கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டுவரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (குசாட்) நேற்று மாலை நடைபெற்ற விழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குசாட்டின் கீழ் உள்ள ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் சார்பாக நவம்பர் 24 முதல் இன்று வரை டெக் ஃபெஸ்ட் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் மாணவர்களை அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் விழா ஏற்பாட்டாளர்கள், அவர்களுக்கு டி- சர்ட்டுகளை வழங்கியிருந்தனர்.
விழா நடைபெற்ற போது மாணவர்களின் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்ட பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மூன்று நாட்கள் நடக்கும் விழாவில் மாணவர்களின் உயிரை பறித்த சம்பவமாக ஒரு இசை நிகழ்ச்சி அமைந்துவிட்டது.
பல்கலைக் கழக விழாவில் என்ன நடந்தது?
பல்கலை கழக வளாகத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப விழாவின் இதில் இரண்டாம் நாளான நேற்று மாலை ஹிந்தி திரை நட்சத்திர பாடகியான நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சி ஒரு திறந்தவெளி அரங்கத்தில் நடக்க இருந்தது. இந்த அரங்கத்தில் சுமார் 1,500 பேர் மட்டுமே இருந்து நிகழ்ச்சியை காண முடியம்.
ஆனால் அரங்க்த்திற்குள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. நேற்று மாலை 7 மணியளவில், அரங்கத்திற்கு வெளியே நின்றிருந்தவர்கள், திடீரென் பெய்த மழையின் காரணமாக அரஙகத்திற்குள்ளே நூழைந்துள்ளனர்.
படிகளில் நின்றிருந்தவர்கள் மீது, வெளியில் இருந்து வந்தவர்கள் வேகமாக மோதித் தள்ளியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிலர் கீழேவிழும் நிலை ஏற்பட்டது.
இக்கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், இதில் பாதிக்கப்பட்ட மூன்று பேர் கவலைக்கிடமாகவும், 60 க்கும் மேற்பட்டோர் காயங்களுடனும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மாணவர் நல இயக்குநர் அளித்த தகவல்
“மழை பெய்யத் தொடங்கியபோது வெளியில் காத்திருந்த மக்கள் அரங்கத்திற்குள் விரைந்ததால் நெரிசல் ஏற்பட்டது. அதிகமானோர் வந்ததால், படிக்கட்டுகளின் மேல் இருந்தவர்கள் கீழே உள்ளவர்கள் மீது விழுந்தனர்,” என குசாட் மாணவர் நலன் இயக்குனர் டாக்டர் பி.கே.பேபி நம்மிடம் தெரிவித்தார்.
அந்த அரங்கத்தில் திடீர் விபத்து ஏற்பட்டால் தப்பிச் செல்ல அவசர வழி இல்லாததே உயிரிழப்புக்கான முக்கிய காரணம் என நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “அதிக எண்ணிக்கையிலான மாணவர்களின் திடீர் வருகையால், படிக்கட்டுகளில் நின்ற பலர் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர் என்றும், மற்றவர்கள் கீழே விழுந்த நபர்களை மிதித்ததால் பலத்த காயம் ஏற்பட்டது என்றும் கூறினார். தொழில்நுட்ப விழா என்பதால், மற்ற கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்” என்றும் அவர் கூறினார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு
மாணவர்களின் மரணம் குறித்து அறிந்து கொள்ளவும், தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோழிக்கோடு அரசு விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு அவசரக் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் பேசிய அவர், உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்தார்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய விஜயன், இன்று வடக்கு மாவட்டத்தில் நவ கேரள சதஸ் நிகழ்ச்சி தொடர்பாக திட்டமிடப்பட்டிருந்த அனைத்து கலாச்சார மற்றும் கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
அவர் அமைச்சர்கள் பி ராஜீவ் மற்றும் ஆர் பிந்து ஆகியோரை சம்பவ இடத்திற்கு செல்ல உத்தரவிட்டதுடன், காயமடைந்த அனைவருக்கும் உயர்தர சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டார். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் இது சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பார் என்றும் அவர் அறிவித்தார்.
காவல் துறையில் அனுமதி பெறவில்லை
குசாட்டில் நிகழ்ச்சி நடப்பதாக காவல்துறைக்கு எழுத்துப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கொச்சி காவல் துணை ஆயைணர் கே.எஸ்.சுதர்சன் தெரிவித்தார்.
“விழா குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையிலும், இங்கு மாணவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதால், கடந்த சில வாரங்களாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிகழ்ச்சியின் அனுமதிக்கான விண்ணப்பத்தை ஏற்பாட்டாளர்கள் காவல் துறையிடம் வழங்கவில்லை. விழா அமைப்பாளர்கள் தரப்பில் தவறு நடந்ததா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி வருகிறோம்,” என்றார் அவர்.
பல்கலைக் கழக துணைவேந்தர் மறுப்பு
ஆனால், இந்நிகழ்ச்சி நடக்கும் தகவலை காவல்துறைக்கு தெரிவித்திருந்ததாக, கொச்சி பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். பி.ஜி. சங்கரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “உயரதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியதன்படி ஆறு போலீசார் இந்நிகழ்ச்சியின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், நிகழ்ச்சிக்கு எத்தனை பேர் வருவார்கள்? நிகழ்ச்சியின் இயல்பு என்ன? என எந்த காவல் துறை தரப்பில் எதுவும் கேட்கப்படவில்லை. காவல்துறையினர் பணியில் ஈடுபட்ட பகுதியிலிருந்து இச்சம்பவம் நிகழவில்லை,” என்று தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் யார்?
இந்த விபத்தில் கூத்தாட்டுக்குளத்தைச் சேர்ந்த அதுல் தம்பி, வடக்கு பரவூரைச் சேர்ந்த ஆன் ருப்தா மற்றும் தாமரச்சேரியைச் சேர்ந்த சாரா தாமஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் மூவரும் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர்கள். கூட்ட நெரிசலில் உயிரிழந்த நான்காவது நபர் பாலக்காட்டை சேர்ந்த ஆல்வின் ஜோசப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்,
உயிரிழந்தவர்களில் இருவர் களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
மூச்சுத்திணறலால் உயிரிழப்பு – அமைச்சர் தகவல்
இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “குசாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் மூச்சுத்திணறல் தான் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் உள்ளே தள்ளப்பட்டபோது நால்வரும் மூச்சுத்திணறி இறந்ததாக முதல்கட்ட ஆய்வுகள் கூறுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
“கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, காயமடைந்தவர்கள் மொத்தம் 56 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். களமசேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 பேர் வார்டுகளிலும், 3 பேர் ஐசியுவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்டர் மெட்சிட்டியில், ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட மூன்று மாணவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனதாகவும் அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. கிண்டர் மருத்துவமனையில் இருந்து 16 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்,” என்று வீணா ஜார்ஜ் கூறினார்.
இதற்கிடையே, கொச்சி பல்கலைக்கழகத்தின் ஆண்டு விழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தது மற்றும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
மூன்று பேரின் உடல்களுக்கு அஞ்சலி
தொழில்நுட்ப விழாவின் ஒரு பகுதியாக நடந்த குசாட் கச்சேரியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக கல்லூரி வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டன. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர், சாரா தாமஸ், அதுல் தம்பி மற்றும் ஆன் ரிப்தா ஆகியோரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
முண்டூரை சேர்ந்த ஆல்வின் ஜோசப், பணி நிமித்தமாக வளைகுடாவுக்கு செல்ல தயாராக இருந்தார் என்றும், இங்கு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்துக் கொண்டிருந்த இவர், நீண்ட நாட்களாக வெளிநாட்டில் வேலை தேடி முயற்சி செய்து வந்தார் என்றும், ஆல்வினின் அகால மரணத்தால், அவரது குடும்பத்தினர் நம்பிக்கை இழந்து தவிப்பதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சாராவின் இறுதிச்சடங்கு, எங்கப்புழா புனித ஜார்ஜ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெறும். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் அவரது உடல் தாமரச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பிந்து அறிக்கை
செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் பிந்து, “எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நிபுணர் குழு போதுமான விதிமுறைகளை உருவாக்கும்.
மேலும், இந்த துயர சம்பவம் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளரிடம் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதுமான தயார்நிலை இருப்பதை உறுதிசெய்வதற்கு ஏற்பாட்டாளர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
அனைத்து அறிக்கைகளும் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மாணவரல்லாத ஆல்வின் உயிரிழந்தது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பனங்காட்டில் வசிக்கும் சகோதரியை சந்திப்பதற்காக ஆல்வின் தனது நண்பருடன் சனிக்கிழமை காலை 7 மணியளவில் கொச்சிக்கு சென்றார். அதன் பின் அவர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க குசாட் சென்றார்.
“அவர் எனக்குப் பிறக்கவில்லை என்றாலும், எனக்கு எப்போதும் உதவி செய்யத் துடிக்கும் மகனைப் போல் இருந்தார். என்னைக் கூப்பிடாமல் எங்கள் வீட்டைக் கடந்து ஒருபோதும் அவர் சென்றதில்லை,” என ஆல்வினின் பக்கத்து வீட்டுக்காரர் கண்ணீருடன் கூறினார்.
ஆல்வின் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்துக்கு கேரள வங்கியில் ரூ.4 லட்சம் கடன் உள்ளது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கடனை ஆல்வினின் தந்தை தனது குழந்தைகளின் கல்விச் செலவுக்காக வாங்கினார். அவரது தந்தை ரப்பர் தட்டும் கூலித் தொழில் செய்துவருகிறார். ஆல்வின் வளைகுடா நாடுகளில் வேலை செய்து இந்த கடனை அடைக்கத் திட்டமிட்டிருந்தார். தற்போது அவரது மறைவு அந்த குடும்பத்திற்கு பேரிடியாக அமைந்துவிட்டது.
கல்லூரி இசை நிகழ்ச்சியில் நான்கு பேரின் உயிரிழப்பைத் தொடர்ந்து பாதுகாப்பின் முக்கியத்துவத்தை இனிமேலாவது கல்வியாளர்களும், ஆட்சியர்களும் உணர வேண்டும் என்பதே பொதுமக்க்ளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்