அனிமல் திரைப்படத்தில் அப்படி என்னதான் பிரச்னை? ஏன் இவ்வளவு விமர்சிக்கப் படுகிறது?
500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூல், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள்ளேயே சுமார் 62 லட்சம் பார்வைகள். மூன்று மணி நேரம் 21 நிமிடங்கள் நீளம் ஓடக்கூடிய ஒரு படம், வசூலிலும் பார்வைகளிலும் ஹிட் அடித்தாலும், கடும் விமர்சனங்களை சந்தித்திருக்கிறது.
அந்த படத்தின் பெயர் அனிமல்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தின் ரன்பீர் கபூர், ராஷ்மீகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படம் அனிமல். இந்த திரைப்படம் தெலுகு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்த திரைப்படம் குறித்து பிபிசி இந்தி சேவைக்காக திரை விமர்சகர் நசீருதீன் ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார். அதில் அவர் என்ன சொல்கிறார்?
படத்தின் வசூல் என்பதே வியாபாரத்தில் வெற்றியின் அளவுகோல் அதன் வசூல் என்பது உண்மைதான்.ஆனால் இந்தப் பணத்தைச் சம்பாதிப்பதற்காக என்ன மாதிரியான படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது சுவாரஸ்யமானது. அந்த வரிசையில் அனிமல் படம் சொல்ல முயல்வது என்ன? என்பது முக்கியமானது.
படத்தின் கதை எதை உணர்த்துவதன் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளது? இந்தப் படம் எப்படிப்பட்ட சமூகத்தைக் கற்பனை செய்கிறது?
இந்தப் படம் கருத்தியல்ரீதியாக ஆபத்தானதாகத் தெரிகிறது. இதை எந்த வகையிலும் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க முடியாது. இது சமூக மட்டத்தில் ஆபத்தானது மேலும் பாரபட்சங்களை வலுப்படுத்துகிறது.
இஸ்லாமியர்கள், ஆணாதிக்கம் குறித்த பார்வைகள்
இஸ்லாமியர்கள் குறித்து ஏற்கனவே முன்முடிவுடன் திட்டமிடப்பட்ட ஒரு கருத்தை இப்படம் பிரதிபலிக்கிறது. இது நவீனகால பெண்களின் கதை. ஆனால் கதையில் பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் மிகவும் சிக்கலானதாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, இது வன்முறையையும், ஆதிக்கத்தையும் செலுத்தும், அச்சுறுத்தக்கூடிய ஆண்மையை ஊக்குவிக்கிறது.
பழிவாங்கலும் வன்முறையும்தான் இந்தப் படத்தின் மையக்கரு. பெரிய திரையில் துப்பாக்கித் தோட்டாக்களும், அவற்றைச் சுற்றிய ரத்தமும் வன்முறையின் மாயையை உருவாக்குகின்றன. படத்தில் வன்முறையின் மிகக் கொடூரமான வடிவங்கள் காணப்படுகின்றன. மிகவும் கொடூரமான நடத்தையும் தெரிகிறது. கொடூரமான கொலை முறைகளைக் காணலாம்.
இன்னொரு மிகப்பெரிய பிரச்னை என்னவெனில் இதையெல்லாம் செய்வது வில்லன் கிடையாது. படத்தின் ஹீரோதான் இதைச் செய்கிறார்.
ஏன் இவ்வளவு வன்முறை காட்சிகள்?
ஒரு கதையின் நாயகன் செய்யும் வேலை அவருடைய தரம் அல்லது சிறப்புகளைக் காட்டுவதாக இருக்க வேண்டும். சில நேரங்களில் இது வெளியுலகில் மனித நடத்தையின் அளவீடாகவும் செயல்படுகிறது.
அப்படியானால் ஏன் வன்முறை காட்டப்படுகிறது என்ற இயல்பான கேள்வி எழுகிறது. படம் வன்முறையைப் போற்றுகிறதா அல்லது அதிலிருந்து பாடம் கற்க முயல்கிறதா? என்பது முக்கியமானது.
வன்முறையின் கோரத்தையும், பாதிப்புகளையும் காட்டும் பல படங்கள் வெளிவந்துள்ளன. இந்தப் படத்தில் அப்படி எதுவும் தெரியவில்லை. மாறாக வன்முறையையே தீர்வாக முன்வைக்கிறது.
வன்முறை என்பது எந்தச் சூழ்நிலையிலும் சகித்துக்கொள்ள முடியாததாக இருக்க வேண்டும்.
ஆனால் பார்வையாளர்கள் அதே வன்முறையிலும் ரத்தக் களரியிலும் மூழ்கிவிடுகின்றனர். அவர்கள் வன்முறையையும் முகத்தில் தெறிக்கும் ரத்தத்தையும் ரசிக்கிறார்கள்.
ஆல்ஃபா ஆண்களைப் பற்றிப் பாடம் எடுக்கும் நாயகன்
படத்தில், ரன்பீர் கபூர் ராஷ்மிகாவிடம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆல்ஃபா ஆண்கள் எப்படி இருந்தார்கள் என்று கூறுகிறார். அவர்கள் காடுகளுக்குள் நுழைந்து வேட்டையாடினர். அந்த வேட்டையில் கிடைத்த இரை மற்ற அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
தொடர்ந்து கதாநாயகியுடன் பேசும் ஹீரோ, “பெண்கள் உணவு சமைப்பார்கள். அவர்கள் குழந்தைகளுக்கும் மற்ற அனைவருக்கும் உணவளிப்பார்கள்,” என்கிறார்.
“அவர்கள் உணவைச் சமைப்பது மட்டுமல்லாமல், வேட்டையாடுபவர்களில் யார் மூலம் தாங்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பது என்பதையும் முடிவு செய்தனர். யார் அவருடன் இருப்பது, யார் அவரைப் பாதுகாப்பது? சமூகம் இப்படித்தான் இயங்கி வந்தது,” என்கிறார்.
மாறாக, பலவீனமான ஆண்களும் இருந்ததாக ஹீரோ தெரிவிக்கிறார். அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களிடம் பெண்கள் எப்படி வர முடியும்?
“அதனால் பலவீனமான ஆண்கள் கவிதை எழுதுவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது கவிதைகளில் பெண்களைக் கவர்வதற்காக சந்திரனையும் நட்சத்திரங்களையும் பயன்படுத்தினார். சமுதாயத்திற்கு எது நல்லதைச் செய்தாலும், அதைச் செய்வது ஆல்ஃபா ஆண்கள் மட்டுமே. பலவீனமானவர்கள் கவிதை எழுதுகிறார்கள்,” என்கிறார்.
அதுமட்டுமல்லாமல், உடல் வலிமை குறைந்தவர்கள் சமூகத்திற்குப் பயனற்றவர்கள் என்பது நாயகனின் கருத்து. அவர்களால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் நம்புகிறார். எனவே, சக்தி வாய்ந்தவர்கள் மட்டுமே இந்தச் சமூகத்தில் பிறக்க வேண்டும் என்கிறார் ஹீரோ. இந்தச் சிந்தனை மிகவும் ஆபத்தானது.
கதாநாயகியை ஹீரோ எப்படி தன்பக்கம் ஈர்க்கிறார்?
படத்தின் ஒரு கட்டத்தில் கதாநாயகியிடம் பேசும் நாயகன், உங்கள் உடலில் ஆரோக்கியமான குழந்தைகளை வளர்க்கலாம் என்று கூறுகிறார்.
நாயகிக்கு ஏற்கெனவே வேறு இளைஞருடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அவருடைய வருங்கால கணவர் ஒரு பலவீனமான மனிதர் என்றும், அவர் கவிதை எழுதக் கூடியவர் என்றும் ஹீரோயின் குறிப்பிடுகிறார். அதேநேரம், ஹீரோ ஒரு ஆல்ஃபா ஆணாக இருக்கிறார்.
இதன் காரணமாக, கதாநாயகி ஹீரோவை நோக்கித் திரும்புகிறார். அதன் தொடர்ச்சியாக அவரையே நாயகி திருமணம் செய்து கொள்கிறார்.
பல நூற்றாண்டுகள் பழைமையான விஷயங்கள் இன்றைய பெண்களுக்கு ஏன் மீண்டும் நினைவுபடுத்தப்படுகின்றன?
ஒரு ஆணுடன் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு ஆண் மூலமே ஏன் சொல்லப்படுகிறது? இன்றைய பெண்களிடம் எந்த ஆண் ஒரு ஆண் என்றும், யார் ஒரு ஆண் இல்லை என்றும் ஏன் சொல்கிறார்?
இது படத்தில் தெளிவாகத் தெரிகிறது. ரன்பீர் கபூருக்கு ஒரு மூத்த சகோதரி உள்ளார். வெளிநாட்டில் அவர் எம்பிஏ படித்துள்ளார். திருமணமாகி குடும்பத்துடன் வீட்டில் வசித்து வருகிறார். ரன்பீருக்கு அவரது கணவரைப் பிடிக்கவில்லை.
இந்தத் தருணத்தில் பேசும் அவர், “நான் மிகவும் இளமையாக இருந்தேன். இல்லாவிட்டால் இந்தத் திருமணம் நடைபெற அனுமதித்திருக்க மாட்டேன் என்கிறார். இதன் மூலம் அக்காவின் முடிவு தவறானது என்பதைப் படமும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தன் கருத்தை சரியென ஹீரோ நிரூபிக்கிறார். அதனால்தான் ஓரிடத்தில் அவர் தனது தங்கையிடம், “நான் உனக்கு சுயம்வரம் செய்து உனது கணவரை முடிவு செய்வேன்,” என்கிறார்.
அதுமட்டுமில்லாமல், தன் தங்கை ஒரு பெண்ணாக எதை உண்ண வேண்டும், எதைக் குடிக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் முடிவெடுக்கிறார். இது நேசத்தைக் காட்டி ஆணாதிக்கம் செய்வதன் வடிவம். அன்பைக் காட்டுவதன் மூலம் பெண்களின் வாழ்க்கையை ஆண்கள் கட்டுப்படுத்துகின்றனர்.
வன்முறை மட்டுமே தீர்வாகக் காட்டப்படுகிறது
படத்தில் ஆண்கள் உண்மையில் எதிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதில் கொடுமைப்படுத்துபவர்களும் உள்ளனர். அவர்கள் பெண்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு பெண்கள் பயப்படுகிறார்கள். பயத்தால் ஒரு மரியாதை ஏற்படுகிறது.
உண்மையில், இந்தப் படத்தின் ஹீரோ அனைவரின் பாதுகாவலராக மாற முயல்கிறார். அவருக்கு இருக்கும் ஒவ்வொரு பிரச்னைக்கும் வன்முறைதான் தீர்வாகக் காட்டப்பட்டுள்ளது.
அவர் பள்ளியில் படிக்கும்போது இதேபோன்ற தீர்வுகளைப் பெறுகிறார். அவரது சகோதரி கல்லூரியில் சில சிறுவர்களால் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்.
இதை அறிந்த ரன்பீர், தனது மூத்த சகோதரியுடன் நெரிசலான வகுப்பிற்கு விரைந்தார். வகுப்பில் துப்பாக்கித் தோட்டாக்கள் மூலம் அவர்களை மிரளச் செய்கிறார். “உன்னுடைய பாதுகாப்பிற்காக என்னால் எதையும் செய்ய முடியும்,” என்று பெருமிதத்துடன் தனது சகோதரியிடம் கூறுகிறார்.
மூத்த சகோதரியின் பாதுகாப்பு இளைய சகோதரரின் கைகளில் உள்ளது. இதையெல்லாம் அறிந்த அவரது தந்தை அனில் கபூர் மிகவும் கோபப்படுகிறார்.
ஆணாதிக்கத்தின் வேர்களைப் பற்றிய புரிதல்
ஆணாதிக்கத்தின் வேர்கள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ளும் விதத்தில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.
ஆணாதிக்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு. அப்பா, அப்பா, அப்பா… இது படத்தின் கதையில் பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளது.
மகனின் அப்பா மீதுள்ள பாசம் படத்தின் ஆரம்பத்திலேயே தெரிகிறது. ஆனால் இந்த இணைப்பு சாதாரண தந்தை, மகனுக்கு இடையே நிலவும் அன்பு அல்ல. அவர் தனது தந்தையைப் போல இருக்க விரும்புகிறார். அவர் வாழ்வில் தாய் இரண்டாம் பட்சம்தான். தந்தைக்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பதை உணர்த்துகிறார்.
படத்தில் அப்பாவின் அப்பா, தம்பிகள், அண்ணன் மகன்கள்… அதாவது ஆண்களின் சுறுசுறுப்பான உலகம்தான் காட்டப்பட்டுள்ளது. அந்த உலகில் ஆங்காங்கே பெண்கள் இருக்கிறார்கள்.
படத்த்தில் நாயகி பல இடங்களில் நாயகனிடம் வாக்குவாதம் செய்வதும், ஓரிரு இடங்களில் அறைவதும்கூட காட்டப்பட்டுள்ளது. இது என்ன மாதிரியான சமத்துவம் என கேள்வி எழுகிறது.
எல்லாவற்றையும் மீறி, இறுதியில் நாயகி ஹீரோவின் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்.
ஓரிடத்தில், திருமணத்தில் பயம் இருக்க வேண்டும் என்று ஹீரோ சொல்கிறார். ஒருமுறை நாயகி தனது விருப்பப்படி கவுன் போன்ற ஆடையை அணிந்தால், ஹீரோ எதிர்க்கிறார். ஒரு ஆல்பா ஆணின் மனைவியாக படம் முழுக்க கதாநாயகி சல்வார் சூட் அல்லது புடவையில் இருக்கிறார். அவர் பண்பட்டவர் – மத சம்பிரதாயங்களைப் பின்பற்றுகிறார் என்பதைப் போலக் காட்டப்படுகிறார்.
ஆதிக்கம் செலுத்தும் ஆண்மை பாலினத்துடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது. அவர் பாலியல் உறவுகளைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார். கவலையுடன், அவர் பாலியல் உறவுகளில் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பதைக் காட்ட விரும்புகிறார்.
அவரது பாலியல் ஆசைகள் எவ்வளவு வலுவானவை மற்றும் இந்தச் செயலில் அவர் எவ்வளவு வலிமையானவர் என்பதைக் காட்ட விரும்புகிறார். இந்த விஷயம் இந்தப் படத்தில் பல நிலைகளில் மீண்டும் மீண்டும் காணப்படுகிறது. பாலியல் உறவுகளில் ‘performance’ என்ற தலைப்பு மீண்டும் மீண்டும் வருகிறது.
பாலியல் செயல்பாடு மட்டும்தான் ஆண்மையா?
ஹீரோ மட்டுமின்றி வில்லனும் எப்போது, எங்கு நினைத்தாலும் உடலுறவு கொள்கிறார். அதுமட்டுமின்றி திருமணத்திற்கு வெளியேயும் உறவு வைத்துள்ளார். அவர் தனது உடலில் உள்ள அடையாளங்களை பெருமையுடன் வெளிப்படுத்துகிறார்.
இயக்குநரை பொறுத்தவரை, இது ஆல்ஃபா ஆணாக இருப்பதற்கான அறிகுறி. மாறாக, பெண்கள் செயலற்றவர்களாகத் தோன்றுகிறார்கள்
ரன்பீர் கபூர் பிறந்த குடும்பம் மிகவும் பணக்காரக் குடும்பம். தந்தை அனில் கபூருக்கு இரும்பு தொழில் உள்ளது. நிறுவனத்தின் பெயர் ஸ்வஸ்திக். சக்தி, முன்னேற்றம், வெற்றி என்பது அதன் சூத்திரமாக உள்ளது.
இந்தக் குடுமபம் பெரிய கூட்டுக் குடும்பம். பல ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பத்தில் ஒரு சகோதரர் சொத்து தகராறு காரணமாகப் பிரிந்து செல்கிறார். அவர் மட்டும் வித்தியாசமாக இருந்திருந்தால் இந்தக் கதை சாதாரணமாக இருந்திருக்கும்.
அவர் வெளிநாடு சென்று முஸ்லீமாக மாறுகிறார். “குடும்பத்தின் எதிரியே பிற மதத்திற்கு மாறுகிறார் அல்லது பிற மதத்தினரே எதிரி” என்ற தொனியில் காட்சிகள் உள்ளன.
இப்போது அவர் முஸ்லிம் ஆகிவிட்டதால், அவருக்குப் பல மனைவிகள் மற்றும் பல குழந்தைகள் இருப்பதாகப் படத்தில் காட்டப்படுகிறது.
அதுமட்டுமின்றி, அவரது மகனுக்கும் மூன்று மனைவிகள் உள்ளனர். இங்கே சில வெறுப்பு முழக்கங்களையும் நாம் கவனிக்க வேண்டும். இப்படி அவர்கள் ஐந்து பேர், இருபத்தைந்து பேராகின்றனர். முஸ்லீமாக மாறிய இந்தக் குடும்பம் ஸ்வஸ்திகாவை கைப்பற்ற விரும்புகிறது. அவர் மற்றவர்களுக்கு ஆபத்து என்பதுடன் அவர் மிகவும் கொடூரமானவர்.
இதை முடிவுக்குக் கொண்டுவர, கூட்டுக் குடும்பத்தின் மீதமுள்ள உறுப்பினர்கள் ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் குடும்பத்தின் ஒரு பெரிய ‘முஸ்லீம்’ எதிரியை அழிக்கிறார்கள். ஆனால் இந்த எதிரியின் அச்சுறுத்தல் இன்னும் மீதமுள்ளது. தற்போதைக்கு, ஸ்வஸ்திகா இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது. இதை எதிர்காலத்திலும் இதுபோல் காக்க முடியும் என்பதே கதை.
இந்தப் படம் எப்படி பிரபலமானது?
ஆனால் இன்று இந்தப் படம் எப்படி பிரபலமாகிறது என்பது மிகப் பெரிய கேள்வி? படத்தைப் பார்ப்பவர்களில் பெண்களும் ஒரு பெரிய பகுதியாக உள்ளனர். அவர்கள் எப்படி இத்தகைய ஆணாதிக்கத்தைப் பார்க்கிறார்கள்?
திரைப்படம் என்பது ஒரு சக்திவாய்ந்த ஊடகம். இது மக்களின் இதயங்களையும் மனதையும் பாதிக்கிறது. இது சமூகத்தின் கண்ணாடியாக உள்ளது என்பதுடன், நாம் எப்படிப்பட்ட சமூகத்தை உருவாக்க விரும்புகிறோம் என்பதைக் கூறும் ஓர் ஊடகமாக இருக்கிறது.
நாடும் சமூகமும் தற்போது ஆணாதிக்கம் செலுத்தும் ஒரு கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆதிக்கம் மற்றும் அச்சுறுத்தும் ‘ஆண்மை’யின் விளைவை தேசம், மதம், சமூகம், கலாசாரம் ஆகியவற்றில் காணலாம்.
உண்மையில், இந்த வெற்றிப் படத்தைப் பற்றி விவாதிப்பது அவசியமாகிறது. ஏனெனில் இதுபோன்ற படங்கள் பொதுவாக விவாதத்தைத் தூண்டும் வகையில் உள்ளன. பெண்களுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்க வேண்டும், ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் அந்த விவாதம்.
இதுபோன்ற படங்கள் எந்த மாதிரியான சமூகத்தைக் கற்பனை செய்கின்றன என்பதுதான் இப்படம் தொடர்பான பிரச்னை. அனிமல் என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் பரிந்துரைக்கும் வகையிலான ஆல்பா ஆண்களை ஒரு குறிப்பிட்ட ஆதிக்கக் கட்டமைப்பில் காட்சிப்படுத்துகிறது.
இது மட்டுமின்றி, ஆல்ஃபா ஆண்கள் பெண்களையும் ஒரு சிறப்பு பாத்திரத்தில் கட்டுப்படுத்துகின்றனர். அவர்கள் சுதந்திரம் கொடுக்கிறார்கள். ஆனால் பெண்ணுக்கு அளிக்கப்படும் அந்தச் சுதந்திரத்தின் கட்டுப்பாடு அவர்கள் கையில் உள்ளது.
பெண்களுக்கு நவீன கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால் அவர்களின் முதன்மைப் பொறுப்புகள் என்ன என்பதை ஆல்ஃபா ஆண்களே தீர்மானிக்கின்றனர்.
தாயாக இருந்தாலும் சரி, சகோதரியாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி, வீட்டில் உள்ளவர்களை வளர்ப்பது, கவனித்துக் கொள்வது போன்ற பணிகளைச் செய்பவர்களாக மட்டுமே பெண்கள் காட்டப்படுகின்றனர்.
ஆல்ஃபா ஆண்கள் பற்றிய ‘அனிமல்’ படத்தின் பார்வை என்ன?
இந்தப் படத்தின் படி, ஆண்கள் சாதாரண ஆண்கள் அல்ல. அவர்கள் ஆல்ஃபா ஆண்கள். உடல் வலிமை உடையவர்கள். பழிவாங்கக் கூடியவர்கள். ரத்தத்துடன் விளையாடுபவர்கள்.
இந்தப் படத்தின்படி, இப்படி இல்லாத ஆண்கள் பலவீனமானவர்கள். அவர்கள் கவித்துவமானவர்கள். இதுவோர் ஆபத்தான கருத்தியல். சமூகத்தில் பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
ஆல்ஃபா ஆண்கள் பிறப்பதில்லை. ஆல்ஃபா ஆண்கள் உருவாக்கப்படுகின்றனர். ஆல்ஃபா ஆணாக மாறுவது பெண்களுக்கும் சமூகத்துக்கும் தீங்கானது மற்றும் ஆபத்தானது என்பதை உணரவேண்டும்.
ஒரு படம் பல நிலைகளில் தனது கருத்தியலை விதைக்கிறது. எனவே, இந்தப் படத்தில் இருக்கும் இதுபோன்ற பல விஷயங்களை விவாதிப்பது அவசியம்.
இறுதியாக, ஓர் ஆண் ஏன் ‘விலங்கு’ என்று அழைக்கப்படுகிறார்? எந்த வகையான ஆண்கள் விலங்குகள் என்று அழைக்கப்படுகிறார்கள்? என்பதை பார்க்க வேண்டும்
விலங்கு என்று அழைக்கப்படும் அந்த ஆணின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தவே இந்தப் படம் முயல்கிறது. விலங்குதான் ஹீரோ.
அதாவது, அத்தகைய ஆதிக்கம் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட ‘ஆண்மை’ நடத்தையை யாராவது விலங்கு என்று அழைத்தால், அதை ஒரு பாராட்டு என்று கருதப்பட வேண்டும், விமர்சனமாக அல்ல என்கிறது படம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்