யுவதியொருவரின் விருப்பமின்றி, பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தனுஷ்க குணதிலக்கவை, ஆஸ்திரேலிய நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
ஆஸ்திரேலியா நீதிமன்றத்தினால் இன்று (28) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டிருந்தார்.
32 வயதான தனுஷ்க குணதிலக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 06ம் தேதி அவுஸ்திரேலிய போலீஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
யுவதியொருவருடன் ஒபெரே ஹவுஸ் பகுதிக்கு அண்மித்த இடமொன்றில் மதுபானம் அருந்துவதற்கு சென்றதன் பின்னர், அவரது வீட்டிற்கு சென்று யுவதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த யுவதியுடன் இணைய வழியாக உறவுகளை பேணி வந்த நிலையில், அந்த பெண்ணின் அழைப்பை அடுத்து தனுஷ்க குணதிலக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பாதுகாப்பான உடலுறவுக்கு விருப்பம் தெரிவித்த போதிலும், தனுஷ்க குணதிலக்க ஆணுறை இல்லாது உடலுறவில் ஈடுபட்டதாக யுவதி குற்றம் சுமத்தியிருந்தார்.
தனுஷ்க குணதிலக்க ஆணுறை இல்லாது உடலுறவில் ஈடுபட்டதை தான் அவதானிக்கவில்லை எனவும், உடலுறவின் பின்னர் ஆணுறை கீழே வீசப்பட்டிருந்ததையே தான் அவதானித்ததாகவும் முறைப்பாட்டாளரான யுவதி, நியூ சவுத் வெல்ஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த யுவதியினால் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு முற்றிலும் போலியானது என தனுஷ்க குணதிலக்க சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இந்த யுவதி காலத்திற்கு காலம் மாறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் தனுஷ்க குணதிலக்கவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதன்படி, தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என தீர்ப்பளித்த நீதிபதி, அவர் உண்மையானவர் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த யுவதி, தனது வாக்குமூலத்தில் பரஸ்பர கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் நீதிபதி, தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இந்த வழக்கு மீதான விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்த விசாரணைகளின் பிரகாரம், இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையில் என்ன தெரிய வந்தது?
இந்த பாலியல் உறவு, சம்ந்தப்பட்ட பெண் எதிர்பார்த்ததை விடவும் அல்லது அவரது தேவையை விடவும் வித்தியாசமானது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேப்ரியல் ஸ்டீட்மேன் வாதிட்டிருந்தார்.
இந்த நிலைமையானது மிகவும் கடினமானது எனக் கூறிய வழக்கறிஞர், பெண்ணின் கோரிக்கைகள் அல்லது கட்டுப்பாடுகள் எதையும் அவர் மதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக ஆணுறையை அகற்றிய நபரின் நடத்தையானது, அவர் அந்தப் பெண்ணின் கோரிக்கைகளை மதிக்கவில்லை என்பதற்கேற்ப அமைந்துள்ளது எனவும் வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார்.
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கும் குறிப்பிட்ட பெண்ணுக்கும் இடையே இணையத்தளத்தின் ஊடாக உருவான உறவு குறித்தும் வழக்கறிஞர் தெளிவூட்டியுள்ளார்.
அந்தப் பெண் பிரிஸ்பேன் நகருக்கு வருகை தருவதற்கான விமான டிக்கெட் செலவீனத்தை தனுஷ்க குணதிலக்க செலுத்த முயன்றுள்ள போதிலும், அதை அவர் நிராகரித்துள்ளதாக வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
படுக்கையறையில், உடலுறவு கொள்வதற்கு முன்பாக, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும், அப்போது ஆணுறையைப் பயன்படுத்த விருப்பம் இல்லை என தனுஷ்க குணதிலக்க கூறியுள்ளதாகவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர், தனது ஆணுறையை அகற்றியதை அவதானிக்காத பெண், உடலுறவின் பின்னரே ஆணுறை கீழே வீசப்பட்டிருந்ததை கவனித்ததாகவும் நீதிமன்றத்தில் இதற்கு முன்னர் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
ஆனால், அந்தப் பெண்ணை திருப்திப்படுத்துவதற்காக ஆணுறையை பயன்படுத்தியுள்ளதாகவும், அதை அகற்றுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உடலுறவானது விரும்பத்தகாதவாறு இருந்தமையாலேயே, அவர் ஆணுறையை அகற்றியதை அவதானிக்கவில்லை எனவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணைகளின்போது, பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தனுஷ்க குணதிலக்க நிராகரித்திருந்தார்.
தான் உடலுறவின்போது இரண்டு ஆணுறைகளை பயன்படுத்தியிருந்ததாகவும், அதில் முதலாவதை சரியாகப் பயன்படுத்த முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்