கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் நிலவிவந்த ஒரு ஊகத்திற்கு திமுக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்படும் என்றும் திமுக தலைமை சனிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது. 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், ஒரு மாநிலங்களவை சீட்டுடன் முடங்கியது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
சமீப காலமாகவே கமல்ஹாசன் காங்கிரஸுக்கு நெருக்கமானவராக இருந்தார். ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ பயணத்திலும் அவர் கலந்துகொண்டார்.
இந்நிலையில், நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கும் இடங்களில் இரண்டு தொகுதிகளை மக்கள் நீதி மய்யத்திற்குக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதேநேரம், கடந்த தேர்தல்களில் குறிப்பிடத் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய தென்சென்னை மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளை கமல்ஹாசன் திமுகவிடம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், தங்களின் வலுவான தொகுதியான தென்சென்னையை விட்டுத்தர திமுக முன்வரவில்லை என்றும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான், மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, மக்களவை தேர்தலில் இக்கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என திமுக அறிவித்துள்ளது.
‘தேசத்திற்காக கைகோர்த்துள்ளோம்’
இந்த ஒப்பந்தம் இறுதியான பின்பு, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்றும் மாறாக, இக்கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த முடிவு பதவிக்கானது அல்ல என்றும் தேசத்திற்காக கைகோர்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல், அதிமுக, திமுக இரு கட்சிகளையும் விமர்சித்து வந்தார். 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது.
மக்களவை தேர்தலில் சுமார் 4% வாக்குகளையும் சட்டமன்ற தேர்தலில் சுமார் 2.5% வாக்குகளையும் பெற்றது. மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் சுமார் 1.5 லட்சம் வாக்குகளையும் தென் சென்னை தொகுதியில் சுமார் 1.44 லட்சம் வாக்குகளையும் அக்கட்சி பெற்றது.
சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் சுமார் 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
கட்சியை பலப்படுத்த தவறிவிட்டாரா?
இந்நிலையில் ஒரேயொரு மாநிலங்களவை சீட்டுக்கு கமல் திமுகவுடன் கைகோர்த்தது ஏன் என்ற கேள்வியை அரசியல் ஆலோசகரும் மூத்த பத்திரிகையாளருமான லட்சுமணனிடம் முன்வைத்தோம்.
“ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கோஷத்துடன் கட்சி ஆரம்பித்தவர் கமல்ஹாசன். அது வெற்று முழக்கமாக இல்லாமல் ஓரளவுக்கு அர்த்தம் இருக்க வேண்டும் என்றால் முதலில் கட்சி கட்டமைப்பு இருக்க வேண்டும். கிராமங்கள்தோறும் கிளைகள் இருக்க வேண்டும். இந்த அடிப்படையான விஷயங்கள் குறித்துத் துளிகூட கமல் கவலைப்படவில்லை. இதில் ஒருசதவீதத்தைக்கூட கமல் செய்யவில்லை.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அக்கட்சி பெற்ற சுமார் 4 சதவீத வாக்குகள், கமல் என்ற தனி மனிதரின் பிரபலத்திற்கும் அவர் முன்வைத்த புதிய முழக்கத்திற்காகவும்தான் கிடைத்தது. அதைத் தக்கவைக்க கட்சியைப் பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி அதில் தோற்றுவிட்டது,” என்றார்.
இந்தத் தேர்தலில் 1-2 தொகுதிகளை திமுகவிடம் கமல் கேட்டது நிஜம் என்றும் தென்சென்னை தொகுதியில் கமல் உறுதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கமல் வசிக்கும் இடம், மேல்தட்டு வகுப்பினர் பெரும்பாலானோர் உள்ள தொகுதி என்ற சாதகம் இருந்தாலும் அந்தத் தொகுதியை திமுக விட்டுக்கொடுக்க முன்வரவில்லை என லட்சுமணன் தெரிவித்தார்.
மகேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகிய பிறகு கோவையில் அக்கட்சிக்கு தளகர்த்தர் இல்லை என்பதால், அடுத்த வாய்ப்பாக கோவையை கேட்கும் கள யதார்த்தத்தையும் கமல் இழந்துவிட்டார் என அவர் கூறினார்.
“இந்த யதார்த்தமான பலவீனத்தை கமல் புரிந்துகொண்டார் என எடுத்துக்கொள்ளலாம். உதயநிதி உடனான நெருக்கம் இதற்கு ஓர் காரணமாக இருக்கலாம். பரப்புரை செய்வதற்கு ஒரு பலன் இருக்க வேண்டும் என்பதால் ராஜ்ய சபா சீட் கொடுத்திருக்கின்றனர். நிச்சயம் அந்த இடம் கமல்ஹாசனுக்குதான்” என்றார் லட்சுமணன்.
மேலும், “ஒன் மேன்’ கட்சி என்றுகூட மக்கள் நீதி மய்யத்தைச் சொல்ல முடியாது. இதே நிலைமை நீடித்தால் இக்கட்சி மிக விரைவில் காணாமல் சென்றுவிடும். வளரும் ஒரு கட்சியின் எந்த நிர்வாகிக்கும் இந்த முடிவு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்காது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கமல்ஹாசனே கட்சியைப் பலவீனப்படுத்தி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்,” என்றார்.
‘கிராமங்களை சென்றடையவில்லை’
கட்சி கட்டமைப்பு பலமாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாகவே பிபிசியிடம் பேசினார், மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் (ஊடகப்பிரிவு) முரளி அப்பாஸ்.
“கட்சியை ஆக்கபூர்வமாக உருவாக்க வேண்டும். மீண்டும் தேர்தலில் நின்று தோற்று சோர்வடைந்தால், அது தவறான முடிவாக இருக்கும்.
கிராமங்களில் நாங்கள் சரியாகச் சென்றடையவில்லை.அதற்காக தலைவரை அங்கு தெரியவில்லை என்பது அர்த்தம் இல்லை. ஆதரவை நிர்வாக ரீதியாக இணைக்கவில்லை. தொண்டர்கள் மட்டத்தில் சரியாக இல்லாமல் தேர்தலைச் சந்திப்பதால் ஏற்படும் இழப்புகளை நாங்கள் பார்த்துவிட்டோம்.
இந்த தேர்தலில் தேசிய அரசியலில் மாற்றம் உருவாவதுதான் முக்கியம். எங்களுக்கு தொகுதி ஒதுக்கும் சூழலில் திமுக இல்லை. இந்தச் சூழலில், மாற்றுக் கூட்டணிக்கு செல்ல முடியாது. கமல்ஹாசனின் வலிமையான அரசியல் குரல் விரயமாகக்கூடாது என்பதற்காக இதற்கு ஒப்புக்கொண்டோம்,” என்றார் அவர்.
நகரங்களை மையமாக வைத்து சில தொகுதிகளைக் கேட்டதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் ‘ஒன் மேன்’ கட்சி என்பதைவிட வலிமையான தலைமை உள்ள கட்சி எனச் சொல்லலாம் என்கிறார் முரளி அப்பாஸ்.
முன்பு திமுகவை விமர்சித்தது குறித்துப் பேசிய அவர், “பழைய கதைகளைப் பேசக்கூடாது. இந்த அரசை மக்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதுதான் நல்லது. காழ்ப்புணர்ச்சியுடன் புறக்கணிக்கக் கூடாது. எங்களின் சுயலாபத்திற்காக இதைச் செய்யவில்லை.
தேசிய நலனுக்காக தளர்த்திக்கொள்வது தாழ்ந்து போவதல்ல, அனுசரித்துப் போவது,” என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்