எதிர்வரும் மே 10-ஆம் தேதிக்குப் பிறகு இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கூட சீருடையிலோ அல்லது சாதாரண உடையிலோ மாலத்தீவில் இருக்க மாட்டார்கள் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தான் மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களை கவனித்துக்கொள்ள ஒரு தொழில்நுட்பக் குழுவை இந்தியா அனுப்பி வைத்தது. இந்நிலையில் முய்சு இவ்வாறு கூறியுள்ளார்.
மே 10-ஆம் தேதிக்குள் இந்தியப் படைகள் மாலத்தீவை விட்டு வெளியேறும் என்றும் அதன் முதல் கட்டம் மார்ச் 10-ஆம் தேதி தொடங்கும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘மாலத்தீவிற்கு இந்திய ராணுவம் திரும்பி வராது’
மலத்தீவைச் சேர்ந்த உள்ளூர் செய்தி இணையதளம் ஒன்று அளித்துள்ள தகவலின்படி, கடந்த செவ்வாயன்று மாலத்தீவின் ஐலாஃபுஷி நகரத்தில் ஒரு சமூக நிகழ்வில் உரையாற்றிய அதிபர் முய்சு, இந்திய ராணுவத்தை நாட்டிலிருந்து வெளியேற்றுவதில் தனது அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறினார். இதன் காரணமாக பொய்யான வதந்திகளை பரப்பி, நாட்டில் சிலர் குழப்பத்தை உருவாக்கி வருகின்றனர் என்றார்.
“வெளியேறப்போகும் இந்திய ராணுவ வீரர்கள் சீருடையை மாற்றிக்கொண்டு சாதாரண உடையில் மீண்டும் திரும்பி வரப் போவதில்லை. நமக்குள் குழப்பத்தை உருவாக்கும், பொய்களைப் பரப்பும் இதுபோன்ற விஷயங்களைக் நம்பக் கூடாது.
“மே 10ஆம் தேதிக்கு பிறகு சீருடையிலோ அல்லது சாதாரண உடையிலோ, இந்திய ராணுவ வீரர்கள் யாரும் நாட்டில் இருக்க மாட்டார்கள். இந்திய ராணுவத்திற்கும் இந்த நாட்டிற்கும் எந்த வகையிலும் தொடர்பு இருக்காது என்பதை நான் உறுதியுடன் கூறுகிறேன்,” என்றார் அதிபர் முய்சு.
கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி டெல்லியில் இருநாடுகளுக்கும் இடையிலான உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மே 10-ஆம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களை பாதுகாக்கும் தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெற இந்தியா ஒப்புக்கொண்டதாகவும், இந்த நடைமுறையின் முதல் கட்டம் மார்ச் 10-ஆம் தேதிக்குள் முடிவடையும் எனவும் மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் கூறியது.
முய்சுவின் பேச்சுக்கு ஒரு நாள் முன்னதாக, மாலத்தீவு சீனாவுடன் ராணுவ உதவி தொடர்பான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சீனா மற்றும் மாலத்தீவுக்கு இடையே கையெழுத்தான ராணுவ ஒப்பந்தம்
மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெறுவதற்கும், இந்திய தொழில்நுட்பக் குழு மாலத்தீவை சென்றடைவதற்கும் காலக்கெடு அளிக்கப்பட்ட பின்னர் சீனா மற்றும் மாலத்தீவுகள் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.
திங்களன்று, மாலத்தீவு பாதுகாப்பு மந்திரி முகமது மோமூன் மற்றும் சீனாவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான துணை இயக்குனர் மேஜர் ஜெனரல் சாங் பாகுன் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
“மாலத்தீவிற்கு இலவச ராணுவ உதவியை வழங்குவதன் மூலம் இருதரப்பு உறவுகள் மேம்படும்,” என அப்போது கூறப்பட்டது.
மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் இந்த ஒப்பந்தம் பற்றிய சில தகவல்களை சமூக ஊடகமான எக்ஸில் (முன்னர் ட்விட்டர்) வெளியிட்டது. இருப்பினும் ஒப்பந்தம் பற்றிய விரிவான தகவல்கள் வழங்கப்படவில்லை.
ஐலாஃபுஷி நிகழ்வில், சீனாவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தம் குறித்து அதிபர் முய்சு பேசினார். மாலத்தீவுடனான ராணுவ ஒத்துழைப்பை சீனா எப்போதும் பேணி வருவதாகவும், இந்த ஒப்பந்தம் மாலத்தீவுகளின் ராணுவத் திறனை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் கூறினார்.
“இந்த ஒப்பந்தத்தின்படி, மாலத்தீவு ராணுவத்துக்கு பல வகையான பயிற்சிகள் கிடைக்கும். உயிரிழப்பை ஏற்படுத்தாத பல்வேறு ராணுவ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். இது தான் எங்கள் ஒப்பந்தம். இது ராணுவத்தின் தொழில்நுட்பத் திறனை அதிகரிக்கும்” என்றார் அதிபர் முய்சு.
மேலும், “நமது ராணுவம் தனித்துச் செயல்படவும், நமது சுதந்திரம் மற்றும் சுயாட்சியைப் பாதுகாக்கவும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
இது தவிர மாலத்தீவு சுகாதார அமைச்சகத்துக்கு 12 ஆம்புலன்ஸ்களை சீனா வழங்கியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில், முய்சு ஐந்து நாள் பயணமாக சீனாவுக்குச் சென்றிருந்தார். அப்போது, சீன-மாலத்தீவு உறவுகளை முன்னெடுத்துச் செல்ல முடிவு எடுக்கப்பட்டது.
மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர், சீனாவுடனான ஒப்பந்தம் குறித்து எக்ஸில் (முன்னர் ட்விட்டர்) பின்வருமாறு பதிவு செய்துள்ளார்: “சீனா எக்சிம் வங்கியின் பிரதிநிதிகள் குழு மற்றும் சீன இராணுவக் குழுவை வழிநடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து பயனுள்ள விவாதம் நடைபெற்றது.”
மாலத்தீவின் நிபந்தனைகளை ஏற்று தனது படைகளை வாபஸ் பெற ஒப்புக்கொண்டு, ராணுவத்திற்கு பதிலாக ஒரு தொழில்நுட்பக் குழுவை இந்தியா அனுப்பி வைத்துள்ள நேரத்தில் இது நடந்துள்ளது.
தான் ஆட்சிக்கு வந்தால் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை விரட்டியடிப்பேன் என முய்சு தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தே கூறி வருகிறார். நேற்று அவர் இந்த வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தினார்.
அண்டை நாடுகளை அச்சுறுத்துகிறதா இந்தியா
இந்த வாரம் டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அண்டை நாடுகளுக்கு இந்தியா ஒரு ‘பிக் புல்லியாக’ (பலவீனமானவர்களை வம்புக்கு இழுப்பவரை பிக் புல்லி- Big bully என்று அழைப்பார்கள்) மாறி வருகிறதா என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், ‘பிக் புல்லிஸ்’ எனப்படுபவர்கள் கடினமான காலங்களில் தங்கள் அண்டை நாடுகளுக்கு ‘37,000 கோடி ரூபாய் வழங்கி உதவுவதில்லை’ என்று கூறியிருந்தார். கடந்த வருடங்களில் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தபோது, அதற்கு இந்தியா உதவியதை அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
எஸ்.ஜெய்சங்கரின் இந்த பதில் மாலத்தீவு ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருவதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஜெய்சங்கரின் இந்த பதில், ஜனவரி மாதம் சீனாவுக்குச் சென்ற பிறகு அதிபர் முய்சு அளித்த பேட்டிக்கான பதிலாக பார்க்கப்படுகிறது.
அதிபர் முய்சு அப்போது, “மாலத்தீவு ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் எங்களை அச்சுறுத்தும் உரிமையை எந்த நாட்டிற்கும் நாங்கள் கொடுக்கமாட்டோம்,” என கூறியிருந்தார்.
இந்தியாவின் ஆதரவாளர் என்று தன்னை கூறிக்கொள்ளும் மாலத்தீவின் எம்.பி ஈவா அப்துல்லா, அவர் நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசியபோது, “மாலத்தீவின் பலவீனமான வெளியுறவுக் கொள்கை மக்களுக்கு சாதகமாக இல்லை. இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, இதுபோன்ற வெளியுறவுக் கொள்கை எந்த வளர்ச்சித் திட்டங்களுக்கும் சாதகமாக இருக்காது,” என்று கூறினார்.
மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தின் மருமகள் இவா அப்துல்லா. அவர் இந்தியாவுடனான உறவுக்கு ஆதரவாக பல வாதங்களை முன்வைக்கிறார். மாலத்தீவுகள் இந்தியாவுடன் கலாச்சார உறவுகளைக் கொண்டிருப்பதாகவும் தெற்காசிய ஜனநாயக நாடுகளுடன் நெருக்கமாக இருப்பதாகவும் அவர் விவரிக்கிறார்.
“மாலத்தீவில் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கலாச்சார மையங்களை கட்டியுள்ளது இந்திய அரசு. இந்திய கலாச்சாரத்தின் தாக்கம் இங்கு தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவில் இருந்து எதிரொலிக்கும் பதற்ற நிலையை மாலத்தீவுகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,” என்று ஈவா கூறுகிறார்.
சீன சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு
முய்சு தனது சீன விஜயத்தின் போது, சீன மக்கள் சுற்றுலாவுக்காக அதிக எண்ணிக்கையில் மாலத்தீவுக்கு வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார். கடந்த ஆண்டைப் பொறுத்தவரை மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதில் முன்னணியில் இருந்தது இந்தியர்களே.
ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் மாலத்தீவின் இளநிலை அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோதியைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டனர், அதன் பிறகு இந்தியாவில் ‘மாலத்தீவுகளைப் புறக்கணிக்கவும்’ என்ற பிரச்சாரம் தொடங்கியது. அன்று முதல் மாலத்தீவுக்கான சுற்றுலாவில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.
1965-இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, முதலில் இங்கு முடியாட்சி இருந்தது. பின்னர் நவம்பர் 1968-இல் குடியரசாக அறிவிக்கப்பட்டது. மாலத்தீவு இந்தியாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இந்திய நகரமான கொச்சியில் இருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாலத்தீவு.
இது 1,200 தீவுகளின் குழுவாகும். பெரும்பாலான தீவுகள் மக்கள் வசிக்காதவை. மாலத்தீவின் பரப்பளவு 300 சதுர கிலோமீட்டர். அதாவது டெல்லியை விட இது ஐந்து மடங்கு சிறியது.
மாலத்தீவின் மக்கள் தொகை சுமார் நான்கு லட்சம். இந்திய திரைப்படங்கள், ஃபேஷன் மற்றும் உணவு ஆகியவற்றின் புகழ் மாலத்தீவிலும் பரவியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாலத்தீவு குடிமக்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள். சுற்றுலாவுக்காக மட்டுமல்லாது மருத்துவ சிகிச்சைக்காகவும் அவர்களுக்கு மிகவும் பிடித்த நாடாக இந்தியா உள்ளது.
இந்த சிறிய தீவுக் குழுவின் பாதுகாப்பில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது. 1988-இல் ராஜீவ் காந்தி ராணுவத்தை அனுப்பி மௌமூன் அப்துல் கயூமின் அரசைக் காப்பாற்றினார். கடந்த 2018-ஆம் ஆண்டு மாலத்தீவு மக்கள் குடிநீர் பிரச்னையை எதிர்கொண்டபோது, பிரதமர் மோதி தண்ணீரை அனுப்பி வைத்தார். இதற்குப் பிறகு மாலத்தீவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக மோதி அரசு பலமுறை கடன் கொடுத்தது.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் மாலத்தீவு ஏன் முக்கியம்?
மாலத்தீவு 5 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய நாடு, அதன் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியுள்ளது. ஆனால், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தியா மற்றும் சீனாவுக்கு இந்த சிறிய நாடு மிகவும் முக்கியமானது.
தெற்காசியாவில் தங்கள் ஆதிக்கத்தை அதிகரிக்க இரு நாடுகளும் மாலத்தீவில் நடக்கும் சிறு சிறு முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
நீண்ட காலமாக பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக மாலத்தீவின் மிகப்பெரிய நட்பு நாடாக இருக்கிறது இந்தியா. முன்னாள் அதிபர் முகமது சோலியின் அரசிற்கு இந்தியாவுடன் இருந்த நெருக்கம் அனைவரும் அறிந்ததே.
இருப்பினும், சீனா தனது பெரும் நிதி ஆதாரங்கள், உள்கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் துறைமுகங்களை குத்தகைக்கு எடுத்துக்கொள்வதன் மூலம் பல ஆண்டுகளாக தெற்காசிய பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
கோவிட் காலத்தில், பெரும்பாலான நாடுகள் மாலத்தீவின் சுற்றுலாத் துறையில் தங்கள் பணிகளை நிறுத்தியபோதும் கூட சீன நிறுவனங்கள் இங்கு தொடர்ந்து பணத்தை முதலீடு செய்தன. ஆனால் சீன நிறுவனங்களின் இந்தப் பணம் வணிகச்சந்தையில் இருந்து வசூலிக்கப்படவில்லை. இந்தப் பணம் சீனாவின் அரசு வங்கிகளுக்குச் சொந்தமானது. அதாவது இது நேரடியாக சீன அரசாங்கத்தின் பணம்.
முன்னதாக, சோலிஹ் அரசாங்கத்தின் போது மாலத்தீவில் 45-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் இந்தியாவின் பங்கு இருந்தது. ஆகஸ்ட் 2021-இல், இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையில் கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டம் கையெழுத்தானது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா 4,100 கோடி இந்திய ரூபாயை நிதியுதவியை வழங்க இருந்தது.
மார்ச் 2022-இல், மாலத்தீவில் பத்து கடலோர ரேடார் அமைப்புகளை நிறுவியது இந்தியா. மாலத்தீவின் அட்டு தீவில் ஒரு போலீஸ் அகாடமியைத் தொடங்கவும் இந்தியா உதவியது.
முய்சு அதிபராக பதவியேற்றதில் இருந்து, சீனாவுடனான மாலத்தீவின் நெருக்கமும் அதிகரித்துள்ளது. பதவியேற்ற பிறகு சீனாவுக்கு தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டார் முய்சு.
இந்த வாரம், மாலத்தீவுகளைப் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு பேசிய ஜெய்சங்கர், “உலகம் நன்றியுணர்வின் அடிப்படையில் இயங்குவதில்லை, அது ராஜதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்போம்,” என்று கூறியிருந்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்