மாலத்தீவு ஒரு சிறிய தீவு நாடு. 300 சதுர கிலோமீட்டர் தான் அதன் பரப்பளவு.
பரப்பளவில் ஒப்பிட்டுப் பார்த்தால், மாலத்தீவை விட டெல்லி மட்டுமே ஐந்து மடங்கு பெரியது.
மாலத்தீவு என்பது சுமார் 1,200 சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக் குழுவாகும். மாலத்தீவின் மொத்த மக்கள் தொகை வெறும் 5.21 லட்சம்.
புவியியல் ரீதியாக உலகில் மிகவும் முக்கியமான நாடு மாலத்தீவு என்று கூறப்படுகிறது.
மாலத்தீவிற்குள் கூட, கப்பல் பயணம் மூலம் வெவ்வேறு தீவுகளை அடையலாம்.
பலர் இந்த உண்மைகளை மேற்கோள் காட்டி, இதையும் மீறி மாலத்தீவு இந்தியாவுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது என்று விமர்சிக்கிறார்கள்.
இந்தியாவின் புகழ்பெற்ற உத்திரீதியாகச் செயல்படும் துறையைச் சேர்ந்த நிபுணர் பிரம்மா செல்லனி தமது ட்விட்டர் பதிவில், “இந்தியப் பெருங்கடல் நாடான மாலத்தீவில் ஐந்தரை லட்சம் பேர் மட்டுமே வாழ்கின்றனர்.
“ஆனால், அதன் புதிய சீன ஆதரவு அதிபர், தனது பெய்ஜிங் பயணத்தின் மூலம், மாலத்தீவுக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஹெலிகாப்டர்களை பராமரிக்கும் வகையில், இந்தியாவுக்கு காலக்கெடு கொடுத்து, இந்தியா குறித்து ஆக்ரோஷமான அறிக்கைகளை வெளியிடும் அளவுக்கு தைரியத்தைப் பெற்றுவந்துள்ளார்,” என்று பதிவிட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் பராமரிப்புக்காக இருக்கும் டஜன் கணக்கான வீரர்களை இந்தியாவுக்கு அவர் திருப்பி அனுப்ப அதிபர் முய்சு கெடுவிதித்துள்ளார்.
மாலத்தீவு ஏன் மிகவும் முக்கியமானது?
மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு கடந்த வாரம் சீனாவுக்கு ஐந்து நாள் பயணமாகச் சென்றுவந்தார்.
நாடு திரும்பிய பிறகு, “மாலத்தீவு, சிறியதாக இருக்கலாம், ஆனால் இதனால் மட்டுமே எந்த நாடும் மாலத்தீவை மிரட்ட முடியாது,” என்று தலைநகர் மாலேயில் முகமது முய்சு கூறினார்.
முய்சு இந்தியாவின் பெயரை வெளிப்படையாகப் பயன்படுத்தாவிட்டாலும், அவரது பேச்சு இந்தியாவை மட்டுமே குறிக்கும் என்று கூறப்படுகிறது.
மாலத்தீவுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய அரசிடமிருந்து வெளிப்படையாக வலுவான எதிர்வினை எதுவும் எழவில்லை. ஆனால் முய்சு அரசாங்கம் அதன் நிலையில் தொடர்ந்து உறுதியாக உள்ளது.
இந்தியா தனது ராணுவ வீரர்களை மார்ச் 15-ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று மாலத்தீவு கெடு விதித்துள்ளது. இது போன்ற நிலையில் மாலத்தீவின் இந்த எதிர்மாறான நிலையை இந்தியா ஏன் அமைதியாக வேடிக்கை பார்த்துககொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
மாலத்தீவு இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான நாடு என்பதால் தான் அதன் ஆக்ரோஷமான கோபத்தைக் கூட பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இந்தியா உள்ளதா?
மாலத்தீவு அமைந்திருக்கும் இடம்தான் அதன் சிறப்பு. மாலத்தீவு இந்தியப் பெருங்கடலின் முக்கிய கடல் வழிகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தப் பாதைகள் வழியாகத் தான் சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த வழியாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எரிசக்தி அனுப்பப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில், மாலத்தீவுடனான இந்தியாவின் உறவை மோசமாக்குவது எந்த வகையிலும் சரியானது எனக் கருதப்படவில்லை.
தற்போது மாலத்தீவு இந்தியாவை மிக அதிகமாக எதிர்ப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் இதற்கு எதிர்வினையாற்றினால் மாலத்தீவு மக்களின் கோபத்தை இந்தியா எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும், பின்னர் அதைச் சரிசெய்வது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் கருதப்படுகிறது.
இது போன்ற ஒரு சூழ்நிலையில், மாலத்தீவு அரசியலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும்.
மாலத்தீவு முஸ்லீம் பெரும்பான்மையைக் கொண்ட நாடு. இந்தியாவில் வகுப்புவாத மோதல்களின் தாக்கம் அங்கேயும் உணரப்படுகிறது. நூபுர் சர்மா விவகாரத்திலும் மாலத்தீவின் எதிர்வினை அதிகமாகவே இருந்தது. இணைய உலகத்தில், உள்நாட்டு அரசியல் தகராறுகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையாக மாறுவது முற்றிலும் இயல்பானதே.
இந்தியப் பெருங்கடலில் போட்டி அதிகரிக்குமா?
சமீபத்திய தசாப்தங்களில், இந்தியப் பெருங்கடலில் பொருளாதார மற்றும் ராணுவ நடவடிக்கைகள் மீதான போட்டி அதிகரித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சீனா தனது இருப்பை அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில், மாலத்தீவு அதனுடன் வந்தால், அது காலூன்றுவதற்கு மேலும் உதவி கிடைக்கும்.
மாலத்தீவின் தற்போதைய முய்சு அரசாங்கம் வெளிப்படையாக சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. முய்சு தேர்தலில் வெற்றி பெற்றபோது, மாலத்தீவில் சீன ஆதரவு வேட்பாளர் வெற்றி பெற்றதாக தலைப்புச் செய்தி வந்தது.
மாலத்தீவு அதன் அரசியலமைப்பை ஜூலை 2015-இல் திருத்தியது. இதன் கீழ் வெளிநாட்டிற்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதற்குப் பிறகு, மாலத்தீவில் சீனா வியூக ரீதியிலான தளங்களை உருவாக்கும் என்ற ஊகங்கள் வலுப்பெற்றன.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் சனிக்கிழமை நாக்பூரில் உள்ள மந்தன் டவுன்ஹாலில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, மாலத்தீவுடனான உறவு மோசமடைந்து வருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அவர், “அரசியல் என்பது அரசியல் தான். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் எங்களை ஆதரிப்பார்கள் அல்லது எங்களுடன் உடன்படுவார்கள் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது.
“கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளோம். பல சந்தர்ப்பங்களில் நாங்கள் வலுவான தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளோம். அரசியலில் கொந்தளிப்பு நிலவுகிறது. ஆனால் அங்குள்ள சாமானியர்களுக்கு இந்தியாவைப் பற்றி நல்ல அபிப்பிராயம் உள்ளது. இந்தியாவுடன் நல்லுறவின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்குத் தெரியும்,” என்றார்.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்தியாவின் முன்னாள் ராஜதந்திரிகளும் முய்சு அரசின் கோபத்திற்கு எதிர்மறையாக எதிர்வினையாற்றாமல் புத்திசாலித்தனமாக செயல்படுமாறு அறிவுறுத்துகின்றனர்.
தி இந்து ஆங்கில செய்தித்தாளிடம் பேசிய முன்னாள் இந்திய தூதரக அதிகாரி ராகேஷ் சூட், “முய்சு தனது தனிப்பட்ட கொள்கைகளின்படி அரசியல் செய்கிறார். மேலும் அதன் மூலம் பயனடையவும் அவர் விரும்புகிறார். அவருடைய அமைச்சர்கள் வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஆனால் எதிர்மறையான பதில் கொடுக்கும் நிலைமை இந்தியாவுக்கு நல்லதல்ல. சமூக-பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை மாலத்தீவுக்கு இந்தியா உணர்த்துவதுதான் சரியாக இருக்கும்,” என விளக்கினார்.
மாலத்தீவின் இறையாண்மை மற்றும் சுதந்திரம் இப்ராகிம் சோலி ஆட்சியில் இருந்த போது சமரசம் செய்யப்பட்டதாக முய்சு நம்புகிறார்.
இப்ராகிம் சோலியின் அரசு இந்தியா ஆதரவு அரசு என்று அழைக்கப்பட்டது. மாலத்தீவில் இந்திய வீரர்கள் இருப்பதற்கு எதிராக முய்சு பேசி வருகிறார். மேலும் அதிபராகப் பதவியேற்ற பிறகு அவர்களை நீக்குவதற்கான காலக்கெடுவை இப்போது விதித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் ‘இந்தியா அவுட்’ பிரசாரத்தையும் முன்னிறுத்தினார்.
முய்சு தலைவராக இருக்கும் முற்போக்குக் கூட்டணிக் கட்சி, இப்ராகிம் சோலியின் ஆட்சியின் போது இந்தியாவுடன் கையெழுத்திட்ட மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்களும் மாலத்தீவின் இறையாண்மைக்கு எதிரானவை என்று நம்புகிறது.
இந்த மூன்று ஒப்பந்தங்களில் இருந்து மாலத்தீவை முய்சு அரசு பிரித்துள்ளது. சோலி அரசாங்கம் 2021 இல் இந்தியாவுடன் ‘உதுரு திலா ஃபல்ஹூ’ (Uthuru Thila Falhu -UTF) கடற்படைத் தள உடன்படிக்கையில் கையெழுத்திட்டபோது, எதிர்க்கட்சிகள் மேலும் ஆக்ரோஷமாக மாறின. இது ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம். இதன் கீழ் தேசிய பாதுகாப்பு படை, கடலோர காவல்படை, துறைமுகம் ஆகியவை கூட்டாக உருவாக்கப்பட வேண்டும்.
அதிபர் தேர்தலில் இந்தியாவுக்கு எதிரான பிரசாரம்
கடந்த ஆண்டு மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு, இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் பிரபலமானது.
சில மாதங்களிலேயே, முன்னாள் அதிபர் யாமீன் பல பிரச்னைகளால் தேர்தலில் பங்கேற்க முடியாததால், எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளராக முகமது முய்சு உருவெடுத்தார்.
அதிபராகப் பதவியேற்றதற்கு முன், மாலத்தீவின் தலைநகரான மாலேயின் மேயராக முய்சு பதவி வகித்தார். இப்ராகிம் சோலி தனது வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளித்து, ‘இந்தியா முதலில்’ என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டார். சோலியின் தலைமையில், மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
முய்சு அதிபராகப் பதவியேற்றவுடன், அவர் தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் செய்து இந்தியாவிலிருந்து மாலத்தீவை விலக்கிவைப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் துருக்கி பயணம் தான். இதற்கு முன்னர் மாலத்தீவின் புதிய அதிபரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவிற்கு மேற்கொள்ளப்பட்டு வந்ததால், முய்சு ஒரு பாரம்பரியத்தை உடைத்தார்.
துருக்கிக்குப் பயணத்துக்குப் பின்னர், முய்சு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று சமீபத்தில் சீனப் பயணம் மேற்கொண்டார். பின்னர் அவர் மாலத்தீவுக்குத் திரும்பினார். முய்சு சீனாவை ஒரு முக்கிய நட்பு நாடு என விவரித்துள்ளதுடன், பல முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்.
பதவியேற்ற பிறகு தேசத்திற்கான தனது முதல் உரையில், மாலத்தீவில் இருந்து இந்திய துருப்புக்கள் திரும்பப் பெறப்படுவதை முய்சு மீண்டும் வலியுறுத்தினார். நாட்டின் சுதந்திரமும் இறையாண்மையும் தனது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.
2019-ஆம் ஆண்டில், மாலத்தீவின் கடல் பகுதியில் கணக்கெடுப்பு தொடர்பாக இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது. அது முய்சுவின் அரசாங்கத்தால் முடிவுக்கு வந்தது. இப்ராகிம் சோலி அதிபராகப் பதவி வகித்தபோது பிரதமர் மோதி மாலத்தீவுக்கு சென்றிருந்தார். அப்போது, ஹைட்ரோகிராஃபிக் சர்வேயிங் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை அதிகரிப்பதே இதன் நோக்கமாக இருந்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக சோலி அரசும் எதிர்க்கட்சிகளின் இலக்காக இருந்தது. டிசம்பரில் முய்சு அரசாங்கம் இந்த ஒப்பந்தம் தொடராது என்று அறிவித்தது.
இந்த உடன்படிக்கைகளில் இருந்து பிரிந்திருப்பதன் காரணமாக சீனாவுடன் முய்சுவின் நெருக்கம் அதிகரித்து வருவதாகக் கருதப்படுகிறது. மாலத்தீவில் சோலியின் ஆட்சியின் போது இந்தியாவுக்கு இருந்த பாதுகாப்பு முனை இப்போது சீனாவுக்கு முற்றிலும் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்