தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 26 வயதேயான பெண் வேட்பாளர் பேரேலக்கா (கர்னே சிரிஷா) நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கோலாப்பூரில் இருந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அவருடைய வீடியோ சமூக ஊடகத்தில் பிரபலமானது. அவருடைய தொகுதியைத் தாண்டியும் ஏராளமான ஆதரவாளர்களை அவர் பெற்றார்.
தேர்தல் முடிவுகள் அவரை வெற்றியாளராக அனுமதிக்காவிட்டாலும், அவரும் ஒரு வெற்றியாளர்தான் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
பேரேலக்கா என்ற சாதாரண இளம் பெண்ணின் தேர்தல் போட்டி எவ்வளவு முக்கியமானது? அரசியலில் பணம் முக்கியப் பங்காற்றும் இந்த நேரத்தில் அவரைப் போன்றவர்கள் அரசியலில் என்ன செய்துவிட முடியும்?
தெலங்கானாவின் வேலையற்ற இளைஞர் பட்டாளத்தின் அடையாளமாக மாறியுள்ள பேரேலக்கா உணர்த்தும் செய்தி என்ன? தேர்தல் போரில் வீழ்த்தப்பட்டதால் அவர் முன்னிறுத்திய பிரச்சனைகள் கவனத்தை இழந்துவிடுமா?
பேரேலக்கா, ஒரு வெகுமக்கள் குரல் !
படித்த இளைஞர்களின் ஏமாற்றமான மனநிலையை பிரதிபலிக்கும் குரலாக பேரேலக்கா இருந்தார். அவரின் தேர்தல் பங்கேற்பே ஒரு போராட்டமாக அமைந்தது. அவரிடம் சொந்தமாக வீடு இல்லை, பின்புலமாக கட்சியோ பண பலமோ இல்லை. வேலை என்ற அடிப்படை ஆதாரமும் இல்லை.
பலமுறை போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று வேலை என்ற கனவை எட்ட முடியாத நிராசையே அவரிடம் நிரம்பியிருந்தது. பட்டப்படிப்பு முடித்து பின் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தது அவரின் எருமைகள்தான் (பேரேலு). எருமைகளை மேய்ப்பது போல நடித்து சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியிட்டதன் மூலம் அவர் பிரபலமானார்.
அதுதான் கர்னே சிரிஷா என்ற பெயரை பேரேலக்காவாக மாற்றியது. யூடியூப் வழியாக பிரபலமடைந்த அவர் மீது அரசு வழக்கு பதிவு செய்தது. அரசாங்கத்தை கிண்டல் செய்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டினார்கள். இந்த மோசமான நடவடிக்கையை எதிர்பாராத அவர் கண்ணீருடன் மக்களை நோக்கி வேண்டுகோள் விடுத்தார்.
அதுவே சமூகத்தில் அவருக்கு ஆதரவைத் திரட்டிக் கொடுத்தது. சாமானிய மக்களுக்கு அரசியலில் வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்று விரும்பிய பலரும் பேரேலக்காவை ஆதரித்தார்கள். இதனால் தெலங்கானா சமூகத்தில் அவருக்கு ஆதரவு அதிகரித்தது. அவர் போட்டியிட்ட தொகுதியான கோலாப்பூரை விடவும் அதிகமாக வெளி மாவட்டங்களில் ஆதரவு பெருகியது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜூபாலி கிருஷ்ணராவ் மற்றும் பி.ஆர்.எஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பீரம் ஹர்ஷவர்த்தன ரெட்டி இருவரையும் எதிர்த்து பேரேலக்கா மோதினார். இந்தப் போட்டியில் 4 வது இடம் பெற்ற அவர் பெற்றது சொற்ப (5754) வாக்குகளே. ஆனாலும் அவர் சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வின் அடையாளமாக அறியப்படுகிறார்.
சமூக ஊடகமும், கள நிலவரமும் !
சமூக ஊடகங்களின் மூலம் அறிமுகமாகி தற்போது நேரடியாக களத்தில் மக்களிடம் வந்து நின்றுள்ள பேரேலக்கா பல்வேறு சமூக ஊடகங்களிலும் தனது ஆதரவாளர்களோடு தொடர்பில் உள்ளார்.
யூடியூபில் அவரை ஒன்றரை லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் 6 லட்சம், பேஸ்புக்கில் ஒரு லட்சம் பேர் பின் தொடர்கின்றார்கள். அவர் வெளியிடும் வீடியோ அல்லது புகைப்படங்கள் ஏராளமான பேரால் பார்க்கப்படுகின்றன.
இந்த பார்வைகளும், லைக்குகளும், பகிர்வுகளும் வாக்குகளாக மாறிவிடுமா என்ன என்று விமர்சகர்கள் கேலி செய்கிறார்கள். வெற்றியோ தோல்வியோ தேர்தலில் பங்கேற்பதே சாதனைதான், ஜனநாயகத்தின் அழகே அதுதான் என்று அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்ற களத்திலும் பேரேலக்கா!
தான் எதிர்கொண்டிருக்கும் தோல்வியை நம்பிக்கையுடனே எதிர்கொள்கிறார் பேரேலக்கா. தான் பெற்ற தான் பெற்ற ஒவ்வொரு வாக்கும் மதிப்புமிக்கது என்று குறிப்பிடும் அவர். யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்றாலும், மக்கள் விரும்ப்பத்துடன் நேர்மையாக வாக்களித்தனர் என்றதுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். காஞ்சா இளையா, ஜே.டி.லட்சுமிநாராயணா போன்றவர்கள் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டதை நன்றியுடன் நினைவுகூர்கிறார்.
“எனக்கு 6,000 வாக்குகள் கிடைத்தன. ஒரு ரூபாய் கூட தராமல் நேர்மையாக எனக்கு வாக்களித்தார்கள். நான் வென்றேன் என்று நினைக்கிறேன். பொதுப் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடுவேன். அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்” என்று பேரேலக்கா கூறினார். கோலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜூபல்லி கிருஷ்ணாராவ் சுமார் 30 ஆயிரம் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறார்.
அரசாங்கம் தவறு செய்தால் கேள்வி கேட்கக்கூடிய சாமானியர்களும் இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு பேரேலக்கா ஒரு உதாரணமாக இருந்துள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்