வடகிழக்கு இந்தியாவில் இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று, கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்தனர். அந்தக் கொடூரமான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் பிபிசியிடம் முதல் முறையாக நேருக்கு நேர் பேட்டியளித்துள்ளனர்.
அவர்கள், தங்களின் தலைமறைவு வாழ்க்கை, நீதிக்கான போராட்டம் மற்றும் தங்களின் சமூகத்திற்கு தனி நிர்வாகத்திற்கான கோரிக்கை உள்ளிட்டவை குறித்து பிபிசியிடம் பேசினார்கள்.
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் வன்முறை பற்றிய விளக்கங்கள் உள்ளன.
நான் முதலில் அவர்களது தாழ்ந்த கண்களை மட்டுமே பார்த்தேன்.
பெரிய கருப்பு முகத்திரைகள், குளோரி மற்றும் மெர்சியின் முகங்களை மறைக்கின்றன. அவர்களின் தாவணிகள், அவர்களின் நெற்றியை மறைக்கின்றன.
அந்த இரண்டு குக்கி-ஜோமி பெண்கள் மற்றவர்களால் பார்க்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால், தங்களின் குரல்கள் வெளியே கேட்கப்பட வேண்டும் என விரும்பினர்.
அவர்களின் வேதனை படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது. ஒரு நிமிடத்திற்கும் குறைவான அந்த வீடியாேவில், நிர்வாணமாக இருந்த இரண்டு பெண்களைச் சுற்றி மெய்தேய் ஆண்களின் கும்பல் நடந்து செல்வதையும், அவர்களைத் தள்ளுவதும், தடுமாறச் செய்வதும், பின்னர் அவர்கள் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறும் ஒரு வயலுக்கு இழுத்துச் செல்வதையும், காட்டுகிறது.
“நான் ஒரு விலங்கு போல நடத்தப்பட்டேன். அந்த அதிர்ச்சியுடன் உயிருடன் இருப்பதே போதும் என்றிருந்தது. ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தாக்குதலின் வீடியோ வைரலானபோது, தொடர்ந்து வாழ்வதற்கான அனைத்து நம்பிக்கையையும் இழந்துவிட்டேன்,” என்று குளோரி உடைந்து கூறுகிறார்.
“இந்திய சமூகம் எப்படி இருக்கிறது, இதுபோன்ற சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்கிறார் மெர்சி.
“எனது சொந்த சமூகத்தில் கூட மற்றவர்களை எதிர்கொள்வது எனக்கு கடினமாக உள்ளது. என் மானம் போய்விட்டது. நான் இனி ஒருபோதும் பழைய மாதிரி இருக்க முடியாது. ”என்கிறார் அவர்.
அந்த வீடியோ அவர்களின் துன்பத்தை மேலும் அதிகரித்தது, ஆனால், அது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான சாட்சியாகவும் இருந்தது. மேலும், மே மாதத்தில், மணிப்பூரில் வெடித்த மெய்தேய் மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையேயான இன மோதல்களை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றது.
‘மக்களை சந்திப்பதற்கு பயமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது’
ஒரு வகையில், அந்த வீடியோ பொது மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தி, நடவடிக்கைக்கு தூண்டினாலும், இந்த பெண்கள் மீது ஏற்பட்ட கவனம், அவர்களை இந்தப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கச் செய்தது.
தாக்கப்படுவதற்கு முன்பு, குளோரி ஒரு மாணவராக இருந்தார், மெர்சி தனது இரண்டு இளம் குழந்தைகளை கவனித்துக் கொள்வதிலும், வீட்டுப் பாடங்களுக்கு உதவுவதிலும், தேவாலயத்திற்குச் செல்வதிலும் கவனம் செலுத்தி வந்தார்.
ஆனால், தாக்குதலுக்குப் பிறகு இரு பெண்களும் வேறு ஊருக்கு தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, அங்கு அவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நான்கு சுவர்களுக்குள் முடங்கியிருக்கும் மெர்சி தற்போது தேவாலயத்திற்குச் செல்வதில்லை, தனது குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதில்லை.
“நான் முன்பு வாழ்ந்ததைப் போல என்னால் மீண்டும் வாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறுவது எனக்கு கடினமாக உள்ளது, மக்களை சந்திப்பதற்கு பயமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது,” என்றார் மெர்சி.
குளோரியும் அப்படித்தான் உணர்கிறார், அவர் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், மக்களைச் சந்திக்க பயப்படுவதாகவும், கூட்டத்தைக் கண்டு பயப்படுவதாகவும் பிபிசியிடம் கூறினார்.
மனநல ஆலோசனை அவர்களுக்கு உதவியது என்றாலும், அவர்களுக்குள் கோபமும் வெறுப்பும் ஆழமாக ஊடுருவியிருந்தது. இனி எந்த ஒரு பெண்ணும் இப்படி நடத்தப்படக்கூடாது என்பதற்காக அவர்கள் பேச முடிவு செய்துள்ளனர்.
ஆறு மாதங்களுக்கு முன்பு, குளோரி, ஒரு கல்லூரியில் மெய்தேய் மற்றும் குக்கி சமூக மாணவர்கள் கலந்து இருந்த வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். ஆனால் இப்போது அவர் இனி எந்த ஒரு மெய்தேய் நபரையும் பார்க்க விரும்பவில்லை எனக் கூறுகிறார்.
‘அவர்கள் என் கண் முன்னே இறப்பதை நான் பார்த்தேன்’
“இனி, என் கிராமத்திற்கு நான் ஒருபோதும் செல்லமாட்டேன். நான் அங்கு தான் வளர்ந்தேன், அது எனது வீடு, ஆனால், இனி நான் அங்கு வாழ்வது அக்கம் பக்கத்தில் இருக்கும் மெய்தேய் இனத்தவருடன் பழக வேண்டிய நிலை ஏற்படும். நான் மீண்டும் அவர்களை சந்திக்கவே விரும்பவில்லை,” என்றார் அவர். மெர்சியும் அதனை ஒப்புக்கொண்டார்.
அவர்களது கிராமம் தாக்கப்பட்டு, அனைவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியபோது, குளோரியின் தந்தையும் தம்பியும் கும்பலால் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.
“அவர்கள் என் கண் முன்னே இறப்பதை நான் பார்த்தேன்,” என அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாகக் கூறினார் குளோரி. தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சியில், தனது தந்தை மற்றும் தம்பியின் உடல்களை வயலில் விட்டுச் செல்ல வேண்டியிருந்ததாகக் கூறுகிறார் குளோரி.
இப்போது அவர்களைத் தேடிச் செல்ல முடியாது என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
வன்முறை வெடித்ததில் இருந்து, மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குக்கி-ஜோமி சமூகங்களுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை. இரு சமூகங்களின் தன்னார்வளர்கள், போலீஸ் மற்றும் ராணுவத்தின் சோதனைச் சாவடிகளால் எல்லைக்கள் பிரிக்கப்பட்டு, மக்கள் அதற்குள் தான் வாழ்கிறார்கள்.
“அவர்களின் உடல்கள் எந்த சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன என்று கூட எனக்குத் தெரியவில்லை, என்னால் சென்று சரிபார்க்கவும் முடியாது. அரசு அவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்,” என்கிறார் குளோரி.
தாக்குதலில் வீடுகளும் கிராம தேவாலயமும் எப்படி தீக்கிரையாக்கப்பட்டன என்பதை மெர்சியின் கணவர் பிபிசியிடம் விவரித்தார்.
“நான் உள்ளூர் காவல்துறையை அழைத்தேன், ஆனால் அவர்களால் எங்களுக்கு உதவ முடியாது என்று சொன்னார்கள். காவல் நிலையமும் தாக்குதலுக்கு உள்ளானது. நான் சாலையில் ஒரு போலீஸ் வேனைப் பார்த்தேன், ஆனால் அவர்களும் எதுவும் செய்யவில்லை,” என்றார் அவர்.
“என்னுடைய இயலாமையால் நான் சோகமாகவும் கோபமாகவும் உணர்கிறேன். என்னால் என் மனைவியையும் கிராம மக்களையும் காப்பாற்ற முடியவில்லை. சில நேரங்களில் நான் நடந்த அனைத்தையும் நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். துக்கம் மற்றும் கோபத்தில் மூழ்கியிருப்பதால், யாரையாவது கொல்ல வேண்டும் என்று உணர்கிறேன்.” என்றார் மெர்சியின் கணவர்.
‘வீடியோ வெளியாகும்வரை எந்த நடவடிக்கையும் இல்லை’
தாக்குதல் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் காவல்துறையில் புகார் அளித்தார், ஆனால் ஜூலை மாதம் வீடியோ வெளியாகும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த காவல் நிலையத்தில் இருந்த ஒரு அதிகாரி மற்றும் நான்கு காவலர்களை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் பிபிசியிடம் கூறினர்.
அந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து ஏற்பட்ட பரவலான சீற்றம், வன்முறை குறித்து தனது முதல் கருத்தை வெளியிட பிரதமர் நரேந்திர மோதியை கட்டாயப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
தாக்குதலின் வீடியோ இணையத்தில் பரவத் தொடங்கியதிலிருந்து தங்களுக்கு கிடைத்த ஆதரவால் தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக குளோரி, மெர்சி மற்றும் அவரது கணவர், பிபிசியிடம் கூறினர்.
“வீடியோ இல்லாமல், யாரும் உண்மையை நம்ப மாட்டார்கள், எங்கள் வலியைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்” என்றார் மெர்சியின் கணவர்.
மெர்சி இன்னும் கவலைப்படுகிறார். எதிர்காலத்தைப் பற்றியும், தனது குழந்தைகளைப் பற்றியும் நினைத்து அவர் பயப்படுகிறார்.
“இது என்னை மிகவும் தாழ்வாக நினைக்க வைக்கிறது,” என்றார் அவர்
தங்கள் சமூகத்திற்கென தனி நிர்வாகம் வேண்டும் என்று குளோரி கேட்டார்.
“பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கான ஒரே வழி அதுதான்” என்றார் அவர்
குக்கி மக்கள் இந்த சர்ச்சைக்குரிய கோரிக்கையை பலமுறை முன்வைத்துள்ளனர், ஆனால் மெய்தேய் சமூகத்தால் இது எதிர்க்கப்படுகிறது, மாநிலத்தின் முதலமைச்சர், மெய்தேய் சமூகத்தை சேர்ந்தவர். மணிப்பூர் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்ற அவர் பலமுறை வலியுறுத்தியுள்ளார்.
‘படிப்பை தொடர முடியும்’ – பாதிக்கப்பட்ட பெண் நம்பிக்கை
குளோரிக்கும், மெர்சிக்கு மாநில அரசு மீது சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும், அது தங்கள் சமூகத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினர். ஆனால் மாநில அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
இன மோதல்களை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, அனைத்து வன்முறை வழக்குகளின் விசாரணையையும் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரைக்க இந்த வீடியோ காரணமானது.
கொல்லப்பட்டவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்காலத்தில், குளோரி தனது படிப்பை வேறு கல்லூரியில் மீண்டும் தொடங்க முடியும் என நம்புகிறார். அப்படி படிப்பை தொடர்வதன் மூலம், அவர் ராணுவம் அல்லது காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற தனது கனவைத் தொடர முடியும்.
‘பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள்’
“அனைவருக்கும் எந்தச் சார்பும் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் தற்போது மேலோங்கியுஎள்ளது. எனக்கு நியாயம் வேண்டும். அதனால்தான் நான் பேசுகிறேன், இனி எந்தப் பெண்ணும் நான் பாதிக்கப்பட்டதைப்போல பாதிக்கக்கூடாது,” என்றார் குளோளி.
“பழங்குடியினப் பெண்களாகிய நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், நாங்கள் கைவிட மாட்டோம்” என மெர்சி பிபிசியிடம் கூறினார்.
அந்தப் பெண்களுடனான பேட்டியை முடிந்துக்கொண்டு பிபிசி குழு வெளியேற எழுந்தபோது, தன்னிடம் ஒரு செய்தி இருப்பதாக மெர்சி கூறினார்.
“அனைத்து சமூகத்தைச் சேர்ந்த அனைத்து தாய்மார்களுக்கும், பெண்களை அவமரியாதை செய்யக்கூடாது என தங்களின் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும் என நான் கூற விரும்புகிறேன்.” என்றார்.
இந்த கட்டுரைக்காக இரண்டு பெண்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்