காஸா நகரில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனது உறவினர்களுடன் காரில் சென்ற ஆறு வயது சிறுமியின் காணாமல் போயிருக்கும் சம்பவம் காஸாவின் மனிதநேயச் சிக்கலைப் பற்றிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. காணாமல் போகும் முன் அந்தச் சிறுமி செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் பேசிய தொலைபேசி அழைப்பில் அவர் என்ன சொன்னார்?
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி பாலத்தீனத்தின் மனிதநேய உதவி நிறுவனமான ரெட் கிரெசன்டின் உதவி மையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசியது ஒரு ஆறு வயது சிறுமியின் பயந்த குரல். “எனக்கு அருகே இருக்கும் டாங்கி நகர்கிறது,” என்றார் அந்தச் சிறுமி.
உதவி மையத்தில் இருந்த ராணா தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியாகப் பேசினார். “அது மிகவும் அருகில் இருக்கிறதா?”
“மிகவும் அருகில் இருக்கிறது,” என்றது அந்தச் சிறுமியின் குரல். “எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. என்னை வந்து காப்பாற்றுவீர்களா?”
அந்தத் தொலைபேசி உரையாடலை நீட்டிப்பதைத் தவிர ராணாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆறு வயதாகும் ஹிந்த் ரஜாப், காஸா நகரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கிக்கொண்டார். அவரது மாமாவின் காரில், தனது உறவினர்களின் உயிரற்ற உடல்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு உதவிக்காக மன்றாடினார்.
இஸ்ரேல் ராணுவத்திடம் சிக்கிய குடும்பம்
இஸ்ரேல் ராணுவம், காஸா நகரத்தின் மேற்குப் பகுதியிலிருந்து மக்களை தெற்கு நோக்கி கடற்கரைச் சாலை வழியே இடம்பெயரச் சொன்னதைத் தொடர்ந்து, ஹிந்த் ரஜாப் தனது மாமா, அத்தை மற்றும் அவர்களது ஐந்து குழந்தைகளுடன் காஸா நகரை விட்டு வெளியேறினார்.
ஹிந்தின் டாய் விஸ்ஸாம் தங்களது பகுதியில் தீவிரமான குண்டு வீச்சு நடந்ததை நினைவுகூர்கிறார். “நாங்கள் அதிர்ந்து போயிருந்தோம். தப்பிக்க விரும்பினோம். வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்க இடம்விட்டு இடம் ஓடினோம்,” என்கிறார் அவர்.
அவர்கள் காஸா நகரத்தின் கிழக்கில் இருந்த அஹ்லி மருத்துவமனை பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து அங்கு சென்று தஞ்சம் புக முடிவெடுத்தனர்.
விஸ்ஸாமும் அவரது மூத்த குழந்தைகளும் நடந்து செல்ல முடிவுசெய்தனர். ஹிந்த் ரஜாபை அவரது மாமாவின் காரில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
“அன்று முகவும் குளிராக இருந்தது. மழை பெய்தது. அதனால் ஹிந்தை காரில் போகச் சொன்னேன்,” என்கிறார் தாய் விஸ்ஸாம்.
கார் கிளம்பியதுமே அதே திசையிலிருந்து பலத்த துப்பாக்கிச்சூடு கேட்டதாக அவர் தெரிவித்தார்.
ஹிந்தின் மாமா பிரசித்தி பெற்ற அல்-அஸார் பல்கலைக்கழகம் நோக்கிப் பயணம் செய்தார். வழியில் அவர்கள் இஸ்ரேலிய டாங்கிகளை நேருக்குநேர் சந்தித்ததாக நம்பப்படுகிறது. அவர்கள் காரை அருகிலிருந்த ஒரு பெட்ரோல் பங்கிற்குச் செலுத்தினார்கள். அங்கு அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.
உதவிக்காக மன்றாடிய குடும்பம்
காருக்குள்ளிருந்து அவர்கள் உதவிக்காக உறவினர்களை அழைத்தனர். அவர்களில் ஒருவர் பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கமான ரெட் கிரெசன்டைத் தொடர்புகொண்டார். அந்த அலுவலகம், 80கி.மீ. தொலைவில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ளது.
அப்போது நேரம் மாலை 6 மணி (இந்திய நேரப்படி). ரெட் கிரெசன்ட் உதவி மையத்திலிருந்தவர்கள் ஹிந்தின் மாமாவுடைய அலைபேசிக்குத் தொடர்புகொண்டனர். ஆனால் அவரது 15 வயது மகள் லயன் தான் பதிலளித்தார். பதிவுசெய்யப்பட்ட அந்த அழைப்பில், லயன், தனது பெற்றோரும் உடன்பிறந்தோரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்கிறார். அவர்களது காருக்கருகில் ஒரு டாங்கி இருப்பதாகக் கூறுகிறார். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. ஒரு அலற்லோடு அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
ரெட் கிரெசன்ட் குழு மீண்டும் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது, இம்முறை ஹிந்த் பதிலளித்தார். அவரது குரல் பயத்தில் கம்மியிருந்தது. அந்தக் காரில் பிழைத்திருந்தது அவர் மட்டும்தான் என்பதும் அவர் தாக்குதல் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ளார் என்பதும் தெளிவானது.
“இருக்கைக்கு கீழே ஒளிந்துகொள், யார் கண்ணிலும் பட்டுவிடாதே,” என்று குழுவினர் அவருக்குத் தொலைபேசியில் கூறினர்.
