முதுகு வலி: பள்ளி மாணவர், இளைஞர்களுக்கு முதுகுவலி வருவது ஏன்? மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

முதுகு வலி: பள்ளி மாணவர், இளைஞர்களுக்கு முதுகுவலி வருவது ஏன்? மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

முதுகு வலி வருவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் உடல் சார்ந்து அதிக பிரச்னைகளை கூறுவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஒருகாலத்தில் முதுமையின் ஒரு அங்கமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த முதுகுவலி, மூட்டு வலியெல்லாம் இப்போது பள்ளி குழந்தைகளுக்கே ஏற்படுவதையும் நாம் பார்க்கிறோம்.

இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவுமுறை, மரபணு சார்ந்த பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 20 முதல் 30 வயதுள்ள இளைஞர்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் கூட முதுகு வலி ஏற்படுவதற்கான உண்மை காரணங்கள் என்ன? அதை எப்படி வருமுன் காப்பது என்பதை பார்க்கலாம்.

முதுகுவலி

பட மூலாதாரம், Vijayaraghavan G

படக்குறிப்பு,

முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விஜயராகவன்

முதுகு வலியோடு வளரும் தலைமுறை

பொதுவாகவே வளரிளம் பருவம் என்பது உடலுறுப்புகள் அனைத்தும் வலுவான அமைப்பை பெறுவதற்கான காலம் என்று கூறப்படுகிறது. அதிலும் பதின்ம வயது காலகட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால், வளரிளம் முன் பருவமான 9 வயதில் இருந்தே பலருக்கும் முதுகு வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.

அதிலும் 20 வயது முதல் 30 வயது வரை இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள், குறிப்பாக அதிகம் உடல்சார் வேலையில் ஈடுபடாமல், மூளைசார் பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு இந்த பிரச்னை அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசுவதற்காக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் விஜயராகவன் அவர்களை அணுகினோம். அவர் கூறும் தகவல்கள் சில உங்களுக்கு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை அளிக்கலாம்.

முதுகுவலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

“முதுகுவலி வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன”

முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

தற்போது பலருக்கும் ஏற்படும் முதுகுவலியை “மெக்கானிக்கல் பேக் பெயின்” என்று குறிப்பிடும் அவர், இவர்களில் 80% பேருக்கு பரிசோதனை செய்து பார்த்தால் எந்த பிரச்னையும் இருக்காது என்கிறார்.

இதுகுறித்து விவரிக்கையில், “ முதுகுவலி வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அவர்களது வாழ்க்கை முறை. நீண்ட நேரம் எந்த வித உடல்ரீதியான செயல்பாடுகளும் இல்லாமல், அமர்ந்து கொண்டே இருப்பது. இரண்டாவது, அவர்கள் அமர்ந்திருக்கும் நிலை தவறாக இருக்கலாம்” என்கிறார்.

“இதில் வெகுசிலருக்கே டிஸ்க் சார்ந்த காரணங்கள் இருக்கும். டிஸ்க் என்பது முதுகெலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு அமைப்பு. பொதுவாக கீழ் முதுகின் வேலையே மேலே இருக்கும் உடலை தாங்குவதுதான். இதற்கு எலும்பு, தசை, மூட்டு ஆகியவை இணைந்து பணியாற்றும். ஆனால், நீண்ட நேரம் அமர்ந்தே இருக்கும்போது இவை எதுவுமே பணியாற்றாமல், ஒட்டுமொத்த சுமையும் ஜவ்வுகளின் மீது போடப்படுவதால், அது கிழிதல் அல்லது பலவீனமடைதல் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறது. இதனால் கூட 15% பேருக்கு முதுகுவலி ஏற்படுகிறது.”

முதுகுவலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வெவ்வேறு பணி செய்பவர்களுக்கும் வழிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றினால் மட்டுமே ஆரோக்கியமாக முதுகை பராமரிக்க முடியும்.

எப்படி அமர வேண்டும்?

மருத்துவர் கூற்றுபடி, இயற்கையாகவே உங்களது முதுகுத்தண்டில் கழுத்துப்பகுதி, நடுமுதுகு, கீழ்முதுகு என வளைவுகள் உள்ளன. நீங்கள் சரியாக அமராத போது அவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை தவிர்க்க கீழ் உள்ள வழிமுறைகளை அடிப்படையாக பின்பற்ற வேண்டும்.

