
கடந்த 15 ஆண்டுகளில் கோவை – பாலக்காடு வழித்தடத்தில் 11 யானைகள் இறந்துள்ளன – வனத்துறை தரவுகள்
தமிழ்நாடு முழுவதும் யானைகள் ரயில்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகிறது. வனத்துறையின் அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே, ரயில்களில் மோதி 36 யானைகள் மரணித்துள்ளன.
இதில், குறிப்பாக கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, கோவை – பாலக்காடு வழித்தடத்திலுள்ள இரண்டு ரயில் தண்டவாளங்களில், 2008 முதல் இதுவரையில், 11 யானைகள் மரணித்துள்ளதாக வனத்துறை கூறுகிறது.
குறிப்பாக மதுக்கரையில் கடந்த, 2021 நவம்பர் மாதம் ஒரு குட்டியானை உள்பட மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு மரணித்த சோக சம்பவமும் அரங்கேறியது. இதுபோன்று தமிழ்நாட்டில் வன எல்லையிலும், காப்புக் காட்டிற்கு உள்ளேயும் பயணிக்கும் ரயில் தண்டவாளங்களில் யானைகள் மட்டுமின்றி, இதர வனவிலங்குகள் அடிபட்டு மரணித்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து மதுக்கரை அருகேயும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் யானைகள் ரயிலில் மோதி இறப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம், வனத்துறை மற்றும் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்தியாவில் முதல் முறையாக, ரயில்களில் யானைகள் அடிபட்டு இறப்பதைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை கோவையில் வனத்துறை அமைத்துள்ளது. யானைகள் உயிரைக் காக்க இந்தக் கட்டுப்பாட்டு அறை எப்படிச் செயல்படுகிறது?
இந்தியாவின் முதல் AI கேமரா கண்காணிப்பு

தமிழகத்தைப்போன்று நாட்டில் பல மாநிலங்களில் இதேபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதைத் தடுக்க மத்திய ரயில்வே அமைச்சகம், மேற்கு வங்கம், அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில், ‘கஜ்ராஜ்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தில் ரயில்வே தண்டவாளங்கள் அருகே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சென்சார்களை பொருத்தி, யானைகள் நடமாட்டம் குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கென்யா, ஆப்ரிக்கா போன்ற நாடுகள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கேமராக்கள், சென்சார்கள் பொருத்தி, மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் யானைகளைப் பாதுகாக்கின்றனர்.

24 மணிநேரம் செயல்படும் வகையில் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது
இதே தொழில்நுட்பத்தை மையமாக வைத்து தற்போது, தமிழ்நாடு வனத்துறை கோவை மதுக்கரையில் செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடு அறையை அமைத்து, ரயில் தண்டவாளத்தில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
இந்தத் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கட்டுப்பாட்டு அறை எப்படிச் செயல்படுகிறது, எப்படி யானைகள் பாதுகாக்கப்படுகிறது என்பதை அறிய, பிபிசி தமிழ் குழு கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்றிருந்தது.
கோவை மதுக்கரையில் ரயில் தண்டவாளம் அருகே அமைந்திருந்த கட்டுப்பாட்டு அறையை நாம் அடைந்தபோது, அங்குள்ள பணியாளர்கள் மும்முரமாக ரயில்வே மற்றும் வனத்துறை பணியாளர்களுக்கு, தண்டவாளம் அருகே யானைக்கூட்டம் நிற்கும் தகவலைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
12 AI கேமராக்கள் – இரண்டு வகை பார்வை

“இந்தியாவிலேயே முதல் முறையாக AI தொழில்நுட்ப உதவியுடன் யானைகள் ரயில் தண்டவாளங்களைக் கடப்பது கண்காணிக்கப்படுகிறது,” என்கிறார் சுப்ரியா சாஹூ.
பிபிசி தமிழிடம் பேசிய, கட்டுப்பாட்டு அறை பணியாளர் மணிகண்டன், ‘‘யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க, கோவை – பாலக்காடு வழித்தடத்திலுள்ள இரண்டு ரயில் தண்டவாளங்கள் ‘ஏ டிராக்’ மற்றும் ‘பி டிராக்’ எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தண்டவாளங்களில் மொத்தம், 12 டவர்கள் அமைத்து அதில், 12 AI கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு கேமராவில் சாதாரண வீடியோ மற்றும் வெப்ப காட்சி (Thermal View) என இரண்டு வகை வீடியோக்களை நேரலையாகப் பார்க்க முடியும்.
ரயில் தண்டவாளத்திலும், அதன் இருபக்கமும் 100 அடி வரையில் யானை வந்ததும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் யானை கண்டறியப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் அலாரம் அடித்து எச்சரிக்கை கிடைக்கும்.
யானை கண்டறிந்தவுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம், அருகிலுள்ள ரயில் நிலையம், அந்த நிலையத்தின் அதிகாரி மற்றும் வனத்துறை பணியாளர்களுக்கு யானை எந்த டிராக்கில் எத்தனையாவது மைல் கல் அருகே நிற்கிறது என மெசேஜ் அனுப்பப்படும்.
உடனடியாக இந்தத் தகவல் லோகோ பைலட்டுக்கு தெரிவிக்கப்பட்டு ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு ஹாரன் அடித்துக்கொண்டே மிக மெதுவாக ரயில் இயக்கப்படும். யானை மட்டுமின்றி காட்டு மாடு, மான் கூட்டம், சிறுத்தை என எந்த விலங்கு வந்தாலும் எச்சரிக்கை அனுப்பப்படும்,’’ என்கிறார்.
24 மணிநேர கண்காணிப்பு

மணிகண்டன் நம்மிடம் விவரித்துக் கொண்டிருந்தபோதே ‘பி டிராக்’ பகுதியில் ஒரு குட்டியுடன் ஒரு பெண் யானை தண்டவாளத்தைக் கடந்தது. அதைப் பற்றி ரயில்வே துறைக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்து, யானை பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடந்த பிறகு பேச்சைத் தொடர்ந்தனர்.
மேலும் தொடர்ந்த மணிகண்டன், ‘‘இரு துறைகளுக்கும் மெசேஜ் சென்றாலும், கூடுதலாக நாங்கள் யானையின் நகர்வைப் பொறுத்து கேமராக்களை நகர்த்தி யானையின் நடமாட்டத்தை முழுமையாகக் கண்காணிப்போம்.
இந்தத் தகவல்களை தண்டவாளம் அருகே 24 மணிநேரமும் பணியில் இருக்கும் வனத்துறை பணியாளர்களுக்கு, வாக்கி டாக்கி அல்லது மொபைல் மூலமாக நேரடியாகத் தெரிவிப்போம். அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று யானைகளைப் பாதுகாப்பாக தண்டவாளத்தில் இருந்து காட்டிற்குள் விரட்டிவிடுவார்கள்.
ரயில் வேகத்தைக் குறைப்பது, யானைகளைப் பாதுகாப்பாக வனத்தினுள் விரட்டி அவற்றை ரயில் விபத்தில் இருந்து பாதுகாப்பது ஆகியவைதான் கட்டுப்பாட்டு அறையின் முதன்மைப் பணி. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் நாங்கள், 4 பேர் 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,’’ என்றார்.
யானைகள் குறித்து 388 முறை எச்சரிக்கை

தெர்மல் கேமரா உதவியுடன் இரவிலும் யானையின் நடமாட்டம் கவனிக்கப்படுகிறது.
யானைகள் கண்காணிப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, தமிழ்நாடு வனத்துறை செயலாளரும் அரசின் முதன்மைச் செயலாளருமான சுப்ரியா சாஹூ, ‘‘கோவை மதுக்கரையில் ‘ஏ டிராக்’ தண்டவாளத்தில் 1.78 கிலோமீட்டர், ‘பி டிராக்’ தண்டவாளத்தில் 2.8 கிலோமீட்டர் தொலைவு, என இரண்டும் 12 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 7.24 கோடியில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற திட்டம் இதுவரை இல்லை, இது நாட்டின் முதல் முயற்சி,” என்றார்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டுமென யோசித்து, தாங்களாகவே இத்திட்டத்தை உருவாக்கி, ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை வைத்து திட்டத்தைச் செயல்படுத்தியதாகவும் சுப்ரியா சாஹூ கூறினார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் யானைகள் கண்காணிப்பு திட்டத்தின் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டு இதுவரை மட்டுமே, 388க்கும் மேற்பட்ட எச்சரிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் அவர்.
அதோடு, ‘‘யானை தண்டவாளத்திலோ, அதற்கு அருகில் வன எல்லையிலோ நின்றால், செயற்கை நுண்ணறிவு தாமாக யானைகளைக் கண்டறிந்து நமக்குத் தகவல் தருகிறது. பணியாளர்கள் மூலம் யானைகள் வனத்தினுள் விரட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு அருகே, யானைகள் வனத்தினுள் கடந்து செல்ல இரண்டு இடங்களில் சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களால் யானைகள் தண்டவாளத்தைப் பாதுகாப்பாகக் கடந்து செல்வதுடன், யானை – ரயில் மோதல் விபத்து சம்பவங்கள் தவிர்க்கப்படுகின்றன.
அதிக ரயில் விபத்துகள் ஏற்படும் கோவை, தருமபுரி, ஓசூர் மற்றும் மனித – யானை மோதல் அதிகளவில் நிகழும் கூடலூர் என, ஐந்து இடங்களில் இத்திட்டத்தை விரைவில் வனத்துறை செயல்படுத்த உள்ளது,’’ என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் சந்தோஷ், ‘‘தண்டவாளத்தில் நின்ற யானை, தண்டவாளத்தின் இருபுறமும் 100 அடிக்குள் நின்ற யானைகள், வனத்தினுள் இருந்து தண்டவாளத்தை நோக்கி நகரும் யானைகள் என அனைத்தையும் பற்றி எச்சரிக்கைகளை வழங்கியுள்ளோம். அந்த வகையில்தான் 6 மாதத்தில் 388 எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், யானைகள் தண்டவாளத்தில் நின்ற சம்பவம் என்றால் அதிகபட்சமாக, 60 சம்பவங்கள்தான் இருக்கும்,’’ என விளக்கியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
‘பயணம் மிக எளிதாகிறது – விபத்து தவிர்க்கப்படுகிறது’
இந்த வழித்தடத்திலுள்ள எட்டிமடை ரயில்வே நிலைய அலுவலர் செளவுரவ் குமார், ‘‘இந்த கேமரா திட்டம் வருவதற்கு முன்பு யானைகள் எங்கு நிற்கிறது, எத்தனை யானைகள் நிற்கின்றன என எந்தத் தகவலும் தெரியாது.
பகலிலாவது லோகோ பைலட்கள் மெதுவாக வருவார்கள், கண்களால் வனத்தைப் பார்க்க முடியும். ஆனால் இரவு நேரங்களில் எதுவுமே தெரியாது. இந்தத் திட்டம் துவங்கப்பட்டபின், இரவு நேரங்களிலும் யானைகள் குறித்த தகவலை வனத்துறை வழங்குகின்றனர்,” என்றார்.
“யானை எந்த மைல் (கி.மீட்டர் தொலைவில்) கல் அருகே நிற்கிறது, எத்தனை யானைகள் நிற்கின்றன, தண்டவாளத்தில் நிற்கிறதா இல்லை அருகிலா என அனைத்து தகவல்களையும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
யானை நிற்பதாக தகவல் வந்ததும் நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிப்போம், லோகோ பைலடுக்கு கட்டுப்பாட்டு அறை தகவல் உடனடியாகத் தெரிவித்ததும், சாதாரணமாக 70 கிலோமீட்டருக்கு மேல் செல்லும் ரயிலின் வேகத்தை 20 – 30 கி.மீ வேகமாகக் குறைப்பார்கள்.
மேலும், 2 கி.மீ தொலைவுக்கு முன்பிருந்தே ஹாரன் அடித்துக்கொண்டு பாதுகாப்பாக வருவார்கள். இந்தத் திட்டம் யானைகள் விபத்தில் சிக்குவதைத் தவிர்க்கிறது,’’ என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்