தொலைபேசியில் உரையாடிய ராணா பகிஹ், சிறுமி ஹிந்துடன் சில மணிநேரம் தொடர்பிலிருந்தார். அதேவேளை ரெட் கிரெசன்ட், இஸ்ரேலிய ராணுவத்திடம், அவர்களது ஆம்புலன்ஸை அவ்விடத்திற்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரினர்.
“அவள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். உதவிக்காக மன்றாடிக் கொண்டிருந்தார்,” என்கிறார் ராணா. “தனது உறவினர்கள் இறந்துவிட்டதாகக் கூறினாள். பிறகு அவர்கள் ‘உறங்கிக் கொண்டிருப்பதாகக்’ கூறினாள். நாங்கள் ‘அவர்களை உறங்கவிடு, தொந்தரவு செய்யாதே’ என்றோம்,” என்கிறார்.
ஹிந்த் மீண்டும்மீண்டும் தன்னை யாராவது வந்து காப்பாற்றும்படிக் கேட்டார்.
“ஒரு கட்டாயத்தில் இருட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். அவள் பயந்து போயிருந்தாள். எனது வீடு எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கேட்டாள். நான் செய்வதறியாமல் உறைந்து போனேன்,” என்று ராணா பிபிசியிடம் தெரிவித்தார்.
தொடர்பு துண்டாகும்முன் சிறுமி என்ன சொன்னார்?
இந்தத் தொலைபேசி அழைப்பு துவங்கி மூன்று மணிநேரம் கழித்து ஹிந்த் இருந்த பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது.
அதற்குள் ரெட் கிரெசன்ட் குழு, ஹிந்தின் தாய் விஸ்ஸாமைத் தொடர்பு கொண்டனர். அவரையும் அந்த அழைப்பில் இணைத்தனர். தனது தாயின் குரலைக் கேட்டதும் ஹிந்த் மேலும் அழத் துவங்கினார், என்கிறார் ரானா.
“அவள் அழைப்பைத் துண்டிக்க வேண்டாம் என்று கெஞ்சினாள். நான் அவளிடம் எங்கு அடிபட்டிருக்கிறது என்று கேட்டேன். அவளோடு சேர்ந்து குர்ஆன் வாசித்து பிரார்த்தனை செய்யத் துவங்கினேன். அவள் நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் திருப்பிச் சொன்னாள்,” என்கிறார் விஸ்ஸாம்.
மாலை இருட்டியபின்பு ஆம்புலன்ஸில் இருந்த பணியாளர்களான யூசுப் மற்றும் அகமது, ரெட் கிரெசன்ட் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அவர்கள் ஹிந்த் இருந்த இடத்தை நெருங்கிவிட்டதாகவும், அவர்களை இஸ்ரேலிய ராணுவம் சோதனை செய்ய போவதாகவும் தெரிவித்தனர்.
அதுதான் அவர்களிடமிருந்தும் ஹிந்திடமிருந்தும் கிடைத்த கடைசித் தகவல். இரண்டு இணைப்புகளும் அதன்பின் துண்டிக்கப்பட்டன.
ஹிந்தின் தொலைபேசி இணைப்பு இன்னும் சில நொடிகள் நீடித்திருந்தது எனவும், அவரது தாய் விஸ்ஸாம் கார் திறக்கப்படும் சத்தத்தைக் கேட்டதாகவும், ஹிந்த் அவரிடம் தொலைவில் ஆம்புலன்ஸ் தென்படுவதாகவும் கூறியதாக சிறுமியின் தாத்தாவான பஹா ஹமாதா பிபிசியிடம் தெரிவித்தார்.
மகளுக்காக காத்திருக்கும் தாய்
பிபிசியிடம் பேசிய சிறுமியின் தாய் விஸ்ஸாம், “ஒவ்வொரு நொடியும் என் இதயம் வெடிக்கிறது,” என்று “ஒவ்வொரு ஆம்புலன்ஸ் ஒலியைக் கேட்கும்போதும் ‘அது அவள்தான்’ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு வெடிச் சத்தம் கேட்கும் போதும் என் மகளுக்கு என்ன ஆனதோ என்று மனம் பதறுகிறது,” என்கிறார் அவர்.
காஸாவின் ரெட் கிரெசன்ட் குழுக்களாலும், ஹிந்தின் குடும்பத்தினராலும் அந்த இடத்தை அடைய முடியவில்லை. அவ்விடம் இன்னும் சண்டை நடக்கும் பகுதியில் உள்ளது. இஸ்ரேலிய ராணுவம் அதைக் கட்டுப்படுத்துகிறது.
ஹிந்துடன் தொலைபேசியில் பேசிய ராணா, “இரவில் தூங்குவதே சிரமமாக உள்ளது. எழுந்தால் அவளது குரல்தான் காதில் கேட்கிறது,” என்கிறார்.
இஸ்ரேலிய ராணுவத்திடம் அன்று அப்பகுதியில் நடந்த தாக்குதல் குறித்தும், ஹிந்த் குறித்தும், அவரை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் குறித்தும் பிபிசி கேட்டது. ஒருநாள் கழித்து மிண்டும் கேட்டது. இஸ்ரேலிய ராணுவம் அதுபற்றி விசாரித்து வருவதாகக் கூறினர்.
தனது மகள் காணாமல்போய் ஒருவாரம் கழித்தும், விஸ்ஸாம் அஹ்லி மருத்துவமனையில் அவருக்காகக் காத்திருக்கிறார். “அவளது பொருட்களை எடுத்து வந்திருக்கிறேன். அவளுக்காகக் காத்திருக்கிறேன். ஒரு மனமுடைந்த தாயாகக் கேட்கிறேன், இதனை யாரும் மறந்துவிடாதீர்கள்,” என்கிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்