  • லேப்டாப் போன்ற கணினி முன் பணியாற்றுபவர்கள் திரையில் தெரியும் முதல் வரிக்கு நேராக உங்கள் கண்கள் இருக்குமாறு அமர வேண்டும்.
  • நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது உங்களது கீழ் முதுகு நாற்காலியை தொட்டவாறு அமர வேண்டும். நாற்காலிக்கும், முதுகுக்கும் இடையில் இடைவெளி இருக்க கூடாது.
  • உங்களது தொடைப்பகுதி தரைக்கு இணையாக இருக்க வேண்டும்.
  • உங்களது முட்டி பகுதியில் இருந்து கால் வரை இருக்கும் தொலைவே, உங்கள் இருக்கைக்கும் தரைக்கும் இருக்க வேண்டும்.
  • இருக்கையில் அமரும்போது கைகளை விரித்த நிலையில் அமராமல், உடலோடு ஒட்டியவாறு அமர்ந்திருக்க வேண்டும்.
  • கீபோர்டு பயன்படுத்தும்போது மணிக்கட்டு, முன் கை உள்ளிட்ட மூன்றும் ஒரே வரிசையில் இருக்க வேண்டும்.

இதேபோல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வெவ்வேறு பணி செய்பவர்களுக்கும் வழிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றினால் மட்டுமே முதுகை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

முதுகுவலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

“பள்ளி மாணவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பையின் எடையும் அவர்களுக்கு முதுவலியை ஏற்படுத்தலாம்”

மாணவர்களுக்கு அதிகம் முதுகுவலி ஏற்படுவது ஏன்?

தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள், இளைஞர்களை தாண்டி பள்ளி முதல் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும் அதிகம் முதுவலி ஏற்படுவதை பார்க்க முடிகிறது. இதற்கான காரணம் என்ற கேள்வியை மருத்துவர் விஜயராகவனிடம் முன்வைத்தோம்.

இதற்கு பதிலளித்த அவர், “இதுவும் உடல்சார் செயல்பாடுகளோடு தொடர்புடையது தான். இப்போதெல்லாம் மாணவர்கள் பெரிதும் விளையாடுவதில்லை. அதிகம் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்களின் உடல்சார் செயல்பாடு குறைகிறது. எனவே அவர்களது உடல்சார் செயல்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும்” என்கிறார்.

மேலும், “பள்ளி மாணவர்கள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடையும் அவர்களுக்கு முதுவலியை ஏற்படுத்தலாம்” என்கிறார் மருத்துவர் விஜயராகவன். இது மட்டுமில்லாமல் நோயெதிர்ப்பு குறைந்த குழந்தைகளுக்கும் இந்த பிரச்னை வருகிறது.

இந்தியாவில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் எவ்வளவு எடையுள்ள புத்தகப் பையை சுமந்து வர வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன. 2020 பரிந்துரைக்கப்பட்ட அந்த விதியின்படி, ஒரு மாணவர் தன்னுடைய எடையில் 10 சதவீத எடை கொண்ட புத்தகப்பையை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.

இதை குறிப்பிட்டு பேசிய மருத்துவர் புத்தகப் பையை எப்படி அணிந்து செல்ல வேண்டும் என்பதற்கே வழிமுறைகள் உள்ளதாக கூறுகிறார்.

மாணவர்களின் வலியை எப்படி குறைப்பது?

  • புத்தகப் பையை இரண்டு பக்கமும் மாட்ட வேண்டும்.
  • பையின் மேல்பகுதி உங்கள் தோள்பட்டைக்கு இணையாக இருக்க வேண்டும். சில பைகளில் இடுப்பில் கட்டிக்கொள்ளுமாறும் வசதி இருக்கும். அதையும் பயன்படுத்தினால் நல்லது.
  • பைக்கும், முதுகுக்கும் இடையில் இடைவெளி இருக்கக்கூடாது.
  • அதிக எடையுள்ள புத்தகத்தை முதுகை ஒட்டியவாறும் குறைந்த எடையுள்ள புத்தகங்களை அடுத்தடுத்த வரிசையிலும் அடுக்க வேண்டும்.
முதுகுவலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

“தசைகள் பலவீனமடைந்து சரியாக வேலை செய்யாதபோது பெல்ட்டை நாம் பயன்படுத்துகிறோம்.”

முதுகு வலிக்கு பெல்ட் போடுவது உதவுமா?

பெரும்பாலும் முதுகுவலி அல்லது கழுத்தில் வலி ஏற்படும் பலர் பெல்ட் போன்ற ஒன்றை அணிந்திருப்பதை பலரும் பார்த்திருப்போம். அதை கட்டிக்கொண்டு அவர்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பார்கள். அது உண்மையில் பலனளிக்கிறதா? அதன் பணி என்ன? என்பது குறித்து மருத்துவர் விஜயராகவனிடம் கேட்டோம்.

அதற்கு பதிலளித்த அவர், “தசைகள் பலவீனமடைந்து சரியாக வேலை செய்யாத போது பெல்ட்டை நாம் பயன்படுத்துகிறோம். அந்த சமயத்தில் தசை செய்ய வேண்டிய வேலையை பெல்ட் செய்யும். ஆனால், அதை தொடர்ந்து பயன்படுத்த தொடங்கிவிட்டால் தசை மீண்டும் வலுவடையாது. வலி குறைவு ஏற்பட்டவுடன் பெல்ட்டை நீக்கிவிட்டு, மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே தசை வலுப்பெற்று மீண்டும் அதன் பணியை செய்ய தொடங்கும்” என்கிறார்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

சிலர் சாதாரண முதுகுவலி வந்துவிட்டாலே பயந்து போய் எம்ஆர்ஐ ஸ்கேன் வரை எடுத்துவிடுகிறார்கள். அதை பார்த்து மேலும் பயந்து ஏதாவது ஒரு மருத்துவ மையத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். இறுதியில் அது பலனளிக்கவில்லை என்றால் ஏமாந்தும் போகிறார்கள்.

ஆனால், அப்படி எல்லா நேரத்திலும் மருத்துவரை அணுக தேவையில்லை என்கிறார் விஜயராகவன். மேலும், தேவையில்லாமல் ஸ்கேன் எடுத்தல், மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வதும் கூடாது என்கிறார் அவர்.

அப்படியென்றால் எந்த நிலையில் மருத்துவரை அணுக வேண்டும் என்ற கேட்டபோது கீழுள்ள சில அறிகுறிகளை குறிப்பிடுகிறார் மருத்துவர்.

  • முதுகுவலி தொடங்கி நீண்ட நாட்களாக நீங்காமல் இருந்தால் மருத்துவரை அணுகலாம்.
  • முதுவலியாக தொடங்கி பின்னர் அந்த வலி காலுக்கும் பரவுகிறது, கால் மரத்து போகிறது என்றால் மருத்துவரை அணுகலாம்.
  • முதுவலியோடு எடை இழப்பு, பசியின்மை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

இதைத் தாண்டி தீவிரமான அறிகுறிகளோ அல்லது வித்தியாசமான உணர்வுகளோ ஏற்பட்டாலும் கூட நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

முதுகுவலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

“சாதாரண முதுகுவலிக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.”

எந்த மருத்துவரை அணுக வேண்டும்?

தீராத முதுகுவலியையும் தீர்ப்போம் என்று பல விளம்பரங்களையும் கூட நம்மால் சமீபத்தில் அதிகம் பார்க்க முடிகிறது. இது போன்ற சூழலில் முதுகுவலி வந்தால் எந்த மருத்துவரை அணுகுவது என்று கேட்டோம்.

அதற்கு பதிலளித்த மருத்துவர், “சாதாரண முதுகுவலிக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இதே பிரச்னை நாள்பட்டதாகவும், தீவிரமாகவும் இருந்தால் ஆர்த்தோ மருத்துவர் அல்லது எழும்பியல் நிபுணரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார்.

தீர்வு என்ன?

முதுகுவலி ஏற்படும் 80% பேருக்கு பெரும்பாலும் அவர்கள் வாழும் சூழல் மற்றும் அவர்களது வாழ்க்கை முறையே காரணமாக அமைகிறது. இது போன்ற சூழலில் முதுகுவலியை வருமுன் காப்பது எப்படி?

மருத்துவர் விஜயராகவன் கூற்றுப்படி,

  • மேற்சொன்ன அமரும் முறை, தினசரி செயல்பாடுகள் ஆகியவற்றை ஒழுங்கமைத்து கொள்ள வேண்டும்.
  • அமர்ந்தே பணியாற்றுபவர்கள் ஒவ்வொரு 20-30 நிமிடத்திற்கும் ஒருமுறை 10 நொடிகள் எழுந்து உடலை தளர்த்த வேண்டும்.
  • உங்களது பணி சூழலியலை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து கொள்ள வேண்டும்.
Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *