இந்தியா: லஞ்ச வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்தியா: லஞ்ச வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சிறப்புரிமையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் சிறப்புரிமை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு, நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் உரையாற்ற அல்லது வாக்களிக்க லஞ்சம் வாங்குவது சிறப்புரிமையின் கீழ் வராது என்று கூறியுள்ளது.

அதாவது இப்போது ஒரு எம்.பி அல்லது எம்.எல்.ஏ லஞ்சம் வாங்கி சபையில் பேசினாலோ அல்லது வாக்களித்தாலோ அவர்கள் மீது நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்படலாம்.

இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “இந்த சிறப்புரிமையின் நோக்கம், சபையின் ஒட்டுமொத்த செயல்முறைக்கு சலுகைகளை வழங்குவதாகும்”

“பிரிவு 105/194 என்பது உறுப்பினர்களுக்கு அச்சமில்லாத சூழலை உருவாக்குவதற்காக உள்ளதாகும். ஊழல் மற்றும் லஞ்சம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழிக்கப் போகிறது” என்றார்.

உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு கூறியது என்ன?

  • லஞ்சம் பெற்ற விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்காது.
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குவதில் ஈடுபடுவது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளத்தை பலவீனமாக்குகிறது. பொதுமக்களுக்கு ஒரு பொறுப்புள்ள மற்றும் பொறுப்பு கூறல் கடமை கொண்ட ஜனநாயகம் கிடைக்காமல் இருக்கும் ஒரு அரசியல் சூழலை இது உருவாக்குகிறது.
  • அரசியலமைப்பின் 105(2) மற்றும் 194(2) பிரிவுகளின் கீழ் மக்கள் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு உள்ளே செல்வது மற்றும் பேசுவதற்கு அளிக்கப்பட்ட சிறப்புரிமை, சபையின் ஒட்டுமொத்த செயல்முறை தொடர்பானது.
  • ஒருவர் லஞ்சம் பெற்றால் அப்போதே அவருக்கு எதிரான விவகாரமாக அது ஆகிவிடுகிறது. அதன் பிறகு அவர் கேள்வி கேட்டாரா, உரையாற்றினாரா என்பது பொருட்டே அல்ல. லஞ்சம் பெற்றுக்கொண்ட உடனேயே அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துவிடுகிறது.
சிறப்புரிமையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், ANI

1998-ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பைக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, “பி.வி. நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பு ஒரு முரண்பாடான சூழ்நிலையை உருவாக்குகிறது. அதன்படி லஞ்சம் வாங்கி அதற்கேற்ப வாக்களிக்கும் ஒரு எம்.எல்.ஏ. பாதுகாக்கப்படுகிறார்,” என்று கூறியதாக சட்ட விவகார இணையதளமான லைவ் லா தெரிவிக்கிறது.

1998 இல், 3-2 என்ற பெரும்பான்மையுடன் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, பி.வி. நரசிம்மராவ் vs இந்திய குடியரசு வழக்கில், ’எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், நாடாளுமன்றத்தில் மற்றும் சட்டப்பேரவைகளில் பேசுவதற்கும் வாக்களிப்பதற்கும் லஞ்சம் வாங்கிய விவகாரங்களில் குற்றவியல் வழக்குகளில் இருந்து விலக்கு பெறுவார்கள் என்று தீர்ப்பளித்தது. இது அவர்களின் சிறப்புரிமை. அதாவது சபையில் செய்த எந்த ஒரு செயலுக்காகவும் அவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது.

“இன்றைய தீர்ப்பை வழங்கும்போது நாங்கள் நரசிம்மராவ் தீர்ப்புடன் உடன்படவில்லை. மேலும் லஞ்சம் வாங்கிய வழக்கில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சிறப்புரிமையை கோரலாம் என்ற தீர்ப்பை நிராகரிக்கிறோம்,” என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டதாக சட்ட விவகார இணையதளமான பார் & பெஞ்ச் குறிப்பிடுகிறது.

“எந்த ஒரு எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.யும் இத்தகைய சிறப்புரிமையை பயன்படுத்த முடியாது. இந்தச் சலுகை மொத்த சபைக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது. நரசிம்ம ராவ் வழக்கில் கொடுக்கப்பட்ட முடிவு அரசியலமைப்பின் பிரிவு 105 (2) மற்றும் 194 க்கு முரணானது.”

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றுள்ளார். இந்த முடிவு தூய்மையான அரசியலை உறுதி செய்யும் என ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

அரசியலமைப்பு என்ன சொல்கிறது?

நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டப்பேரவையின் எந்த ஒரு உறுப்பினரும் அவையில் கூறுவது அல்லது அவையில் போட்ட ஓட்டு தொடர்பாக எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு இல்லை என்று அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 194 (2) கூறுகிறது.

மேலும், நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையின் எந்தவொரு அறிக்கை அல்லது வெளியீடு குறித்தும் நீதிமன்றத்தில் பதில் கூறும் பொறுப்புடைமையும் அவர்களுக்கு இல்லை.

சிறப்புரிமையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

ஜேஎம்எம் எம்எல்ஏ வழக்கு மற்றும் நரசிம்ம ராவ் வழககு பற்றிய குறிப்பு

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏ சீதா சோரன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது இந்த புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக சீதா சோரேன் மீது புகார் எழுந்தது.

பி.வி.நரசிம்மராவ் vs இந்திய குடியரசு வழக்கில் 1998 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்த வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டது.

நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில், எம்.பி., எம்.எல்.ஏ.எ ன்ன சொன்னாலும், என்ன செய்தாலும் அது தொடர்பாக அவர்கள் மீது எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

2019 ஆம் ஆண்டில் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி அப்துல் நசீர் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பி.வி. நரசிம்மராவ் வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு இதே போன்றதுதான். அந்தத் தீர்ப்பு இங்கும் பொருந்தும் என்று அமர்வு தீர்ப்பளித்தது.

இருப்பினும், நரசிம்மராவ் வழக்கில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் (5 நீதிபதிகளில் 3:2 பெரும்பான்மை) தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தை “பெரிய அமர்வு” இடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.

இன்றைய தீர்ப்பை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது. இந்த பெஞ்சில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி ஜே.பி.பார்திவாலா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் நீதிபதி மனோஜ் மிஷ்ரா ஆகியோர் இருந்தனர்.

பிவி நரசிம்ம ராவ் வழக்கு என்ன?

சிறப்புரிமையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. போஃபர்ஸ் ஊழல் காரணமாக 1989 இல் ஆட்சியை இழந்த காங்கிரஸ், 1991 இல் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. 487 இடங்களில் போட்டியிட்டு அக்கட்சி 232 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவைப்பட்டன.

இத்தனைக்கும் மத்தியில் பிவி நரசிம்மராவ் பிரதமரானார்.

நரசிம்ம ராவின் அரசு பல சவால்களை எதிர்கொண்டது. அதில் மிகப்பெரிய சவால் பொருளாதார நெருக்கடி. அவரது ஆட்சி காலத்தில்தான் 1991 ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன மற்றும் பொருளாதார தாராளமயமாக்கல் நிகழ்ந்தது.

அதே நேரத்தில் நாட்டின் அரசியல் மட்டத்திலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன. பாஜக தலைவர் எல்கே அத்வானியின் தலைமையில் ராம ஜென்மபூமி இயக்கம் உச்சத்தில் இருந்தது. 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நரசிம்மராவ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர இந்த இரண்டும் முக்கிய காரணங்களாக அமைந்தன.

1993 ஜூலை 26 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், CPI(M) இன் அஜோய் முகோபாத்யாய், நரசிம்மராவ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

”சர்வதேச நாணய நிதியம் IMF மற்றும் உலக வங்கியிடம் முழுமையாக சரணடைந்தது, மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை கொண்டு வருவதால் வேலையில்லாத் திண்டாட்டமும், பணவீக்கமும் அதிகரிக்கிறது. இது இந்திய தொழில்துறை மற்றும் விவசாயிகளின் நலன்களை மோசமாக பாதிக்கிறது.

“அரசு, வகுப்புவாத சக்திகளிடம் சமரசப் போக்கை கடைப்பிடிக்கிறது. அதனால்தான் அயோத்தி சம்பவம் நடந்தது. அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மையை பாதுகாக்க இந்த அரசு தவறி வருகிறது. அயோத்தியில் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களை தண்டிக்க அரசு தவறிவிட்டது.” ஆகியவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான காரணங்களாக சொல்லப்பட்டன.

அந்த நேரத்தில் மக்களவையில் 528 இடங்கள் இருந்தன. அதில் காங்கிரசுக்கு இருந்த இடங்கள் 251. ஆட்சியைக் காப்பாற்ற இன்னும் 13 இடங்கள் தேவைப்பட்டன. இந்த முன்மொழிவு மீதான விவாதம் மூன்று நாட்கள் தொடர்ந்தது.

ஜூலை 28 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தபோது நம்பிக்கையில்லா தீர்மானம் 14 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 251 வாக்குகளும் எதிராக 265 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இந்த வாக்குப்பதிவுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு லஞ்ச விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

சிறப்புரிமையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

அப்போது உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?

1998 ஆம் ஆண்டு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கைப் பற்றி சுருக்கமாக இவ்வாறு கூறியது. “ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த ரவீந்திர குமார், 1996 பிப்ரவரி 1 ஆம் தேதி சிபிஐயிடம் ஒரு புகாரை அளித்தார்.

1993 ஜூலையில் ‘குற்றச் சதி’யின் கீழ், நரசிம்மராவ், சதீஷ் ஷர்மா, அஜீத் சிங், பஜன் லால், வி.சி. சுக்லா, ஆர்.கே. தவான் மற்றும் லலித் சூரி ஆகியோர் அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்து அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க சதி செய்தனர். இதற்காக 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையும், குற்றச் சதிக்காக 1.10 கோடி ரூபாயும் சூரஜ் மண்டலுக்கு அளிக்கப்பட்டது என்று அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஜேஎம்எம் எம்பிக்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில் மண்டல், ஷிபு சோரேன், சைமன் மராண்டி, ஷைலேந்திர மஹதோ ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அப்போது ஜேஎம்எம்-க்கு மொத்தம் ஆறு எம்பிக்கள் இருந்தனர்.”

சிபிஐ விசாரணையை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், “ஜேஎம்எம் தலைவர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க லஞ்சம் பெற்றுள்ளனர். இவர்களது வாக்குகளாலும், வேறு சில எம்.பி.க்களின் வாக்குகளாலும்தான் நரசிம்ம ராவ் அரசு காப்பாற்றப்பட்டது,” என்று தெரிவித்தது.

அப்போது ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. ”லஞ்சம் வாங்கியதாக சொல்லப்படுபவர்கள் செய்த குற்றத்தின் தீவிரத்தை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம். இது உண்மையாக இருந்தால், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நம்பிக்கையை அவர்கள் வியாபாரம் செய்துவிட்டனர்,” என்று நீதிபதி எஸ்.பி.பரூச்சா தனது தீர்ப்பில் கூறினார்.

“அவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒரு அரசை காப்பாற்றியுள்ளனர். ஆனாலும்கூட அரசியலமைப்புச் சட்டம் அவர்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பைப் பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. நாடாளுமன்ற பங்கேற்பு மற்றும் விவாதத்தின் பாதுகாப்பின் உத்தரவாதத்தை பாதிக்கும் வகையில் அரசியலமைப்பை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கும்படியாக நமது சீற்ற உணர்வு இருந்துவிடக்கூடாது,” என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *