இந்தியாவின் முன்னணி வங்கி ஒன்றின் கிளை மேலாளர் தனது கணக்கிலிருந்து 16 கோடி ரூபாயை கையாடல் செய்துவிட்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது அமெரிக்க வங்கிக் கணக்கிலிருந்து ஐசிஐசிஐ வங்கிக்கு தனது பணத்தை செலுத்தியதாகவும், வைப்பு நிதியில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் சுவேதா ஷர்மா தெரிவித்தார்.
ஆனால், வங்கி அதிகாரி ஒருவர் போலி கணக்குகளை உருவாக்கி, தனது கையெழுத்தையும் போலியாக இட்டு, தனது பெயரில் டெபிட் கார்டு மற்றும் காசோலைகள் பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
“எனக்கு வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் குறித்து போலியான ஆவணங்கள் கொடுக்கப்பட்டன. எனது பெயரில் பொய்யான மின்னஞ்சல் முகவரியும் உருவாக்கப்பட்டிருந்தது. வங்கி தரவுகளில் எனது செல்போன் எண் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. எனவே பரிவர்த்தனைகள் குறித்து எனக்கு எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“மோசடி நடந்துள்ளது உண்மை தான்” என்று வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் ஒப்புக் கொண்டார். எனினும் ஐசிஐசிஐ என்பது பல கோடி வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கான வைப்பு நிதிகளை கொண்டிருக்கும் பிரபல வங்கி எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த மோசடியில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
வாடிக்கையாளர் கணக்கில் ரூ.16 கோடியை கிளை மேலாளர் எடுத்தது எப்படி?
கடந்த பல ஆண்டுகளாக ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் வசித்து வந்த ஷர்மா, 2016ம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு, ஒரு நண்பரின் மூலம் வங்கி அதிகாரியை சந்தித்துள்ளார்.
அமெரிக்காவில் வைப்பு நிதிகளுக்கான வட்டி குறைவாக இருக்கும் என்றும், இந்தியாவில் 5.5%-6% வட்டி கிடைக்கும் என்பதால், இந்திய வங்கியில் பணத்தை செலுத்தலாம் என்று அந்த வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவரது அறிவுறுத்தலின் பெயரில், டெல்லிக்கு அருகில் பழைய குருகிராம் பகுதியில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் வெளிநாட்டுவாழ் இந்தியருக்கான கணக்கை ஷர்மா தொடங்கியுள்ளார். 2019ம் ஆண்டு முதல் இந்த வங்கிக் கணக்கில் பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்திருக்கின்றன.
“எங்கள் வாழ்நாள் சேமிப்பான ரூ.13.5 கோடியை 2019ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகால வைப்பு நிதியாக செலுத்தியிருந்தோம். அந்த தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.16 கோடிக்கும் மேலாக இருந்தது” என்று கூறினார் ஷர்மா.
மோசடி நடந்தது குறித்து தனக்கு சந்தேகம் ஏற்பட்டதே இல்லை என்கிறார் அவர். “வங்கி கிளை மேலாளர் அவ்வபோது வைப்பு நிதிக்கான ஆவணங்களை அனுப்பி வைப்பார். மின்னஞ்சல் மூலமும் சில நேரம் வீட்டுக்கே நேரடியாகவும் அனுப்பி வைக்கப்படும்” என்றார்.
ஜனவரி மாத தொடக்கத்தில், வங்கியில் புதிதாக சேர்ந்த ஊழியர் ஒருவர் அவர் வங்கியில் வைப்பு நிதி தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறினார். அப்போது தான் மோசடி நடந்தது சுவேதா ஷர்மாவுக்கு தெரியவந்தது.
விசாரித்து பார்த்ததில் அவருடைய வைப்பு நிதியில் உள்ள அனைத்து பணமும் இல்லாமல் விட்டது என்பதை தெரிந்துக் கொண்டார். “நானும் எனது கணவரும் அதிர்ச்சியானோம். ஒரு வைப்பு நிதியின் மீது 2.5 கோடி முன்பணமாக பெறப்பட்டிருந்தது. நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். எங்கள் கண் முன்னே எங்கள் வாழ்க்கை அழிக்கப்படுகிற போதும் எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை” என்று அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மோசடி தெரியவந்ததும் ஐசிஐசிஐ வங்கி என்ன செய்தது?
இந்த விவகாரம் வங்கியின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு பல முறை அவர்கள் மேல் அதிகாரிகளிடையே பேசப்பட்டதாக ஷர்மா கூறுகிறார். “ஜனவரி 16ம் தேதி, வங்கி மண்டல அதிகாரிகளையும் மும்பையிலிருந்து வந்த கண்காணிப்பு பிரிவு தலைவரையும் சந்தித்தோம். தங்கள் தரப்பில் தவறு ஏற்பட்டு விட்டதாகவும், வங்கிக் கிளை மேலாளர் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்தனர்” என்றார்.
“எங்கள் பணம் எங்களுக்கு திருப்பி தரப்படும் என்று உறுதி அளித்தனர். தவறு செய்தவர்களை கண்டறிய எனது உதவி தேவை என்று கூறினர். நானும் எனது குழுவினரும் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த பரிவர்த்தனைகளை சரிபார்த்து, வங்கி கண்காணிப்புக் குழுவிடம் அந்த தகவல்களை அளித்தோம்” என்றார்.
பணம் எப்படி கையாடப்பட்டிருக்கிறது என்று தெரிந்த போது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
இரண்டு வாரங்களில் விவகாரத்தை முடித்துவிடுவதாக வங்கி அதிகாரிகள் கூறினாலும், ஆறு வாரங்கள் ஆகியும் இன்னும் பணம் திரும்ப கிடைக்கவில்லை என்று சுவேதா ஷர்மா கூறுகிறார்.
இந்நிலையில், ஐசிஐசிஐ வங்கி தலைமை செயல் இயக்குநர் மற்றும் துணை தலைமை செயல் இயக்குநருக்கு இதுகுறித்து கடிதம் எழுதினார் ஷர்மா. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து வங்கியிடம் பிபிசி கேட்ட போது, அவர்களின் எழுத்துப்பூர்வமான பதிலில், முதல் கட்டமாக 9.27 கோடி அவரது கணக்கில் செலுத்தப்படும் என்றும் மீதி தொகை விசாரணைக்கு பிறகு செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் சுவேதா ஷர்மா, வங்கியின் இந்த நடவடிக்கைக்கு ஒப்புக் கொள்ளவில்லை. “எனக்கு கிடைக்க வேண்டிய ரூ.16 கோடியை விட மிக குறைவான தொகை இது. வங்கிக் கணக்கை முடக்கி தான் இந்த தொகையை தருவார்கள். அப்படி என்றால் போலீஸ் இந்த வழக்கை முடிக்கும் வரை கணக்கு முடக்கப்பட்டிருக்கும். வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகும்” என்றார் .
மேலும், “எந்த தவறும் செய்யாத நான் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்? எனது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. நான் தூங்கி பல நாட்கள் ஆகின்றன” என்றார்.
‘வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’
நிதி தொழில்நுட்ப நிறுவனமான “கேஷ்லெஸ் கன்ஸ்யூமர்”-ன் ஸ்ரீகாந்த் எல், இதுபோன்ற மோசடிகள் மிகவும் அரிதானது என்கிறார். “வங்கியில் நடைபெறும் பரிவர்த்தனைகளை கண்காணிக்க வழக்கமான ஆய்வுகள் நடைபெறும். இதுபோன்ற மோசடிகளை தவிர்ப்பதற்காகவே அவை நடத்தப்படும்” என்றார்.
ஆனால் வங்கி கிளை மேலாளர் உங்களை ஏமாற்ற வேண்டும் என முடிவு செய்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
“வங்கி கிளை மேலாளர் என்பதால் அவர் கூறுவதை சுவேதா ஷர்மா நம்பிவிட்டார். ஆனால் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் பரிவர்த்தனைகளை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
ராஜஸ்தானிலும் வங்கி மோசடி
இதுபோன்ற முறைகேடுகளுக்காக இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக ஐசிஐசிஐ வங்கி செய்திகளில் இடம்பெற்றுள்ளது.
இந்த மாதம் தொடக்கத்தில், ராஜஸ்தானில் இதேபோன்ற வழக்கு ஏற்பட்டது. வங்கி மேலாளரும் ஊழியர்களும், வங்கிக்கான இலக்குகளை அடைவதற்காக, பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கான ரூபாயை கையாடல் செய்து வந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
ஒரு வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, புதிய கணக்கு திறந்து அதில் வைப்பு நிதி தொடங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்தனர்.
ஐசிஐசிஐ வங்கி செய்தித் தொடர்பாளர்,இந்த வழக்கில் வங்கி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தது என்றும் வாடிக்கையாளர்கள் யாரும் தங்கள் பணத்தை இழக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
சுவேதா ஷர்மா விவகாரத்தில், “மூன்று ஆண்டுகளாக அவரது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என அவர் சரிபார்க்கவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
“குற்றம் சாட்டப்பட்ட வங்கி கிளை மேலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நாங்களுமே ஏமாற்றப்பட்டுள்ளோம்” என்றார்.
“நாங்கள் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளோம், போலீஸ் விசாரணை முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும். அவரது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவரது பணம் வட்டியுடன் திரும்பி வரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் அதுவரை அவர் காத்திருக்க வேண்டும்.”
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளரை பிபிசியால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்