PAK VS AFG: கிரிக்கெட்டுக்கு மரியாதை அளித்த ‘அறிவார்ந்த’ சென்னை ரசிகர்கள் – பாகிஸ்தான் தோற்றபோது என்ன செய்தார்கள்?

PAK VS AFG: கிரிக்கெட்டுக்கு மரியாதை அளித்த 'அறிவார்ந்த' சென்னை ரசிகர்கள் - பாகிஸ்தான் தோற்றபோது என்ன செய்தார்கள்?

சென்னை ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images

“சென்னை ரசிகர்கள் எப்போதுமே புத்திசாலிகள். சென்னையில் எந்த அணி வந்து கிரிக்கெட் விளையாடினாலும் கிரிக்கெட்டை மட்டுமே ரசிப்பார்கள், சிறந்த கிரிக்கெட்டுக்கு மட்டுமே ஆதரவு அளிப்பார்கள். உலகிலேயே சிறந்த பார்வையாளர்கள் சென்னை ரசிகர்கள்”

இந்த வார்த்தையைக் கூறியது, சென்னையில் பிறந்த இந்திய அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வின். அஸ்வின் அனுபவத்தில் கூறிய இந்த வார்த்தை, முழுக்க உண்மை என்பதை நேற்றைய ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் ஆட்டத்தைப் பார்த்த சென்னை ரசிகர்கள் நிரூபித்தனர்.

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images

23 ஆயிரம் ரசிகர்கள்

இந்திய அணி விளையாடாத உலகக் கோப்பை ஆட்டமாக இருந்தாலும் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் 23 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வந்திருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டத்தை ரசித்து ஆதரவு தெரிவித்தனர்.

2011-ஆம் ஆண்டுக்குப்பின் பாகிஸ்தான் அணி சென்னை வந்து கிரிக்கெட் விளையாடினாலும், ரசிகர்கள் எந்தவிதமான சார்பும் இல்லாமல் இரு அணிகளுக்கும் சமமான ஆதரவையும், வரவேற்பையும் அளித்து உற்சாகப்படுத்தினர்.

இரு அணிகளுமே வெவ்வேறு கிரிக்கெட் அனுபவத்தைப் பெற்ற அணிகள், இதில் பாகிஸ்தான் முன்னாள் உலக சாம்பியன் அணி. அப்படியிருந்தும் எந்த அணி சிறந்த ஆட்டத்தை, கிரிக்கெட்டை வெளிப்படுத்தியதோ அந்த அணிக்குத்தான் சென்னை ரசிகர்கள் ஆதரவு இருந்தது.

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images

சென்னை ரசிகர்களுக்கு நன்றி

குறிப்பாக முதல்பாதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சென்னை ரசிகர்கள், சேஸிங்கின்போது ஆப்கானிஸ்தான் ஆட்டத்தைப் பார்த்து மெய்சிலிர்த்து அந்த அணி வீரர்களுக்கு ஆதரவு அளித்து, உற்சாகப்படுத்தினர்.

சென்னை ரசிகர்களின் உற்சாகத்தையும், ஆதரவையும் பார்த்து அசந்துபோன ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர் வெற்றிக்குப்பின் சேப்பாக்கம் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images

தடையின்றி, இடையூறின்றி ஆதரவு

பாபர் ஆசம் பேட்டிங்கிற்காக களமிறங்கும்போது, “விக்ரம் வேதா” திரைப்பட பின்னணி இசையையும் சென்னை ரசிகர்கள் ரசித்தனர், குர்பாஸ், ஜாத்ரன் இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போதும் சத்தமாக கரகோஷம் எழுப்பியும், குர்பாஸ், குர்பாஸ் என கோஷமிட்டு அவரை உற்சாகப்படுத்தினர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டு கொடியை அணிந்து அந்நாட்டு ரசிகர்களும், பாகிஸ்தான் ஆதரவு ரசிகர்களும் அமர்ந்திருந்து எந்தவிதமான தயக்கமும் இன்றி, இடையூறும்இன்றி சுதந்திரமாக ஆட்டத்தை கண்டு ரசித்தனர்.

ஆட்டம் முடிந்து மைதானத்தை விட்டு வெளியே வந்த ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் ஏராளமான சென்னை ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்டு, அவரின் நாட்டு அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்து, கட்டிஅணைத்தனர். சென்னை ரசிகர்களின் செயலைப் பார்த்து ஆப்கானிஸ்தான் நாட்டு ரசிகரும் மெய்சிலிர்த்தார்.

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images

“இந்திய சகோதரர்களுக்கு நன்றி”

ஆப்கானிஸ்தான் நாட்டு ரசிகர் பிபிசி செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் “ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டை ரசித்துப் பார்த்தேன். ரஹ்மத், நூர் அகமது, குர்பாஸ் அனைவருமே சிறப்பாக ஆடினர். சென்னை ரசிகர்கள், இந்தியர்கள், ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆதரவு அளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.”

“குர்பாஸ்க்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இங்குள்ள என்னுடைய சகோதர, சகோதரிகளுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். சென்னை ரசிகர்கள் எங்கள் அணிக்கு ஆதரவு அளித்தது மிகுந்த மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.

கிரிக்கெட்டை மட்டும்தான் ரசிப்போம்

சென்னை ரசிகர்கள் எப்போதுமே நடுநிலையான, புத்திசாலியான ரசிகர்கள் என்பதை ஒவ்வொருமுறை கிரிக்கெட் நடக்கும்போதும் நிரூபித்துள்ளனர். ஐபிஎல் டி20 போட்டி நடந்தாலும் சரி, இந்தியாவுடன் எந்த நாட்டு அணி மோதினாலும் சரி சிறந்த கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து சென்னை ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே ரசிகர் ஒருவர் பிபிசி செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் “ சென்னை ரசிகர்களின் தரமே முதலில் கிரிக்கெட்டை ரசிப்போம். அதன்பின்புதான் எந்த அணி விளையாடுகிறது என்பதை பார்ப்போம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எந்த அணி விளையாடினாலும் சிறந்த ஆட்டத்துக்கு எப்போதுமே நாங்கள் ரசிகர்கள். ஆப்கானிஸ்தான் ஆட்டம் உண்மையில் பாகிஸ்தானைவிட அருமையாக இருந்தது. அவர்களுக்குத்தான் ரசிகர்கள் ஆதரவு இருந்தது” எனத் தெரிவித்தார்.

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images

“கிண்டல் செய்யவில்லை உற்சாகப்படுத்தினோம்”

“எந்த தவறையும் ரசிகர்கள் விமர்சிக்கவில்லை. இதுதான் சென்னை ரசிகர்கள் குணம் என்று மற்றொரு பார்வையாளர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “ பாகிஸ்தான் அணி ஒவ்வொரு முறையும் பீல்டிங்கை தவறவிட்டபோதும், கேட்சை கோட்டைவிட்டபோதும் அவர்களை சென்னை ரசிகர்கள் கிண்டல் செய்யவில்லை. மாறாக அந்த வீரர்களை உற்சாகப்படுத்தி, கைதட்டினர். இதிலிருந்து சென்னை ரசிகர்கள் கிரிக்கெட்டை மட்டுமே நேசிக்கிறார்கள் என்பது தெரிகிறது.சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மைதானத்தை வலம் வந்த ஆப்கானிஸ்தான் அணியினர் செயல் மிகவும் பிடித்திருந்தது” எனத் தெரிவித்தார்.

கால்நூற்றாண்டுக்கு முந்தைய உதாரணம்

கிரிக்கெட் ரசிகர்கள் எப்படிஇருக்க வேண்டும் என்பதற்கு கால்நூற்றாண்டுக்கு முன்பே, சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை ரசிகர்கள் உதாரணமாகத் திகழ்ந்துள்ளனர்.

கடந்த 1997ம் ஆண்டு நடந்த சுதந்திரதினக் கோப்பைக்கான ஒருநாள் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடந்தது. இதில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டர் சயீத் அன்வர் 194 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தங்கள் நாட்டு அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்கள் அடித்துவிட்டாரே என்று சென்னை ரசிகர் ஒருவர் கூட மனம் புழுங்கவில்லை, பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிடவில்லை,கிண்டல் செய்யவில்லை.

மாறாக, சயீத் அன்வர் சதம் அடித்தபோதும், 150 ரன்களை எட்டியபோதும் சென்னை ரசிகர்கள் அவருக்கு கரோஷம் எழுப்பி ஆதரவு அளித்தனர். அவர் ஆட்டமிழந்து சென்றபோது, அரங்கில் இருந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து, கரோஷம் எழுப்பி, சயீத் அன்வரை பாராட்டி வழியனுப்பினர். இதுபோன்ற ரசிகர்களின் பாராட்டுகளையும், மரியாதையையும் எங்குமே கண்டதில்லை என்று சயீத் அன்வர் பின்நாளில் ஒரு பேட்டியில் சென்னை ரசிகர்களை பற்றி சிலாகித்து கூறியிருந்தார்.

அது மட்டுமல்ல 1999ம் ஆண்டு சென்னையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சென்னை ரசிகர்களின் ‘ஜென்டில்மேன்’ தன்மை வெளிப்பட்டது. சச்சின் டெண்டுல்கர் கடைசிவரை போராடியும் இந்திய அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

பவுண்டரி லைனில் நின்றிருந்த சலீம் மாலிக், ரசிகர்களைப் பார்த்து சச்சின் ஆட்டமிழந்தால் ஆட்டம் முடிந்துவிடும் என்று ரசிகர்களிடம் ஜாலியாகப் பேசினார். சச்சின் போராட்டத்தை கண்டு ரசிகர்கள் வேதனை அடைந்தனரேத் தவிர, யாரும் பாகிஸ்தான் அணி வென்றதற்காக கோபப்படவில்லை, தங்களின் வெறுப்பை வெளிக்காட்டவில்லை.

அரங்கில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை செய்து, கைதட்டி பாகிஸ்தான் வீரர்களின் வெற்றியைப் பாராட்டி உற்சாகப்படுத்தினர். இதைக் கண்ட வாசிம் அக்ரம் உள்ளிட்ட பாகிஸ்தான் அணியினர் உச்சி குளிர்ந்து மைதானத்தை வலம் வந்து ரசிகர்களுக்கு “ப்ளையிங் கிஸ்” கொடுத்துக்கொண்டே நடந்தனர்.

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images

பெண்களின் ஆதரவு யாருக்கு?

சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஆட்டத்தைக் காண ஏராளமான பெண் ரசிகர்களும் வந்திருந்து ஆதரவு தெரிவித்தனர். அதில் ஒரு பெண் ரசிகை பிபிசி செய்தியாளருக்கு அளித்தி பேட்டியில் “ ஆட்டம் மிக அருமையாக இருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா எப்போதுமே ஆதரவு அளிக்கும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.”

“முதலில் பாகிஸ்தானுக்குத்தான் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து உற்சாகப்படுத்தினர். ஆனால், ஆப்கானிஸ்தான் ஆட்டம் சிறப்பாக இருந்ததால், சேஸிங்கில் அவர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்தனர். தொடக்கத்தில் இரு அணியினருக்குமே ரசிகர்கள் ஆதரவு அளித்தனர். ஆனால், ஆட்டத்தின் போக்கைப் பொருத்து ரசிகர்களின் மனநிலை ஆப்கானுக்கு மாறியது” எனத் தெரிவித்தார்.

சேப்பாக்கத்தில் நடந்த இந்த ஆட்டத்தைக் காண வங்கதேசத்தைச் சேர்ந்த ரசிகர்களும் வந்திருந்தனர். அவர்களும் ஆப்கானிஸ்தானுக்குத்தான் ஆதரவு என பிபிசி செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

அரையிறுதிக்குள் ஆப்கானிஸ்தான்

இதில் வித்தியாசமாக மதுரையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் ஆப்கானிஸ்தான் நாட்டு கொடியே தனது முகத்தில் வரைந்து வந்திருந்தும், அந்த அணி ஜெர்ஸியை அணிந்துவந்தும்ஆதரவு தெரிவித்தார்.

அவர் பிபிசி செய்தியாளரிடம் அளித்த பேட்டியில் “ 5 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆப்கானிஸ்தான் அணி மிகுந்த சிரமத்தில் இருந்தது, சில இந்திய வீரர்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டனர்.

“பாகிஸ்தான் போன்ற பெரிய அணியை சேஸிங் செய்கிறோம் என்ற பதற்றம் இல்லாமல் விளையாடினர். வரும்காலத்தில் மிகப்பெரிய அணியாக ஆப்கானிஸ்தான் அணியினர் மாறுவார்கள். ஆப்கானிஸ்தான் இதேபோன்று அடுத்துவரும் போட்டிகளில் விளையாடினால் அரையிறுதிக்குள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இந்தியஅணி விளையாடினால் எப்படி மக்கள் ஆதரவு தெரிவிப்பார்களோ அதுபோன்று ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் ஆட்டத்தை உற்சாகப்படுத்தினர்” எனத் தெரிவித்தார்.

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images

வெற்றிக்கு என்ன காரணம்

ஆப்கானிஸ்தான் அணி வென்றதற்கு என்ன காரணம் என்று ரசிகர் ஒருவர் பிபிசி செய்தியாளரிடம் கூறுகையில் “ ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரின்போது சென்னை சேப்பாக்கத்தில் விளையாடியுள்ளதால், ஆடுகளம் குறித்து நன்கு தெரியும் என்பதால், சுழற்பந்துவீச்சுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். பாகிஸ்தானைவிட அனைத்து துறைகளிலும் ஆப்கானிஸ்தான் சிறப்பாகச் செயல்பட்டது.

அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் ஆப்கானிஸ்தான் இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தும், தோற்கடிக்கும் என்று நம்புகிறோம். ஆப்கானிஸ்தான் கணிக்க முடியாத அணியாக இருக்கிறது. இதனால் அடுத்துவரும் போட்டிகளில் எந்த அணி வேண்டுமானாலும் வென்று டாப்-4 வரிசைக்குள் வரலாம்” எனத் தெரிவித்தார்.

எதிர்பாராத வெற்றி

சேப்பாக்கத்துக்கு நேற்றை ஆட்டத்தைக் காண வந்த ரசிகர்கள் பெரும்பாலானோர் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்றுதான் நினைத்து வந்திருந்தனர். ஆனால், கடைசியில் ஆட்டம் தலைகீழாக மாறி, பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் அணியினர் வென்றது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும், தரமான, பரபரப்பு மிகுந்த ஆட்டத்தைப் பார்த்த மனநிறைவோடு சென்றதாக ரசிகர்கள் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images

சென்னை ரசிகர்கள் தனித்துவமிக்கவர்கள்

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் முதிர்ச்சி அடைந்தவர்கள், எந்த நாட்டிலும் இல்லாத தனித்துவம் பெற்றவர்கள் என்று மூத்த விளையாட்டுத்துறை பத்திரிகையாளர் முத்துக் குமார் பிபிசிதமிழ் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில் “சென்னை ரசிகர்கள் உலக கிரிக்கெட் ரசிகர்களிலேயே தனித்துவம்மிக்கவர்கள். இந்த ரசிகர்கள் போல் வேறு எந்த தேசத்திலும் பார்க்க முடியாது.

இங்குள்ள ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களை மட்டும் அல்ல, கிரிக்கெட்டை ரசிக்கிறார்கள், எந்த நாட்டு வீரர்கள் விளையாடினாலும் அவர்களையும் ரசிக்கக்கூடியவர்கள். இந்திய அணி விளையாடும் போட்டியில் இந்திய அணிதான் வெல்ல வேண்டும் என்ற ஆசையும் உண்டு, அதேநேரம், நன்றாக விளையாடக்கூடிய எதிரணி வீரர்களையும் ஆதரிக்க வேண்டும் என்ற நாகரீகமும் உள்ளவர்கள்.

பிற மாநில ரசிகர்கள் இந்திய அணி தோற்கும் தருணத்தில் தங்கள் கோபத்தை, ஆத்திரத்தை வெளிப்படுத்திய சம்பவங்களும் நடந்துள்ளன. குறிப்பாக கொல்கத்தா, டெல்லியில் கூட ரசிகர்கள் ஆவேசமாகச் செயல்பட்டுள்ளனர். ஆனால், சென்னை ரசிகர்கள் ஒருபோதும் அப்படி நடந்து கொண்டது இல்லை.

ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் கிரிக்கெட் விளையாடினாலும் ரசிப்பார்கள், டீவில்லியர்ஸ் ஷாட்களை ஆதரிப்பார்கள், கரகோஷமிடுவார்கள், வாசிம் அக்ரம் விக்கெட் எடுத்தாலும் பாராட்டுவார்கள், பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம், ரிஸ்வானையும் ரசிப்பார்கள், நியூசிலாந்து வீரரையும், ஆஸ்திரேலிய வீரரையும் கொண்டாடுவார்கள்.

கிரிக்கெட் வீரர்களுக்குள் எந்த வேறுபாட்டையும் சென்னை ரசிகர்கள் பார்த்தது இல்லை. கிரிக்கெட்டை மட்டுமே ரசிக்கக்கூடிய நாகரீகமானவர்கள். அதனால்தான் சொல்கிறேன் சென்னை ரசிகர்கள் தனித்துவமிக்கவர்கள்” எனத் தெரிவித்தார்.

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images

தமிழ் கலாச்சாரம், பண்பாடு

சென்னை ரசிகர்கள் மட்டும் தனித்துவமாக இருக்கவும்,முதிர்ச்சியாக நடந்து கொள்ளவும் காரணம் குறித்து பத்திரிகையாளர் முத்துக் குமார் கூறுகையில் “ சென்னை ரசிகர்கள் எந்த கிரிக்கெட் போட்டியிலுமே முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமிழ் கலாச்சாரம்தான், மண்ணின் பண்பாடுதான். தமிழக மக்களோ அல்லது சென்னை ரசிகர்களோ வேற்று மதம் என்ற கண்ணோட்டத்தோடு பார்த்து இல்லை. அனைத்து மதங்களும் ஒன்றுதான் என்ற கண்ணோட்டத்தோடு வாழ்கிறார்கள். கோயிலும், மசூதியும் ஒரே தெருவில்தான் இருக்கும், மக்கள் ஒற்றுமையோடு வாழ்கிறார்கள், மதச்சார்பற்ற கலாச்சாரம் இங்கு இருக்கிறது”.

“இந்திய அணி தோற்றால் இந்திய வீரர்கள் வீடுகள் மீது கல்வீசிய சம்பவங்கள் பல மாநிலங்களில் நடந்துள்ளன. ஆனால், தமிழக்தில் இதுவரை ஒரு சம்பவத்தைக் கூட பார்த்ததுஇல்லை. இந்திய அணி தோற்றால், தமிழக கிரிக்கெட் வீரர்கள் மீது ரசிகர்கள் கோபத்தை காண்பிப்பதில்லை. அவர்களை கிரிக்கெட் வீரராகத்தான் பார்க்கிறார்கள். கிரிக்கெட்டை மதம்சார்ந்து, இனம் சார்ந்து சென்னை ரசிகர்கள் பார்க்காமல் இருக்க இந்த கலாச்சாரம்தான் காரணம். இந்த அளவு கலாச்சார வலிமை எந்த மாநில ரசிகர்களிடமும் இல்லை என்பது என் கருத்து” எனத் தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *