
பட மூலாதாரம், PONMUDI
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
இதனால் காலியாக இருக்கும் திருக்கோவிலூர் தொகுதிக்கு அவர் மீண்டும் எம்.எல்.ஏவாக பதிவியேற்பாரா?
இழந்த அமைச்சர் பதவியை மீண்டும் பெறுவாரா பொன்முடி?
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
கடந்த வருடம் டிசம்பர் 21 அன்று வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்தத் தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். சட்டப்பேரவை உறுப்பினர் தகுதியையும் அவர் இழக்க நேர்ந்தது.
பொன்முடி போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலி என அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த மார்ச் 5-ஆம் தேதி திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அளித்தார். இதையடுத்து திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையில், சிறையில் சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சரணடைவதற்கு இருவருக்கும் விலக்கு அளித்தது. மேலும், அவர்களின் மேல்முறையீட்டு மனுவும் விசாரணைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இருவரின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பொன்முடி மற்றும் அவரின் மனைவி விசாலாட்சிக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில், பொன்முடிக்கு தீர்ப்பையும், அவரின் மனைவிக்கு தண்டனையையும் நீதிபதிகள் நிறுத்திவைத்தனர். அதுமட்டுமல்லாமல், சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. பொன்முடிக்கு எதிரான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராவதற்கான சட்ட ரீதியான தடை நீங்கியிருக்கிறது.
பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏவாக முடியுமா?

பட மூலாதாரம், PONMUDI
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் அவதூறு வழக்கு ஒன்றில் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இதனால் அவர் தன்னுடைய எம்.பி பதவியை இழந்தார். அவரது தொகுதியான கேரளாவின் வயநாடு, நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாமல் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டது. அரசு சார்பில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த இல்லம் காலி செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில், அவருக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து ராகுல் காந்தி தற்போது எம்பியாக தொடர்கிறார்.
அதேபோல, தகுதி நீக்கம் செய்யப்பட்ட பொன்முடியும் மீண்டும் எம்.எல்.ஏ ஆக முடியுமா, திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது என்ற சட்டப்பேரவைச் செயலரின் அறிவிப்பு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து கேட்டபோது, 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், எம்.எல்.ஏ பதவியை கோரி சட்டப்பேரவை செயலகத்தை பொன்முடி நாடலாம் என்று சட்டப்பேரவை செயலகம் விளக்கம் அளித்துள்ளது.
“தனது எம்.எல்.ஏ பதவியை மீட்க தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தை பொன்முடி அணுகலாம் அல்லது நீதிமன்றத்தை நாடியும் எம்.எல்.ஏ பதவியை பொன்முடி மீட்கலாம். ஊழல் தடுப்பு வழக்கில் இது போன்ற ஒரு நிலை முதல் முறையாக ஏற்பட்டுள்ளது,” என்று சட்டப்பேரவை செயலாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பொன்முடி சார்பாக முன்வைக்கப்பட்ட வாதங்கள்

பட மூலாதாரம், Getty Images
உச்சநீதிமன்றத்தில் நடந்து என்ன என்பது குறித்து நம்மிடம் பேசிய திமுக வழக்கறிஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், “கீழமை நீதிமன்றம் பொன்முடி வழக்கை விசாரித்து அவர் மீது தவறு இல்லை என்று சொல்லி விடுதலை செய்திருந்தது. இருப்பினும், இது குறித்து விசாரித்த சென்னை ஐகோர்ட் அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 3 ஆண்டுகள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றம் சென்றார். அவர் சார்பாக பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
“அதில் விடுதலையை எதிர்த்த மேல்முறையீட்டுத் தீர்ப்புகளில் இரண்டு கருத்துகள் இருக்குமானால், விடுதலையை உறுதி செய்ய வேண்டுமே தவிர, வேறு ஒரு பார்வை இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மட்டும் விடுதலையை மாற்றி தண்டனை தர முடியாது என்ற வாதத்தை முன்வைத்தோம். மேலும், இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் கருத்துகள் பொன்முடிக்கு ஆதரவாக இருப்பதையும் சுட்டிக்காட்டினோம்.
“மேல்முறையீட்டு மனுவில் பொன்முடிக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்தால் இந்த தகுதி நீக்கத்தால் அவர் பெற்ற இழப்புகளை யாராலும் சரி செய்ய முடியாது என்ற கருத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. அவர் குற்றவாளி இல்லை என்பதை முடிவு செய்ய மேல்முறையீட்டு மனு இருக்கிறது. அதில் முடிவெடுக்க 2 ஆண்டுகள் ஆகலாம். இருப்பினும், பொன்முடி தீர்ப்பில் இரு கருத்துகளுக்கு உட்பட்டது என்பதை உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டது,” என்றார்.
மேலும் திருக்கோவிலூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், “உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் திருக்கோவிலூர் இடைத்தேர்தல் நடக்காது. பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் எம்.எல்.ஏவாக தொடர்வார்,” என்று கூறினார்.
பொன்முடிக்கு சாதகமான தீர்ப்பு

பட மூலாதாரம், PRIYAN
மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்
“இந்த தீர்ப்பினால் திமுக கட்சிக்கு கிடைக்கும் பலன்களை விட பொன்முடி என்ற தனிமனிதருக்கு தான் அதிக பலன்கள்,” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்.
“ஏனென்றால் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து தி.மு.க.வை பெரிதாக விமர்சிக்கவில்லை. போதைப் பொருள் புழக்கம், சட்ட ஒழுங்கு தொடர்பான பிரச்னைகள், செந்தில் பாலாஜி வழக்கு என அ.தி.மு.க.வு.க்கும் பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வை விமர்சிக்க பல காரணங்கள் உள்ளன. பொன்முடி வழக்கு பற்றி அவர்கள் பெரிதாக பேசவில்லை. எனவே இந்த தீர்ப்பின் மூலமாக பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன,” என்கிறார் அவர்.
“ஆனால் திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது என அறிவித்துவிட்டதால், மீண்டும் சபாநாயகர் இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத வேண்டும். ராகுல் காந்தி விஷயத்தில் மக்களவை சபாநாயகர் இது போல கடிதம் அனுப்பியதால் அவரது பதவி மீண்டும் கிடைத்தது. பொன்முடிக்கு அமைச்சர் பதவி மீண்டும் கிடைக்குமா என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும்,” என்கிறார் பத்திரிக்கையாளர் பிரியன்.
இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் மாலன், “தண்டனை நிறுத்தி தான் வைக்கப்பட்டுள்ளது, அது ரத்து செய்யப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே அவர் மீண்டும் பெறுவார் பதவியைப் ஆனால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முழுமையாக விசாரித்து முடித்து தீர்ப்பளித்தால் தான் மற்ற விஷயங்கள் தெரியவரும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க.வுக்கு இது ஒரு சாதகமான தீர்ப்பு தான்,” என்றார்.
வழக்கின் பின்னணி என்ன?
கடந்த 2006-2011 காலத்தில், தி.மு.க ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016-ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் திர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் முறையீடு செய்தனர்.
மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்கள் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ பதவியை இழந்தார் பொன்முடி. அவரது தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்