போலியோ தடுப்பு மருந்து உருவாக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இரும்பு நுரையீரல் இருந்தது. இது ஒரு பெரிய, சிக்கலான சாதனம். “கால்களால் நிற்கும் சவப்பெட்டி” போல் அது உள்ளது என்று சிலர் வர்ணிக்கின்றனர்.
ஆனால் அதன் காலத்தில் இரும்பு நுரையீரல் புதுமையானது.
நூற்றுக்கணக்கான மக்கள் போலியோவிலிருந்து தப்பிப் பிழைக்க இந்த இயந்திரம் வழிவகை செய்தது. போலியோ என்பது உடலைத் தாக்கும் ஒரு வைரஸ் தொற்று. சுவாச தசைகள் அசைய முடியாதபடி ஆகும்போது சில மணிநேரங்களில் உடல் முடக்கம் மற்றும் மரணத்தை இது ஏற்படுத்தும்.
பெரிய வகை இயந்திரமாக இந்த இரும்பு நுரையீரலின் உதவியுடன் ஒருவரால் பல ஆண்டுகள் வாழ்க்கையை தொடர முடியும். இது பாதிக்கப்பட்ட நபரின் செயலிழந்த நுரையீரல் செயல்படுவதற்கு காற்றழுத்தத்தை வழங்குகிறது.
உலக அளவில் “The Man with the Iron Lung” என்று அழைக்கப்படும் பால் அலெக்சாண்டர் பற்றியது இது. அவர் சில நாள்கள் தனது 78-ஆவது வயதில் காலமானார்.
1952 ஆம் ஆண்டு தனது ஆறாவது வயதில் அலெக்சாண்டர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். கழுத்திற்கு கீழே அவரது உடலில் முடக்கம் ஏற்பட்டது.
குறுகிய காலகட்டங்களுக்கு சொந்தமாக சுவாசிக்க கற்றுக்கொள்வதில் அவர் மகத்தான முன்னேற்றம் கண்டார். (அவர் பள்ளிக்கு சென்றார் மற்றும் வழக்கறிஞராக பணியாற்றினார்).இருப்பினும் அலெக்சாண்டர் தனது வாழ்நாள் முழுவதும் உயிர் வாழ்வதற்கு இரும்பு நுரையீரலை நம்பியிருந்தார்.
ஹார்வர்ட் டி.ஹெச் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தில் ஆசிரியரான தொழில்துறை சுகாதார நிபுணர் பிலிப் ட்ரிங்கரால் உருவாக்கப்பட்ட இந்த சாதனம், தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது போலியோ வார்டுகளில் ஒரு அங்கமாக மாறியது.
அதன் உருவாக்கம் அடுத்தடுத்த பல மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்தது.
இரும்பு நுரையீரல் எவ்வாறு செயல்படுகிறது
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், போலியோ தொற்று உலகம் முழுவதும் ஏற்பட்டது. அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் அது பரவியது.
1955 ஆம் ஆண்டு வரை அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதுவரை இந்த இரும்பு நுரையீரல்தான் கடுமையான நோய்க்கான சிகிச்சையில் ஒரே முக்கிய வழியாக இருந்தது. அது அப்போது அதிநவீன தொழில்நுட்பமாகக் கருதப்பட்டது.
இரும்பு நுரையீரல் என்பது ஒரு ராட்சத, காற்று புகாத உலோக உருளை. இது 295 கிலோ வரை எடை கொண்டது. அது ஒரு பெல்லோஸ் கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும். போலியோ நோயாளிகள் கழுத்து வரை இதற்குள்ளே செல்ல வேண்டும்.
ஒரு பம்புடன் இணைக்கப்பட்டிருக்கும் பெல்லோஸ் தொடர்ந்து பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் காற்றைச் சுழலச்செய்யும். நோயாளிகளின் நுரையீரலுக்குள் காற்றைத் தள்ளுவதன் மூலம் அவர்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவும்.
செயற்கை சுவாசத்தின் இந்த வடிவம் எக்ஸ்டெர்னல் நெகட்டிவ் பிரஷர் வெண்டிலேஷன் (EPPV) என்று அழைக்கப்படுகிறது.
“இரும்பு நுரையீரலின் கண்டுபிடிப்பு மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான உறவை பிரிக்கமுடியாதபடி மாற்றிவிட்டது” என்கிறார் வெயில் கார்னெல் மெடிசனில் உள்ள மயக்கவியல் கிரிட்டிகல் கேர் மருத்துவரும், ’தீவிர சிகிச்சை மற்றும் இயந்திர காற்றோட்டம் எப்படி நவீன மருத்துவ சிகிச்சையின் அடிப்படையாக இருக்கிறது’ என்பதை ஆய்வு செய்யும் “தி ஆட்டம் கோஸ்ட்” என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஹன்னா வுன்ச்.
