ஜனவரி முதல் வாரத்தில், மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியுனா, பிரதமர் நரேந்திர மோதியை ‘இஸ்ரேலின் கைப்பாவை’ என்று விமர்சித்தபோது, இரு நாடுகளுக்கும் இடையே கசப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கியது.
இந்தியா-மாலத்தீவு பிரச்னை அதிகரித்ததற்கு லட்சத்தீவின் புகழ்தான் அடிப்படைக் காரணமாக அமைந்தது. இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் லட்சத்தீவுகளை பாராட்டி சில படங்களை வெளியிட்டதால் இஸ்ரேல் சர்ச்சையில் சிக்கியது. லட்சத்தீவில் தண்ணீர் சுத்திகரிப்பு திட்டத்தையும் இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
லட்சத்தீவு விவகாரத்தில் இஸ்ரேல் இந்தியாவை ஆதரிப்பதைக் காணும் அதே நேரத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இஸ்ரேலின் எதிரியாகக் கருதப்படும் இரானுக்கு பயணம் மேற்கொண்டார்.
ஜெய்சங்கர் ஜனவரி 15, திங்கட்கிழமையன்று இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹ்யான் ஆகியோரைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில், சபஹர் துறைமுகம் மற்றும் கடலில் கப்பல்கள் மீது சமீப காலமாக அதிகரித்துள்ள தாக்குதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில், இந்தியா மற்றும் இரான் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவது, விரைவுபடுத்துவது குறித்து அதிபர் இப்ராஹிம் ரைசி வலியுறுத்தினார். இந்த ஒப்பந்தங்களில் சபஹர் திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு ஈடுகொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் ரைசி கூறினார். இந்தியா இரானில் சபஹர் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து வருகிறது. இந்தத் துறைமுகத்தின் பணி தாமதமாக நடைபெற்று வருவதை ரைசி சுட்டிக்காட்டினார்.
சபஹரை பொறுத்தவரை, திட்டத்தின் தாமதத்தால் இரான் இந்தியா விஷயத்தில் மகிழ்ச்சியடையவில்லை என்று கருதப்படுகிறது. இந்தத் திட்டத்தை இந்தியா விரைவில் முடிக்க வேண்டும் என இரான் விரும்புகிறது. இந்த விஷயத்தில், சீனா தனது திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துகிறது. ஆனால் இந்தியா அதைச் செய்ய முடியாத நிலையில், இருநாடுகளும் ஒப்பிடப்படுகின்றன.
பல வல்லுநர்கள் சீனாவில் பணம் மற்றும் வளங்களுக்குப் பஞ்சமில்லை, எனவே அது அனைத்துப் பணிகளையும் வேகமாக மேற்கொள்கிறது என்று நம்புகிறார்கள்.
ஜெய்சங்கர் என்ன சொன்னார்?
ஜெய்சங்கர் இரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹ்யானுடன் இணைந்து தெஹ்ரானில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவை சுற்றியுள்ள பகுதிகளில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் சர்வதேச சமூகத்திற்கு மிகுந்த கவலை அளிக்கிறது. இத்தகைய அச்சுறுத்தல்கள் இந்தியாவின் பொருளாதார நலன்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
எந்த நாட்டுக்கும் எந்தப் பலனும் கிடைக்காத பயங்கரமான சூழ்நிலை உள்ளது. சமீபத்தில், இந்தியப் பெருங்கடலில் கடல்சார் வணிகப் போக்குவரத்தின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன,” என்றார்.
சில நாட்களுக்கு முன்பு சௌதி அரேபியாவில் இருந்து இந்தியா வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியா வந்த டேங்கர் மீது இரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இந்தத் தாக்குதல்களை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வருகின்றனர். ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இரானின் ஆதரவு உள்ளது என்பதுடன் இந்த கிளர்ச்சியாளர்கள் அமெரிக்கா-இஸ்ரேலை எதிர்க்கின்றனர். ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் சமீபத்திய ஆக்கிரமிப்புக்கு காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலே காரணம் என்று கூறப்படுகிறது.
ஜெய்சங்கர், “இந்தியாவை சுற்றியுள்ள பகுதிகளிலும் சில தாக்குதல்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். இது சர்வதேச சமூகத்திற்கு மிகவும் கவலையளிக்கும் விஷயம். இதன் மூலம் இந்தியாவின் நலன்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்பது வெளிப்படை. இதுபோன்ற நிலை யாருக்கும் பயனளிக்காது,” என்றார்.
இங்கு இரானால் ஆதரிக்கப்படும் ஹுத்தி கிளர்ச்சியாளர்களைப் பற்றி ஜெய்சங்கர் குறிப்பிடுகிறார். இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலத்தீனர்களுக்கு இரான் ஆதரவு அளித்து வருகிறது.
பாலத்தீனத்தைப் பற்றி ஜெய்சங்கர் தனது அறிக்கையில் குறிப்பிடுகையில், “பாலத்தீன பிரச்னையில், பாலத்தீன மக்கள் சுதந்திரமான, பாதுகாப்பான எல்லைகளைக் கொண்ட நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடிய இரு தேசக் கொள்கையை இந்தியா நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
அனைத்து தரப்பினரும் ஆத்திரமூட்டும் விதத்தில் செயல்படுவதை விடுத்து பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதையில் முன்னேற வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்துகிறேன்,” என்றார்.
ஜெய்சங்கரின் பயணம் ஏன் முக்கியமானது?
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இரானின் உறுப்புரிமை 2023இல் பிரிக்ஸ் நாடுகளின் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. பிரிக்ஸ் அமைப்பில் இரானை சேர்ப்பதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது. சமீபத்தில், சௌதியில் இருந்து இந்தியா வந்த டேங்கர் மீது இரானில் இருந்து ஆளில்லா விமானம் தாக்கியதாக அமெரிக்கா கூறியது. ஆனால் அமெரிக்காவின் கூற்றை இரான் நிராகரித்தது.
இதையடுத்து, இந்தியா வந்த டேங்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் இந்தியாவும் கடும் பதிலடி கொடுத்தது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பரில் ஒருமுறை பேசியபோது, “சமீபத்தில் அரபிக் கடலில் எம்வி செம் புளூட்டோ மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதையும், செங்கடலில் இந்திய கடற்படையின் எம்வி சாய்பாபா மீது நடத்தப்பட்ட தாக்குதலையும், இந்தத் தாக்குதலை நடத்தியது யாராக இருந்தாலும் சரி, இதை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொள்கிறது,” என்று கூறியிருந்தார்.
மேலும் “கடலுக்கு அடியில் இருந்தும் அவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை நான் உங்களுக்கு உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்றும் கூறியிருந்தார்.
இந்த இரண்டு முக்கிய சம்பவங்களுக்குப் பிறகு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரான் செல்வது இதுவே முதல் முறை.
இந்த சுற்றுப் பயணத்தின்போது, இரான் நேரடியாகத் தலையிடாத கப்பல்கள் மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் மற்றும் இதுபோன்ற பிரச்னைகள் குறித்து ஜெய்சங்கர் பேசினார். சபஹர் துறைமுகம் தொடர்பாக ரைசி கூறியதை இந்தியா நேரடியாக எடுத்துக்கொண்டுள்ளது.
இப்ராஹிம் ரைசி சொன்னது ஏன் மிகவும் முக்கியமானது?
கடந்த ஆண்டில், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இரான் அதிபர் ரைசி இடையே பேச்சுவார்த்தை நடந்தபோது, சபஹர் பிரச்னையும் எழுப்பப்பட்டது. 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இந்தியா, இரான், ரஷ்யா ஆகிய நாடுகள் சர்வதேச வடக்கு-தெற்கு வழித்தடத்தை உருவாக்க ஒப்புக்கொண்டன. இதன் மூலம் இந்தியா, இரான், ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரானின் கடலோர நகரமான சபஹரில் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் இரான் இடையே 2003இல் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் 2016இல் அங்கீகரிக்கப்பட்டது என்பதுடன் இந்தியா தற்போது இங்கு சரக்கு முனையத்தை உருவாக்கி வருகிறது.
இந்தத் துறைமுகம் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்த வழித்தடத்தின் கீழ், இந்தியா, இரான், ஆப்கானிஸ்தான், ஆர்மீனியா, அஜர்பைஜான், ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே சரக்குகளைk கொண்டு செல்வதற்காக 7,200 கி.மீ. நீளமுள்ள கப்பல், ரயில் மற்றும் சாலை வலையமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
இந்தப் பாதை இந்தியாவின் ஐரோப்பாவுக்கான அணுகலை எளிதாக்குவதுடன் இரான் மற்றும் ரஷ்யாவிற்கும் பயனளிக்கும். இந்தத் திட்டத்திற்கு இரானின் சபஹர் துறைமுகம் மிகவும் முக்கியமானது. ஆனால், கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் புதிய வர்த்தகப் பாதையை உருவாக்க ஒப்புக்கொண்டபோது, இந்த முழுத் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்தப் புதிய வர்த்தக பாதைக்கு இந்தியா-ஐரோப்பா-மத்திய கிழக்கு வழித்தடம் என்று பெயரிடப்பட்டது. இதில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சௌதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல், கிரேக்கம் ஆகியவை அடங்கும். இந்த வழித்தடத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா முக்கியப் பங்கு வகித்தது.
இந்த வழித்தடத்தின் கட்டுமானத்திற்குப் பிறகு, இரானில் சபஹர் துறைமுகம் அதிக முக்கியத்துவம் பெறாது என்று நம்பப்பட்டது. இது இரானை புறக்கணிப்பதாகவும் பார்க்கப்பட்டது. பல ஆய்வாளர்கள் இந்த முயற்சியை சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு ப்ராஜெக்ட்’ மற்றும் இரானை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு எதிராகவும் பார்க்கின்றனர்.
இரானின் சபஹர் துறைமுகம் மற்றும் ஐஎன்எஸ்டிசியைவிட இந்தப் புதிய வர்த்தக பாதையில் இந்தியா அதிக ஆர்வம் காட்டக்கூடும் என்றும் நம்பப்பட்டது.
சபஹர், ஐஎன்எஸ்டிசி மற்றும் ஐஎம்இசி ஆகிய நிறுவனங்களில் ஒரே நேரத்தில் முதலீடு செய்வது இந்தியாவுக்கு எளிதாக இருக்காது என்பதும் இரானின் அதிகரித்து வரும் கவலைகளுக்குக் காரணம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜெய்சங்கரிடம் இந்தக் கவலைகளை ரைசி தெரிவித்துக் கொண்டிருந்தார்.
இரானுக்கும் இந்தியாவுக்கும் கருத்தியல் வேறுபாடுகள் எழுந்துள்ளனவா?
சபஹரை தவிர, இரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மற்றொரு பிரச்னை உள்ளது. இந்த விவகாரம் – இரு நாட்டு அரசுகளும் இஸ்லாம் விஷயத்தில் எடுத்த நிலைப்பாடு குறித்தது. மத்தியில் மோதி அரசு முஸ்லிம்களை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், மோதி அரசு இத்தகைய குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகிறது.
அதேநேரம் இரான் அரசு உலக முஸ்லிம்களின் பாதுகாவலராக தன்னைக் காட்டிக் கொள்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். காஷ்மீர் மற்றும் முஸ்லிம்களை கையாள்வது தொடர்பாக இந்திய அரசு பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும்போது, இந்திய முஸ்லிம்கள் உடனான உறவுகள் குறித்து குறிப்பிட்ட விவாதம் எதுவும் இல்லை.
இரான் ஒரு ஷியா இஸ்லாமிய நாடு என்பதுடன் இரானுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஷியா முஸ்லிம்கள் உள்ளனர்.
இந்தியா பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் அதாவது பாகிஸ்தான் உருவாகாமல் இருந்திருந்தால் இந்தியா இரானுடன் எல்லையைப் பகிர்ந்திருக்கும்.
இரானின் எதிரி, இந்தியாவின் நண்பனா?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளுடனும் இரான் கசப்பான உறவைக் கொண்டுள்ளது.
இது இரானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் மாறுபட்ட காரணியாக இருப்பதாகவும், இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உதாரணமாக, இரானிய எண்ணெய் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தபோது, அது சபஹர் துறைமுகத்தின் வளர்ச்சியில் இந்தியா-இரான் ஒத்துழைப்பையும் பாதித்தது.
இருப்பினும், இரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தபோது, அதில் சபஹர் திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் உண்மை. ஆனால், 2018இல் அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம் காரணமாக, இந்திய நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் தயக்கம் காட்டின.
அதன்பிறகு, இந்தியாவின் எந்த குறிப்பிடத்தக்க பங்களிப்பும் இல்லாமல் இரான் இந்தத் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தத் துறைமுகத்தில் சீன நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்க இரானிடம் இருந்தும் சலுகைகள் அளிக்கப்பட்டன.
சபஹர் திட்டம் தொடர்பாக இந்தியா ஏற்கெனவே தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி வருவதாகவும், ஆனால் இந்தத் திட்டத்தில் இந்தியாவின் பங்கு குறைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இரான்-இந்தியா உறவுகளில் இஸ்ரேலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் ஆழம் காணப்படுவதை இரான் புறக்கணிக்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கமாகி வருகின்றன. இந்தியா இஸ்ரேலிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை, அதாவது சுமார் 42 சதவீத ஆயுதங்களை வாங்கி வருகிறது.
இஸ்ரேலின் நண்பனாக மாறுவதன் மூலம் இந்தியாவும் அமெரிக்காவில் பலன்களைப் பெறுகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. அதே நேரத்தில், இஸ்ரேலின் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் பற்றி இரான் கவலை கொண்டுள்ளது. இஸ்ரேலின் எல்லையை விரிவுபடுத்தும் ஆபிரகாம் ஒப்பந்தங்களும் இதில் முக்கிய பங்களிப்பாகும்.
கடந்த 2020ஆம் ஆண்டில், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவற்றின் பேச்சுவார்த்தையுடன் இஸ்ரேலுடன் ‘ஆபிரகாம் ஒப்பந்தம்’ என்ற வரலாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடனான தங்கள் உறவுகளை இயல்பாக்கியது மட்டுமின்றி ராஜ்ஜீய உறவுகளை மீட்டெடுக்கவும் முடிந்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமர் மோதி இஸ்ரேல் சென்றிருந்தபோது, இரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி வாரத்திற்கு இரண்டு முறை காஷ்மீர் பிரச்னையை எழுப்பத் தொடங்கினார்.
காஸா விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக இரான் உள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியபோது, அதை பயங்கரவாதத் தாக்குதல் என்று பிரதமர் மோதி கூறினார்.
இருப்பினும், நவம்பர் 2023இல், ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதியில் இஸ்ரேலிய குடியேற்றங்களைக் கண்டிக்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்