
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நிறைவடைந்துள்ளது.
இந்தப் போட்டியில் 14 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மொத்தமாக 49 பேர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலேயே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகுந்த பிரசித்தி பெற்றவை. இதில் அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான செவ்வாய்க் கிழமையன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் உள்ள வாடிவாசலில் மாவட்ட நிர்வாகமும் பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்துக் குழுவும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின. இந்தப் போட்டியில் மதுரை மாவட்டத்தில் மட்டுமல்லாமல், மதுரையைச் சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும் தஞ்சாவூர், புதுக்கோட்டையைச் சேர்ந்த காளைகளும் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுகளும் மாடு பிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டது. அதன்படி 3,500-க்கும் மேற்பட்ட காளைகளும் 1,400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவுசெய்தனர். அதில் 1,000 மாடுகளும் 600 மாடுபிடி வீரர்களும் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டனர்.
போட்டி துவங்குவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதற்குப் பிறகு வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி போட்டிகளைத் துவக்கிவைத்தார்.

வெற்றியாளர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
மொத்தம் பத்து சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு சுற்றிலும் சுமார் 60 வீரர்கள் களமிறங்கினர். ஒரு சுற்றில் அதிக காளைகளை பிடித்த வீரர்களுக்கு அடுத்த சில சுற்றுகளில் வாய்ப்பளிக்கப்பட்டது. எல்லாக் காளைகளுமே கால்நடைத் துறையினரால் பரிசோதிக்கப்பட்டு போட்டிகளுக்கு அனுமதிக்கப்பட்டன.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரை, மாடு அவிழ்த்துவிடப்பட்ட பிறகு, வீரர்கள் அதன் திமிலைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மாடு மூன்று சுற்று சுற்றும்வரை பிடித்திருந்தாலோ, 100 மீட்டர் தூரத்திற்கு திமிலைப் பிடித்தபடி சென்றாலோ வீரர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். இல்லாவிட்டால் மாடு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். அதேபோல, இரண்டு பேர் சேர்ந்து ஒரு மாட்டை அடக்க முன்றாலோ, கொம்பைப் பிடித்தாலோ மாடு வெற்றிபெற்றதாகவே அறிவிக்கப்படும்.
போட்டி ஆரம்பித்து சில சுற்றுகள் வரை, அதிகமாக மாடுகள் பிடிபடவில்லை. இதனால், காளையின் உரிமையாளர்களை அதிகம் பரிசுகளை வென்றுவந்தனர். 2-3 சுற்றுகளுக்குப் பிறகு நிலைமை மாறியது.

நான்காவது முறை வெற்றி பெற்ற வீரர்
எல்லா ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் போலவே இந்தப் போட்டிகளிலும் சில பெண்களும் தங்கள் மாடுகளை அழைத்துவந்து உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
போட்டியின் பத்தாவது மற்றும் இறுதிச் சுற்று மாலை நான்கு மணியளவில் துவங்கியது. சுமார் நாலே முக்கால் மணியளவில் அந்தச் சுற்று நிறைவுக்குவந்தது. அதற்குப் பிறகு இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்ததாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஒரு கார் பரிசளிக்கப்பட்டது. அலங்காநல்லூருக்கு அருகில் உள்ள சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவர் 11 காளைகளை அடக்கியிருந்தார். அவருக்கு ஒரு மோட்டர் பைக் பரிசளிக்கப்பட்டது.
பிரபாகரன் இதற்கு முன்பும் பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கான பரிசை வென்றிருக்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், “2020, 21, 22 ஆகிய வருடங்களிலும் நான்தான் அதிக மாடுகளைப் பிடித்தேன். போன ஆண்டு என்னால் 15 மாடுகளைத்தான் பிடிக்க முடிந்தது. இந்த முறை மீண்டும் பரிசை வென்றிருக்கிறேன். ஆன்லைன் பதிவில் நன்றாக மாடு பிடிக்கும் வீரர்கள் சில சமயங்களில் தேர்வாவதில்லை. அதற்கு மாற்றுவழி ஏதாவது செய்ய வேண்டும்,” என்றார்.

சிறந்த காளை பரிசு யாருக்கு?
சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரது காளையான சின்னக்கருப்பு என்ற காலை தேர்வுசெய்யப்பட்டது.
“மாட்டை வளர்ப்பதில் பெரும் செலவு இருந்தாலும், பெயர்தான் முக்கியம் என்பதால் காளையை வளர்க்கிறேன். கடந்த ஆண்டு எங்களுடைய இன்னொரு மாடு வெற்றிபெற்றது. வீட்டில் திட்டத்தான் செய்வார்கள். ஆனால், பல நேரங்களில் அவர்கள்தான் மாட்டைப் பார்த்துக்கொள்வார்கள்” என்று தெரிவித்தார் மருது பாண்டி.
இந்தக் காளையின் உரிமையாளருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பவரின் காளை இரண்டாவது சிறந்த காளையாக தேர்வுசெய்யப்பட்டது. இவருக்கு ஒரு மாடும் கன்றும் பரிசளிக்கப்பட்டது.

எத்தனை பேருக்குக் காயம் ஏற்பட்டது?
சிறந்த காளைகளைப் பொறுத்தவரை, நீண்ட நேரம் களத்தில் இருப்பதோடு, சுற்றிச்சுற்றிவந்து எந்த வீரரையும் நெருங்கவிடாமல் செய்யவேண்டும். அப்படியாகத்தான் இந்த இரு காளைகளும் தேர்வுசெய்யப்பட்டன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் போலவே, இந்த ஜல்லிக்கட்டிலும் ஒரு நாய் குறுக்கிட்டது. ஆனால், நீண்ட நேரம் களத்தில் நிற்கவிடாமல் விரட்டப்பட்டது. ஒரு காளைக்கு காயம் ஏற்பட்டது.
இன்றைய பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தமாக 840 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 485 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தமாக 49 பேர் காயமடைந்தனர். அவர்களில் 20 பேர் மட்டுமே மாடுபிடி வீரர்கள். 15 பேர் மாட்டின் உரிமையாளர்கள். இவர்கள் தவிர, காவலர்கள், பார்வையாளர்கள் ஆகியோரும் காயமடைந்தனர். இவர்களுக்கு பாலமேட்டில் இருந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 9 பேர் மட்டும் கூடுதல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த ஜல்லிக்கட்டு போட்டியில், மாடுகளை துன்புறுத்தாமல் இருக்க விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. மாடுகளின் கொம்புகளைப் பிடிக்கக் கூடாது எனவும், அவற்றின் கால்களைப் பின்னுவது கூடாது எனவும் மாடுகளின் திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும் என வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஒரு வீரர், காளை மூன்று சுற்றுகள் சுற்றும் வரை இறுகப் பற்றியிருந்தாலோ அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பிடித்தவாறு சென்றாலோ மட்டுமே மாடு பிடி வீரர் வெற்றி பெற்றதாகக் கருதப்படுவார். ஒரே நேரத்தில் பலர் காளையைப் பிடிக்க முயல்வது கூடாது என அறிவுறுத்தப்பட்டது.


பார்வையாளர்களுக்கான வசதிகள்
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும் எந்தவித இடைவேளை இன்றியும்போட்டி தொடர்ந்து காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். குறைந்தபட்சம் எட்டு சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளில் பங்குபெற அனுமதிக்கப்படுவர்.
போட்டியை பார்வையிட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கும் பார்வையாளர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது. இந்தப் போட்டியை பாலமேட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்த்து ரசிக்க ஆங்காங்கே எல் இ டி திரைகளை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.
போட்டியின் போது பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே பிரவின் உமேஷ் தலைமையில் 1500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டி முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு வசதிகள்
மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவக்குழுக்கள், காளைகளுக்கான மருத்துவக்குழுக்கள் மற்றும் காயம் ஏற்படும் வீரர்களை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலைய வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்திய செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்களும் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
காளைகள் வாடிவாசலுக்கு வரும் பிறவாடி பகுதிகளிலும், காளைகள் வாடிவாசலில் இருந்து செல்லும் காளை சேகரிப்பு இடத்திலும் (கலெக்சன் பாயிண்ட்) பாதுகாப்புக்காக காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தp போட்டியின் போது காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்த காளையின் உரிமையாளர் மாரியப்பனுக்கு கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
வேடிக்கை பார்க்க வந்த மேலூர் பகுதியை சேர்ந்த மனிஸ் வலிப்பு நோய் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். மாட்டின் உரிமையாளர் ஒருவருக்கும், மாடுபிடி வீரர் ஒருவருக்கும் பேரிக்காடு கம்பி குத்தி படு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவருக்கு காலிலும்., ஒருவருக்கு தொடையிலும், ஒருவருக்கு காதிலும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்