
பட மூலாதாரம், GETTY IMAGES
உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா அணி பெற்றது.
இந்தியா ஏற்கனவே 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது அணி தென்னாப்பிரிக்கா அணியாகும்.
இப்போது, அரையிறுதிக்குள் நுழைய ஒரேயொரு அணிக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன.
எனினும் நேற்று இரவு (நவ. 09) இலங்கைக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெறும் 23.2 ஓவர்களில் வெற்றி பெற்ற நியூசிலாந்தின் நிகர ரன் ரேட் 0.743-ஐ எட்டியதோடு, அரையிறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில் மற்ற இரண்டு அணிகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை விடவும் முன்னிலையில் உள்ளது.
இன்று (நவ. 10), வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் அகமதாபாத்தில் மோத உள்ளது.
ஆப்கானிஸ்தானின் நிகர ரன் ரேட் மைனஸில் உள்ளது. -0.338 என்ற நிகர ரன் ரேட்டுடன் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி 0.036 என்ற நிகர ரன் ரேட்டுடன் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

பட மூலாதாரம், GETTY IMAGES
நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
எனினும், தில்ஷன் மதுஷங்க மற்றும் மஹீஷ் தீக்ஷனா இருவரும் இணைந்து 10-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் அடித்தனர். இதுவே உலகக்கோப்பை வரலாற்றில் 10-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் ஆகும்.
இருந்தபோதிலும் இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து அபாரமாக பந்துவீச்சு செய்த நியூசிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக இலங்கையை வென்றது.
இந்தப் போட்டியில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை நியூசிலாந்து அணி பலப்படுத்த விரும்புகிறது.
இந்த வெற்றியின் மூலம் 160 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் நியூசிலாந்தின் நிகர ரன் ரேட் 0.74 ஆக அதிகரித்து அரையிறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில் மற்ற இரண்டு அணிகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை விட வெகுவாக முன்னேறியுள்ளது.
இந்த தோல்விக்குப் பிறகு இலங்கை அணி புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதனால் 2025ம் ஆண்டில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் இலங்கை விளையாடும் வாய்ப்பு கடினமாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராஃபிக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில், பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.
பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுமா?

பட மூலாதாரம், GETTY IMAGES
இலங்கைக்கு எதிரான நியூசிலாந்தின் வெற்றியால் அரையிறுதிக்குள் நுழைய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அதாவது இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமல்லாமல், நியூசிலாந்து அணியைவிட நிகர ரன் ரேட் சிறப்பாக இருக்கும் வகையில் பெரிய வித்தியாசத்தில் இருக்க வேண்டும்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாட உள்ளது. எனவே, முதலில் பாகிஸ்தான் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. சாதாரண வெற்றி பாகிஸ்தானை அரையிறுதிக்கு செல்ல அனுமதிக்காது.
சனிக்கிழமை (நவ. 11) இங்கிலாந்தை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் விளையாடி 300 ரன்கள் எடுத்தால், பாகிஸ்தான் இந்த இலக்கை 6.1 ஓவர்களில் மட்டுமே அடைய வேண்டும். அதாவது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு பந்திலும் 6 ரன்கள் எடுத்தாலும், அவர்களால் 222 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும்.
இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 100 ரன்களில் ஆல் அவுட் செய்தாலும், 2.5 ஓவரில் அந்த இலக்கை எட்ட வேண்டும்.
அதேசமயம், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்து அணியை வெறும் 13 ரன்களில் ஆட்டமிழக்க செய்ய வேண்டும்.
அதாவது, அரையிறுதிக்கு செல்ல பாகிஸ்தான் 287 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும்.
நியூசிலாந்துடனான போட்டிக்குப் பிறகு ஹர்பஜன் சிங், “பாகிஸ்தானுக்கு இப்போது அரையிறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர்கள் போட்டியில் 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அவர்கள் அவ்வளவு ரன்களை எடுக்காமல் கூட போகலாம்,” என தெரிவித்தார்.
”இதுபோன்ற சூழ்நிலையில், 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால், பாகிஸ்தான் 450 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும். இல்லையென்றால், நியூசிலாந்து அணி முதல் அரையிறுதியில் இந்தியாவுடன் விளையாடும்” என தெரிவித்தார்.
“பாகிஸ்தான் முதலில் பேட் செய்துவிட்டு, பின்னர் இங்கிலாந்து வீரர்களை டிரெஸ்ஸிங் ரூமில் பூட்டி வைத்துவிட்டு டைம்டு அவுட் முறையில் அனைவரையும் ஆட்டமிழக்க வைக்க வேண்டும்” என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் நகைச்சுவையாகக் கூறியதாக பாகிஸ்தானின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரையிறுதிப் போட்டியிலிருந்து கிட்டத்தட்ட வெளியேறிய ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், GETTY IMAGES
அதேசமயம், ஆப்கானிஸ்தானின் நெட் ரன் ரேட் மைனஸில் இருப்பதால் அதைவிட பெரிய இலக்கு அவர்களுக்கு முன்னால் உள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இன்றைய போட்டியில் 438 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வேண்டும். இதனால் அதன் நிகர ரன் ரேட் நியூசிலாந்தை விட சிறப்பாக இருக்கும்.
இதனுடன், முன்பே சொல்லப்பட்டது போன்று பாகிஸ்தான் வெற்றி பெறாது அல்லது வெற்றிபெற வேண்டிய பெரிய வித்தியாசத்தை அடையாமலும் இருக்க வேண்டும்.
2023 உலகக்கோப்பைக்கு இன்னும் மூன்று லீக் போட்டிகள் மட்டுமே உள்ளன. இன்று, நவ. 10 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது.
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் நடைபெறவுள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்