பொலிவியா நாட்டின் அமேசான் பகுதிகளில் கடந்த 50 வருடங்களாக மீன் பிடித்து வருகிறார் கிலியர்மோ ஓட்ட பேரும். தொடக்கத்தில் ஆற்றுப்பகுதிகளில் பல வகையான கெளுத்தி மீன்களை பிடித்து வந்தார் இவர்.
ஆனால், அதற்கு பிறகு தண்ணீரில் ஒரு பெரிய மீன் ஒன்று வந்துள்ளது. உள்ளூரில் இந்த மீன் அராபைமா (அறிவியல் மொழியில் அராபைமா கிகாஸ்) என்று அறியப்படுகிறது.
“முதலில் இது ஒரு தண்ணீர் பாம்பு என்றும் இது எல்லோரையும் தாக்கக்கூடும் என்று நினைத்தேன். மேலும், இது விஷத்தன்மை கொண்டிருக்கக்கூடும், இதை உண்பது உடலுக்கு கேடு விளைவிக்கும்” என்று தான் நினைத்ததாக அது குறித்து நினைவுகூர்கிறார் அவர்.
சொல்லப்போனால், உலகில் உள்ள மிகப்பெரிய நன்னீர் மீன்களில் இதுவும் ஒன்று. இது 4 மீட்டர் உயரம் (13 அடி) மற்றும் 200 கிலோவுக்கும் அதிகமான எடை வரை வளரக்கூடியது.
இந்த மீனின் அளவு மற்றும் பசி ஆகியவை நாட்டு மீன்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளதாக கூறுகிறார்,பெனி தன்னாட்சி பல்கலைக்கழகத்தில் உள்ள நீர்வள ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஃபெடெரிகோ மோரேனோ.
“இந்த மீன் உள்ளூர் மீன்களை பயமுறுத்துகிறது. இங்குள்ள மிகப்பெரிய பிரச்னைகளில் இதுவும் ஒன்று” என்கிறார் அவர்.
பொலிவியாவில் முதல் முறையாக எப்போது இந்த அராபைமா வகை மீன் வந்தது என்று யாருக்குமே தெரியாது.
பெருவிலிருந்து பொலிவியாவின் ஆறுகளுக்குள் இது வந்ததாக நம்ப படுகிறது.
அராபைமா மீன்கள் அதிக பசியுடன் காணப்படுவை என்று கூறுகிறார் உயிரியலாளரும் நிபுணருமான பெர்னாண்டோ கார்வஜல்.
“இந்த மீன்கள் பிறந்த முதல் ஆண்டில், ஆண்டுக்கு 10 கிலோ என்ற விகிதத்தில் எடை அதிகரிக்கும். அதன் அர்த்தம் அவை மற்ற மீன்களை நன்றாக சாப்பிட்டுள்ளன,” என்று அவர் தெரிவிக்கிறார்.
கடிக்கின்ற பிரானா மீன்களை போலன்றி, அராபைமா மீன்கள் சிறிய பற்களையே கொண்டுள்ளன. அதுவும் கூட கூர்மையானது கிடையாது.
உணவு என்று வரும்போது பற்கள் கூர்மையாக இல்லை என்பது இந்த மீன்களுக்கு ஒரு தடையே இல்லை. ஏதோ பெரிய வேக்கம் க்ளீனரை (Vacuum Cleaner) போல பிரானாக்கள், இதர பூர்வீக மீன்கள், தாவரங்கள், நத்தைகள் மற்றும் பெரிய பறவைகள் போன்றவற்றை விழுங்கி விடுகின்றன இந்த மீன்கள்.
இவற்றிலேயே பெரிய மீன்கள் தங்கள் குஞ்சுகளை சாப்பிட முயற்சிக்கும் மற்ற மீன்களையும் பயமுறுத்துகின்றன.
மற்ற மீன் இனங்கள் மீது இந்த மீன்கள் செலுத்தும் தாக்கம் குறித்து சரியான தரவுகள் எதுவும் இல்லை என்று கூறும் பெர்னாண்டோ, உள்ளூர் மீன் இனங்கள் குறைந்து வருவதாக அங்குள்ள மீனவர்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
“அடுத்த பத்தாண்டுகள் அல்லது இருபது ஆண்டுகளில் இந்த மீன்கள் தங்களுக்கு தகுந்த பிற பகுதிகளுக்கும் பரவி விடும்” என்று அவர் எச்சரிக்கிறார்.
மற்ற பகுதிகளில், பல்லுயிர் இழப்புக்கான இரண்டாவது காரணியாக இது போன்ற ஆக்கிரமிப்பு இனங்கள் கருதப்படுகின்றன.
அதே சமயம், அதிக மீன்கள் வருவது உள்ளூர் மீனவ மக்களுக்கு ஒரு வரபிரசாதமாகவே அமைந்துள்ளது.
முதலில் இந்த அராபைமா மீன்களை பார்த்து பயந்தாலும், தங்கள் திறன் குறித்து புரிந்து கொள்ள அந்த மீனவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை என்று கூறுகிறார் கிலியர்மோ.
“நான் முதல் முறையாக அராபைமா மீனை பிடித்த போது, அதை துண்டுகளாக வெட்டி வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். அவர்கள் அதை ருசித்து பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்தேன்” என்கிறார் அவர்.
அராபைமா மீன்கள் தற்போது பொலிவியா முழுவதும் உண்ணக்கூடிய உணவாக உள்ளது .
பிரேசில் எல்லைக்கு அருகில் உள்ள வடகிழக்கு பொலிவியாவின் ரிபெரால்டாவில், பை பதப்படுத்தும் ஆலையை நடத்தி வருகிறார் எட்சன் சுசானோ.
“இந்த மீன்களை அனைத்து சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளிலும் விற்பனை செய்கிறோம். ஒரு மாதத்திற்கு 30,000 கிலோ அளவில் இந்த மீன்களை நாங்கள் பதப்படுத்துகிறோம்” என்கிறார் எட்சன்.
பரந்து விரிந்துள்ள அமேசான் நதியில் அராபைமா மீன்களை பிடிப்பது மீனவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்த மீனுக்கு நுரையீரல் போன்ற அமைப்பு உள்ளதால், இது பெரும்பாலும் புதிய காற்றுக்காக நீரின் மேற்பரப்பிற்கு வரும். இது அமைதியான தண்ணீரையே விரும்பும்.
இவை ஏரிகள் மற்றும் குளங்களில் வாழ விரும்புகின்றன. அதே சமயம், அங்கு ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், உடனே அங்கிருந்து இடம் பெயர்ந்து விடுகின்றன
படகுகள் வழியாக கொண்டுவரப்படும் மீன்களை பதப்படுத்தி வருகிறார் எட்சன்.
இந்த மீன்களை பிடிப்பதற்காக தற்போது மீனவர்கள் அதிதொலைதூர பகுதிகளுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்காக அவர்கள் படகுகளில் இருந்து ஓடங்களுக்கு மாற வேண்டியுள்ளது. இதன் காரணமாக இந்த மீனவர்களுக்கும் அந்த பகுதி உள்ளூர் மீனவ சமூகங்களோடும் முரண்பாடுகள் ஏற்படுகிறது.
மீன்கள் கிடைக்கக்கூடிய பல தொலைதூர ஏரிகள் மற்றும் குளங்களில் மீன்பிடிக்க இந்த சமூகங்களுக்கே உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களும் மீன்களை பிடித்து விற்க தொடங்கியுள்ளனர்.
இதனால் வணிக ரீதியாக மீன்பிடிக்கும் மீனவர்கள் தற்போது இந்த பகுதிகளில் மீன்பிடிக்க சிறப்பு உரிமம் பெற வேண்டியுள்ளது.
ஆனால், முறையான ஆவணங்கள் இருந்தாலும் கூட தாங்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறுகின்றனர் கிலியர்மோ போன்ற மீனவர்கள்.
பொலிவிய அரசாங்கத்தின் கீழ் தங்களுக்கு உரிமை இருப்பதால், அங்குள்ள வளங்களைப் பாதுகாக்க முயற்சிப்பதாக உள்ளூர் சமூகங்கள் வாதத்தை முன்வைக்கின்றன.
ஜுவான் கார்லோஸ் ஆர்ட்டிஸ் சாவேஸ் ஒரு ஆல்டோ இவோன் கோ சாகோபா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.
கடந்த காலங்களில் பழங்குடியினர் வணிக மீனவர்களுக்கு பயந்திருந்ததாக கூறும் அவர், “ தற்போதைய புதிய தலைமுறை இளைஞர்கள் மாறிவிட்டனர். யாரும் எங்கள் வளங்களை எடுத்து செல்லாமல் இருப்பதற்காக விதிகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என்கிறார்.
“மேலே உள்ள மீன்களை தொடர்ந்து வேட்டையாடுவதன் மூலம், மற்ற உயிரினங்களுக்கு இடையே சமநிலை ஏற்படுவதாக” கூறுகிறார் விஞ்ஞானி ஃபெடரிகோ மோரேனோ.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்