இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு கெடு – சீனா சென்று திரும்பியதும் முய்சு ஆக்ரோஷம் ஏன்?

இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு கெடு - சீனா சென்று திரும்பியதும் முய்சு ஆக்ரோஷம் ஏன்?

இந்தியா vs மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அரசு இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியப் படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கையை தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருப்பதாக மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ராணுவத்தை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாலத்தீவு தலைநகர் மாலேயில் உயர்மட்ட மையக் குழுக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மாலத்தீவு மக்களுக்கு மனிதாபிமான மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கும் இந்தியாவின் விமானப் போக்குவரத்து தளத்தை தொடர்ந்து இயங்க வைப்பதற்கான தீர்வை காண்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மற்றொரு சந்திப்பும் நடைபெறவுள்ளது.

இந்தியப் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இரு நாடுகளிலும் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கைகளில் ஒற்றுமை இல்லை. ஒருபுறம், படைகளை வாபஸ் பெற இந்தியா தயாராக இருப்பதாக மாலத்தீவும், மறுபுறம் அப்படி எதுவும் கூறவில்லை என்று இந்தியாவும் கூறி வருகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் மாலத்தீவில் உள்ள முய்சு அரசு இந்தியாவுக்கு இந்த காலக்கெடுவை வழங்கியுள்ளது.

மாலத்தீவு குறித்து ஜெய்சங்கர் என்ன சொன்னார்?

இந்தியா - மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

ஞாயிற்றுக்கிழமை, மாலத்தீவு அதிபரின் பொதுக் கொள்கைக்கான பிரதம செயலாளர் அப்துல்லா நஜிம் இப்ராஹிம் செய்தியாளர் சந்திப்பின் போது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

பிடிஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியின்படி, சமீபத்திய அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, மாலத்தீவில் தற்போது 88 இந்திய வீரர்கள் உள்ளனர்.

முகமது முய்சு கடந்த தேர்தலில் ‘இந்தியாவை வெளியேற்றுவோம்’ என்ற முழக்கத்தைக் கொடுத்தார். அதிபரான பிறகு, அவரது ஆரம்ப முன்னுரிமைகளில் ஒன்று இந்திய துருப்புகளை திரும்பப் பெறச் செய்வதாகும்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் சனிக்கிழமை நாக்பூரில் உள்ள மந்தன் டவுன்ஹாலில் உரையாற்றினார்.

அதன்போது, ​​மாலத்தீவுடனான உறவு மோசமடைந்து வருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ​​அதற்கு, “ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் எங்களை ஆதரிப்பார்கள் அல்லது எங்களுடன் உடன்படுவார்கள் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளோம். பல சந்தர்ப்பங்களில் நாங்கள் வலுவான தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளோம். இந்தியா – மாலத்தீவு அரசியல் உறவில் கொந்தளிப்பு நிலவுகிறது ஆனால், மாலத்தீவில் உள்ள சாமானியர்களுக்கு இந்தியாவைப் பற்றி நல்ல அபிப்பிராயம் உள்ளது, இந்தியாவுடனான நல்லுறவின் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரியும்.” என ஜெய்சங்கர் பதில் அளித்தார்.

இந்தியா - மாலத்தீவு

பட மூலாதாரம், ANI

“மாலத்தீவில் இந்திய வீரர்கள் தங்க முடியாது”

மார்ச் 15 ஆம் தேதிக்குள் துருப்புகளை வாபஸ் பெறுமாறு முகமது முய்சு இந்தியாவுக்கு காலக்கெடு விதித்துள்ளதாக மாலத்தீவைச் சேர்ந்த ஒன் ஆன்லைன் எனும் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாலத்தீவு அரசாங்கத்தின் பொதுக் கொள்கை முதன்மைச் செயலாளர் அப்துல்லா நசீம் இப்ராஹிம், இந்திய வீரர்கள் மாலத்தீவில் தங்க முடியாது என்றும், நாட்டு மக்களும் அதையே விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.

முகமது முய்சு மற்றும் பிரதமர் மோதி ஆகியோர் சந்தித்த போதும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மாலத்தீவில் இருந்து தனது இராணுவ வீரர்களை உடனடியாக அகற்ற இந்தியா ஒப்புக்கொண்டதாகவும் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க இந்தியாவில் இருந்து சிறப்புக் குழு வந்துள்ளதாகவும் மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் கூறுவதாக ஒன் ஆன்லைன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா - மாலத்தீவு

பட மூலாதாரம், PRESIDENCY.GOV.MV

சீனப் பயணத்துக்கு பிறகு முய்சுவிடம் உள்ள மாற்றங்கள்

மாலத்தீவு அதிபரான முகமது முய்சு, சீனாவுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிறகு, இந்தியா மீது ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளார். இந்தியா என்ற பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக இந்தியாவை தாக்குகிறார் முகமது முய்சு.

இந்தியா மற்றும் பிரதமர் மோதி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய ஆட்சேபகரமான கருத்துகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பிரச்னையை நீக்க சில சாதகமான முயற்சிகள் எடுக்கப்படலாம் என்று நம்பப்பட்டது.

மாலத்தீவின் எதிர்க்கட்சிகளும் அமைச்சர்களை இடைநீக்கம் செய்வது போதாது என்றும், இந்த விவகாரத்தில் மாலத்தீவு அரசு அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரி வந்தது.

ஆனால், சனிக்கிழமையன்று, சீனாவுக்கு ஐந்து நாள் பயணமாக சென்று திரும்பிய முய்சு, ​​பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, ​​”நாம் ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் அது எங்களை அச்சுறுத்தும் உரிமத்தை யாருக்கும் வழங்காது” என்று கூறினார்.

இந்தியப் பெருங்கடல் குறித்து அவர் கூறுகையில், “இந்தக் கடல் குறிப்பிட்ட நாட்டிற்கு சொந்தமானது அல்ல. இது அதைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது.” எனத் தெரிவித்தார்.

முய்சு மேலும் கூறுகையில், “நாங்கள் யாரோ ஒருவரின் கொல்லைப்புறத்தில் இருக்கும் நாடு அல்ல, நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு.” எனத் தெரிவித்தார்.

இவை அனைத்தின் போதும், ​​மாலத்தீவு அதிபர் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால், இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான சமீபத்திய பதற்றத்தின் மத்தியில், அவர் பேசுவது இந்தியாவுடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.

இந்த அறிக்கைகளைத் தவிர, முய்சு சீனாவிலிருந்து மாலத்தீவுக்குத் திரும்பியவுடன், அங்குள்ள அரசாங்கம் இந்தியாவுடன் நேரடியாக தொடர்புடைய சில முடிவுகளை எடுத்தது.

மாலத்தீவு நோயாளிகள், உயர் சுகாதார வசதிகள் மற்றும் சிகிச்சைக்காக இந்தியாவிற்கும் வேறு சில நாடுகளுக்கும் அனுப்பப்பட்டதைப் போல, அவர்கள் இனி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மலேசியாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்று முய்சு தனது சீன பயணத்திற்கு பின் அறிவித்தார்.

இது தவிர, இந்தியா – மாலத்தீவு பதற்றத்தில் இருக்கக் கூடிய சமீபத்திய செய்திதான், தனது படைகளை மார்ச் 15-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறுமாறு இந்தியாவை மாலத்தீவு ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டிருப்பது.

இந்தியா vs மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

சீனா சென்று திரும்பியதும் முய்சு ஆக்ரோஷம் ஏன்?

முகமது முய்சுவின் இந்திய விரோத நிலைப்பாடு புதிய விஷயம் அல்ல. கடந்த ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட்ட போது, ​​அவரது தேர்தல் பிரசாரம் இந்திய எதிர்ப்பு என்ற புள்ளியில் கவனம் செலுத்தியது.

‘இந்தியாவை வெளியேற்றுவோம்’ என்ற கோஷத்தை எழுப்பிய அவர், தான் ஆட்சிக்கு வந்தவுடன், மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.

ஆனால், சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியவுடனேயே முய்சு இந்தியா மீது காட்டியுள்ள ஆக்ரோஷத்துக்குக் காரணம் என்ன?

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், சர்வதேச விவகாரங்களில் நிபுணருமான எஸ்.டி.முனி இது குறித்து கூறுகையில்,“முகமது முய்சு இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் இருக்கலாம். ஆனால், அவரது பேச்சு இந்தியாவை நோக்கிதான் இருந்தது. அதே சமயம், முய்சுவின் இந்த கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படக் கூடாது” என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “கோட்பாட்டு ரீதியாக, எந்த நாடும் எந்த நேரத்திலும் தன்னை இறையாண்மை கொண்ட நாடு என்று சொல்லலாம். இது சாதாரணமாக பார்க்கப்பட வேண்டும். ஏனென்றால் பெரிய நாடுகள் நம்மைத் தாக்கும் என்று சிறிய நாடுகள் எப்போதும் பயப்படுகின்றன.” எனத் தெரிவித்தார்.

மேலும், “முய்சு சீனாவில் இருந்து திரும்பி வந்துவிட்டார். நாங்கள் உங்களுக்கு உதவுவோம் என்றும் நீங்கள் உங்கள் சுதந்திரமான கொள்கையை பின்பற்றுங்கள் என்றும் மாலத்தீவுக்கு சீனா உறுதியளித்திருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சீனாவின் ஆதரவு உள்ளது என முய்சுவின் மனதில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இதை நான் வெளிப்படையாக சொல்ல முடியும்.” என அவர் தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *