நிதிஷ் குமார் 10 ஆண்டுகளில் 5-வது முறை அணி மாறினாலும் முதல்வர் பதவியை தக்க வைக்கும் ரகசியம் என்ன?

நிதிஷ் குமார் 10 ஆண்டுகளில் 5-வது முறை அணி மாறினாலும் முதல்வர் பதவியை தக்க வைக்கும் ரகசியம் என்ன?

நிதிஷ் குமார்

பட மூலாதாரம், Getty Images

பிகார் முதலமைச்சராக ஒன்பதாவது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுள்ளார். மீண்டும் ஒருமுறை கூட்டணியை மாற்றிக் கொண்டுள்ள அவர் பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வராகியுள்ளார்.

பின்னர் பேசிய அவர், “முன்பு பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். தற்போது மீண்டும் வந்துள்ளோம். இடையில் எங்கோ சென்றோம். இப்போது எங்கள் கட்சியினர் மீண்டும் வந்துவிட்டதாக உணர்கின்றனர். இனி எப்போதும் ஒன்றாகவே இருப்போம். ஆரம்பத்தில் ஒன்றாக இருந்தவர்கள் மறுபடியும் வந்துவிட்டார்கள். இனி அங்கே இங்கே போற கேள்வியே இல்லை”. என்றார்.

ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக்கொண்டு நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேரக்கூடும் என்று கடந்த வாரம் முதல் ஊகங்கள் நிலவி வந்தன.

கடைசி நிமிடம் வரை நிதிஷ் குமார் இதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. ஆனால் ஒவ்வொரு ஊகத்தையும் சரியானதாகவும் சாத்தியமானதாகவும் கருதக்கூடிய வகையில் பிகார் அரசியலில் அவரது முந்தைய நடவடிக்கைகள் இருந்துள்ளன.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

“மாண்புமிகு ஆளுநர் மாண்புமிகு முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்”

ராஜினாமா செய்த பிறகு நிதிஷ் குமார் கூறியது என்ன?

ராஜினாமா செய்ததற்கான காரணத்தை நிதிஷ் குமாரிடம் கேட்டபோது, “விஷயங்கள் சரியாக நடக்காததால் இந்த நிலை ஏற்பட்டது. சில பிரச்னைகள் இருந்தன. நான் கவனித்துக் கொண்டிருந்தேன். கட்சிக்கு உள்ளில் இருந்தும். வெளியில் இருந்தும் கருத்துக்கள் வந்தன அனைத்தையும் கேட்ட பிறகு நான் ராஜினாமா செய்தேன். அரசை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டேன் என்று அவர் பதிலளித்தார்.

முந்தைய கூட்டணியில் இருந்து விலகி புதிய கூட்டணிக்கு வந்தேன். ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் நிலைமை சரியாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை வேலைகள் தொடர்பான அவர்களது கூற்றுகளால் (எங்கள்) மக்கள் மோசமாக உணர்ந்தனர். * என்று அவர் மேலும் கூறினார்.

நிதிஷின் அரசியல் பயணம்

2022 ஆகஸ்ட் மாதம் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கைகோர்த்தார் நிதிஷ்குமார்.

அரசியலில் நிதிஷ் குமாரின் இது முதல் யு-டர்ன் அல்ல. அதனால்தான் அவர் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட போதோ, ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தபோதோ ஆச்சரியம் ஏற்படவில்லை.

‘இந்தியா கூட்டணியை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தவர் நிதிஷ்குமார். அவரே கூட்டணியை விட்டு வெளியேறி வேறு கூட்டணியில் சேரக் கூடும் என்று கடந்த சில நாட்களாக பிகார் தலைநகர் பாட்னாவில் இருந்து வந்த எல்லா சமிக்ஞைகளுமே இருந்தன.

இது வெளிப்படையாகத் தெரியாமல் இருந்த போதிலும் இந்தியா கூட்டணியில் இடப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்டுவரும் தாமதத்தால் நிதிஷ் கோபமாக இருப்பதாகவும், அதனால்தான் அவர் அடுத்த அரசியல் நடவடிக்கையை எடுக்கக் கூடும் என்றும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து சமிக்ஞைகள் வந்த வண்ணம் இருந்தன.

கூட்டணியில் விரிசல் ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகளுக்குப் பிறகு சனிக்கிழமை பிற்பகலில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஜேடியு இடையே எல்லாம் சரியாகவில்லை என்பதும், எதிர்காலத்தில் நிதிஷின் பாதை ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்பதும் கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டது. இது ஞாயிற்றுக்கிழமையன்று நிதிஷின் அறிக்கை மூலம் உறுதியானது.

நிதிஷ் குமாரின் இதுவரையிலான அரசியல் வாழ்க்கையானது, யு டர்ன் எடுத்தல் மற்றும் தனது சொந்த நலன் சார்ந்த அரசியலில் ஈடுபவதற்கும் சாட்சியாக இருந்து வருகிறது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

985-ம் ஆண்டு ஹர்னௌத் தொகுதியில் இருந்து நிதிஷ்குமார் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாட்னாவை ஒட்டியுள்ள பக்தியார்பூரில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பத்தில் 1951 மார்ச் 1 ஆம் தேதி நிதிஷ் குமார் பிறந்தார். பிகார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற நிதிஷ் குமாருக்கு எப்போதுமே அரசியலில் நாட்டம் உண்டு.

லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் நிதிஷ் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய போதும், தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமானால் தான் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டார்.

கிட்டத்தட்ட 5 தசாப்தங்களாக அரசியலில் இருந்துவரும் நிதிஷ் குமார் தனது நலனுக்கு ஏற்ப கட்சிகளையும் கூட்டணிகளையும் மாற்றிக் கொண்டே இருந்துள்ளார்.

1974 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் ஜெய் பிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் நிதிஷ் பங்கேற்றார். சத்யேந்திர நாராயண் சின்ஹா தலைமையிலான ஜனதா கட்சியில் அவர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

1985-ம் ஆண்டு ஹர்னௌத் தொகுதியில் இருந்து நிதிஷ்குமார் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நேரத்தில் பிகாரில் எதிர்க்கட்சியில் இருந்த லாலு பிரசாத் யாதவின் கூட்டாளியாக அவர் இருந்தார்.

எமர்ஜென்சிக்கு எதிராக நின்ற ஜனதாதளத்தில் பல பிளவுகள் ஏற்பட்டன. 1994 இல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சமதா கட்சியை உருவாக்கியதும், நிதிஷ் அவருடன் இணைந்தார். அடுத்த ஆண்டு நடந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் சமதா கட்சிக்கு 7 இடங்களே கிடைத்தன.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

படக்குறிப்பு,

1989 ஆம் ஆண்டு முதல் முறையாக எம்பி ஆன நிதிஷ், 1998 முதல் 2001 வரை அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.

முதலில் சமதா கட்சி, பிறகு பாஜக

பிகாரில் சமதா கட்சி தனித்து வலுவாகப் போட்டியிட முடியாது என்பதை நிதிஷ் புரிந்து கொண்டார். 1996-ம் ஆண்டு அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்.

1989 ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.பி. ஆன நிதிஷ், 1998 முதல் 2001 வரை அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.

2001 முதல் 2004 வரை வாஜ்பாய் அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தார் நிதிஷ்.

இதற்கிடையில் 2000 வது ஆம் ஆண்டில் மார்ச் 3 முதல் மார்ச் 10 வரை நிதிஷ் குமார் பிகார் முதல்வரானார். நிதிஷ்குமார் ஏழு நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார். ஆயினும் லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான வலுவான மாற்றாக தன்னை முன்னிறுத்தும் வாய்ப்பாக அதனை பயன்படுத்திக் கொண்டார்.

2004 வரை மத்திய அரசில் அமைச்சராக இருந்த நிதிஷ், 2005 இல் மீண்டும் மாநில அரசியலுக்கு வந்து முதல்வரானார்.

2014-15 இல் ஜித்தன் ராம் மாஞ்சியின் 10 மாத பதவிக்காலத்தை விட்டுவிட்டால், கடந்த 19 ஆண்டுகளாக நிதிஷ்குமார் தொடர்ந்து பிகார் முதல்வராக பதவி வகித்துள்ளார்.

இருப்பினும் இந்த காலக்கட்டத்தில் நிதிஷ் குமார் தனது வசதிக்கேற்ப தன் கூட்டணி பங்காளிகளை மாற்றிக்கொண்டே இருந்தார்.

சனிக்கிழமையன்று பாட்னாவில் அரசியல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா மற்றும் பாஜக தலைவர்கள் சந்திப்புக் கூட்டங்களில் மும்முரமாக இருந்தனர்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

படக்குறிப்பு,

பிகார் அரசியலில் பாஜகவும் நிதிஷும் 17 ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர்.

நிதிஷ் அணி மாறி பாஜகவுக்குத் திரும்புவார் என்றும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் புதிய படம் விரைவில் தெளிவாகிவிடும் என்றும் ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டன.

கடந்த இரண்டு தசாப்தங்களாக பிகார் அரசியலின் மையப்புள்ளியாக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். கடந்த பத்தாண்டுகளில் ஐந்தாவது முறையாக நிதிஷ் குமார் அணி மாறியுள்ளார்.

1996 இல் நிதிஷ் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். பாஜகவுடனான நிதிஷின் இந்தக்கூட்டணி 2013 வரை நீடித்தது. நிதிஷ் பாஜகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு பிகாரில் ஆட்சியை நிலைநாட்டினார்.

பிகார் அரசியலில் பாஜகவும் நிதிஷும் 17 ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர்.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்த போது நிதிஷ் குமார் முதல்முறையாக பாஜகவில் இருந்து மாறுபட்ட பாதையில் செல்ல முடிவு செய்தார்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நிதிஷ் 2017 இல் மகா கூட்டணியுடனான உறவை முறித்துக் கொண்டார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி வைத்து நிதிஷ் ஆட்சி அமைத்தார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவிடமிருந்து தூரம், பின்னர் மீண்டும் நெருக்கம்

மோதியை எதிர்த்து பாஜவிடமிருந்து விலகிய நிதிஷ் குமார் 2014 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டார்.

முந்தைய மக்களவையில் இருபது எம் பிக்களைக் கொண்டிருந்த ஜேடியு வுக்கு இரண்டு இடங்களே கிடைத்தன. தேர்தல் தோல்விக்குப் பிறகு நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.

2015 இல் நிதிஷ் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகா கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிட்ட்டார் அக்கூட்டணி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்றது. நிதிஷ் மீண்டும் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றார்கள்.

இந்த மகா கூட்டணி இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. நிதிஷ் 2017 இல் மகா கூட்டணியுடனான உறவை முறித்துக் கொண்டார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி வைத்து நிதிஷ் ஆட்சி அமைத்தார். பாஜக தலைவர் சுஷீல் மோதி துணை முதல்வரானார்.

2020 இல் நிதிஷ் பாஜகவுடன் இணைந்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தார் இருப்பினும் ஜேடியுவின் இடங்கள் பாஜகவை விட குறைவாக இருந்தன பாஜக 74 இடங்களையும், ஜேடியு 43 இடங்களையும் பெற்றன. மாநிலத்தில் மூன்றாவது கட்சியாக இருந்தாலும் நிதிஷ் முதல்வர் நாற்காலியில் தொடர்ந்தார்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

படக்குறிப்பு,

இரண்டு ஆண்டுகள் பாஜகவுடன் இணைந்து ஆட்சி செய்த நிதிஷ் மீண்டும் தனது போக்கை மாற்றி ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தார்.

மூன்றாவது இடத்தில் இருந்தாலும் முதல்வர் பதவியை தக்க வைக்கும் சாமர்த்தியம்

நிதிஷ் முதலமைச்சராக இருந்த போதும் அவரது கட்சிக்கு குறைவான இடங்களே இருந்ததால், அவர் மீது பாஜகவின் அழுத்தம் அதிகரித்தது. இரண்டு ஆண்டுகள் பாஜகவுடன் இணைந்து ஆட்சி செய்த நிதிஷ் மீண்டும் தனது போக்கை மாற்றி ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தார்.

2022 ஆகஸ்டில் நிதிஷ் மீண்டும் முதலமைச்சரானார் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார்.

இந்த முறை பாஜகவுக்கு எதிராக கடுமையான அணுகுமுறையை நிதிஷ் கையாண்டார். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

“இறப்பை ஏற்றுக்கொள்வேன். ஆனால் அவர்களுடன் செல்வதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்” என்று பாஜக குறித்து நிதிஷ் ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.

2023 ஜனவரி 30 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் இவ்வாறு தெரிவித்தார். அதன் பிறகு ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தற்போது அவர் மீண்டும் பாஜக பக்கம் சாய்ந்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் பாஜகவின் நிலைப்பாடும் நிதிஷ் விஷயத்தில் கடுமையாகவே இருந்தது. பாஜக முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2023 ஏப்ரலில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக, நிதிஷ் பாபுவை தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் அனுமதிக்கும் என்று யாராவது நினைத்தால், உங்களுக்கு பாஜகவின் கதவுகள் என்றென்றைக்குமாக மூடப்பட்டுவிட்டன என்பதை பிகார் மக்களுக்கும் லல்லன் பாபுவுக்கும் தெளிவாக கூற விரும்புகிறேன்.” என்று கூறியிருந்தார்.

ஆனால் தற்போது நிதிஷ் குமார் மற்றும் பாஜக இருவரின் நிலைப்பாடும் மாறியுள்ளது. பாஜகவுடன் கைகோர்ப்பதில் நிதிஷுக்கோ, அவருக்கு கை நீட்டுவதில் பாஜகவுக்கோ தயக்கம் இல்லை.

நிதிஷ் கூட்டணிக்கு மீண்டும் திரும்புவது குறித்து பாஜக தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அரசியலில் எந்த கதவும் மூடப்படுவதில்லை தேவைக்கேற்ப கதவுகள் மூடப்படுகின்றன, திறக்கப்படுகின்றன” என்றார்.

நிதிஷ் குமார் பிகாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக உள்ளார். அவர் எதிர்காலத்திலும் முதலமைச்சராக இருக்க விரும்புகிறார் என்பது இப்போது வரையிலான அவரது அரசியல் வாழ்க்கையில் இருந்து தெளிவாகிறது. அதனால்தான் அவர் மீண்டும் தனது அரசியல் கூட்டாளிகளை மாற்றுவதற்கான பாதையில் இறங்கியுள்ளார் போலத்தெரிகிறது.

பிகார் சட்டப்பேரவையில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பாஜகவைக்காட்டிலும் நிதிஷின் கட்சிக்கு உறுப்பினர் எண்ணிக்கை குறைவாக உள்ள போதிலும், தனது கட்சிக்கு வலுவான கட்டமைப்பு இல்லாத போதும் மாநிலத்தில் மக்கள் ஆதரவு மற்றும் தொண்டர்களைக் கொண்ட கட்சிகளை ஓரந்தள்ளி அதிகாரத்தின் மையப்புள்ளியாக தான் இருப்பது நிதிஷின் அரசியல் சாமர்த்தியம்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தலித்துகளில் மிகவும் பின்தங்கிய சாதியினருக்காக ‘மகாதலித் பிரிவை உருவாக்கினார் நிதிஷ்குமார்

மகாதலித்துகளின் அரசியல்

2007 இல் நிதிஷ்குமார் தலித்துகளில் மிகவும் பின்தங்கிய சாதியினருக்காக ‘மகாதலித் பிரிவை உருவாக்கினார். இதற்காக அரசு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன 2010 இல் வீட்டு வசதி படிப்புக்கான கடன், பள்ளி சீருடை வழங்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இன்று பிகாரில் எல்லா தலித் சாதியினரும் மகாதலித் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் பாஸ்வான்களுக்கும் மகாதலித் அந்தஸ்து வழங்கப்பட்டது.

பிகாரில் தலித்துகளின் மிகப்பெரிய தலைவராக ராம்விலாஸ் பாஸ்வான் இருந்தபோதிலும், நிதிஷ்குமார் தலித் மக்களுக்காக உறுதியான பணிகளைச் செய்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிதிஷ் குமார் குர்மி இனத்தைச் சேர்ந்தவர். இது மாநில மக்கள்தொகையில் 4 சதவிகிதமாக உள்ளது. ஆனால் ஆட்சியில் இருந்தபோது அவர் எப்போதும் வலுவான சாதி-வர்க்க வாக்குகளைக் கொண்ட கட்சியுடன் கூட்டணி வைத்தே தேர்தலில் போட்டியிட்டார்.

நிதிஷ் எப்போதுமே தனது வசதிக்கேற்ப கூட்டணியை அமைப்பார், முறிப்பார். அவரது அடுத்த அரசியல் நகர்வு எதுவாக இருந்தாலும் சரி முதல்வர் பதவியில் அவர் தொடர்ந்து நீடிக்க விரும்புகிறார் என்பது தெள்ளத்தெளிவு.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *