தமிழகத்தின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் முக்கியமான ஒருவரும், சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம் பிள்ளை ஆகியோரது நண்பராகவும், அவர்களது மதிப்புக்குப் பாத்திரமாகவும் இருந்த சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று.
இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடியதால் ஆங்கிலேய அரசினரால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து, தனது 41-வது வயதில் இறந்த அவரது லட்சியக் கனவுகளில் ஒன்றான ‘பாரத மாதா ஆலயம்’ ஏன் அவரது வாழ்நாளில் அமைக்கப்படாமல் போனது? அது எப்படி இப்போது அமைக்கப்பட்டது என்பதற்குப் பின் தியாகமும் தேசபக்தியும் கலந்த நீண்ட வலராறு உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் 1884-ஆம் ஆண்டு, அக்டோபர் 4-ஆம் நாள் ‘சிவம்’ என்றும், ‘சிவா’ என்றும் அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா பிறந்தார். இவரது தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள்.
பள்ளிப்படிப்பு முடித்தபின் தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் குமஸ்தாவாக வேலை செய்தார் சிவா. அப்போது தேச விடுதலையில் ஈடுபாடு ஏற்பட்டு ஊர் ஊராகச் சென்று சுதந்திரப் பிரசாரம் செய்யத் தொடங்கினார்.
1904 – 1905 ஆகிய ஆண்டுகளில் நடந்த ரஷ்ய-ஜப்பானியப் போரில் பெரிய நாடான ரஷியாவை ஜப்பான் தோற்கடித்தது. இது உலகெங்கும் பிரிட்டனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. 1906-ல் கர்சன் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தார். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் ‘வந்தே மாதரம்’ எனும் முழக்கங்கள் எழுந்தன.
சுதந்திரப் போராட்டத்தின் ‘மும்மூர்த்திகள்’
சுப்பிரமணிய சிவா 1906-07 ஆண்டுகளில் திருவனந்தபுரத்தில் ‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினார், இளைஞர்களை கூட்டுவித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி தேசபக்தி ஊட்டும் பணியில் ஈடுபட்டார்.
அரசுக்கு எதிரான இவரது செயல்பாடுகள் காரணமாகத் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன்பிறகு சுப்பிரமணிய சிவா, கால் நடையாகவே ஊர் ஊராய்ச் சென்று தேசிய பிரச்சாரம் செய்ய முற்பட்டார்.
தூத்துக்குடிக்கு வந்தபோது, அங்கு வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும், சுப்பிரமணிய சிவாவுக்கும் ஆழமான நட்பு ஏற்பட்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் ‘சுதேச கீதங்களால்’ இவர்களது நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார்.
இவர்கள் ‘சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தமிழக மும்மூர்த்திகள்’ என்று அழைக்கப்பட்டனர்.
தொழுநோயாளியாக்கிய சிறைவாசம்
சுதந்திரப் போராட்டத்தோடு சேர்த்து, சென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்குச் சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கில அரசுக்கு நெருக்கடி கொடுத்தார் சிவா.
இதற்காக அவரைச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தது ஆங்கில அரசு. சுதந்திரப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வாறு சிறையில் ஒருமுறை அடைக்கப்பட்டபோது தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால், ரெயிலில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசு இவருக்கு தடை விதித்தது.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபின் சென்னையில் குடியேறினார்.
பத்திரிகை நடத்துவதில் முன்னோடி
சென்னையில் ‘பிரபஞ்சமித்திரன்’ என்ற வாரப் பத்திரிகையையும், ‘ஞானபாநு’ என்ற மாத பத்திரிகையையும் தொடங்கினார் சிவா.
ஞானபாநு-வில் பாராதியாரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டார். பாண்டிச்சேரியில் இருந்த பாரதிக்கு ஞானபாநு சுதந்திர போராட்ட ஆயுதமாகத் திகழ்ந்தது. பாரதி பல புனைபெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி தேசிய உணர்வு ஊட்டினார். குத்தலும், கேலியும், கிண்டலும் நிறைந்த அன்றைய ஜமீன்தார்களையும், அவர்களை அண்டிப் பிழைத்த புலவர் கூட்டத்தினையும் தோலுரித்து காட்டிய ‘சின்ன சங்கரன் கதை’ ஞானபாநு-வில் வெளிவந்த பாரதியின் படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று.
சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி மீனாட்சியம்மை உடல் நிலை மோசமாகி 1915-ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் காலமானார். மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் அதிகரித்தன. ஊர் ஊராக சென்று மக்களுக்கு தேச உணர்வையூட்டினார்.
ஞானபாநு நின்றதன் பின்பு 1916-இல் பிரபஞ்சமித்திரன் என்ற வார இதழை ஆரம்பித்து சில காலம் நடத்தினார். இதில் நாரதர் என்ற புனைபெயரில் கட்டுரைகளை எழுதி வந்தார். எழுத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, சுமார் 30 நூல்கள் எழுதினார். தனியாகப் பொது கூட்டங்கள் நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கே சென்று பேசினார்.
பாரத மாதா ஆலயத்திற்கு வழி வகுத்த நண்பர்கள்
காரைக்குடியில் பாரத ஆசிரமம் தொடங்கிய சிவா, சுதந்திரப் போராட்டத்தில் மேலும் தீவிரமாக ஈடுபட்டார்.
1920-இல் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு பிரதிநிதியாகச் சென்றார். 1921-ஆம் ஆண்டிற்குப் பிறகு துறவி போன்று காவியுடை அணிய துவங்கினார். ஸ்வதந்த்ரானந்தர் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார். பாரத மாதாவுக்கு கோயில் ஒன்று கட்டி முடிக்க திட்டம் வகுத்தார்.
1921-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது முறையாக ராஜ துரோக குற்றத்துக்காக சுப்பிரமணிய சிவாவின் மீது ஆங்கிலேய அரசு வழக்கு தொடுத்தது. இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி சிறையில் தொழுநோய் வாய் பட்டு அவதிப்பட்டார். படுத்த படுக்கையாகி விட்ட நிலையில் 1922-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் சென்னைக்கு வந்து சில நாட்கள் தங்கினார். உடல்நிலை சற்று தேறியதும் திரும்பவும் அரசியல் நிகழ்ச்சிகளில்கலந்து கொள்ள ஆரம்பித்தார்.
சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதி சுப்பிரமணீய சிவா தான்.
ஆந்திர மாநிலம், அலிபுரம் சிறையில் இருந்தபோது தருமபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி எம்டன், கந்தசாமி குப்தா, டி.என். தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.
தனது நண்பர் சின்னமுத்து முதலியார் மற்றும் மற்றவர்களின் உதவியுடன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு பாரதபுரம் என பெயர் சூட்டினார். அதில் பாரத ஆசிரமும் ஏற்படுத்தினார். சிவாவும், ஆசிரம உறுப்பினர்களும் காலையில் எழுந்து மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடிக் கொண்டே தெருத்தெருவாகச் சென்று அரிசியும், காசுகளும் பெற்று வாழ்க்கையை நடத்தினர். மற்ற நேரங்களில் தேசத் தொண்டு பணியை செய்து வந்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வந்தனர்.
நனவாகாமல் போன லட்சியக் கனவு
பாரதபுரத்தில், பாரத மாதாவுக்கு கோயில் கட்ட முடிவு செய்த சிவா, தமிழகம் முழுவதும் பயணம் செய்து அதைக் கட்டுவதற்கு தேவையான தொகையை திரட்ட முயன்றபோது, தொழுநோய் இருப்பதை காரணம் காட்டி பஸ், ரயிலில் செல்லக் கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்தது.
இருப்பினும், நடந்தும், கட்டை வண்டியிலும் ஊர் ஊராகப் பயணம் செய்து சொற்பொழிவாற்றி பாரத மாதா கோயில் கட்ட நிதி திரட்டினார். தர்மபுரி அருகே உள்ள பாப்பாரப்பட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில், தேசபந்து சித்தரஞ்சன் தாசை கொண்டு 1923-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்று நினைத்தார்.
நோயின் கொடுமையிலும், தேச விடுதலைக்காக அயராது பாடுபட்டார். அதனால் அவரது உடல் நலம் மேலும் குன்றியது.
இந்நிலையில் 1925-ல் கான்பூரில் நடைபெறவிருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரின் முதலாவது மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார் உடல் நிலை தேறியவுடன் திருநெல்வேலி வழியாக மேற்கு கடற்கரை ஓரமாக பம்பாய் சென்று அங்கிருந்து கான்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதே அவரது திட்டம்.
ஆனால் சிவாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்ததனால் அவரால் திட்டமிட்டபடி கான்பூர் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. 1925-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது சீடர் சுந்தர பாரதியின் துணையுடன் தர்மபுரி பாப்பாரப்பட்டியில் உள்ள தனது ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார். அன்று தனது நண்பர்களுடன் மிக உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அடுத்த நாள் விடியற்காலையில் தனது 41-வது வயதில் இயற்கை எய்தினார்.
‘ஜாதி மத பேதங்கள் கடந்த ஆலயம்’
சுப்பிரமணிய சிவாவின் வாழ்வும் அவரது தொண்டும் குறித்து தகடூர் மாவட்ட வரலாற்றுப் பேரவை பொருளாளரும் சுப்பிரமணிய சிவா வரலாற்றை தொகுத்தவருமான புலவர் கோவிந்தராசுவிடம் பேசினோம்.
ஜாதி மத பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரையும் ஒற்றுமைப்படுத்திட பாரத மாதா கோவில் கட்ட வேண்டும் என்பது சிவாவின் லட்சியக் கனவாக இருந்தது என்கிறார் கோவிந்தராசு.
“தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் வாழ்ந்து வந்த சுப்பிரமணிய சிவா இந்த லட்சியத்தை நனவாக்கத் தனது நண்பரும் தேசியவாதியுமான சின்னமுத்துவின் உதவியுடன் பாப்பாரப்பட்டியில் நிலம் வாங்கி, அதில் பாரத ஆசிரமம் அமைத்து, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு உடற்பயிற்சி அளித்ததோடு ஆங்கிலேயரின் அடிமைத்தலையில் இருந்து சுதந்திரம் பெறுவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்,” என்கிறார்.
மேலும் பேசிய கோவிந்தராசு, அந்தக் கோயிலில் நிறுவுவதற்காக புதுச்சேரியில் மகாகவி பாரதியார் மேற்பார்வையில் சிற்பி ஒருவரைக் கொண்டு பாரத மாதா சிலையை சிவா வடிவமைத்து இருந்ததாகச் சொல்கிறார். “பாரதமாதாவை இந்தியாவின் புதல்வர்களான அனைவரும் சாதி மதம் பேதமின்றி வழிபடலாம். பாரத மாதா ஆலயத்தில் பாரத மாதாவுக்கு அணிகலன்கள் என்ற பெயரில் நகைகள் செல்வத்தை குவிக்க கூடாது மாதாவுக்கும் புதல்வர்களுக்கும் இடையில் அர்ச்சகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவரின் புதல்வர்கள் தங்கள் விருப்பப்படி பாரத மாதாவை வணங்கி வழிபடலாம் என்று தனது எண்ணத்தில் உருவான பாரத மாதா ஆலயம் குறித்து சுப்பிரமணிய சிவா ஒரு முறை கூறியுள்ளார்,” என்றார்.
ஆனால், 1925-இல் பாப்பாரப்பட்டியில் சுப்ரமணிய சிவா இறந்து விட்டதால் பாரத மாதா கோவில் கட்டிமுடிக்கப்படவில்லை. பாப்பாரப்பட்டியில் சுப்ரமணிய சிவா நினைவிடம் அமைந்துள்ள இடத்தில் தமிழக அரசின் சார்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு மணி மண்டபம் அமைக்கப்பட்டது. அந்த வளாகத்தில் பாரத மாதா ஆலயத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர், என்கிறார்.
இறுதியில் நனவான சிவாவின் கனவு ஆலயம்
சுப்பிரமணிய சிவாவின் லட்சியமான பாரதமாதா ஆலயத்தை அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் சென்னையிலிருந்து நடைபயணமாக பாப்பாரப்பட்டி வந்தார்.
பல்வேறு காரணங்களால் கடந்த 73 ஆண்டுகளாக ஆலயம் அமைக்கும் பணி தாமதமாகி வந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது 1.50 கோடி ரூபாய் செலவில் பாரத மாதாவுக்கு ஆலயம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சுப்பிரமணிய சிவா நினைவிடத்திற்கு அருகிலேயே நூலகத்துடன் கூடிய பாரத மாதா ஆலயம் அமைக்கப்பட்டது. அதில் பாரத மாதாவின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. பாரதமாதா ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. அதில் தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு பாரத மாதா சிலை மற்றும் ஆலயத்துடன் கூடிய நூலகத்தை திறந்து வைத்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்