“சுவாசத்தின் சில வேலைகள் அல்லது எல்லா வேலைகளையுமே செய்யும் இந்த இயந்திரம் மூலம் நீண்ட நேரத்திற்கு சுவாசிக்க போராடும் ஒரு நபருக்கு உதவ முடிந்தது.”
சில நோயாளிகள் இரும்பு நுரையீரல் எனப்படும் இந்த உருளை போன்ற சாதனைத்தில் சில வாரங்கள் அல்லது மாதங்களைக் கழித்தனர். நுரையீரலின் வலிமையை மீட்டெடுத்து மீண்டும் சுதந்திரமாக சுவாசிக்க முடியும் வரையில் அவர்கள் இதைச் செய்தனர்.
பெக்டோரல் தசைகள் நிரந்தரமாக செயலிழந்த நோயாளிகளுக்கு இந்த இரும்பு நுரையீரல் உயிர்வாழ்வதற்கான திறவுகோலாக இருந்தது.
இது ஒரு உயிர்காக்கும் திருப்புமுனையாக இருந்தாலும் கூட இந்த இரும்பு நுரையீரல் நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்குநர்களுக்கும் பல வரம்புகளைக் கொண்டிருந்தது.
பல நோயாளிகள் இந்த சாதனத்திற்குள் சிக்கியிருப்பதாக உணர்ந்தனர். மேலும் ஒரு நோயாளியின் உடலை அணுகுவதும் இரும்பு நுரையீரலுக்குள் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதும் மருத்துவர்களுக்கு கடினமாக இருந்தது. இருப்பினும் இந்தக்கண்டுபிடிப்பு பல எதிர்கால மருத்துவ முன்னேற்றங்களுக்கு அடித்தளம் அமைத்தது.
“நுரையீரல் போன்ற ஒரு உறுப்பு செயல்பட உதவும் கண்டுபிடிப்பு, நவீன தீவிர சிகிச்சையின் மையப்புள்ளியாக மாறியது” என்று வுன்ச் கூறுகிறார்.
பிந்தைய மருத்துவ கண்டுபிடிப்புகள்
இரும்பு நுரையீரலின் உருவாக்கம், இயந்திர வென்டிலேட்டர்களின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. போலியோ நோய் தாக்குவதற்கு முன்பு இது பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை.
“இரும்பு நுரையீரலின் விளைவாக வென்டிலேஷன் சயின்ஸ் முக்கியத்துவம் பெற்றது,” என்று மயோ கிளினிக்கில் பணிபுரியும் நுரையீரல், க்ரிட்டிகல் கேர் மற்றும் தூக்க மருத்துவத்தில் நிபுணரான பீட்டர் கே கூறுகிறார்.
“உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றின் இயக்கத்தை இயந்திரமயமாக்கியதற்கு பிறகு வாயு பரிமாற்றம் எப்படி நடக்கிறது என்பது நன்கு புரிந்து கொள்ளப்பட்டது..”
வென்டிலேட்டர் உருவாக்கத்தில் முன்னோடியாக இருந்தவர் பிஜோர்ன் ஏஜ் இப்சன்.
1953 ஆம் ஆண்டில், இப்சன் ” பாசிட்டிவ் ப்ரஷர் வென்டிலேட்டர்” என்று விவரிக்கப்பட்ட ஒன்றை உருவாக்கத் தொடங்கினார்.
நோயாளியின் நுரையீரலுக்குள் காற்றை உறிஞ்சும் நெகட்டிவ் பிரஷர் வெண்டிலேஷனை நம்பியிருக்கும் இரும்பு நுரையீரலைப் போலல்லாமல் இந்த வென்டிலேட்டர், சுவாசக் குழாயுடன் இணைக்கப்படும்போது காற்றை நுரையீரலுக்குள் தள்ளும்.
இப்சனின் உபகரணம் இரும்பு நுரையீரலை ஒப்பிடும்போது எளிதாக எடுத்துச்செல்லக்கூடியது. அவ்வளவாக சிக்கல் இல்லாதது.
பின்னர் மயக்க மருந்து நிபுணர்கள், இந்த வகையான நேர்மறை அழுத்தத்தை அறுவை சிகிச்சை அறையில் வழக்கமாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இரும்பு நுரையீரல் போன்ற இயந்திரம், நோயாளியின் நுரையீரலில் காற்றை ஊதி அவர்களை சுவாசிக்க வைக்கும்.
வென்டிலேட்டர் தொழில்நுட்பமானது கடந்த பல ஆண்டுகளில் வியத்தகு முறையில் உருவாகி விரிவடைந்தாலும் கூட அதன் அடிப்படை இப்சன் உருவாக்கியதற்கு ஒத்தாகவே உள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் நவீன வென்டிலேட்டர்கள் நோயாளியின் படுக்கைக்கு அருகில் இருந்து நேர்மறை அழுத்தத்தை வழங்குகின்றன.
இரும்பு நுரையீரல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, ’நீங்கள் பலரை ஒரு அறையில் வைத்து, அவர்களின் உயிரைக் காப்பாற்றத் தேவையான இந்த வாயு பரிமாற்றத்தின் மூலம் அவர்களுக்கு உதவ முடியும் என்ற கருத்தை உருவாக்கியது’ என்று கே மேலும் கூறுகிறார்.
இதில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) என்ற யோசனை உதயமானது.
“போலியோ காரணமாக நெகட்டிவ் பிரஷர் வென்டிலேஷன் தேவைப்பட்ட, எல்லா வயதினரும் அடங்கிய டஜன் கணக்கான நோயாளிகளின் சிகிச்சைக்காக முதல் ஐசியுக்கள் உருவாக்கப்பட்டன,”என்கிறது ரெஸ்பிரேட்டரி கேர் ஜர்னல்.
“இரும்பு நுரையீரலைப் பயன்படுத்திய போலியோ நோயாளிகள் இந்தப்பிரிவுகளில் இருந்தனர். அங்கிருந்துதான் தீவிர சிகிச்சை பிரிவுகளின் யோசனை உண்மையில் உதயமானது,” என்று கே குறிப்பிட்டார்.
“அதனால்தான் மயக்க மருந்து நிபுணர்கள் ஆரம்பத்தில் தீவிர சிகிச்சையில் நிபுணர்களாக ஆனார்கள். ஏனெனில் மயக்க மருந்து நிபுணர்கள்தான் இந்த வகையான தீவிர சிகிச்சையை முதலில் வழங்கினர்.”
“இரும்பு நுரையீரல்கள் மூலம் சுவாசிக்கும் போலியோ நோயாளிகளின் பராமரிப்புக்கான சுவாச மையங்களை உருவாக்கிய செயலானது, பல சிக்கல்கள் இருக்கும் நோயாளிகளின் கவனிப்புக்கு அதிக பயிற்சி பெற்ற பராமரிப்பாளர்களுடன் ஒரு பிரத்யேக பகுதி தேவை என்ற கருத்தை உறுதிப்படுத்த உதவியது. நவீன ICUவும் இந்த கருத்தை ஒத்தே உள்ளது.”
நோயாளியின் சுவாச மண்டலத்தை மிகவும் திறம்பட ஆதரிக்கும் திறன் பல முக்கியமான நோய்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க உதவியுள்ளது.
“பெரும்பாலும் மக்கள் மோசமாக நோய்வாய்ப்பட்டிருக்கும் போது சுவாசக் கோளாறு, நோயுடன் சேர்ந்து வருகிறது. (நோயாளிகளுக்கு செப்டிக், நிமோனியா அல்லது நோய்த்தொற்றுகள் இருக்கும்போது), மேலும் உறுப்புகள் செயலிழக்காமல் தடுக்க சுவாச மண்டலம் ஆதரிக்கப்பட வேண்டும்,” என்று கே மேலும் கூறுகிறார்.
வென்டிலேட்டர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று
தொற்றுநோயின் உச்சத்தில் போலியோ உலகத்தை அச்சுறுத்தியது. இந்த நோய் ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான குழந்தைகளை முடக்கியது.
இரும்பு நுரையீரல் அவர்களில் பலரைக் காப்பாற்ற உதவியது: 1959 இல் அமெரிக்காவில் மட்டும் இதை 1,200 பேர் பயன்படுத்தினர்.
2019 இன் பிற்பகுதியிலும் 2020 இன் தொடக்கத்திலும், உலகம் மீண்டும் ஒரு பயங்கரமான நோயை எதிர்கொண்டது.
கோவிட்-19 தொற்றுநோயின் உச்சத்தின் போது ’வென்டிலேஷன்’ மீண்டும் சிகிச்சையில் முன்னணியில் இருந்தது.
மிக சமீபத்தில் பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் குழு இரும்பு நுரையீரலின் நவீன பதிப்பைக் கண்டுபிடித்தது. இது கோவிட்-19 நோயாளிகளுக்கு சுவாச ஆதரவை அளிக்கிறது.
எக்ஸோவென்ட் என்பிவி எனப்படும் இந்தப்புதிய சாதனமும் நெகட்டிவ் பிரஷர் வென்டிலேட்டர் ஆகும்.
”சாதாரண சுவாசம் விடுவதைப்போல நுரையீரலின் திசுக்கள் விரிவடைவதற்கும், செயல்படுவதற்கும் ஏதுவாக உடலுக்கு வெளியே உள்ள அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம்” இது செயல்படுகிறது,” என்று மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் இன்ஸ்டிடியூஷன் தெரிவிக்கிறது.
நிமோனியா போன்ற நிலைமைகளுக்கு உதவ இந்த சாதனம் பயன்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இந்தக்கருவி தற்போது உருவாக்க நிலையில் உள்ளது. இது சந்தையில் இன்னும் வெளியிடப்படவில்லை. இரும்பு நுரையீரல் கண்டுபிடிப்பில் தனது வேர்களைக் கொண்டிருக்கும் மருத்துவ கண்டுபிடிப்புகளின் சமீபத்திய உதாரணம் இது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்