வந்துள்ளார். வேலைக்காக தேடிக் கொண்டிருந்த சர்வபியிடம் அந்தரம் என்ற கிராமத்தில் கூலி வேலை இருப்பதாகவும், பேருந்தில் தன்னுடன் வேலைக்கு வரும்படியும் கூறினார்.
அவருடன் சர்வபியும் சென்றிருக்கிறார். தான் வேலை செய்யும் இடம் வெகு தொலைவில் உள்ளதால், தனது கணவருக்கு போன் செய்து அந்தரத்தில் கூலி வேலைக்கு செல்வதாக கூறியிருக்கிறார் சர்வபி.
சுமார் 11 மணியளவில், இருவரும் சஹீராபாத் பேருந்தில் ஏறினர். போகும் வழியில் பெத்தமுல் மண்டல் தட்டேப்பள்ளி அருகே வண்டி சென்ற போது பேருந்தில் இருந்து இறங்கி காட்டுக்குள் நடந்து சென்றனர்.
இருவரும் காட்டிற்குள் வெகு தொலைவு நடந்து சென்றனர். இரண்டு மலைகள் ஏறி இறங்கிய பிறகு, கிஷ்டப்பா ஆள் யாரும் இல்லாத இடத்தில் சர்வபியை கொலை செய்தார்.
துப்பறிய உதவிய சிசிடிவி
வேலைக்குச் சென்ற மனைவி மாலை வீடு திரும்பவில்லை என்பதால் சந்தேகமடைந்த கணவர் சர்வபியின் கணவர் முகமது அவரைத் தேடியுள்ளார், ஆனால் அவர் கிடைக்கவில்லை.
தொடர்ந்து அடுத்த நாளும் தேடியிருக்கிறார். அவருக்கு தெரிந்தவர்களிடமும் கேட்டிருக்கிறார். ஆனால் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. டிசம்பர் 1-ஆம் தேதி போலீஸாரிடம் புகார் அளித்தார்.
தந்தூரி காவல் துறையினர் சர்வபியின் போன் தொடர்பைக் கண்டறிய முயற்சி செய்தனர். ஆனால் அதுவும் முடியவில்லை. அவர் அன்றாடம் கூலி வேலைக்காக நிற்கும் இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சிகளில் ஆதாரம் சிக்கியது. அதில் அவள் கிஷ்டப்பாவுடன் காணப்பட்டாள். அந்தக் காணொளியில் இருவரும் இந்திரா சவுக்கை நோக்கி நடந்து சென்றதை காண முடிந்தது.
போலீசாருக்குக் கிடைத்த திடுக்கிடும் தகவல்
போலீசார் சிசிடிவி காட்சியில் இருந்த நபரைப் பற்றி விசாரிக்கத் துவங்கினர். அவர் பெயர் மாலா கிஷ்டப்பா என்பதும், அவர் தண்டூர் மண்டலில் உள்ள அல்லிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
டிசம்பர் 7-ஆம் தேதி காவல்துறையினர் அவரை விசாரித்தனர். அவர் தனது குற்றத்தை ஒப்பு கொண்டார்.
சர்வபியைக் கொலை செய்தபின், அவரது கால் கொலுசுகள்,1,000 ரூபாய் பணம், மற்றும் செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டதாக ஒப்புதல் அளித்துள்ளார். அவற்றை அவர் தனஹ்டு வீட்டில் மறைத்து வைத்திருந்தார். அவற்றை போலீசார் மீட்டனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சில திடுக்கிடும் தகவல்கள் தந்தூரி போலீஸாருக்குத் தெரியவந்தது.
சர்வபி, கிஷ்டப்பாவின் ஏழாவது கொலை. இதற்கு முன்னதாக அவர் ஆறு பேரைக் கொன்றுள்ளார்.
பெண் தொழிலாளர்களை குறி வைத்தார்
கிஷ்டப்பா தீவிரமாக மது அருந்தும் பழக்கம் உடையவர்.
கொலை செய்ய ஆட்களைத் தேடும்போது அவரும் ஒரு தொழிலாளி போல் தரையில் நிற்பார். பின்பு யாரை கொல்ல வேண்டும் என முடிவு செய்த பின் அவரிடம் சென்று பேசுவார். சந்தையில் வேலைக்காக நிற்கும் பெண்களை குறிவைப்பார்.அவர்களை தன்னுடன் வர வைப்பதற்காக, வேலை இருப்பதாகக் கூறி அழைத்து செல்வார்.
பின்பு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று நகை, பணம் முதலியவற்றைப் பறித்துக்கொண்டு கொலை செய்து விடுவார்.
பின்பு, தனக்கு எதுவும் தெரியாதது போல திரும்புவார்.
இதற்கு முன்னரே, கிஷ்டப்பா மீது 3 வழக்குகள் விக்ரபாட் காவல் நிலையத்தில் உள்ளதாகவும். மேலும் ஒரு வழக்கு யல்லால் காவல் நிலையத்தில் உள்ளதாகவும் மற்றுமொரு வழக்கு தந்தூர் காவல் நிலையத்திலும் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட அனைவரும் பெண்கள்.
போலீசாரால் ஏன் இவ்வளவு நாட்களில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை?
இதுவரை போலீசார் அவரை ஐந்து முறை சிறைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் உரிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் வெளியில் வந்து விட்டார்.
கடந்த காலத்தில் நடந்த ஆறு கொலை வழக்குகளில், ஐந்து வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
கிஷ்டப்பாவின் மேல் மற்றுமொரு வழக்கு நிலுவையில் உள்ளது.
மேலும், சமீபத்தில் நடந்த கொலைக்கு முன்பு, அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் விடுவிக்கப்பட்டார்.
இந்த ஏழு கொலைகளைத் தவிர இன்னும் இரண்டு அல்லது மூன்று கொலைகள் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அவர் ஒருபோதும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளமாட்டார் என்றும். இந்த வழக்கில் சிசிடிவி ஆதாரம் கிடைத்ததால் அவர் வாக்குமூலம் அளித்ததாகவும் போலீசார் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
இந்தக் கொலை வழக்கு பதியப்பட்டதை அறிந்த கிஷ்டப்பாவின் மனைவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர் குடும்பத்தை பற்றிய விவரங்கள் இன்னும் சேகரிக்கப்படவில்லை.
எதற்காக கொலை செய்தார்?
தந்தூரியின் டி.எஸ்.பி சேகர் கௌட், இந்தக் கொலைகளைச் செய்ய கிஷ்டப்பாவுக்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை என்றார்.
“அவர் கொலை செய்யும் பெண்கள் பெரிதாக ஒன்றும் அதிகளவில் பணமோ நகையோ வைத்திருப்பதும் இல்லை. மிகவும் சிறிய அளவிலேயே உள்ளது. பாலியல் வன்முறைக்கான எந்த ஒரு அறிகுறியும் கூட இல்லை. அவரது நடத்தை ஒரு சைக்கோவை போல இருக்கிறது,” என்கிறார் அவர்.
“இதுவரை அவரது கொலைகளுக்கு சரியான ஆதாரம் எங்கும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை சிக்கியது. சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட உரிய ஆதாரங்களோடு அவரைப் பிடித்தோம். கொலை நடந்த இடத்திற்கு எங்களையும் அழைத்து சென்று காட்டினார். இந்த முறை சரியான தண்டனையை பெற்றுத் தருவோம்,” என்றார்.
மேலும், கடந்த காலங்களில் அவர் செய்த குற்றங்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை விரைவாக விசாரித்து அவருக்கு விரைவில் தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளவிருப்பதாக, என்று டிஎஸ்பி செய்தியாளர்களிடம் கூறினார்.
மனிதர்கள் ஏன் சைக்கோ ஆக மாறுகிறார்கள்?
இத்தகைய கொலைகள் ஏன் செய்யப்படுகின்றன, இவற்றுக்குப் பின்னிருக்கும் உளவியல் காரணிகள் என்ன என்பவை குறித்து பிபிசியிடம் பேசினார் மனநல மருத்துவர் வேமனா நிஷாந்த்.
“இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி, எதிர் பாலினத்தின் மீதான வெறுப்பு போன்றவை சில. சில சமயங்களில் கொலை செய்வதில் ஏற்படும் சிலிர்பும் காரணமாக இருக்கலாம்,” என்றார்.
மேலும், கடந்த காலங்களில் பலமுறை விடுதலையாகி இருப்பதால், என்ன செய்தாலும் கண்டு பிடிக்க மாட்டார்கள், தப்பித்து விடலாம் என்ற தைரியத்தையும் அவருக்கு கூட்டியிருக்கும், என்றார் .
மெலும் மருத்துவர் நிஷாந்த், அவர் பெண்களைக் கொன்றதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்கிறார். “முதலாவது, அவர்கள் அவரைவிட வலிமை குறைந்தவர்கள். இரண்டாவது, பெண்களை வெறுக்க வைக்கும் வகையில் கடந்த காலங்களில் நடந்த எந்தச் சம்பவங்களும் அவரை இதைச் செய்யத் தூண்டலாம். அல்லது பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆசையாக இருக்கலாம்,” என்று அவர் கருத்து தெரிவித்தார்.
சைக்கோ கொலையாளிகளை எப்படி அடையளம் காண்பது?
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்ககளை அடையாளம் காண்பது என்பது சற்று கடினம் என்கிறார் மருத்துவர் நிஷாந்த்.
“இதுபோன்ற அறிகுறிகள் எந்த வகையான நபர்களிடம் உள்ளன என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம். சக மனிதர்களின் மனப்பாங்கை அறியும் திறன், சமூக விதிமுறைகளை விரும்பாதது, குடும்பப் பின்னணி, அதிர்ச்சிகரமான குழந்தை பருவ அனுபவங்கள், குழந்தை பருவ வன்முறை போக்குகள் மற்றும் வருத்தமின்மை ஆகியவை இதற்கான காரணங்கள் ஆகும். எனவே அவர்களை அடையாளம் காண்பது எளிதல்ல,” என்று அவர் கூறுகிறார்.
அப்படிப்பட்டவர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கும், ஆபத்தில் உள்ளவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
இத்தகைய போக்கு உள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும், அவர்களைச் சமூகத்தில் இருந்து சிறிது ஒதுக்கி வைக்கலாம் என்றும் அவர் கூறினார். “இதுபோன்ற பல வழக்குகள் உளவியல் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன, ஆனால் அவற்றை மாற்றுவதற்கான முறைகள் எதுவும் கண்டறியப்படவில்லை,” என்கிறார் டாக்டர். நிஷாந்த்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்