
பட மூலாதாரம், NTT DATA
மனித மூக்கு மற்றும் அதன் நுகர்வுத்திறன் அதிசயமானது.
மனித மூக்கு சுமார் ஒரு லட்சம் கோடி வாசனைகளைக் கண்டறியும் அளவுக்கு 400 வாசனை ஏற்பிகளை கொண்டிருக்கிறது.
இத்தகைய மனித மூக்கின் நுகர்வுத்திறனை அதன் நிபுணத்துவத்துடன் செயற்கையாக அப்படியே பிரதியெடுப்பது மிகக் கடினமானது.
ஆனால், முன்னேற்றம் அடைந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மின்னணு மூக்குகள் (E-nose) தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. உயர் தொழில்நுட்ப உணர்கருவிகளாக செயல்படும் இந்த மின்னணு மூக்குகள், குறிப்பிட்ட வாசனைகளைக் கண்டறிந்து நமக்கு உணர்த்தும். வாசனைகளை உணரும் திறனில் வேகம் மற்றும் துல்லியத்தன்மையில் இந்த மின்னணு மூக்குகள் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன.
உணவு பாதுகாப்பில் இவை மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் இந்த தொழில்நுட்பத்தை ஆதரிப்பவர்கள்.

பட மூலாதாரம், SENSIFI
ராஸ் ஜெலினெக் (வலதுபுறம் இருப்பவர்) மற்றும் அவருடைய மாணவர் நிட்சன் ஷாலோஃப் இருவரும் மின்னணு மூக்கின் சென்சார்களை காண்பிக்கின்றனர்.
என்ன செய்யும் இந்த மின்னணு மூக்கு?
உணவுப்பொருட்களில் காணப்படும் மிக ஆபத்தான பாக்டீரியாக்களான சால்மோனெல்லா மற்றும் ஈ. கோலை (E. Coli.) இரண்டுமே “மின்னணு தன்மை கொண்டவை” என்கிறார், இந்த மின்னணு மூக்கின் இணை கண்டுபிடிப்பாளரும் இஸ்ரேலின் நெகெவில் உள்ள பென் க்யூரியன் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியருமான ராஸ் ஜெலினெக். “இரண்டும் மின்னணு சமிக்ஞைகளை தன்னுள்ளே கொண்டவை.” என்கிறார் அவர்.
இஸ்ரேலிய நிறுவனம் தயாரித்த மின்னணு மூக்குகளில் கார்பனின் நானோ துகள்கள் பூசப்பட்ட மின்முனைகள் உள்ளன. அவை, பாக்டீரியாவால் வெளியேற்றப்படும் வாசனை அல்லது ஆவியாகும் கரிம சேர்மங்களை கண்டறிகின்றன.
பாக்டீரியாவின் மரபணு மாறுபாடுகள், வெவ்வேறு ஆவியாகும் கரிம சேர்மங்களை உருவாக்குகின்றன, இது சென்சிஃபை (Sensifi) எனப்படும் இந்த இயந்திரத்தில் வேறுபட்ட மின் சமிக்ஞையை உருவாக்குகிறது. இது பின்னர், ஏ.ஐ. மென்பொருள் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட்டு, அதன் தரவுதளத்தில் சரிபார்க்கப்பட்டு பயனருக்குத் தெரிவிக்கிறது.
‘உணவுத்தொற்றுக்கு எதிராக போராடும்’
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட சென்சிஃபை நிறுவனம், உணவுத்தொற்றுக்கு எதிராக இந்த இயந்திரம் போராடும் என நம்புகிறது. பெரும்பாலான நிகழ்வுகளில் உணவில் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய மாதிரிகளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு அதன் முடிவுகளுக்காக உற்பத்தியாளர்கள் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது என, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மோடி பீலெட் தெரிவிக்கிறார்.
ஆனால், அதற்கு மாற்றாக இந்த மின்-மூக்குகள் உணவு நிறுவனங்கள், தங்களின் நிறுவனங்களிலேயே உணவுத்தொற்று குறித்து சோதிக்கவும் ஒரு மணிநேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே அதன் முடிவுகளை அறிந்துகொள்ளவும் முடியும். இதன் விலையை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், அவை ‘குறைவான விலை’ கொண்டதாக இருக்கும் என நிறுவனத்தினர் கூறுகின்றனர். ‘மின்னணு மூக்கு’ தொழில்நுட்பத்திற்கான சந்தா கட்டணத்தின் மூலம் பெரும் பணத்தை சம்பாதிக்கும் நோக்கத்தில் அந்நிறுவனம் உள்ளது.
“உணவில் தொற்றை கண்டறிவதற்கான சோதனை முறைகள் கடந்த 40-50 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக இருக்கிறது,” என்கிறார் பீலெட். “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்னும் இந்த சந்தையில் சோதனைப்பிரிவில் நுழையவில்லை,” என்கிறார்.

பட மூலாதாரம், GETTY IMAGES
உணவு நஞ்சாதல்
உணவு நஞ்சாதல் (Food Posioning) உலகம் முழுவதும் தீவிர பிரச்னையாக இருக்கிறது. அமெரிக்காவில் ஆண்டுக்கு 4.8 கோடி பேர் அல்லது ஆறில் ஒருவர் உணவால் ஏற்படும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில், 1,28,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர், 3,000 பேர் இறக்கின்றனர்.
பிரிட்டனில் ஆண்டுக்கு 24 லட்சம் பேர் உணவு நஞ்சாதலால் பாதிக்கப்படுகின்றனர், 180 பேர் இறப்பதாக கணக்கிடப்பட்டுள்ளனர்.
“இறைச்சி, கோழி, மீன் போன்றவைதான் உணவு நஞ்சில் முக்கிய குற்றவாளிகள் என மக்கள் கருதுகின்றனர்,” என பீலெட் கூறுகிறார். “ஆனால் அமெரிக்க உணவுத்துறையில் கடந்த 5-10 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், ரொமைன் லெட்யூஸ்தான் (சாண்ட்விச் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் ஒருவித இலை வகை காய்கறி) பெரிய கொலையாளி,” என்கிறார்.
”எவ்வளவு தூரம் உணவுச்சந்தை தொழில்மயமாக்கப்படுகிறதோ, அந்தளவுக்கு நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்,” என்கிறார் பீலெட்.
எப்படிப்பட்ட வேலை செய்யும்?
ஜெர்மன் நிறுவனமான என்.டி.டி டேட்டா பிசினஸ் சொல்யூஷன்ஸ் எனும் நிறுவனம் இந்த மின்னணு மூக்குகளுக்கு சக்தியளிக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு பயிற்சி அளிக்க ஒரு புதுமையான வழியை கண்டறிந்துள்ளது.
அதில், ஒரு சோதனையில் ஏ.ஐ. உணர்கருவிகளுக்கு அருகில் இன்ஸ்டன்ட் காபி துகள்களை வைத்து மூன்று நாட்கள் கண்காணித்து வந்தனர். அதிலிருந்து ஏ.ஐ. தொழில்நுட்பம் மூன்று வாய்ப்புகளில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு செய்யப்பட்டது. அதாவது, வைக்கப்பட்ட காபி துகள் நல்ல காபி, கெட்ட காபி (வினிகர் கலக்கப்பட்ட காபி) மற்றும் காபியே அல்ல என்பதிலிருந்து ஒரு வாய்ப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.
“வாசனை என்பது வெறும் வாயு மட்டுமல்ல. அது பல வாயுக்களின் கலவை,” என்கிறார் அந்நிறுவனத்தின் புதுமை மேலாண்மை நிர்வாக மேலாளர் அட்ரியன் கோஸ்ட்ர்ஸ். ”பெரும்பாலும் வாசனையின் விதத்தில் மாறுபாடுகள் உள்ளன,” என்கிறார் அவர்.
என்டி.டி. நிறுவனத்தின் உணர்கருவிகள் முப்பரிமாணம் கொண்ட மனித மூக்கின் பிளாஸ்டிக் மாதிரியில் பொருத்தப்படுகின்றன. அந்த சென்சார்கள், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் காபி உள்ளிட்ட உணவுப்பொருட்களின் வாசனை எப்படி இருக்கும், அவை நல்ல முறையில் இருக்கும்போது எப்படி இருக்கும் என்பது குறித்து அறியச்செய்ய பயிற்சி அளிக்கிறது.
உணவுத்தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images
உணவுத்தொற்றை கண்டறிவதோடு மட்டுமல்லாமல், புதிய மற்றும் கெட்டுப்போன உணவுகளை கண்டறிவதற்காகவும் மின்னணு மூக்குகளை பயன்படுத்துவதும் என்.டி.டி நிறுவனத்தின் யோசனையாக உள்ளது. இதன்மூலம் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாத உணவுப்பொருட்களில் எதனை முதலில் விற்க வேண்டும் என்பதை பல்பொருள் அங்காடிகள், கேஃபேக்கள் அறிந்துகொள்ள முடியும்.
“இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மின்னணு மூக்குகள் துர்நாற்றம் குறித்து அறிந்துகொள்வதால், உணவுப்பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, சாகுபடி, பதப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து உணவுத்துறை தகவமைத்துக்கொள்ள முடியும்,” என கோஸ்ட்ர்ஸ் கூறுகிறார்.
இந்தத் தொழில்நுட்பம் நன்றாக வேலை செய்தாலும், குறிப்பிடத்தக்க தேவையை அவை உணவுச்சந்தையில் ஏற்படுத்தாது என்கின்றனர் சில ஏ.ஐ. நிபுணர்கள்.
“இத்தகைய வாசனை கண்டறியும் தொழில்நுட்பத்தில் உலகளாவிய சங்கிலி இணைப்பை ஏற்படுத்துவது குறித்து நாம் பேசினால், தேர்ந்தெடுத்தல், சேமித்தல், விநியோகம் வரை அது தொழில் நடைமுறையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில்கொள்ள வேண்டும்” என்கிறார், அமெரிக்காவை சேர்ந்த ஏ.ஐ. ஆய்வு நிறுவனமான இன்ஹெரிட்டன்ஸ் ஏ.ஐ.-யின் நிறுவனரும் முதன்மை வடிவமைப்பாளருமான வின்சென்ட் பீட்டர்ஸ்.
”அந்த தொழில்நுட்பத்தை விநியோகச் சங்கிலியில் நடைமுறைப்படுத்த முடியுமா? லாப வரம்பு கிடைக்குமா?” என கேட்கிறார் அவர்.
அதேசமயம், சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த டோமினோ டேட்டா லேப்-இன் ஏ.ஐ. நிபுணர் ஜெல் கார்ல்ஸன், மின்னணு மூக்குகள் தான் இயங்கும் ஒவ்வொரு பிரிவிலும் சிக்கலான தனித்தன்மையை கொண்டிருக்க வேண்டும் என்கிறார். ”இது புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளாத துறையில் (உணவுத்துறை) மிக மிகக் கடினமான பணி,” என்கிறார் அவர்.
எனினும், இந்த சந்தேகம் சில தொழில்முனைவோரை பாதிக்கவில்லை.
நியூசிலாந்தில் இயங்கிவரும் சென்டியன் பயோ நிறுவனம் (Scentian Bio), பூச்சிகளின் ‘பயோசென்சார்களை’ உருவாக்க பூச்சிகளின் தலைகளில் உள்ள உணர் உறுப்புகளை (ஆன்டெனாக்கள்) நகலெடுத்ததாக கூறுகிறது. இது பூச்சிகளிலிருந்து எடுக்கப்படும் புரதங்களை நகலெடுப்பதையும், பூச்சிகளின் வாசனை உணரிகளில் அவற்றைச் சேர்ப்பதையும் கண்டுள்ளது.
அந்நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியுமான ஆண்ட்ரூ க்ராலிசெக், இந்த உயிரி தொழில்நுட்பம் மூலம், “பூச்சிகளின் உணர்திறன் நாய்களின் மூக்கின் உணர்திறனை விட ஆயிரம் மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது,” என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், “உயிரி உணர் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை உணவு மற்றும் தரக்கட்டுப்பாடு, உணவுத்தொற்றைக் கண்டறிதல், விரைவாக நோய் கண்டறிதல், நீடித்த விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்தை கண்காணித்தல் என பல துறைகளில் பயன்படுத்த முடியும்,” என்கிறார் அவர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்