மாரடைப்புக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு: சுகாதார அமைச்சரின் எச்சரிக்கை பற்றி மருத்துவர்கள் சொல்வது என்ன?

மாரடைப்புக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு: சுகாதார அமைச்சரின் எச்சரிக்கை பற்றி மருத்துவர்கள் சொல்வது என்ன?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வின்படி, கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடின உழைப்பு, ஓட்டம் அல்லது அதிகப்படியான உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

குஜராத்தில் நவராத்திரியின் போது மாரடைப்பால் மக்கள் இறந்ததாக சமீபத்தில் செய்தி வந்துள்ள நிலையில், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் இந்த அறிக்கை வந்துள்ளது.

12ம் வகுப்பு படிக்கும் மாணவி இறந்த செய்தி நவராத்திரி நேரத்திலேயே தெரிய வந்தது. அது தொடர்பான வீடியோக்களும் வைரலானது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ‘‘ஐசிஎம்ஆர் சமீபத்தில் இது குறித்து ஒரு விரிவான ஆய்வு நடத்தியது. கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாரடைப்பைத் தவிர்க்க குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு அதிகப்படியான கடின உழைப்பு, அதிக உடற்பயிற்சி, ஓட்டம் அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூறுகிறது,” என்றார்.

முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சரும் ஒரு நிகழ்ச்சியின் போது இது குறித்து விவாதித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர்

பட மூலாதாரம், Hindustan Times

“கோவிட் தொற்றுக்குப் பிறகு, மாரடைப்பால் திடீர் மரணம் ஏற்படுவதை நாங்கள் காண்கிறோம். ஐசிஎம்ஆர் ஆய்வு தொடங்கியுள்ளது. தடுப்பூசி மற்றும் இணை நோயுற்ற தன்மை பற்றிய தரவு எங்களிடம் உள்ளது,”” என்று அவர் கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக அறிக்கை வரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஐசிஎம்ஆரில் உள்ள டாக்டர் அன்னா டோக்ரா பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், “ஐசிஎம்ஆர் தனது ஆய்வு அறிக்கையை நிபுணர்களிடம் சக மதிப்பாய்வுக்காக வழங்கியுள்ளது. பரிசீலனை முடிந்த பிறகு சுகாதார அமைச்சகம் அது பற்றிய தகவலை தெரிவிக்கும்,” என்றார்.

கோவிட் நோய்க்கும் மாரடைப்புக்கும் என்ன தொடர்பு?

இதயம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 135 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இதயத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

ஐசிஎம்ஆர் அறிக்கை இன்னும் வெளிவரவில்லை, ஆனால் இதற்கு முன்பு டெல்லியில் உள்ள ஜிபி பண்ட் மருத்துவமனையில் கொரோனா மற்றும் உடலில் அதன் தாக்கம் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.

2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 135 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இதயத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டபோது இருதயத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தது.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பிபிசியிடம் கூறுகையில், “கொரோனா இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. கோவிட் ஒருவரின் இதயத்தின் மின் அமைப்பு, இதயத்தின் பம்ப் தசை மற்றும் இரத்தத்தை சுற்றும் இதயத்தின் வால்வுகளை பாதிக்கிறது. இதனால், இது அந்த நபரின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பாதிக்கிறது,” என்றார்.

கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாரடைப்பு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

“கோவிட் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிச்சயமாக மாரடைப்பு வருமா என்ற கேள்வி நிச்சயம் எழும். ஆனால், இதற்கு ஒரு பெரிய அளவிலான ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் வரை, அது தெளிவாகச் சொல்ல முடியாது.” எனத் தெளிவுபடுத்தினார் அவர்.

கொரோனா தடுப்புசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருகு்கிறதா?

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோவிட் சமயத்தில், தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் அறிக்கை நடுநிலையாகவும் மற்றும் சரியானதாகவும் உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகவோ அல்லது கடினமாகவோ உழைத்தால், அது இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என அந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் இதயம் இயல்பை விட மிக வேகமாக துடிக்கலாம்

சுகாதாரத்துறை அமைச்சரின் அறிக்கைப்படி, “நீண்ட காலமாக கடுமையான கோவிட் நோயிலிருந்து மீளாத நோயாளிகள் மெதுவாக உடற்பயிற்சி செய்யத் தொடங்க வேண்டும், திடீரென்று உடற்பயிற்சி செய்யத் தொடங்கக்கூடாது.”

கோவிட் சமயத்தில், தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், கோவிஷில்ட்(Covishield) மற்றும் கோவேக்சின் (Covaxin) எடுத்துக் கொண்ட பிறகு மாரடைப்பு வரலாம் என்றும் மக்கள் அஞ்சுகின்றனர். இந்த விவகாரம் குறித்த விவாதமும் தற்போது வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

ஆனால், ஜிபி பேன்ட்டின் ஆய்வில் தடுப்பூசி பெற்றவர்களிடையே மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு அதிக மாரடைப்பு சம்பவங்கள் இல்லை என்று மருத்துவர்களும் கூறினர்.

கோவிட்டிற்கு முன்னும் அதிக இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதா?

மாரடைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோவிட் பாதிப்புக்கு முன்பும் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு வந்ததாக கூறுகிறார் மருத்துவர் ஓ.பி.யாதவ்

நேஷனல் ஹார்ட் இன்ஸ்டிடியூட் இயக்குநர் டாக்டர் ஓ.பி.யாதவ் கூறுகையில், கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களுக்கு முன்பு 40 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் 10 சதவீத மாரடைப்பு சம்பவங்கள் இருந்தது. அதேபாேல, பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களின் 40 வயதுக்குட்பட்டவர்கள் பத்து சதவீதமாக இருந்தனர்.

கோவிட் பாதிப்புக்கு முன்பும் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு வந்ததாக கூறும் மருத்துவர் ஓ.பி.யாதவ், “தற்போது, சில பிரபலங்கள் மாரடைப்பால் இறக்கும் செய்தி வெளியாகி வருவதால், இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக விவாதிக்கப்படுகிறது,” என்றார்.

“மேலும், இதுகுறித்து தெளிவாக கண்டறிய, மாரடைப்பு ஏற்பட்டவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் இருப்பதைப் பார்த்தோமா?, இல்லவே இல்லை. மாரடைப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை கூட செய்யப்படுவதிலலை. இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படும்போது, அதற்கான காரணிகளை முழுமையாக கண்டறிந்தால் தான், இவை ஏன் ஏற்படுகிறது என்பது தெரியவரும்,” என்றார்.

‘கடுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டாம்’ – ஏன் ?

உடல்பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இதயத்தில் ரத்த உறைவு ஏற்பட்டால், அது மாரடைப்பையும், மூளையில் ரத்தம் உறைந்தால் அது பக்கவாதத்தையும் ஏற்படுத்தும்.

கடுமையான கோவிட் நோயிலிருந்து ஒருவர் குணமடைந்து விட்டால், அதற்கு முன் செய்யாத கடினமான வேலைகளையும், கடுமையான உடற்பயிற்சிகளையும் உடனடியாக செய்யக் கூடாது என்று இரு மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள்.

இதுகுறித்து மருத்துவர் ஓ.பி.யாதவ் பேசுகையில், “கோவிட் காரணமாக, உங்கள் இரத்தம் தடிமனாகி, கட்டிகள் உருவாகின்றன. கொழுப்பு திரட்சியால் மாரடைப்பு ஏற்படாது, ஏனெனில் அது பல ஆண்டுகளாக படிப்படியாக குவிந்துவிடும். ஆனால் அதன் மேற்பரப்பு சிதைந்து, அதிலிருந்து ஓடும் இரத்தம் அங்கு உறையத் தொடங்கும் போது, அதன் காரணமாக கட்டிகள் உருவாகி மாரடைப்பு ஏற்படுகிறது.

எனவே, கோவிட் சமயத்தில் கூட, ரத்தத்தை மெல்லியதாக மாற்ற மருந்துகள் கொடுக்கப்பட்டன. இதயத்தில் ரத்த உறைவு ஏற்பட்டால், அது மாரடைப்பையும், மூளையில் ரத்தம் உறைந்தால் அது பக்கவாதத்தையும் ஏற்படுத்தும்.

இதேபோல், உடலின் பல்வேறு பகுதிகளில் உறைதல் ஏற்படுகிறது.

கடுமையான கொரோனா மற்றும் நோய் பாதிப்பு உள்ளவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மெதுவாக உடற்பயிற்சி செய்யத் தொடங்க வேண்டும் என்று இரு மருத்துவர்களும் கூறுகின்றனர்.

மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்ன?

கீழே உள்ள சில வழிமுறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

* முதல் நாளில் 200 மீட்டர் நடந்தால், சில நாட்களுக்குப் பிறகு 400 மீட்டர் நடந்து படிப்படியாக வேகத்தை அதிகரிக்கலாம்.

* கடுமையான உடற்பயிற்சிகளை ஒருபோதும் செய்யாதீர்கள்.

* முன்பு எந்த வேலையும் அல்லது உடற்பயிற்சியும் உங்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், இப்போது அதில் மாற்றத்தை நீங்கள் கவனிக்கிறீர்கள் என்றால், உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள்.

* இதயத்துடிப்பு அதிகரித்தால், அது சாதாரணமாக நடக்காது. கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு இந்த அறிகுறிகள் அனைத்தும் தோன்றினால், கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

கொரோனாவில் இருந்து குணமடைந்த எந்த வயதினரும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் படிப்படியாக அதன் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *