மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் உரசலுக்கு மத்தியில், மாலத்தீவு அதிபர் இந்தியப் பிரதமர் மோதியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்கட்சி ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவுக்குப் பதிலாக ஐரோப்பாவில் இருந்து மருந்துகளை வாங்குவதற்கு மாலத்தீவு திட்டமிட்டு வருவதாகவும் அந்தக் கட்சி கூறியுள்ளது.
தற்போதைய அதிபர் முகமது முய்சு தலைமையிலான ஆளும் அரசு சீனாவிற்கு ஆதரவாக இருப்பதாகவும், மாலத்தீவின் எதிர்க்கட்சி இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாலத்தீவின் தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரை கூச்சலுக்கும் பெரும் விவாதத்திற்கும் காரணமாக இந்தியாவும், சீனாவும் மாறும் அளவுக்கு மாலத்தீவு அரசியலில் ஆழமாக இந்த இருநாடுகளும் வேரூன்றியுள்ளன.
இந்த விவகாரத்தில் சமீப நாட்களாகவே மாலத்தீவு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் முகமது முய்சுவை எதிர்த்து வருகின்றனர்.
இந்தியா குறித்தான முய்சுவின் இந்த அணுகுமுறை குறித்து எதிர்க்கட்சியினர் மிகுந்த கோபமாக உள்ளனர். அதே சமயத்தில் அவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
குறிப்பாக எதிர்க்கட்சியான ஜம்ஹூரி கட்சியின் தலைவர் காசிம் இப்ராஹிம், முகமது முய்சு இந்தியாவிடமும் பிரதமர் மோதியிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்தியா சீனா விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஜெய்சங்கர் கூறியது என்ன?
“அண்டை வீட்டாருக்குள் பிரச்னைகள் எழும்தான், ஆனால் இறுதியில் ஒருவருக்கொருவர் கட்டாயம் தேவை” என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஐந்து நாள் பயணமாக முகமது முய்சு கடந்த ஜனவரி 8-ஆம் தேதி சீனா சென்றிருந்தார்.
இதுவரையிலும், மாலத்தீவில் அதிபராக பொறுப்பேற்ற எந்த ஒரு அதிபரும் முதல் பயணமாக இந்தியாவிற்கே வந்துள்ளனர். ஆனால், முகமது முய்சுவோ முதலில் துருக்கி, சவுதி அரேபியா என சென்றுவிட்டு பின்னர் சீனாவிற்கும் சென்றுள்ளார்.
முகமது முய்சு சீனாவிலிருந்து திரும்பி வந்த உடனேயே அரசியல்ரீதியாக கடுமையான கருத்து ஒன்றையும் தெரிவித்தார். “ நாங்கள் சிறிய நாடுதான், ஆனால் அதற்காக எங்களை அடக்கும் உரிமை யாருக்கும் இல்லை” என்றார்.
அதற்கு பிறகு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வெளியேற மார்ச் 15-ஐ கடைசி நாளாக அறிவித்தது மாலத்தீவு அரசு.
பிரதமர் மோதி லட்சத்தீவுக்கு சென்றதை விமர்சித்து முய்சு அரசின் அமைச்சர்கள் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்த அதே ஜனவரி மாதத்தில் இந்த சம்பவங்களும் நடந்து கொண்டிருந்தன.
சீனா சென்று திரும்பியதிலிருந்தே இந்தியா குறித்தான முய்சுவின் அணுகுமுறை மென்மையாக தெரியவில்லை.
இப்படியொரு தருணத்தில் ஜெய்சங்கரின் கருத்து வெளியாகி இருக்கிறது.
“ இந்தியாவின் அண்டை நாடுகள் மீது சீனா செல்வாக்கு செலுத்தும், ஆனால் அது போன்ற போட்டி அரசியலுக்கெல்லாம் இந்தியா பயப்படக்கூடாது. அண்டை நாடுகளுக்குள் பிரச்னை எழும்தான், அதேசமயம் இறுதியாக ஒருவருக்கொருவர் அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய ஜெய்சங்கர், சீனாவின் தலையீட்டால் போட்டி அதிகரித்துள்ளதே தவிர, அதை இந்திய ராஜதந்திரத்தின் தோல்வி என்று கூறுவது தவறு” என்று கூறியுள்ளார்.
“சீனா நமது அண்டை நாடு என்பதும், போட்டி அரசியலின் காரணமாக பல வழிகளில் நமது அண்டை நாடுகளில் அது செல்வாக்கு செலுத்தும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அதற்காகவெல்லாம் நாம் சீனாவை பார்த்து பயப்பட வேண்டாம். இது போன்ற சூழலில் – ஆமாம், உலக அரசியல் போட்டியானதுதான். நீங்கள் உங்களால் முடிந்ததை முயற்சி செய்யுங்கள், நாங்கள் எங்களால் முடிந்ததை செய்கிறோம் என்றே நாம் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்” என்று கூறியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
“இந்த காலத்தில் போட்டிகளை பார்த்தெல்லாம் நாம் பயப்படக்கூடாது. அதை வரவேற்று எதிர்கொள்ளும் திறன் நம்மிடம் உள்ளது என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்றும் கூறியுள்ளார் ஜெய்சங்கர்.
சீனாவை நோக்கியே இந்த கருத்துக்களை தனது அறிக்கையில் பேசியுள்ளார் ஜெய்சங்கர். இதே போன்ற சீன எதிர்ப்பை மாலத்தீவிலும் கூட காணமுடிகிறது.
இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் மாலத்தீவு எதிர்க்கட்சி
இந்த சம்பவங்களுக்கு பிறகு மாலத்தீவு எதிர்க்கட்சியான ஜம்ஹூரி கட்சியின் தலைவர் காசிம் இப்ராஹிம், அதிபர் முகமது முய்சு இந்தியாவிடமும், பிரதமர் மோதியிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.
இந்தியாவைக் குறிவைத்து முய்சு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றியுள்ள இப்ராஹிம், இந்திய-மாலத்தீவு இருதரப்பு உறவை மேம்படுத்த ராஜதந்திர நல்லிணக்கத்தை முய்சு நாட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முய்சு பிரதமர் மோதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கோரிக்கை, மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக உருவானதாகும்.
“முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் ‘இந்தியாவே வெளியேறு’ பரப்புரையைத் தொடங்கினார். இதன் காரணமாக இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது. அடுத்து அதிபராக இருந்த இப்ராஹிம் சோலியும் இந்த பரப்புரையை எதிர்ப்பதில் தாமதமாகவே செயல்பட்டார்.” என்று இப்ராஹிம் குறிப்பிட்டார்.
“இந்தியாவிடம் மருந்துகள் வாங்குவதைக் குறைக்க பரிசீலனை”
மாலத்தீவுக்கு இந்தியா மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது. கொரோனா காலத்தில் இந்தியா மாலத்தீவுக்கு தடுப்பூசிகளை வழங்கியது.
சீனா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிறகு, மருந்துகளுக்காக இந்தியாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்று முய்சு பேசினார்.
“இந்தியாவில் இருந்து மருந்துகளை வாங்குவதை நிறுத்த முய்சு பரிசீலித்து வருவதாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து மருந்துகளை வாங்குவது குறித்து யோசித்து வருவதாகவும் கூறினார்.”
“மருந்து உற்பத்தியில் இந்தியா மிகவும் முன்னால் உள்ளது. அது ஐரோப்பாவுக்கே மருந்துகளையும் அனுப்புகிறது. அத்தகைய சூழ்நிலையில் நாம் இதைச் செய்ய முடியாது.” என்றும் இப்ராஹிம் கூறினார்.
மாலத்தீவில் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பெரும்பாலான தலைவர்கள் இந்தியாவின் ஆதரவாளர்களாகக் கருதப்படுகிறார்கள், அதே நேரத்தில் முய்சு இந்தியாவுக்கு எதிரானவராகவும் சீனாவின் ஆதரவாளராகவும் கருதப்படுகிறார்.
சில நாட்களுக்கு முன்பு, முய்சு அரசாங்கத்தின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி.) கவலை தெரிவித்திருந்தது.
மாலே துறைமுகத்தில் சீனக் கப்பலை நிறுத்த மாலத்தீவு அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. அப்போது எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், நீண்ட காலமாக நமது நட்பு நாடாக இருக்கும் இந்தியாவை தனிமைப்படுத்துவது சரியல்ல என்று கூறியிருந்தன.
ஜனவரி 28 அன்று நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அமைச்சரவையில் நான்கு பேரை இணைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முய்சுவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரவும் தயாராகி விட்டன.
மோதி பற்றிய கருத்துக்கு மாலத்தீவு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
மாலத்தீவு அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைப் பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைக் கூறியபோது, மாலத்தீவின் எதிர்க்கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
கருத்து தெரிவித்த அமைச்சர்களை முய்சு அரசு இடைநீக்கம் செய்திருந்தது.
அமைச்சர்களை இடைநீக்கம் செய்வது மட்டும் போதாது என்றும், இந்த விவகாரத்தில் மாலத்தீவு அரசு அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறியிருந்தன.
மாலத்தீவு முன்னாள் அதிபர்கள் முகமது நஷீத், இப்ராஹிம் முகமது சோலி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் ஆகியோரும் அமைச்சர்களின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்